Tuesday, May 5, 2015

அருந்ததி ராய் பேட்டி: குண்டாந்தடி விமர்சனம்

எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர் அருந்ததி ராய். | படம்: கே.பிச்சுமணி.

”அம்பேத்கர் சுடர்” விருதை ஒட்டி அருந்ததி ராய் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். வழக்கமான ”ஏய் ஏய் ஏரியாவுக்கு வாடா” வகையான பேட்டி. 


அருந்ததி ராய் எப்போதும் அதிர்ச்சிகரமான குண்டாந்தடி விமர்சனங்கள் செய்வதிலே முனைப்பு காட்டுகிறார். இடதுசாரிகள் சாதியை ஒழிக்கவில்லை எனும் கருத்தை வைக்கிறார். இதே விமர்சனத்தை கழக கட்சிகள் உள்ளிட்ட பல மைய அரசியல் கட்சிகள் மீதும் வைக்கலாம். ஆனால் அது நியாயமல்ல. ஒவ்வொரு கட்சியும் நோக்கும் கோட்பாடுகளும் வேறுவேறு. எல்லா கட்சிகளும் சாதி ஒழிப்பு எனும் இலக்கை நோக்கி பயணிக்க அவசியமில்லை. சாதி ஒழிப்பு ஒரு பக்க இலக்காக வேண்டுமெனில் இருக்கலாம். அதனால் சாதியம் நிலைப்பதற்காக கட்சிகளை சாடுவதில் அர்த்தமில்லை.

தனியார் மயமாக்கல் தலித்துகளை மேலும் ஒடுக்கும் என்கிறார். ஏற்கனவே நிலமும் கல்வி பின்புலமும் கொண்டவர்களுக்கே அது அதிக பயனளிக்கும். இதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் தனியார் மயமாக்கலை நாம் தவிர்க்க இயலாது. அதற்கு மாற்று இல்லை. அருந்ததி ராயே தனியார் மயமாக்கலால் பயனடைந்தவர் தானே. தனியார் மயமாக்கலை தகவமைப்பது, அதனுடன் பேரம் பேசும் இடத்தில் நம்மை வைத்துக் கொள்வதில் தான் வெற்றி இருக்கிறது.

இன்றைய கட்சிகள் ரேடிக்கலாக இல்லை. எழுபதுகளில் நிலத்தை குடியானவர்களுக்கு பிரித்து கொடுத்து சீர்திருத்துவது பற்றி பேசினோம். இன்று நிலப்பறிப்பு சட்டத்தை எதிர்க்கிற வேளையில் ஏன் இந்த கோரிக்கைகள்ன் இல்லை என்கிறார். இது போன்ற ஒரு அசட்டுவாதத்தை நான் கேட்டதில்லை. இன்றைய பொருளாதாரம், வாழ்க்கைப்பார்வை வெகுவாக மாறி விட்டது. இன்றைய தேவைகள் வேறு. மக்கள் இன்று அடிப்படை வசதிகள், சீரான நிர்வாகம், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை தான் முக்கியமாய் நினைக்கிறார்கள். லட்சியவாதம் செத்துவிட்டது. அதனால் கட்சிகளும் மக்களின் போக்கில் தான் சிந்திக்கும். இன்றைக்கு கட்சிகள் ரேடிக்கலாக பேசினால் மக்கள் சிரிப்பார்கள்.

தன் சாதி அடையாளத்தை தலித்துகள் பெருமிதமாய் ஏற்றுத் தான் சாதிக்கு எதிராக போராட முடியும் என்றாலும், இன்னொரு பக்கம் அது சாதிய அமைப்பை வலுப்படுத்துவதாய் எதிர்மறையாகவும் அமையும் என அவர் கூறியுள்ளது தான் என்னை கவர்ந்த கருத்து. ஆனால் தி ஹிந்து தமிழாக்கத்தில் இக்கருத்தின் இரண்டாம் பாதியை கொண்டு வரவில்லை. (பாதி கருத்து பிழையான கருத்தல்லவா?)

அருந்ததி ராய்க்கு அம்பேத்கர் சுடர் விருதளித்ததில் எனக்கும் உடன்பாடில்லை. சுகிர்தராணி சொல்வது போல் இத்தகுதி கொண்ட பல தலித் பண்பாட்டு போராளிகள் தமிழிலேயே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அளித்தால் அருந்ததி ராய்க்கு அளிப்பது போன்ற மீடியா மதிப்பு இராது.


அருந்ததி ராய்க்கு சமூகப் பிரச்சனைகளின் தீர்வில் ஆர்வம் குறைவு. யாருடைய தலைமுடியையாவது பிடித்து இழுப்பது தான் அவரது பிரதான பொழுதுபோக்கு.

1 comment:

Govindveerakkaran said...

ஏன் தனியார்மயத்தை தவிர்க்க இயலாது? தனியார்மயத்தால் கல்வித்துறை மற்றும் பல சேவை துறைகள் மிகவும் சீரழிந்து விட்டன. தனியார்மயத்தை தவிர்க்க முடியாது என்று நீங்கள் சொல்வது அரசாங்கங்கள் மீது உள்ள நம்பிக்கைஇன்மையாலா?