Friday, May 8, 2015

தஸ்தாவஸ்கி காட்டும் அறிவுஜீவி

Image result for dostoevsky

”கரமசோவ் சகோதரர்களில்” அப்பா கரமசோவுக்கு ஊருக்கு தெரிந்து மூன்று பிள்ளைகள். ரகசிய உறவில் ஒரு பையன். மூன்று பிள்ளைகளில் ஒருவன் உணர்ச்சிகரமானவன், களங்கமற்றவன், ஆவேசத்தின் உருவம். அவன் பெயர் டிமிட்ரி. டிமிட்ரி ஊரிலிருந்து தன் அப்பாவைத் தேடி சொத்தை வேண்டி வருகிறான். அவனுக்கு சொத்தை அளிக்க விரும்பாத அப்பா சின்ன சின்ன தொகைகளை கடனாக கொடுத்து ஏமாற்றுகிறார். அவன் அப்பணத்தில் கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். முரடனாக, போக்கிரியாக பெயரெடுக்கிறான். ஒருநாள் அவன் அப்பாவிடம் தன் சொத்தைப் பிரித்துக் கேட்க அவரோ அவன் தன்னிடம் வாங்கிய கடன் தொகையே சொத்தின் மதிப்பை விட அதிகம், அதனால் அவன் தான் அவருக்கு பணம் தர வேண்டும் என்கிறார். தான் ஏமாற்றப்பட்டதாய் உணர்ந்த டிமிட்ரி கொதிப்படைந்து அவரிடம் கத்துகிறான். தொடர்ந்து அவரிடம் இது சம்மந்தமாய் சர்ச்சிக்கிறான். ஆனால் இப்பிரச்சனையில் தன் பக்கம் நியாயம் இருப்பதாய் காட்டிக் கொள்ள அப்பா ஒரு தந்திரம் செய்கிறார். அப்பகுதியில் உள்ள ஒரு மடாலயத்தில் ஒரு தலைமை துறவியின் முன்னிலையில் தன் மூன்று மகன்களையும் வரவழைத்து டிமிட்ரியுடனான தகராறை பேசி முடிவெடுக்க நினைக்கிறார். சமரசத்தை விட அவர் நோக்கம் டிமிட்ரியை கோபமடைய செய்து அவனது வெறித்தனமான குணத்தை ஊரறிய செய்வது. டிமிட்ரியை கெட்டவனாகவும் தன்னை நல்லவனாகவும் காட்டுவது. அதன் மூலம் தன் பக்க நியாயத்தை பறை சாற்றுவது. நாளை சொத்து சம்மந்தமாய் வழக்கு ஏற்பட்டால் இச்சம்பவம் தனக்கு சாதகமாய் இருக்கும் என நினைக்கிறார். இது தான் பின்னணி. இப்பின்னணியில் நால்வரும் என்ன செய்யப் போகிறார்கள்? தஸ்தாவஸ்கி எப்போதுமே இது போல் சில பின்னணி சம்பவங்களை கோர்த்து ஒரு இடத்துக்கு கொண்டு வந்து அங்கு தன் பாத்திரங்களை செயல்பட விடுவார். அவர் என்ன பேசுகிறார்கள், செய்கிறார்கள் என்பது தான் நாவலின் ஒரு குறிப்பிட்ட கட்டமாய் அமையும்.


மிச்ச இரண்டு மகன்களும் ஒவ்வொரு குணநலனை பிரதிநுத்துவம் செய்கிறார்கள். அலோய்ஷாவும் இவானும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள். ஆனால் டிமிட்ரி இன்னொரு தாய்க்கு பிறந்தவன். அலோய்ஷா மூவரில் இளையவன். அவன் அகத்தூய்மையின், களங்கமின்மையின், அன்பின், இரக்கத்தின் குறியீடாய், தீமையின் அருகாமையில் பரிதவிப்பவனாய் இருக்கிறான். இன்னும் சொல்லப் போனால், “பேதையில்” வரும் மிஷ்கினைப் போல் இவனும் கர்த்தரின் மறுவடிவம். ஐவன் ஒரு அறிவுஜீவி. தன் உண்மையான மனநிலையை மொழிக்குள், தர்க்கத்துக்குள் பதுக்கி வைப்பவன். எதைப் பற்றியும் எப்படியும் வாதிக்கும் திறன் கொண்டவன். அவன் அப்பாவிடம் இணக்கமாய் இருக்கிறான். ஊரில் இருந்து அப்பாவைத் தேடி வந்து அவருடன் வசிக்கும் அவனது உண்மையான நோக்கம் யாருக்கும் தெரியாது. ஒரு ஊமைக்குசும்பு அறிவுஜீவி அவன்.

இவ்வாறு டிமிட்ரி இதயத்தையும், அலோய்ஷா ஆன்மாவையும் ஐவன் மூளையையும் பிரதிநுத்துவப்படுத்துகிறார்கள். மடாலய சந்திப்பில் இவர்களில் அப்பாவும், டிமிட்ரியும் ஐவனும் தான் அதிகம் பேசுகிறார்கள். குறிப்பாய் ஐவன் என்ன செய்கிறான் என்பது வெகுவாக சுவாரஸ்யமானது. இந்த சந்திப்பின் போது அவனுடைய உளவியலுக்குத் தான் தஸ்தாவஸ்கி அதிக இடமும் கவனமும் அளிக்கிறார்.

ஐவன் ஒரு நாத்திகன். கலகவாத சிந்தனையாளன். அதனால் இயல்பாக அவன் மதம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் எதிர்ப்பவனாகத் தானே இருக்க வேண்டும். நாம் எழுதும் நாவலில் அவனை அவ்வாறு தான் சித்தரிப்போம். அது தான் தர்க்கமும் கூட. ஆனால் மனித மனம் எப்போதும் விசித்திரமாய் இயங்கக் கூடியது என தஸ்தாவஸ்கி அறிவார். மடாலய சந்திப்பின் போது ஐவன் எழுதிய தேவாலயத்துக்கும் அரசுக்குமான உறவு பற்றின கட்டுரை ஒன்று விவாதத்துக்கு வருகிறது. பழங்காலத்தில் ஆட்சி அதிகாரம் தேவாலயத்தாலும் மன்னராலும் பங்கிடப்பட்டது. போப்பின் சம்மதமின்றி மன்னரால் பல முடிவுகளை எடுக்க இயலாது. புரொட்டஸ்டண்ட் மதத்தின் தோன்றலுடன் இந்நிலை மாறுகிறது. முழு ஆட்சியதிகாரமும் மன்னரிடம் வருகிறது. மதம் இரண்டாம் பட்சமாகிறது. மதமா அரசா எனும் சர்ச்சை ஐரோப்பாவில் அக்காலத்தில் தீர்வற்ற ஒன்றாய் இருக்கிறது. ஐவனின் கட்டுரை இச்சர்ச்சை பற்றி ஒரு புது கோணத்தில் பேசுகிறது.

 தன் கட்டுரையில் ஐவன் அரசு ஒரு பக்கம் மக்களின் அன்றாட வாழ்க்கையை நிர்வகித்திட, அரசும் மக்களும் தேவாலயத்தின் கீழ் வர வேண்டும் என கோருகிறான். அதாவது மதத்துக்கு எந்த அரசதிகாரமும் தேவையில்லை. ஆனால் சமூக அறத்தின், மனசாட்சியின், ஒழுக்கத்தின் மீதான அதிகாரம் மதத்துக்கு வேண்டும். பண்பாட்டளவில் மதத்தை ஒட்டியே அரசும் சமூகம் இயங்க வேண்டும். மதசார்பற்றதாய் ஒரு அரசு இருக்கக் கூடாது; அப்போது தான் மக்கள் ஆன்மீக வறட்சி கொண்டவர்களாய், குற்றத்தில் அதிகம் தம்மை இழப்பவர்களாய் மாறாமல் காப்பாற்றப்படுவார்கள். வெறுமனே பொருளியல் நோக்குடன் சமூகத்தை அரசு நிர்வகிக்கக் கூடாது என்கிறான். இக்கட்டுரை மடாலயத்தில் உள்ள துறவிகளை ஈர்க்கிறது. இது பற்றி ஐவனின் கருத்துக்களை மூத்த துறவி ஆர்வமாய் கேட்டுக் கொள்கிறார். மூத்த துறவி அவனுக்குள் இருக்கும் தேடலும், அது உருவாக்கும் அக நெருக்கடியும் அவனுடைய ஆன்மீக வளர்ச்சிக்கு நல்லது எனக் கூறி அவனை வாழ்த்துகிறார். ஆனால் கடவுள் நம்பிக்கையற்ற ஐவன் ஏன் மக்களின் ஆன்மீக வளர்ச்சி பற்றி கவலைப்பட வேண்டும்? இக்கேள்வி நமக்கு எழுகிறது. ஒருவேளை அவனது ஈடுபாடும் தேடலும் உண்மையானது என்றாலும், நம்பிக்கையில்லாத பட்சத்தில் அது வெறும் அறிவார்ந்த தேடலாய் மட்டுமே மாறிடாதா?

ஐவன் இதற்கு ஒரு விடை வைத்திருக்கிறான். ஆன்மீக மேன்மை மக்களின் ஒழுக்கத்திற்கு உதவும் என அவன் நினைக்கிறான். உதாரணமாய், சாஸ்வதத்தில் நம்பிக்கையுள்ளதாலே மக்கள் பிறர் மீது அன்பு காட்டுகிறார்கள் என்கிறான். ஒருவேளை செத்த பின் சொர்க்கம் இல்லை எனத் தெரிந்தால் அவர்கள் யாரையும் நேசிக்க தலைப்பட மாட்டார்கள் என்கிறான். ஆக அவன் மதத்தின் நன்மையை சமூகம் சார்ந்த ஒரு நடைமுறை பயன்கருதியே மதிப்பிடுகிறான். அவனிடம் விசுவாசம் இல்லை. அறிவார்ந்த ஒரு விலகல் இருக்கிறது. அந்த விலகல் அவனை எந்த நிலைப்பாட்டையும் எடுத்து அது குறித்து யோசிக்கவும் விவாதிக்கவும் வைக்கிறது.

இந்த குறிப்பிட்ட மடாலய சூழலில் பெரும்பாலான எழுத்தாளர்கள் ஐவன் துறவிகளையும் சடங்குகளையும் கேள்விக்குட்படுத்துவதாகவே காட்சியை அமைத்திருப்பார்கள். ஆனால் தஸ்தாவஸ்கி மனித மனத்தின் இயக்கத்தை நுணுகி அறிந்தவர். அவர் ஒரு பாத்திரத்தை உருவாக்கினால் அதன் சமூக நிலை, அணுகுமுறை, நம்பிக்கைகள் என்ன என அறிந்திருப்பார். அப்படியானவன் இன்ன சூழலில் இன்னவிதமாய் தான் அப்பாத்திரம் எதிர்வினையாற்றும் என மிக அற்புதமாய் அவரால் ஊகிக்க முடிகிறது. அது தான் அவரது மேதைமை.
ஐவன் ஒரு அறிவுஜீவி. அவன் மூளையால் செயல்படுகிறவன். மூளை ஒரு கருவி. ஒரு கத்தியைக் கொண்டு வெண்டைக்காய் நறுக்கலாம், நகம் வெட்டலாம், பழம் சீவலாம். கொலையும் செய்யலாம். அறிவுஜீவியின் மூளை எதற்கும் தோதானது. அதற்கு என்று ஒரு குறிப்பிட்ட நிலைப்பாடோ ஒரு கருத்தின் மீது வலுவான பிடிப்போ கிடையாது. பிடித்தால் வழுக்கிச் செல்லும் மீனைப் போன்றவன் அவன். மாறாக டிமிட்ரி தன் சூழலுக்கு ஏற்றபடி செயல்படுகிறவன். அன்பைக் காட்டினால் உருகுவான். கோபப்படுத்தினால் கொலையும் செய்வான். ஆனால் ஐவன் ஒரு மடாலயத்தில் வந்து மதம் பற்றி மிகுந்த ஈடுபாட்டுடன் பேசுவான். காவல்நிலைய அதிகாரியிடம் சென்றால் குற்றமனம் பற்றி பல கோட்பாடுகளை விவாதிப்பான். சீமாட்டிகள் வளைய வரும் விருந்தில் அவர்களை கவரும் படி பேசுவான். அவன் கெட்டவன் அல்ல. ஒரு அறிவுஜீவியாய் அவன் இயல்பு அவ்வாறே இருக்க இயலும்.

இன்று டிவி விவாதங்களில், சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கும் தமிழ் அறிவுஜீவிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அரசியல், சமூகம், மதம், பண்பாடு, இசை, சினிமா, ஓவியம் என எந்த துறையில் தான் அவர்களுக்கு சொல்ல கருத்துக்கள் இல்லை? எச்சூழலிலும் அதற்கு ஏற்றாற் போல் தம்மை தகவமைத்துக் கொண்டு அங்கு தம் தர்க்கத்தைப் பொருத்தி விவாதிக்க அவர்களுக்கு முடியும். அப்படியான பயிற்சி தான் அவர்களுக்கு உள்ளது. எழுத்து என்பதே அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அறிவுநிலை, சூழல், மனநிலைக்கு ஏற்றாற் போல் உணர்ச்சிவசப்பட்டு, சிந்தித்து செயல்படத் தேவையான வேலை தானே? உலகில் அத்தனை எழுத்தாளர்களும் அப்படித் தான் இருக்கிறார்கள்? அவர்கள் எல்லா துறைகளில் படித்து தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள். எல்லா விதமான மனிதர்களையும் அறிந்து கொள்ள ஆவல் காட்டுகிறார்கள். எதாவது ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி அல்லது கருத்து நிலையோடு உங்களை பிணைத்துக் கொண்டு அதில் மாட்டிக் கொண்டால், நீங்கள் எழுத்தாளனாகவே இயங்க முடியாது.

சில வறட்டு அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஆன்மீகவாதிகளை சந்தேகத்துடனே அணுகுவார்கள். மக்களின் சடங்குகள் மீது கேள்விகளை அடுக்குவார்கள். அவர்களின் மனம் மூடப்பட்டது. ஆனால் உண்மையான அறிவுஜீவி ஜக்கி வாசுதேவிடம் கூட மிகுந்த அக்கறையுடன் ஆர்வத்துடன் பூரணமான் லயிப்புடன் பேசுவான். ஆனால் அடிப்படையில் அவனுக்கு ஜக்கி சொல்வதன் மேல் முழுமையான விசுவாசம் இருக்காது. ஜக்கியின் மொழி, தர்க்கம், மனம் செயல்படும் விதம் இதை கவனிப்பதில் தான் அவனது முழு ஆர்வமும் இருக்கும். ஐவன் அப்படியான ஒருவன். அவன் பாத்திரம் வழி அறிவுஜீவிகள் பற்றி தஸ்தாவஸ்கி தரும் சித்திரம் அலாதியானது.

சந்திப்பு முடியும் போது ஐவன் மூத்த துறவி முன்பு போய் நின்று மிகுந்த மரியாதையுடன் தலை குனிந்து முதுகு வளைத்து வணங்குவான். அவன் இவ்வாறு செய்தது சபையில் உள்ள பலரையும் ஆச்சரியப்பட வைக்கும். ஆனால் ஐவன் நாளை ஒரு நாத்திகவாத சிந்தனையளனுக்கும் இதே மரியாதையை தான் வழங்குவான். அவன் உணர்ச்சி பொய்யானது அல்ல. அது உண்மையானது. அதனாலே துறவியும் அவனை திரும்ப வணங்குவார். ஆனால் அவனது உணர்ச்சி பலதரப்பட்டது.

 ஐவனிடம் இது போல் பல உணர்ச்சிகள் உள்ளன. ஒவ்வொரு உணர்ச்சியும் அவனுக்கு ஒரு முகம். அவற்றில் இருந்து அவன் எந்நேரம் எம்முகத்தை, எந்த உணர்ச்சியை எடுத்து அணிவான் என யாரும் ஊகிக்க முடியாது. அவனுக்கு பல முகங்கள். எல்லாமே அவன் முகம் தான். அதேநேரம் எதுவுமே அவன் முகமும் இல்லையும் தான்.

ஐவனின் நடவடிகைக்கு மற்றொரு விளக்கமும் உள்ளது. தன்னுடைய அப்பாவின் மரணத்தை அவன் உள்ளார விரும்புகிறான். தன் சகோதரர்களில் ஒருவர் நிச்சயம் அவரை கொல்லப் போகிறான் என அவன் மனம் உணர்கிறது. மடாலயத்தில் மதம் மீதும் ஆன்மீகம் மீதும் இவ்வளவு தீவிரத்துடன் அவன் பேசுவது எதிர்காலத்தில் ஒரு விசாரணை வந்தால் தனக்கு நற்சான்றிதழ் அளிக்கும் விசயமாக அது இருக்கும் என அவன் எதிர்பார்ப்பதனாலும் தான். அந்த எண்ணம் தான் அவனை இவ்வாறு செய்ய தூண்டுகிறது. இது உண்மையா என நமக்குத் தெரியாது. தஸ்தாவஸ்கியும் சொல்வதில்லை. 

No comments: