Friday, May 22, 2015

அம்மா அமளிதுமளி

Image result for jayalalithaa + aiadmk + adyar

அம்மாவின் கவர்னர் சந்திப்பை ஒட்டி சின்னமலையில் ஆரம்பித்து அடையார், கோட்டூர்புரம் வரை அமளிதுமளி தான். வட்டச்செயலாளர்களும், நிர்வாகிகளுமாய் வேன்களில் அழைத்து வரும் மக்கள், வேன் மீது கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் முழங்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள், பேண்ட்மேளம், அங்கங்கே சிறுமேடை அமைத்து அபஸ்வரமாய் பாடும் புரட்சித்தலைவி கானங்கள், வழியெங்கும் பதாகைகள், சுவரொட்டிகள், இரட்டை இலை தோரணங்கள் இப்படி விழாக்கோலம் பூண்டிருந்தது. நேற்றிரவு அவ்வழி வீடு திரும்பும் போது நிறைய போலிசார் குவிக்கப்பட்டிருந்தது பார்த்தேன். நாளை இப்பாதையில் போக்குவரத்தை உறைய வைத்து விடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் போக்குவரத்து பெரும்பாலும் இயல்பாகவே இருந்தது. அதிமுகவினரும் சாலையில் நாணயங்கள் போல் இறையாமல் ஒழுக்கமாகவே நடந்து கொண்டனர். கிண்டியின் சிறு தெருக்களில் கழகத்தினர், சாதிக் கட்சியினர் கூட்டம் போட்டாலும் வாகனங்களை நடுசாலையில் நிறுத்தி, பாதையை மறித்து உயிரை வாங்குவார்கள். ஆனால் நகரத்தின் பிரதான பகுதி என்பதாலோ ஏனோ கட்சிக்காரர்கள் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள்.


எனக்கு இந்த சூழல், அதன் குதூகலம், கொண்டாட்டம், சத்தம், வண்ணமயம் பிடித்திருந்தது. அடையார் பொதுவாக ஒரு கறுப்பு வெள்ளை, நாசூக்கான பகுதி. அங்கே ஒலி, வண்ணங்கள், அசைவுகள் மிக மெத்தனமாக மணிரத்னம் படக்காட்சிகள் போன்றே இருக்கும். மனிதர்கள் ஏதோ விண்வெளியில் இருந்து இப்போ தான் இறங்கி வந்தேன் எனும் கணக்கில் நடப்பார்கள். இன்றைய நிகழ்வுகள் இந்த எலைட் பகுதிக்குள் கீழ்மட்ட மக்களை கொண்டு வந்து ஒரு விநோத சூழலை உருவாக்கியது. இது ஒரு தற்காலிக கலாச்சார ஊடுருவல். இன்றைக்கு மட்டும் அடையாறும் கோட்டூர்புரமும் வேறு மக்களால் கைப்பற்றப்பட்டு விட்டது. அப்பகுதிகளின் குணம் தற்காலிகமாய் மாறி விட்டது. இதை நான் மிகவும் ரசித்தேன்.

இந்த கொடூரமான வெயிலில் பாதுகாப்பு பணி செய்யும் நூற்றுக்கணக்கான போலீசாரைப் பற்றியும் ஒரு நிமிடம் கருணையுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். போக்குவரத்தின் ஒழுங்கு குலையாமல் பாதுகாத்த போக்குவரத்து காவலர்களையும் பாராட்ட வேண்டும்.

நான் எம்.ஜி.ஆர் பாடல்களின் ரசிகன். என் சிறுவயது முழுக்க அப்பாடல்களாலே நிரம்பினது. அப்பா தினமும் குடிபோதையில் ஒருமணிநேரமாவது எம்.ஜி.ஆர் பாடல்கள் பாடுவார். பாடித் தான் என்னை குழந்தையாய் இருக்கையில் தூங்க வைப்பார். அதனாலே எம்.ஜி.ஆர் பாடல்கள் கேட்டால் சட்டென சோர்விலிருந்து மீண்டு விடுவேன். வீட்டுப்பக்கத்தில் அம்மன் பாடல்களை ஸ்பீக்கரில் இட்டு கழுத்தறுக்கும் போது எனக்கு ரத்தக் கண்ணீர் வரும். ஆனால் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் என்றால் கொண்டாட்டம் தான். காலையில் விழித்ததும் பல அற்புதமான பாடல்கள் கேட்டபடி இருக்கலாம். வெளியே போனாலும் எங்காவது ஒரு மூலையில் மேடை அமைத்து அப்பாடல்கள் ஒலிக்க வைத்திருப்பார்கள். அன்று முழுக்க ஒரு புன்னகையுடனே இருப்பேன். அதனாலே இன்று இப்பகுதியில் வீறிடும் பல்வேறு பாடல்கள் எனக்கு அந்நியமாய் தோன்றவில்லை. எட்டு வயது குழந்தையாய் அப்பா மடியில் இருந்த நினைவு தான் மேலிடுகிறது.


இறுதியாக, இதே தொண்டர்கள் தாம் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது கடைகளை அடித்து நொறுக்கி அழிவு செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதையும், பின்னர் அவர் விடுதலையான போது நீதி என்றால் என்னவென்பதை மறந்து விட்டு குமாரசாமியை போற்றி சுவரொட்டி ஒட்டினார்கள் என்பதையும் நாம் மறந்து விட வேண்டாம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்! 

No comments: