Friday, May 8, 2015

தேடிச் சோறு நிதம் தின்று…

Image result for hunter gatherer

ஒரு நண்பரின் திருமண வீட்டுக்கு சென்றிருந்தேன். கிறித்துவக் கல்யாணம். மாலை நேரம். கறி விருந்து. நிரம்பியிருந்த விருந்தினர் எங்கள் ஊர்க்காரர்களைப் போன்றே தோன்றினர். கழுத்து நிறைய நகை, முகத்தில் அப்பிய பவுடர், ஜரிகைப் புடவை, கூட்டமாய் உரசியபடி நடக்கும் பாணி, சத்தமான பேச்சு…இப்படி இப்படி. சென்னைக்காரர்களை பொது நிகழ்ச்சிகளில் பார்த்தால் பாவையை தாழ்த்திக் கொள்வார்கள். தோளை லேசாய் சாய்த்து முகவாயை தூக்கித் தான் நடப்பார்கள். எந்த காரணம் கொண்டும் தம் அசைவுகளால் இப்பிரபஞ்ச ஒழுங்கு குலைந்து விடக் கூடாது என அதிகவனமாய் இருப்பார்கள். இம்மக்கள் அப்படி அல்ல நீங்கள் பார்த்தால் திரும்ப நேராய் கண்ணைப் பார்ப்பார்கள். புன்னகைத்தால் வந்து பேசுவார்கள். போலி கௌரவம், அகந்தை, அந்நிய பாவனை அற்றவர்கள். அதனாலே எனக்கு அந்த இடமே பிடித்திருந்தது. ஒருவித நிம்மதி, சொந்த இடத்தில் இருப்பது போன்ற குளிர்ச்சி.
மேடையில் மணமகன், மணமகள் புழுங்கிக் கொண்டு வணங்கி புன்னகைப்பதை பார்த்தபடி நேராய் பந்தியை நோக்கி நடை கட்டினோம். அங்கோ சரியான தள்ளுமுள்ளு நிலைமை.


 வரிசையாய் உட்கார்ந்திருந்தவர்களுக்கு பின்னால் வரிசையாய் ஆட்கள் நின்றார்கள். வரிசையாய் நிற்பவர்களின் இடத்தை பிடிக்க பக்கவாட்டில் இன்னொரு கூட்டம். அங்கு நாங்கள் சேர்ந்து கொண்டோம். எங்காவது காலியிடம் விழுகிறதா என தேடிக் கொண்டு நின்றோம். பந்தி வரிசைகள் இடையே இடம் ரொம்ப குறைவு. அதனால் நடந்து போவது ரொம்ப சிரமம். இரு பக்கம் இருந்தும் வருகிற ஆட்கள் சாலை போக்குவரத்தில் சில நேரம் ஏற்படுவது போல் பரஸ்பரம் முட்டிக் கொண்டு நின்றனர். முன்னேயும் போக முடியாது. பின்னேயும் இடம் இல்லை. நானும் நண்பர்களும் ஒரு வழியாய் ஒரு வரிசைக்குள் நுழைந்து சாப்பிடும் ஒரு குடும்பத்துக்கு பின்னால் போய் நின்று கொண்டு உணவை பார்வையிட்டோம். ஒரு அம்மா மற்றும் இரண்டு பெண் குழந்தைகள். ஒரு குழந்தை சமர்த்தாக பிரியாணியை முழுங்கி விட்டு வறுத்த சிக்கன் துண்டை எப்படி எலும்பில் இருந்து பிய்ப்பது என புரியாமல் விழித்தது. அதனிடம் எப்படி எலும்புடன் சேர்த்து மெல்ல வேண்டும் என சொல்லித் தர வேண்டும் போல் தோன்றியது. ஆனால் சொல்லித் தர வேண்டிய அம்மாவே கல்யாணத்துக்கு முந்தின இரவில் ஒப்பனை போடும் வேகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எந்த காரணம் கொண்டும் பிரியாணிக்கு வலிக்கக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தார். மெல்லுவதை விட அவருக்கு சோறை எடுத்து உருட்டுவதில் தான் அதிக நேரம் எடுத்தது. இன்னொரு குழந்தைக்கு சோறு இறங்கவில்லை ரொம்ப நேரமாய் உருட்டி உருட்டி இலையில் தவற விட்டது. பிறகு ஐஸ்கிரீமை நோண்டியது. மீண்டும் சோறை பிசைந்தது. இவர்களுக்கு பின்னால் காத்து நிற்பதால் அலுப்பேற்படவில்லை. உண்மையில் ரொம்ப சுவாரஸ்யமாய் இருந்தது. ஒருவழியாய் அக்குழந்தைளும் அம்மாவும் எழ நாங்கள் உட்கார்ந்து ஒரு பிடிபிடித்தோம்.
முடிந்த பின் வெளியே கிடந்த நாற்காலிகளில் ஆற அமர இருந்து பேசினோம்.
”ரொம்ப நல்ல உணவு இல்லையா? சமீபமாய் இவ்வளவு சுவையான பிரியாணி சாப்பிட்ட நினைவில்லை”
அப்போது நண்பன் சொன்னான் “இவ்வளவு போராடி அடித்து பிடித்து சாப்பிட்டதனால் தான் இந்த சுவை போல”
போகிற போக்கில் அவன் அப்படி அவதானித்தாலும் அது எவ்வளவு ஆழமான உண்மை என எனக்கு உறைத்தது.

வயிற்றுச் சாப்பாட்டுக்காக என்னவெல்லாம் வேலை செய்ய வேண்டி இருக்கிறது என நாம் பேசுவோம். அலுத்துக் கொள்வோம். ஆனால் நாகரிக சமூகத்தில் நம் வேலை என்பது நேரடியாய் உணவைத் தேடி அடைவது அல்ல. நாம் பணத்துக்காக தான் அலைகிறோம். பணம் உணவு உற்பட்ட பல வசதிகளை நமக்கு தருகிறது. தருகிறது என்பதை விட ஒரு உத்திரவாதம் அளிக்கிறது. காலை எழுந்ததும் இன்று எப்படி சாப்பிடுவது என கவலைப்பட வேண்டியதில்லை. பணத்திற்காய் நம் முழு முனைப்பையும் செலுத்த, நாம் வியர்வை சிந்தாமலே பணம் நம் மேஜையில் சாப்பாட்டுத் தட்டை கொண்டு வந்து விடுகிறது.

 உழைப்புக்கும் உணவுக்குமான தொடர்பு மறைமுகமானதாகி விட்டது. இத்தொடர்பு நம் ஆழ்மனதுக்கு புரிவதே இல்லை. அதனாலே உணவில் நமக்கு பொதுவாய் திருப்தி இருப்பதில்லை. பலவகையான சுவையான உணவுகளைத் தேடி நாம் அலைகிறோம். சாதாரண உணவுகள் வெகுவிரைவில் அலுக்கின்றன. சுவையான உணவுகளும் கூடத் தான். அதனால் நாம் வேறு நாட்டு உணவுகளை வித்தியாசமான சூழல்களில் இருந்து உண்ணத் தலைப்படுகிறோம். வித்தியாசமான பொழுதுபோக்குகளுடன் உணவருந்தி அதை சுவையாக்க முயல்கிறோம். இதெல்லாம் சாப்பாடு அதிருப்தி அளிக்கிறது எனும் அடிப்படையான சிக்கலினால் விளைவது தான்.

வனங்களில் வேட்டையாடித் திரிந்த நம் முன்னோர்கள் உணவு உத்தரவாதம் அற்றவர்கள். நல்ல உணவு அவர்களுக்கு ஒரு ஆசீர்வாதம் போல் தோன்றியிருக்கும். முழுவயிறு உண்ணக் கிடைத்தால் அனுபூதி அடைந்திருப்பார்கள். நாளில் பாதியும் உணவுக்கென அலைச்சலில் போவதால் உண்பது அவர்களுக்கு ஒரு சாகசத்தின் நிறைவாக இருக்கும். விருந்துகளில் அடித்துப்பிடித்து எப்படியாவது இடம் பிடித்து உண்ணும் போதும் நமக்கு இதே சாகச உணர்வு தான் கிடைக்கிறது. உணவின் அருமை புரிகிறது. சாகச நிறைவில் நம் ஆழ்மனம் திருப்தி கொள்கிறது. அந்த சிக்னலைப் பெறும் வயிறும் “அப்பாடா திருப்தி!” என்கிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு பின் நாம் இத்தகைய திருமண பந்திகளில் தாம் நம் முன்னோர்களைப் போல வேட்டையாடி விளையாடி வயிற்றை நிறைக்கிறோம்.


நம்பிக்கை இல்லாவிட்டால் இது போன்ற ஒரு பந்தியில் முந்தித் தள்ளி இலையை பிடித்து சாப்பிட்டுப் பாருங்கள்! 

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

அமெரிக்க கிறித்துவ திணிப்பான டயட் என்னும் மோகத்தால் இப்போது எல்லாம் பந்திகள் என்றாலே தவிர்த்து விடுதல்.
மொய்ப் பணக் கவர் கொடுத்து விட்டு , தூக்குக் சட்டியில் கொண்டு செல்லும் ஆரஞ்சும் ஆப்பிளும் , இல்லாவிடில் அருகில் இருக்கும் சான்ட்விச் , சாமைத் திணை தோசை , ராகி சட்னி ஹோட்டலில் நுழைதல்

thamizh dhana said...

Sema na ...👌

Senthil Prabu said...

எப்போதும் போல் நெருக்கமான உணர்வு பதிவு:)