Friday, May 29, 2015

அம்பேத்கர், பகவத் கீதை மற்றும் ஓஷோ

Image result for அம்பேத்கர்

அம்பேத்கரின் “கிருஷ்ணரும் அவரது கீதையும்” எனும் கட்டுரை படித்தேன். முதலில் மொழி பற்றி. அவரது மொழியின் சில அம்சங்கள் மிகவும் வியப்பூட்டுகின்றன. குறிப்பாய் அதன் சமகாலத்தன்மை. இன்றைய எழுத்தின் குணங்களாய் நாம் காணும் நேரடித்தன்மை, விவாத வடிவம், நேரடியாய் வாசகனை அழைத்து உரையாடும் தன்மை, அபாரமான தெளிவு, தயங்காமல் எதிர்கருத்தை பதிவு செய்வது, எளிமை, லௌகீக பார்வை இவை அனைத்தும் அம்பேத்கரிடம் உள்ளன. பெயரை மாற்றி பிரசுரித்தால் நிச்சயம் இணையத்தில் புழங்கும் ஏதோ ஒரு இளைஞன் எழுதியது எனத் தான் தோன்றும்.


 இன்னொரு முக்கியமான விசயம் அம்பேத்கரிடம் சுத்தமாய் லட்சியவாதமே இல்லாதது. அதாவது அரைநூற்றாண்டுக்கு முன் இந்தியர்கள் லட்சியத்துக்காய் உயிர்கொடுக்க துணிந்து வேலை குடும்பம் அனைத்தையும் உதறி தேசப்பணி செய்தனர். அதனால் அக்கால எழுத்து, படைப்புகள், இசை, கலைவடிவங்கள் என அனைத்திலும் லட்சியவாதம் ஊடுருவி இருக்கும். இதன் உச்சம் காந்தியின் எழுத்து தான். காந்திக்கு பிறகு இடதுசாரிகள் வழியாய் எண்பதுகளின் இறுதி வரை மற்றொரு மக்கள் எழுச்சி சார்ந்த லட்சியவாதம் இங்கு ஓங்கியது. இரண்டு வகையான லட்சியங்கள் சார்ந்த பார்வைகளும் இன்று முடிவுற்று விட்டன.

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவரின் சமூக மேம்பாட்டில் நம்பினார். அதற்காய் செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும் தான். ஆனால் எந்த நம்பிக்கையையும் போற்றி கொண்டாடி அதற்காய் செயல்படுபவர் அவர் அல்ல என்பது அவரது எழுத்துக்களை படிக்கையில் தெரிகிறது. அவருக்கு நேரடியாய் மனித வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்கள் தாம் முக்கியம். காந்தியும் அது போல் நேரடியாய் நடைமுறை செயல்பாடு பற்றி அக்கறைப்பட்டார் என்றாலும், தேசியம், ஒழுக்கம், கடவுள், பண்பாட்டு விழுமியங்கள் போன்ற அரூப விசயங்களுக்காய் மனிதன் தன்னை தியாகம் செய்ய வேண்டும் என அவர் நம்பினார். இது தான் கருத்துமுதல் வாதம். ஆனால் அம்பேத்கர் இதற்கு எதிர்நிலை. மனிதனின் நடைமுறை உலகம், அது மட்டுமே அவரது அக்கறை. அதனாலே அவர் எழுத்தில் சற்றும் லட்சியவாத கொந்தளிப்புகள், செண்டிமெண்டுகள், அதனாலான வழவழத்தன்மை இல்லை. அரைநூற்றாண்டு காலம் முடிந்து இன்று லட்சியவாதம், அரூப நம்பிக்கைகள் ஆகியவை மண்மூடிப் போய் விட்டன. இன்றைய தலைமுறை மிக மிக லௌகீகமாய் யோசிக்கிறது. இன்றைய எழுத்தும் அவ்வாறே உள்ளது. இன்றைய எழுத்து போலவே அம்பேத்கரின் எழுத்தும் மிக மிக லௌகீகமாய் உள்ளது. கனவுகளில் சயனிக்க மறுக்கிறது.

மேலே சொன்ன கட்டுரை பற்றி சில வரிகள். பகவத் கீதை பற்றின நம் புரிதலை குப்புற திருப்பிப் போடுகிறது இக்கட்டுரை. பகவத் கீதை வர்ணாசிரம தர்மம், யாகங்கள் பற்றின நம்பிக்கைகள், ஷத்ரியர்களின் வன்முறை ஆகியவற்றின் மீது பௌத்தம் தொடுத்த தாக்குதலை எதிர்கொள்வதற்கு தோன்றின ஒரு அரசியல் பிரதி என்கிறார். கீதை ஒரு மதநூலோ தத்துவ நூலோ அல்ல என மறுக்கிறார். புத்தரின் கருத்துக்களும் அவர் உருவாக்கிய சமூக மாற்றங்களும் மக்களுக்கு வன்முறை மீது அவநம்பிக்கை ஏற்படுத்துகிறது. யுத்தம் தேவையில்லை எனும் முடிவுக்கு பிராமணர்கள் கூட வந்து சேர்கிறார்கள். இது ஷத்ரியர்க்ளுக்கு பெரும் நெருக்கடியை அளிக்கிறது. அதே போல் அரசமைப்பின் பிற தூண்களான வர்ணாசிரமும், யாக சடங்குகளூம் புத்தர் பிராமணரல்லாதோரை துறவிகளாக இயங்க தூண்டுவதுடன் ஆட்டம் காண்கின்றன. கீதை வர்ணாசிரமத்தை நியாயப்படுத்த முயல்கிறது. ஆனால் அதிலுள்ள தத்துவார்த்த பிழையை அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். அதை இங்கே விவரிக்க சற்று சிக்கலானது. அடுத்து யாகங்களின் அபத்தத்தை பௌத்தம் நிறுவியதற்கு பதிலாக கீதை அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இறுதியாய், மனித கொலைகளை ஆன்மா வேறு, உடல் வேறு என்றும், கொலை உடலை மட்டுமே இல்லாமல் பண்ணுகிறது என்றும் வாதித்து கீதை நியாயப்படுத்துகிறது. கீதையின் இந்த நியாயப்படுத்தல்கள் இல்லாவிட்டால் ஒருவேளை இம்மூன்று நம்பிக்கைகளும், அவை சார்ந்த அரசமைப்புகளும் காணாமல் போயிருக்கும் என்கிறார் அம்பேத்கர்.

உடல்-ஆன்மா வேறுபாட்டு வாதத்தை அசட்டுத்தனமானது எனும் அம்பேத்கர் கிருஷ்ணர் மட்டும் இவ்வாதத்தை ஒரு நீதிமன்றத்தில் வைத்தால் அவரை பைத்தியவிடுதிக்கு அனுப்பி விடுவார்கள் என்கிறார். எனக்கு இதைப் படிக்க மற்றொரு எண்ணம் தோன்றியது. புத்தர் உடலைக் கடந்து, நடைமுறை உலகை மீறி மற்றொரு ஆன்மீக உண்மை, விழிப்புணர்வு நிலை இல்லை என்கிறார். அவரது ஆன்மீக எழுச்சி இந்த கண்டுபிடிப்புடன் தான் துவங்குகிறது. அவர் இப்படி ஆன்மா-உடல் என மனிதனை இரண்டாக பார்ப்பதை எதிர்க்கிறார். கீதை மீண்டும் இந்த ஆன்மா-உடல் எனும் கோட்பாட்டை வன்முறையை நியாயப்படுத்த முன்வைக்கிறது. புத்தர் பேசிய விட்டேத்தி மனப்பான்மையை வன்முறையில் பிரயோகித்தால் ஒருவன் யோகியாகலாம் என்று கூறுகிறது. அதாவது புத்தரின் தரப்பை தனக்கேற்றபடி பயன்படுத்தி மறுவாதம் செய்கிறது. இது சற்றே சுற்றிவளைத்த வாதம் என்றாலும் புத்திசாலித்தனமான ஒரு பௌத்த-மறுப்பு வாதம் தான். ஆனால் அம்பேத்கருக்கு இந்த தத்துவ விளையாட்டுகளில் நம்பிக்கை இல்லை. நடைமுறையில் எவனாவது விட்டேத்தித்தனமான மனதுடன் உன் குழந்தையை கொன்றால் அதை ஆன்மீக செயல் என நீ ஏற்பாயா என அவர் பதிலுக்கு கேட்பார்.

கீதை பேசும் வன்முறை பற்றி ஓஷோ கூறியுள்ளதும் இதே பரப்பில் வைத்து படிக்க வேண்டியது தான் என நினைக்கிறேன். ஓஷோ எந்த சமூகமும் மிகப்பெரிய போர்களை முன்வைத்து தான் செழித்து ஓங்கி உள்ளன என்கிறார். போருக்கான தயாரிப்புகள் மனிதனின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து சமூகத்தை உச்சபட்ச வளர்ச்சிக்கு இட்டு செல்லும் என்கிறார். இரு உலகப்போர்களுக்கு பின்னால் பெரும் வளர்ச்சி கண்ட தேசங்களை, தொடர்ந்து மோதிக் கொண்டிருந்த பழைய கிரேக்க சமூகங்களை உதாரணம் காட்டுகிறார். போரின் போது மனிதனின் தீய குணங்கள் முழுக்க வெளியாகும் என ஓஷோ ஏற்கிறார். ஆனால் மனிதனின் நற்குணங்கள் இத்தீய குணங்களின் ஊடே தான் வெளிவர முடியும் என்கிறார். தீமையையும் நன்மையையும் பிரிக்க இயலாது. கொலை செய்கிற மனிதன் தான் உன்னதமான தத்துவங்களையும் கவிதை உள்ளிட்ட பண்பாட்டு வடிவங்களையும் தோற்றுவிக்க முடியும். அவன் தான் பொருளாதார மேம்பாட்டுக்கும் காரணமாகிறான். ஆனால் போர் செய்யாதே எனக் கூறி அவனுக்குள் ஒரு குற்றவுணர்ச்சியை விதைத்தால் அவனது ஒட்டுமொத்த படைப்பூக்க ஆற்றல்களும் அடங்கி விடும் என்கிறார் ஓஷோ. அவ்விதத்தில் கீதை போரைப் போற்றியது இந்தியா ஒரு வளர்ந்த பெரும் தேசமாய் இருந்ததற்கு உதாரணம் என்கிறார். ஏனென்றால் பெரும் போர்கள் நடத்த பொருள் வளம் வேண்டும். பாரதப் போருக்கு பிறகு பெரும் போர்கள் நடக்காதது இந்தியாவின் பொருளாதார, கலாச்சார தளர்ச்சிக்கு காரணம் என்கிறார். இதற்கு அவர் பகவத் கீதைக்கு பிறகு தோன்றிய வன்முறை மறுப்பாளர்களின் பிரச்சாரம் தான் காரணம் என்கிறார்.

ஓஷோவின் வாதத்தில் சில பிழைகள் உள்ளன. போரினால் அனைத்து சமூகங்களும் வளர்ந்ததாய் கூற முடியாது. போருக்கு அது நிகழும் சூழலின் அழுத்தங்களுக்கும் சம்மந்தமுள்ளது. போரை முன்னிட்டு சமூகங்கள் தம்மை மேலெடுக்கின்றன என்பது தர்க்கரீதியாய் ஏற்கத்தக்கது அல்ல. மேலெழுந்து வரும் சில சமூகங்களுக்கு அப்போது போர் தவிர்க்க இயலாததாய் இருந்தது என்றும் பார்க்கலாம். தேவ்தத் பட்நாயக் தனது “ஜெயா” எனும் மகாபாரத நூலில் பாரதப் போர் சில குறுங்குழுக்கள் மட்டும் பங்கேற்ற எளிய சண்டையாகத் தான் இருந்திருக்க வேண்டும், லட்சக்கணக்கில் மக்களும், குதிரைகளும் மாண்டதாயும், ரத்தக்கடல் புரண்டதாயும் கூறுவது கவிஞனின் கற்பனை மட்டுமே என்கிறார். இதை அவர் பாரதப்போர் நடந்ததாய் கூறப்படும் இடம், அதன் வரலாறு ஆகியவற்றை சான்றுகளாய் வைத்துச் சொல்லுகிறார். இதன்படி “பெரும் பாரதப்போர் எனும் பண்பாட்டு எழுச்சி சின்னம்” எனும் ஓஷோவின் வாதம் அடிபட்டுப் போகிறது.


1 comment:

Jagan krishnan said...

Very nice observation ... Geethaya naan idhuvaraikkum apdi paakkala ... Aana andha kaala soozhalla idhu nadandhirukka vaayppu neraya irukku ...

Osho solradhum oru vagaila saridhaan ... Mudhal ulagapporukku apramdhaan Roaring twenties nu our kaalamey vandhadhu ... Beton, Duchamp, Hemingway, Scott Fitzgerald, Malevich, Picasso, Buñuel, Dali pondra pala kalaignargal valarndhadhey por soozhalla dhan ... Por kaatra aazham nidharsana vaazhkai katradhu illa ... Adhanaaladhaan namma ellathulayum konjam pin thangi irukkom ... Aana por vandha samaalikkara alavukku kooda namakku sakthi illa ... Adhaan unma