அம்பையின் பெண்ணியப் பார்வையின் சிக்கல்கள்

Image result for அம்பை

“சிறகுகள் முளைக்கும்” 17 வருடங்களுக்கு முன்பு காலச்சுவடில் வெளிவந்த அம்பையின் ஒரு பெரிய பேட்டி. மனுஷ்யபுத்திரனும் கண்ணனும் சேர்ந்து எடுத்தது. சுவாரஸ்யமும் சரளமும் கொண்டது. ஒரு பாதி அம்பையின் வாழ்க்கைக்கதை, இன்னொரு பாதி அவரது இலக்கிய அபிப்ராயங்கள். இப்பேட்டியை காலச்சுவடு பெண் படைப்புகள் நூலில் காணலாம்.

 இப்பேட்டியில் தன் வழக்கமான துணிச்சலுடன் அம்பை இலக்கியத்தில் பெண் சித்தரிப்பு பற்றி பல கேள்விகள் கேட்கிறார். இக்கேள்விகளின் மையம் ஒரு குறிப்பிட்ட படைப்பில் பெண் பாத்திர சித்தரிப்பு நியாயமாக, சரியாக இல்லை என்பதாகத் தான் இருக்கும். உதாரணமாய் அம்பை மகாபாரதம் படித்தால் ஏன் காந்தாரி கண்ணைக் கட்டிக் கொள்கிறாள், அவரது பாத்திர அமைப்பு ஆணை சார்ந்ததாக உள்ளதே, ஏன் சுதந்திரமாய் இல்லை எனக் கேட்பார். அப்படித் தான் அவர் சு.ராவின் நாவல்களில் ஏன் பெண் பாத்திரங்கள் அழுத்தமாய் வரவில்லை எனக் கேட்கிறார். சமீபமாய் இது போல் ஒரு நண்பர் எஸ்.ராவின் சமீப நாவலில் ஏன் பெண் நாதஸ்வர கலைஞர்கள் வரவில்லை என்பதை ஒரு குற்றமாய் வினவியிருந்தார். நாளை இன்னொருவர் வந்து ஏன் ஊனமுற்றவர், தலித், மூன்றாம் பாலினத்தவர் எல்லாம் நாதஸ்வர கலைஞர்களாக வரவில்லை என கேட்பார்கள். ஆனால் ஒரு படைப்பில் யார் பாத்திரமாய் வர வேண்டும் என்பதற்கு அப்படைப்புக்கு உள்ளாகவே ஒரு தர்க்க இருக்கும். அரசியல் சரித்தன்மை அல்ல அதை தீர்மானிப்பது.
 அம்பை தி.ஜா, ல.ச.ராவின் பெண் பாத்திரங்கள் ஏன் ஆணின் பார்வையில் இருந்து மட்டும் படைக்கப்பட்டுள்ளன என கேட்கிறார். தி.ஜா பெண்களை உடல்ரீதியாய் குறுக்குகிறார், ல.ச.ரா தேவி சொரூபமாய் பெண்ணைப் பார்த்து மிகைப்படுத்துகிறார் போன்ற அவரது விமர்சனங்கள் கூர்மையானவை என்றாலும் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. ஒரு படைப்பில் வருகிற கருத்துக்கள் ஒரு படைப்பாளனுடையதா என்பது அது.
 அம்பை ஒரு படைப்பை ஒரு எழுத்தாளனின் அரசியல் மேடையாக பார்க்கிறார். ஆகையால் மிகுந்த அரசியல் பிரக்ஞையுடன் கருத்துக்கள் வெளிப்பட வேண்டும் என்கிறார். ஆனால் ஒரு படைப்பில் ஒரு எழுத்தாளனுக்கு சம்மந்தமில்லாத பல கருத்துக்களும் கூடத் தான் வந்து விழும். ஒரு காலத்தின், ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் பலவித பார்வைகள் ஊடுருவும் களம் தான் ஒரு படைப்பு. கலைஞனின் நோக்கம் அரசியல் ரீதியாய் ஆரோக்கியமான, நியாயமான கருத்துக்களை படைப்பில் முன்னிலைப்படுத்துவதல்ல. ஒரு மக்கள் சமூகத்தின் சிந்தனைப் போக்கை, பண்பாட்டு சாய்வுகளை, தத்தளிப்புகளை, குழப்பங்களை பதிவு பண்ணுவது தான் அவன் நோக்கம். அப்போது அதில் பல முரண்பட்ட கருத்துக்கள் தோன்றலாம். இதில் எது எழுத்தாளனின் பார்வை என நாம் முத்திரை குத்த முடியாது.
அம்பை “காணி நிலம் வேண்டும்” பாடலில் ஏன் பாரதி தனக்கு பத்தினிப் பெண் வேண்டும் என குறிப்பாய் கேட்கிறார், ஏன் ஒரு பெண்ணின் பத்தினித்தனம் நல்லியல்பாய் வலியுறுத்தப்படுகிறது என விமர்சிக்கிறார். பாரதி பல விசயங்கள் முற்போக்காய் இருந்தும் கூட அவர் ஏன் பெண்களை பார்க்கும் பார்வையில் மட்டும் பிற்போக்காய் இருக்கிறார் எனவும் கேட்கிறார். ஆனால் பாரதியின் முரண் தான் அவரது முக்கியத்துவமாகவும் உள்ளது. அவர் காலகட்டத்தின் அத்தனை குழப்பங்கள் மற்றும் பலவீனங்களின் பிரதிநிதியாக அவர் இருக்கிறார். பல பிரச்சனைகளுக்கு காலத்துக்கு முந்தியும் பிந்தியும் விடை தேடுகிறார். சறுக்குகிறார். மேலெழுகிறார். பாரதியுடன் சேர்ந்து ஒட்டுமொத்த சமூகமும் தான் அப்போது சறுக்குகிறது. மேலெழுகிறது. ஒரு படைப்பாளி எப்படி சமூகத்தில் இருந்து வேறுபட்டு தூயவனாக நல்லவனாக உன்னத “முற்போக்காளனாய்” இருக்க முடியும்?
போரும் அமைதியும் நாவலில் தல்ஸ்தாய் நட்டாஷா எனும் உணர்ச்சி கொந்தளிப்பின் உருவமான ஒரு பெண்ணை படைக்கிறார். மிகுந்த துணிச்சலும் தன்னிச்சையும் கொண்ட ஒரு சுதந்திர பிறவியாக அவள் இருக்கிறாள். ஆனால் உள்ளுக்குள் அலைகழிந்தபடி நிம்மதியற்றும் தான் இருக்கிறாள். குற்றவுணர்வும் மன ஆவேசமும் குழப்பங்களும் அவளது உடல்நிலையை சீரழிக்கிறது. இறுதியில் அவள் மணம் புரிந்து தாய்மை அடைகிற போது ஒரு பூரண நிறைவை பெறுவதாய் தால்ஸ்தாய் சித்தரித்திருப்பார். இதைக் கொண்டு தால்ஸ்தாய் பெண் விரோதி என்றோ, சரியான புரிந்துணர்வு இன்றி பெண் பாத்திரத்தை அமைத்திருக்கிறார் என நாம் கூறலாமா? கூடாது. ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் பெண்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்தபடி தான் தம் சுதந்திரத்தை பரிசீலிக்க முடியும். முழுமையாய் நவீனத்தை ஏற்கவோ முழுக்க பாரம்பரிய நம்பிக்கைகளை கை விடவோ இயலாத ஒரு சமகால ரஷ்ட மனதிடம் தான் தால்ஸ்தாய் பேசுகிறார். இன்றைய வாசகனிடம் அல்ல. அவர் தன் காலத்துக்கு மக்களின் கண்ணோட்டத்தில் இருந்து, அவர்களின் பண்பாட்டு நிலையில் இருந்து தான் பிரச்சனைகளை அலசவும் முடிவுக்கு வரவும் முடியும். ஒரு ஆணின் பார்வையில் இருந்து தான் பெண்ணின் பிரச்சனையை அவர் பார்க்கிறார் என நாம் கூறலாம். ஆனால் ஆண்-மைய பார்வையே பிரதானப்பட்டிருந்த ஒரு பண்பாட்டு சூழலில் ஒரு எழுத்தாளனால் அப்படி மட்டுமே பார்க்க இயலும்.
 தஸ்தாவஸ்கி இவ்விசயத்தில் இன்னும் சிறப்பான உதாரணம். அவரது கரமசோவ் சகோதரர்கள் நாவலில் அவர் யார் தரப்பில் நின்று பேசுகிறார் என ஒரு முடிவுக்கு வருவது மிக மிக சிரமம். ஓரளவுக்கு அவர் அலோய்ஷாவின் மனதுக்கு நெருக்கமாய் இருக்கிறார் எனக் கூறலாம். ஆனால் அப்பா கரமசோவ் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் நம்மை முழுவதுமாய் கவர்ந்து அவர் தரப்பு தான் மற்ற எல்லா பார்வைகளையும் விட சரி என தோன்ற வைக்கிறார். ஒரு மடத்தில் வைத்து கரமசோவ் சகோதரர்களும் அப்பாவும் தலைமை துறவியுடன் உரையாடும் ஒரு காட்சி வரும். அதில் டிமிட்ரியின் கொந்தளிப்பான மனநிலை வெளிப்படும். அவன் உக்கிரமான மன உணர்ச்சிகளுடன் மோதியபடி இரு பக்கமும் சரிகிற நிலையில் இருப்பது தெரிய வரும். இவன் எதிர்காலத்தில் மிகப்பெரும் குற்றம் ஒன்றுக்கு ஆளாகப்போகிறான் என உணரும் தலைமைத் துறவி ஸோசிமா அவன் காலடியில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறார். மிகவும் நெகிழ்ச்சியான ஆழமான கவித்துவமான காட்சி. அவனது துன்பத்துக்கு தன்னை பொறுப்பாக்க அவர் காலத்திடம் மன்றாடுகிறார். உலகின் துயரத்தை தனதாய் ஏற்கும் கர்த்தரின் வெளிச்சம் அவ்வரிகளில் துலங்குகிறது. இதற்கு அடுத்த காட்சியில் ரகிதின் என்பவனை அலோய்ஷா சந்திக்கிறான். ரகிதின் தலைமை துறவி சரியான தந்திரசாலி, அவர் டிமிட்ரியின் குற்றமனநிலையை மோப்பம் பிடித்து அவனிடம் மன்னிப்பு கேட்பது போல் ஒரு நாடகம் போட்டு தன்னை ஒரு பெரிய தீர்க்கதரிசி எனும் தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார். நாளை டிமிட்ரி குற்றம் இழைத்து விட்டால் நீங்கள் எல்லாரும் தலைமைத் துறவியின் தேய்வீகத்தன்மையை போற்றிக் கொண்டாடுவீர்களே என பகடி செய்கிறான். இதைக் கேட்கிற அலோய்ஷா மிகவும் குழம்பி விடுகிறான். இதற்கு அடுத்து ரகிதின் இரு கரமசோவ் சகோதரர்களான ஐவன் மற்றும் டிமிட்ரியை திட்டுகிறான். இருவரும் தாம் மோகிக்கும் பெண்களின் பொருட்டு தம் தந்தையை கொல்வதை கூட பரிசீலிப்பார்கள் என்கிறான். அப்போது அலோய்ஷா கூறுகிறான் “நீ ஐவனை வெறுப்பதே அவன் காதலிக்கும் பெண்ணை நீயும் மோகிப்பதனால் தானே” என்பான். ரகிதின் அக்கூற்றின் உண்மையை உணர்ந்து அதிர்ச்சியில் வாயடைத்துப் போகிறான். அலோய்ஷா ரகிதின் அதே விளையாட்டை தான் தானும் ஆடுகிறான். அடுத்தவனின் செயல்களை துர்நோக்கம் கொண்டதாய் கற்பிக்கிறவர்களின் உள்நோக்கமும் அதே போன்றதாகிறது. இதை நாம் ஒரு சங்கிலித் தொடர் போல் ஒவ்வொருவராய் நீட்டித்துப் போகலாம். இங்கு முக்கியமான கேள்வி தஸ்தாவஸ்கி யார் பக்கம் - அலோய்ஷாவா அல்லது ரகிதினா? யார் சித்தரிக்கும் தலைமைத் துறவியின் மனம் சரியானது?
அடுத்து இன்னொரு காட்சியில் அப்பா கரமசோவ் தன் மகன் அலோய்ஷாவிடம் தலைமைத் துறவி பற்றி எதிர்மறையாய் பேசுகிறார். அலோய்ஷாவின் மிகுதியான ஆன்மீக ஆர்வமும் அவன் அதனால் மடத்தில் தங்குவதும் அவருக்கு பிடிக்கவில்லை. அவர் சொல்கிறார் “நீ தலையில் வைத்து கொண்டாடுகிறாயே அந்த தலைமைத் துறவி ஸோசிமா அவர் எப்படியான ஸ்த்ரிலோலன் தெரியுமா?”
“உளறாதீர்கள்”
“நான் கூட இருந்து பார்த்திருக்கிறேன். அவர் எத்தனை பெண்களுடன் கூத்தடித்திருக்கிறார் என நான் விலாவரியாய் உனக்கு விளக்க முடியும். எல்லாம் என் கண் முன் அல்லவா நடந்தது”
தான் கடவுளாய் போற்றும் ஒருவர் பற்றின இந்த வெளிப்படுத்தல் கேட்டதும் அலோய்ஷா குழப்பமாகிறான். மௌனமாகிறான். அப்போது அப்பா கரமாசோவ் சிரித்தபடியே சொல்கிறார் “என்ன நம்பி விட்டாயா? சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்”
மிக முக்கியமான இடம் இது. அலோய்ஷா ஒரு கணம் சுலபமாய் தலைமைத்துறவி பற்றின அவதூறை நம்பி விடுகிறான். அது எதைக் காட்டுகிறது? உள்ளுக்குள் அவனுக்கும் அப்படியான ஒரு எண்ணம் இருந்திருக்கலாம். அதனாலே அப்பா அப்படி சொன்னதும் அவன் மனம் சஞ்சலப்படுகிறது. தந்தை கரமஸோவ் வெளிப்படையாய் தன் தீமையை பறைசாற்றுபவர். அதே நேரம் தன்னைச் சுற்றி இருக்கும் நல்லவர்கள் எவரும் தன்னை விட மேலானவர்கள் அல்ல என ஒவ்வொரு கணமும் நிருபித்தபடி இருப்பார். இப்போது ஒரு கேள்வி: அப்பா கரமஸோவ் காட்டும் அலோய்ஷா தான் தஸ்தாவஸ்கியின் அலோய்ஷாவா? தந்தை கரமஸோவ் துறவிகளை போலிகளாய் சித்தரிப்பது தான் தஸ்தாவஸ்கியின் பார்வையா? நாவலுக்குள் இக்கேள்விகளுக்கு எல்லாம் தெளிவான விடையே இல்லை. ஒரு நல்ல இலக்கிய படைப்பின் குணம் இது.
அம்பை “தலைகீழ் விகிதங்கள்” நாவலில் நாஞ்சில் நாடன் ஒரு அங்கிலோ இந்தியப் பெண்ணின் மிகையான அலங்கார விழைவை கேலி செய்வதை எடுத்துக் கொள்கிறார். அப்பெண் சுதந்திரமாய் தன்னை சிங்காரித்துக் கொள்வது, காலையில் அலுவலகம் வந்ததும் முதல் வேலையாய் கழிப்பறை போல் மூத்திரம் கழிப்பது ஆகியவற்றை நாஞ்சில் நாடன் பகடி பண்ணுவது ஒரு ஆண் மைய சமூக பார்வை, அது நியாயம் அல்ல என கண்டிக்கிறார். ஒருவேளை நாஞ்சில் நாடன் ஒரு கட்டுரையை இப்படி குறிப்பிட்டிருந்தால் அதை நாம் விமர்சிக்கலாம். ஆனால் ஒரு நாவலில் இத்தகைய பார்வையும் முக்கியம் தான். அது தான் கதைசொல்லியின் மனப்போக்கை, அவர் பிரதிநுத்துவப்படுத்தும் பண்பாட்டை, அவனது கலாச்சார சாய்வுகளை சித்தரிக்கிறது. நாஞ்சில் நாடனின் இன்னொரு நாவலில் ரயிலில் பயணிக்கும் மையப்பாத்திரமான ஆண் கீழே படுத்திருக்கும் ஒரு பெண்ணை இச்சை காரணமாய் தன் காலால் தொடுவதாய் ஒரு இடம் வருவதை குறிப்பிட்டு, அங்கு அப்பெண் ஒரு பொருள் போல் சித்தரிக்கப்படுவதாய் குற்றம் காண்கிறார். ஆனால் அப்பெண்ணை ஒரு பொருள் போல் காணும் ஒரு மனநிலையை அப்படியான காட்சி மூலம் தானே காட்ட முடியும்? இந்த கதைசொல்லியை நாஞ்சில் நாடனாகவே பார்ப்பது தான் அம்பையின் பிரச்சனை. அவர் எல்லா படைப்புகளையும் இவ்வாறு எழுத்தாளனின் குரலாகவே காண்கிறார்.

 அதைப் போன்றே பெண் சித்தரிப்புகள் அரசியல்ரீதியாய் சரியாய் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆனால் அரசியல் சரித்தன்மை இலக்கியத்தின் நோக்கம் அல்ல. பின் அமைப்பியல் தோன்றிய பின் குறிப்பாய் ஒரு படைப்பை ஒற்றை நோக்கம் கொண்டதாய் பார்க்கும் பார்வை மாறி விட்டது. இன்று ஒரு படைப்பு பல்வேறு பார்வைகள் ஊடுரும் ஒரு பிரதியாய், வாசகனின் சிந்தனைகள் புது நிறம் அளிக்கும் ஒரு நிலைக்கண்ணாடியாக காணப்படுகிறது. ஒரு படைப்பில் கதைகூறும் குரலை ஒரு வாசகனின் குரலாய் கூட நாம் பார்க்க இயலும். தந்தை கரமசோவை எழுத்தாளனாகவும், அலோய்ஷாவை வாசகனாகவும் (அதாவது நீங்கள்) கற்பனை பண்ணுங்கள். தந்தை கரமசோவ் மிகவும் விரசமாய் ஒன்றைக் கூறி உங்கள் மனதை சலனப்பட வைக்கிறார். அப்போது அந்த விரச சித்தரிப்பு தந்தை கரமசோவுடையதா உங்களுடையதா? எழுத்தாளனின் குரல் அவன் குரலா உங்கள் குரலா? யோசியுங்கள்!  

Comments