Saturday, May 9, 2015

ஏன் தனியார்மயத்தை தவிர்க்க இயலாது?

Image result for engineering colleges in tamilnadu

என்னுடைய அருந்ததி ராய் கட்டுரையை ஒட்டி இக்கேள்வியை பின்னூட்டத்தில் ஒரு நண்பர் கேட்டிருந்தார். என் சிற்றறிவுக்கு எட்டின வகையில் பதிலளித்து விடுகிறேன்.


தனியார் மயமாக்கத்தின் நற்பலன்களை நான் நேரடியாக வாழ்வில் அனுபவித்திருக்கிறேன். என் மென்பொருள் நண்பர்கள் இதை என்னை விட நன்றாக அனுபவித்தவர்கள். நான் ஆங்கிலம் படித்தவன். நான் படிக்கிற காலத்தில் அதற்கு சற்றும் மதிப்பில்லை. அப்படிப்பை நான் தேர்கிற வேளையில் ஊரில் ஒரு ஐம்பது பேர்களாவது என்னை திசை மாற்றி விட முயன்றார்கள். நான் படித்து முடித்து ஏதாவது ஒரு கல்லூரியில் மூவாயிரத்துக்கோ அல்லது பள்ளியில் ரெண்டாயிரத்துக்கோ தான் வேலை செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த வேலைகளுக்கே அப்போது ஆயிரம் போட்டிகள். ஆனால் என் படிப்பை முடித்ததும் ஊரில் உள்ள வேலைகள் பொறுக்க முடியாமல் சென்னைக்கு வந்தேன். வந்த மூன்றே நாட்களில் எனக்கு வேலை கிடைத்தது. தொடர்ந்து வேலைகள் மாற மாற சம்பளம் அதிகரித்தது. காரணம் திடீரென உலகமயமாக்கல் உருவாக்கின விரிவினால் இங்கு பல தரப்பட்ட வேலைகள் முளைத்தது. ஏதாவது ஒரு பட்டம் முடித்தால் வேலை எனும் நிலை இப்போதும் உள்ளது. எண்பது தொண்ணூறுகளில் நீங்கள் பிச்சை மட்டுமே எடுக்க இயலும். ஒரு சின்ன சதவீதத்தினர் மட்டும் தேர்வெழுதி அரசாங்க, வங்கி வேலைகளுக்கு செல்வர். தனியார்மயமாக்கலை எதிர்க்கிற பலரும் அதனால் பயன்பெற்றிருக்கிறோம்.
ஏன் பல மலையாளிகள் சென்னையை முகாமிடுகிறார்கள் என நீங்கள் யோசித்ததுண்டா? பிரித்திவ் ராஜ் எனும் நடிரை கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழிலும் சில படங்கள் செய்திருக்கிறார். நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்த அவர் கூட எங்கள் ஊரில் உள்ள ஒரு எளிய பொறியியல் கல்லூரியில் தான் படித்தார். பின்னர் அவர் தான் அமெரிக்காவில் படித்ததாய் பீற்றிக் கொண்டது வேறு கதை. ஆனால் கணிசமான மலையாளி இளைஞர்களும் இளம்பெண்களும் படிப்புக்காகவும் வேலைக்காகவும் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். ஏனென்றால் கேரளாவில் போதுமான கல்வி நிறுவனங்களோ தனியார் நிறுவனங்களோ இல்லை. அவர்கள் தமிழர்களைப் போல தனியார்மயமாக்கலை எளிதில் தழுவிக் கொள்ளவில்லை. நீங்கள் திருவனந்தபுரம் போய் பார்த்தீர்கள் என்றால் அது சென்னை புறநகரின் வளர்ச்சியடையாத பகுதி போல் இருக்கும். ஆனால் அங்குள்ள மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு உண்டு. நம்மை விட அதிகம் உண்டு. நிறைய போராட்டங்களில் ஈடுபடுவார்கள். பத்திரிகை படித்து எளிய மக்களும் விவாதிப்பார்கள். ஆனால் அதனால் மட்டும் பலனில்லை. எப்போதும் ஒரு பெரும் பிரச்சனை இருக்க வேண்டும். அதனோடு மோதும் சக்தியும் நமக்கு இருக்க வேண்டும். அப்போது தான் விளைவாக பல நன்மைகள் விளையும். கேரளாவில் தனியார்மயமாக்கலுக்கு எதிரான அரசியல் இருக்கிறது. ஆனால் போதுமான தனியார்மயமாக்கல் இல்லை. அதனால் அங்கே போதுமான மோதல் இல்லை. வளர்ச்சியும் இல்லை.
இந்த மோதலை நான் ஒரு சமரசம் என புரிந்து கொள்கிறேன். தனியார் மயமாக்கல் என்பது வெறுமனே எதிர்மறைகளை மட்டும் உள்ளடக்கின ஒரு ராட்சஸன் அல்ல. அது ஒரு காலப்போக்கு. சமூக பொருளாதார அழுத்தங்களால் விளைந்த ஒரு விசை. அது வரலாற்று நகர்வு. உங்களால் ஒரு காருக்குள் இருந்தபடியே அதை கைகளால் உந்தி தள்ள முடியுமா? முடியாது. ஆனால் இறங்கித் தள்ளலாம். அதே போல் தனியார் மயமாக்கலின் உள்ளே இருந்தபடியே அதை தடுக்க முடியாது. காலத்தின் வெளியே இறங்கி அதைத் தள்ளி விடவும் மனிதனால் இயலாது.
நம்முடைய சிக்கல் நாம் தனியார் மயமாக்கலை எந்த உரையாடலும் இன்றி ஏற்றுக் கொண்டோம் என்பது. அதன் பலன்களை நாம் முழுக்க இன்னும் அனுபவிக்கவில்லை என்பது. நம் நிலங்களை தனியார் பறிக்கவும் நீரை மாசுபடுத்தவும் அனுமதிக்கிறோம். இதற்கு காரணம் நம்மிடையே போதுமான அரசியல் பங்களிப்பு இல்லை. அரசாங்க எந்திரத்தை மக்கள் அதன்பாட்டுக்கு இயங்க விடுகிறார்கள். மக்களுக்கு அதிகமாய் அரசியல் புரிதல் ஏற்பட்டால் தான் தனியார் மயமாக்கலை அவர்களால் கையாள முடியும். அதனுடன் பேச்சுவார்த்தைகள் செய்து அதன் தீமைகளை குறைத்து நன்மைகளை பெருக்க இயலும்.
இன்று முன்பிருப்பதை விட ஊழல்கள், பொருளாதார பிரச்சனைகள், நிலப்பறிப்பு போன்ற தனியார் சதித்திட்டங்கள் வெகுசீக்கிரமாய் மக்களை போய் சேர்கின்றன. எழுபது, எண்பதுகளிலும் ஊழல் இருந்தது. ஆனால் அன்று மீடியா வலுவாய் இல்லாததால் இவ்வளவு பரவலாய் செய்திகள் போய் சேரவில்லை. மோடி மீடியா பிரச்சாரம் வழியாகவே காங்கிரஸ் அரசை சாய்த்துக் காட்டினார். நாளை மோடியின் சீரழிவை இதே பிரச்சாரம் வழியாய் வெளிப்படுத்தி அவரையும் வீழ்த்திக் காட்டுவார்கள். போன முறை தி.மு.க வீழ்ந்ததற்கு மீடியா ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன். தனியார் மயமாக்கல் மக்களின் அரசியலாக்கத்திற்கு ஒரு மிகச்சின்ன அளவிலேனும் பயன்பட்டிருப்பதாய் நினைக்கிறேன்.
இங்கே மக்களுக்கு போதுமான தொழில்நுட்ப கல்வி வழங்க அரசு நிறுவனங்கள் இல்லாததனால் தானே இந்தளவுக்கு பொறியியல் கல்லூரிகள் பெருகின. கிராமத்து பள்ளிகளில் இருந்து இவற்றில் சேர்ந்து படித்தவர்கள் தான் இன்று தனியாரில் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். இக்கல்லூரிகள் தோன்றவில்லை எனில் இவர்கள் எங்கு போயிருப்பார்கள்? ஆனால் நாம் இக்கல்லூரிகளின் தரத்தையும் இவை வசூலிக்கும் அநியாய கட்டணங்களையும் பற்றி கவலைப்படவில்லை. அதனால் தான் கல்வித்தரம் வீழ்ந்தது. இக்கல்லூரிகளைக் கண்டித்து அன்றே போராடாதது யார் தவறு? நம் தவறு தான்.
பள்ளிகளை எடுத்துக் கொள்வோம். அந்தஸ்துக்காகவும் ஆங்கிலத்துக்காகவும் தான் பலர் பிள்ளைகளை தனியாருக்கு அனுப்புகிறார்கள் எனும் வாதம் பரவலாக உள்ளது. இது உண்மை அல்ல. அரசுப்பள்ளியை விட தனியாரில் பாடத்திட்டம் இன்னும் வலுவாக உள்ளது. உதாரணமாய் ஒரு ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பத்தாம் வகுப்புக்கான ஆங்கில இலக்கணம் கற்பிக்கிறார்கள். இது அவசியமற்றது தான் என்றாலும் இம்மாணவர்களால் ஓரளவு சமாளிக்க முடியும் என்றால் பத்தாம் வகுப்பு வரும் போது அவர்களது கல்வித்திறன் வெகுவாய் வளர்ந்திருக்கும். அழுத்தத்திற்கு ஏற்றாற் போல் வளர்வது, தகவமைவது அடிப்படையான மனிதத் திறன். அதனால் அழுத்தம் ஓரளவுக்கு நல்லது தான்.
இதில் இரு பார்வைகள் உள்ளன. ஒன்று அறிவுத்திறன் மிக்க கூர்மையான மாணவர்களை உருவாக்குவது. இன்னொன்று சுதந்திரமாய் சிந்திக்கும் கற்பனை வளம் கொண்ட மாணவர்களை உருவாக்குவது. தனியார் பள்ளி மாணவர்கள் கொஞ்சம் பிராயிலர் கோழி போல் இருக்கிறார்கள். சொந்தமாய் தவறுகள் செய்து முன்னேறுவதற்கான சாத்தியங்கள் அங்கு குறைவு. எல்லா பக்கமும் ஆதரவுகள் தருவது வளர்ச்சிக்கு நல்லதல்ல. நான் ஐந்தாம் வகுப்பு வரை தனியாரிலும், அதற்கு மேல் 12 வரை அரசுப்பள்ளியிலும் படித்தவன். அரசுப்பள்ளிகள் நிறைய சுதந்திரத்தையும் பலதரப்பட்ட மக்களை பார்த்து பழக வாய்ப்பினையும் அளிக்கும். பண்பாட்டு கோணத்தில் பார்த்தால் அரசுப்பள்ளியே நல்லது. அறிவையும் திறனையும் கணக்கில் கொண்டால் தனியார் நல்லது.
ஆனால் எதுவும் முற்றுமுழுதானது அல்ல. அரசுப்பள்ளியில் படித்தும் கூட வீட்டில் நிறைய வாசிக்கிற மாணவன் தன்னை பெரிய அளவில் மேம்படுத்துக் கொள்ள இயலும். நல்ல கல்வி பள்ளிக்கு வெளியில் தான் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. என்னை போன்ற பண்பாட்டு ஆதரவாளர்கள் இப்படித் தான் வெகுகாலமாய் சொல்லி வருகிறோம். ஆனால் நடைமுறை சார்ந்து யோசிக்கிறவர்கள் ஒரு நிறுவனத்துக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்று வெல்லும் திறன் தம் பிள்ளைகளுக்கு கிடைக்குமா என்றே கேட்கிறார்கள். தனியாரில் இவ்விசயத்தில் அதிக ஆதரவும் கட்டமைப்பு வசதியும் தருகிறார்கள். நான் படித்த பள்ளியில் ஒரு நூலகம் இல்லை. கர்நாடகாவில் ஒரு சிற்றூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு போயிருந்தேன். அங்கு ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு என மிக அழகான நூலகம் வைத்திருக்கிறார்கள். திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையிலான பிள்ளைகளுக்கு பத்திரிகையே நடத்தி அதில் எழுத வைக்கிறார்கள். பல அறிவுஜீவிகளை, எழுத்தாளர்களை அழைத்து வந்து பேச வைக்கிறார்கள். ஆனால் இவையின்றியும் குழந்தைகள் சிறப்பாய் வளர முடியும் தான். ஆனால் பொதுமக்கள் அதிக வாய்ப்புகளை தம் பிள்ளைகள் பெறுவதைத் தானே விரும்புவார்கள்.

தனியார்மயமாக்கல் விவாதத்தில் நான் ஊசிமுனை அளவுக்கு தான் இங்கு தொட்டுப் பேசியிருக்கிறேன். என்னை விட பொருளாதாரம் பற்றி நன்றாய் தெரிந்தவர்கள் இன்னும் விரிவாய் விவாதிக்க இயலும். தனியார் எதிர்ப்பு கண்மூடித்தனமாய் இருக்கக் கூடாது என்பதே என் கோரிக்கை. இது மிகவும் சிக்கலானது. எந்த பிரச்சனையையும் இரு பக்கங்களையும் கவனித்தே பேச வேண்டும். ஒரு போக்கை வெறுக்க கூடாது. புரிந்து கொண்டு எதிர்க்கலாம். எதிர்த்தபடியே சிறப்பான தன்மைகளை உள்வாங்கிக் கொண்டு சமரசம் பேசலாம். நாமும் வளரலாம்.

2 comments:

தமிழானவன் said...

மலையாளிகள்தான் அதிகமான அளவில் வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் சென்று பிழைப்பவர்கள். ஏனென்றால் அங்கே தொழில் தொடங்க எந்த வித பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வரவே மாட்டார்கள். காரணம் அங்கே இருக்கும் கம்யூனிச சங்கங்களுடன் பிரச்சனை வரும் என்பதால் என்று கூறுவார்கள். அதனால்தான் மலையாளிகளில் படித்தவர்கள் முதல் படிக்காதவர் வரை வேறு இடங்களுக்கு ஓடுகிறார்கள்.

இந்த தனியார்மயம் என்பது குறித்து விரிவான ஆய்வுகள் தேவை. இதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு பெரிய அளவில் வளராததற்குக் காரணம், பல தரப்பினருக்கும் வேலை வாய்ப்புகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியிருப்பதுதான். தனியார் பள்ளி, கல்லூரி நிறுவனங்களில் ஒரு நன்மை அதனால் பல பேர் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். எல்லாரும் அரசு ஆசிரியராவது எல்லாம் நடக்குமா ? தனியார்மயத்தில் அதிகப் பிரச்சனைக்கு உள்ளாகியிருப்பது கல்வி, வேளாண்மையாகத்தான் இருக்கும்.

என்னுடைய நண்பர்களில் பலரும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அளவுக்கு வந்திருக்கின்றனர். இதெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் அளித்த வாய்ப்புக்கள். படித்த நடுத்தர மக்களுக்கு ஓரளவுக்கு வேலை வாய்ப்பை அளித்திருக்கிறது தனியார்மயம். இதில் நடக்கும் சுரண்டல்கள் என்று பார்த்தால் கணக்கில் அடங்காது, அதன் பயன்களைப் போலவே. அதே அளவு நுகர்பொருள் வெறியையும் பல மடங்கு ஏற்றியுள்ளது. அந்த ஆடம்பர+ அவசிய நுகர்பொருள் வணிகத்தைச் சுற்றிதான் பல தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

Govindveerakkaran said...

தனியார்மயம் எப்பொழுதும் லாப நோக்கத்தையே முதற் குறிக்கோளாக கொண்டு செயல் படுகிறது. தனியார் வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் நகரத்திலோ மற்றும் புற நகர் பகுதிகளிலோ மட்டுமே கிடைக்கிறது. ஆம் கேரளாவில் தனியார் நிறுவனங்கள் மிக குறைவு ஏனெனில் அவை பெரும்பாலும் தொழிலாளர் சங்கத்துடன் விவாதித்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய விரும்புவதில்லை. லாபம் ஒன்றே அவர்களின் நோக்கம். இன்று நடுத்தர குடும்பங்கள் தனியார் பள்ளிகளால் அடையும் வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. தனியார் கல்வி அவர்களின் மேல் திணிக்கப்படுகிறது. அரசாங்கம் வேண்டுமென்றே அதை உதசினப்படுதுகிறது. கல்வி சேவை துறையாக இருக்க வேண்டும். வியாபார ஸ்தாபனமாக இருக்க கூடாது. இது பல சேவை துறைகளுக்கும் பொருந்தும். தனியார் பள்ளிகள் சேவை மனப்பான்மையோடு செயல்படுவது மிக அரிது. நீங்கள் சொல்வது போல் நாம் தனியார்மயத்தை எந்த வித விவாதமும் இன்றி ஏற்றுகொள்கிறோம் அல்லது அது மக்கள் மீது திணிக்கப்படுகிறது. தனியார்மயம் பற்றிய எந்த விழிப்புணர்வும் நமது மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருப்பதாக தெரியவில்லை.