Monday, May 18, 2015

வாசக சாலையின் முழுநாள் இலக்கிய அரங்கு


நேற்று பனுவல் புத்தகக் கடை அரங்கில் நடந்த வாசக சாலையின் முழுநாள் இலக்கிய அரங்கு மிகவும் நிறைவாக பயனுள்ளதாக அமைந்தது. எழுபது பேருக்கு மேல் கூட்டம். உட்கார இடமின்றி சிலர் கீழே அமர்ந்திருந்தனர். ஏ.ஸி திணறி மூச்சு விட்டதால் பார்வையாளர்களும் பேச்சாளர்களும் மூச்சு விட திணறினர். ஆனாலும் பார்வையாளர்கள் ஆர்வமாய் முழுநாளும் இருந்து கேட்டனர். இது ஒரு வித்தியாசமான பார்வையாளர் கூட்டம். கணிசமாய் இளைஞர்கள். அதிகம் தமக்குள் விவாதிக்கவோ அடிக்கடி எழுந்து வெளியே டீ, சிகரெட்டுடன் தனிக்கூட்டம் போடவோ இல்லை. அதோடு பங்களிப்பாளர்களின் பேச்சுக்களும் ஆர்வமூட்டும்படியாய் செறிவாய் இருந்தன.
மாலன் ஏற்கனவே தனது இணையதளத்தில் எழுதியிருந்த “மூன்றாம் மரபு” கட்டுரையை ஒட்டி பேசினார். இன்றுள்ள எழுத்து சமூகவியல், வரலாறு, தன்வரலாறு, அரசியல் என முழுக்க மாறியுள்ள நிலையில், எழுத்தாளன் பிரதியை முன்வைக்காமல் தன்னை முன்வைத்து பேசுவது அதிகமாகியுள்ளது. எழுத்தாளன் இறந்து விட்டான் எனும் ரொலாண்ட் பார்த்தின் கூற்று தமிழில் இனி ஏற்கத்தக்கது அல்ல என்பது அவரது மையவாதம். மிக முக்கியமான ஒரு அவதானிப்பு இது. இதை வைத்தே ஒரு தனி கருத்தரங்கு நடத்தலாம்.


முதல் அரங்கில் முதலாவதாய் கவிஞர் திலகபாமா பேசினார். தான் ஊரில் நடத்தும் கூட்டங்களிலும், சென்னைக் கூட்டங்களில் தன்னை அழைப்பது பற்றியும் நிறைய புலம்பினாலும் அவர் பேச்சு ஒருவிதத்தில் முக்கியமானது. எழுத்தில் பாலியலை முன்னெடுக்காத பெண் கவிஞர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள் என அழுத்திக் கேட்டார். பாலியல் சித்தரிப்புகளுக்கு உள்ள வணிக சாத்தியங்கள் அவற்றை ஊக்குவிக்கின்றனவா என்றும் கேட்டார். பாலியலும் உடலின் அந்தரங்க சங்கதிகள் பற்றின சித்தரிப்புகளும் கவிதைக்கு முக்கியம் தான் என்றாலும், தமிழ்ப் பெண்ணெழுத்தின் முக்கிய பரிமாணமாய் அவை உள்ளன என்றாலும், அவை மிகைப்படுத்தப்பட்டு கிளுகிளுப்பு சமாச்சாரமாய் மாறி விட்டனவா என்னும் கேள்வியும் முக்கியம் தான். துரதிஷ்டவசமாய் நேற்று இது பற்றி விவாதிக்க ஆட்களும் நேரமும் இல்லை.

அடுத்து, நான் எனக்கு முக்கியமாய் படும் ஏழு பெண் கவிஞர்கள் பற்றி அறிமுகப்படுத்தி பேசினேன். அவர்கள் குட்டிரேவதி, சுகிர்தராணி, சல்மா, உமா மகேஸ்வரி, லீனா மணிமேகலை, மனுஷி, சக்தி ஜோதி ஆகியோர். ஒவ்வொருவர் பற்றியும் பேச ரெண்டு நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அனுமதிக்கப்பட்ட அரைமணி முடிந்து விட, பெண் கவிதையின் சில பிரச்சனைகளை சுருக்கமாய் பேசி முடித்தேன். இது எனது தனிப்பட்ட அளவுகோலின் படியான பட்டியல் மட்டுமே என்று முதலிலேயே சொல்லி விட்டேன். பட்டியல் இன்றி இது போல் சுருக்கமாய் செறிவாய் விவாதிக்க முடியாது. தமிழில் கடந்த பத்தாண்டுகளாய் எழுதி வரும் அத்தனை பெண் கவிஞர்களையும் பட்டியலிட்டால் அது மெட்ரோ ரயில் திட்டம் போல் முடிவுறாமல் போகும்.

என்னிடம் கவிஞர் கீதாஞ்சலி ப்ரியதர்ஷினி ஏன் கவிஞர்களை பரஸ்பரம் ஒப்பிடுகிறீர்கள் எனக் கேட்டார். என் பேச்சில் நான் சல்மாவை சு.ராவுடனும், குட்டி ரேவதியை தேவதேவனுடனும், மனுஷியை மனுஷ்யபுத்திரனுடனும் ஒப்பிட்டேன். ஏன் இவர்களை தனியாக பார்க்கக் கூடாதா என்பதே அவர் ஐயம். இதே கேள்வியை நான் முகநூலிலும் எதிர்கொள்கிறேன். படைப்பு ஒரு தனிமனிதனின் அகத்தேடலில் அடையும் கண்டுபிடிப்பு மட்டுமே அல்ல. அது மொழியில் நிகழும் ஒரு தொடர்ச்சியான விசாரணையின் சிறு பகுதி மட்டுமே. அதனால் யாரும் முழுக்க தனித்துவமாய் ஒன்றை எழுதி விட முடியாது என்றேன். அவர் தனித்துவம் இல்லாமையை ஒரு குறையாக புரிந்து கொண்டு என்னிடம் வாதிட்டார். நான் அது குறையல்ல இயல்பு என்றேன். தமிழில் க.நா.சு ஆரம்பித்து வைத்த அழகியல் விமர்சனம் தான் இச்சிக்கல்களுக்கு காரணம் என நினைக்கிறேன். ஒரு படைப்பை அது நமக்குள் உருவாக்கும் உணர்ச்சியை மட்டும் கொண்டு மதிப்பிடுகிறோம். இக்கவிதை இது போல் நமக்குள் உணர்ச்சிகளை உருவாக்கியது என்பதே நாம் எழுதும் கணிசமான கவிதை மதிப்புரைகளின் பாணி. மதிப்பிடுபவரும் கவிஞர் என்றால் கவிதைத்தொகுப்பு பற்றி இவரே கட்டுரை வடிவில் ஒரு கவிதை எழுதி விடுவார். அதை விளங்கிக் கொள்ள நீங்கள் இன்னொரு மதிப்புரை எழுத வேண்டும். இன்னும் சில விமர்சகர்கள் கவிதைகள் சிலவற்றை மேற்கோள் காட்டி அவை அற்புதம், படித்து எனக்கு அனுபூதி ஏற்பட்டது என சிலவரிகள் இணைத்து முடித்து விடுவார்கள். “இது எனக்கு பிடித்திருக்கிறது, ஆனால் ஏன் பிடித்திருக்கிறது என விளக்க மாட்டேன், நீயே படித்து தெரிந்துகொள்” என்பது க.நா.சுவின் தரப்பு. இதைப் பின்பற்றி வரும் பலருக்கும் கவிதை அறிவார்ந்து அலசப்படும் போது ஒவ்வாமை ஏற்படுகிறது. அலசுவதற்கு மொழியில் அது போன்று உருவான பிற பிரதிகளுடன் ஒப்பிட வேண்டும். கவிதை என்பது தனிப்பட்ட ஒரு செய்தி அதை ஏன் ஆராய்கிறீர்கள் என கோபிப்பார்கள்.

பேராசிரியர் கல்யாணராமன் அடுத்து சங்ககாலம் தொட்டு இங்கு செயல்படும் பெண் எழுத்து பற்றி சிறப்பாய் உரையாற்றினார். அடுத்த அரங்கில் குணா கந்தசாமி, பரமேஸ்வரி, மனுஷி பாரதி ஆகியோர் தமக்குப் பிடித்த பிற கவிஞர்களின் கவிதைகளையும் தம் கவிதைகளையும் வாசித்தனர். பரமேஸ்வரி குணா ஆகியோர் தேவதேவன், பிரான்ஸிஸ் கிருபா ஆகியோரின் சில அற்புதமான கவிதைகளை பகிர்ந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பின் ராஜசுந்தரராஜன் பேசியதை தவற விட்டேன். அவருக்கு அடுத்து இந்திரன் தனக்கு வழக்கமான பகடி மற்றும் கூர்மையான பார்வையுடன் இன்றைய கவிதைகளின் பிரத்யேக தன்மைகள் பற்றி பேசினார். சமகால கவிதை பற்றி நான் கேட்டுள்ள அற்புதமான பேச்சுகளில் ஒன்று. இன்றைய கவிதையில் உள்ள ஒரு விளையாட்டுத்தனம், புதுமை, மொழியின் சரளத்தன்மை ஆகியவற்றை விளக்கினார்.

அடுத்து என்.ஸ்ரீராம் தனக்கு பிடித்த சமகால சிறுகதையாளர்களை பட்டியலிட்டார். அவருக்கு அடுத்ததாய் இமையம் 2000க்கு பிறகான நாவல்களை அவை ஒடுக்கப்படோரின் குரலை பதிவு செய்வது, அவற்றின் சமூக நோக்கு ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிட்டார். ஒரு மணிநேரத்துக்கு மேல் பேசினார். அந்த அரங்கு சற்றே நீண்டு போனதால் கேள்வி பதிலுக்கு நேரம் இருக்கவில்லை. இமையத்தின் இக்கட்டுரை ஏற்கனவே அவர் இணையத்தில் பதிவேற்றியது தான் என்பதால் பரிச்சயமானதாக இருந்தது. இமையம் தமிழில் வெளியாகும் பெரும்பாலான புனைவுகளை வாசித்து விடுகிறார். அவற்றின் சொல்முறை, வடிவம், தொழில்நுட்பம் பற்றி அவருக்கு முக்கியமான கருத்துக்கள் உள்ளன. ஆனால் அவற்றை அவர் எழுதியோ பேசியோ நான் அறிந்ததில்லை. தனிப்பட்ட உரையாடல்களில் கூறுவார். ஒரு நாவலை படிக்கும் போது எடிட் செய்தபடியே போவார். அவருக்கு புனைவு மொழியில் மிகுந்த அக்கறையும், திட்டவட்டமான கருத்துக்களும் உள்ளன. மொழியின் பயன்பாடு பற்றி அவருக்கு உள்ள கருத்துக்களில் நமக்கு சற்று மாறுபாடு இருந்தாலும் கூட அவற்றை அறிந்து விவாதிப்பது நமக்கு மிகவும் பயனளிக்கும். எதிர்காலத்தில் அவர் புனைவு மொழி குறித்து ஒரு பயிலரங்கு நடத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
நான்காம் அமர்வும் எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்திக்கும் சவால்கள் பற்றினது. பவா செல்லத்துரையும், குட்டிரேவதியும் கலந்து கொள்ளவில்லை. தமிழ் பிரபாவும் டி.அரவிந்தனும் பேசினர். இடைவெளி ஏற்பட்டால் என்னை பேசும்படி நண்பர் மனோஜ் கேட்டார். அந்த டிராஜிடி நிகழாதபடி அரவிந்தன் சற்று நீளமாய் பேசி அரங்கை நிறைவு செய்தார். தமிழ் பிரபா வாசகர் தரப்பில் இருந்து சில பிரச்சனைகளை பேசினது என்னை கவர்ந்தது. தெளிவாய் சரளமாய் பேசினார். போகும் போது அவர் கையை பற்றி வாழ்த்தினேன். குளிர்ந்திருந்தது. மனிதர் ரொம்ப பதற்றமாய் இருந்தார் போலும். ஆனால் அதை பேச்சில் காட்டிக் கொள்ளவில்லை.
பிரபா முக்கிய எழுத்தாளர்களை இணையத்தில் சகஜமாய் நெருங்க முடிகிற போது வாசகனுக்கு ஏற்படும் குழப்பங்கள் பற்றியும், சிலரது பிம்பங்கள் கண்முண் நொறுங்க நேரும் அவலம் பற்றியும் பேசினார். எஸ்.ராவுக்கு தான் மின்னஞ்சலில் அனுப்பிய நாவல் விமர்சனம் ஒன்றிற்கு அவர் வெறுமனே “நன்றி” என ஒற்றைச்சொல்லில் பதிலளித்தது தனக்கு வருத்தமளித்தது என்றார். உண்மை என்னவென்றால் எஸ்.ரா விரிவாக பதில் எழுதுகிறவர் அல்ல. அவர் மிகக்கராறான ஒரு கால அட்டவணையுடன் தன் நாளை செலவழிப்பவர். அவருடன் பேச விருப்பமென்றால் தொலைபேசியில் அழைக்கலாம் அல்லது நேரில் சென்று பேசலாம். இன்னொன்று – எதிர்மறை விமர்சனம் அனுப்பினால் எந்த எழுத்தாளன் தான் பதில் சொல்ல விரும்புவான் (ஜெயமோகனைத் தவிர).
 அடுத்து வந்த அரவிந்தன் இவ்வாறு எழுத்தாளன் வாசகனின் கேள்விகளுக்கு விரிவாக பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்றார். எனக்கு இது ஒரு சமகால பண்பாட்டு மாற்றம் எனத் தோன்றுகிறது. இன்று உரையாடுவது மூச்சு விடுவது போல. எல்லாரும் எல்லாருடனும் ஒரு சில சொற்களாவது பேசி விடுகிறோம். 

எழுத்தாளனும் ஒரு தனி குகையில் அமர்ந்து தியானம் செய்ய இயலாது. அவனுக்கு படிக்கவும் எழுதவும் நேரம் அவசியம் என்றாலும் எப்படியாவது நேரம் அடைந்து இணையம் வழியும் வாசகர்களிடம் கருத்து பகிர்வது இன்றைக்கு அவசியமாகி விட்டது. அது சகமனிதனுக்கு நாம் அளிக்கும் மரியாதை. இம்மாத உயிர்மை கட்டுரையில் பாரதி கிருஷ்ணகுமார் ஜெயகாந்தனைத் தேடி அவரது வாசகர் ஒருவர் வந்த சம்பவம் பற்றி கூறுகிறார். ஜெயகாந்தன் தன் நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருக்க வாசகரின் வருகை அவரை எரிச்சல்படுத்துகிறது. அடுத்த நாள் வரச் சொல்கிறார். அடுத்த நாள் வர இயலாது என்றும், எப்படியாவது சில வார்த்தைகளாவது ஜெ.கெயுடன் பேசி விட வேண்டும் எனவும் அவ்வாசகர் கெஞ்சுகிறார். ஜெ.கெ அவரை துரத்தி விடுகிறார். எழுத்தாளனின் அவகாசத்தைப் பொறுத்தே வாசகன் பேச வர வேண்டும் என்கிறார் ஜெ.கெ. எனக்கு இது பண்பாடற்ற முசுடுத்தனம் எனத் தோன்றுகிறது. எனக்கு மற்றொரு அனுபவம் உள்ளது. நான் முதன்முறை ஜெயமோகனை சந்திக்க சென்ற போது காலை நேரம். அவர் தன் இரு குழந்தைகளையும் குளிப்பாட்டி சீருடை அணிவித்துக் கொண்டிருந்தார். என்னை சற்று நேரம் காக்க சொல்லி விட்டு என்னுடன் அரை மணி பேசிய பின்னரே அவர் அலுவலகம் கிளம்பினார். இது தான் பண்பு. எஸ்.ரா செய்தது தவறு என்பதல்ல என் வாதம். இன்றைய சூழலில் வாசகர்களின் எதிர்பார்ப்பு பற்றி சொன்னேன்.

பிரபா என்னுடைய “தங்கமீன்கள்” கட்டுரையை குறிப்பிட்டு அது தன்னை “அச்சுறுத்தி” விட்டதாய் சொன்னார். அரவிந்தன் அது பற்றி குறிப்பிடும் போது எழுத்து அதில் பேசப்படும் விசயத்தைப் பொறுத்து புரிய சற்று சிக்கலாக இருக்கலாம். அது எழுத்தாளனின் தவறு அல்ல. வாசகன் கூடுதல் அக்கறை எடுத்து திரும்ப படிக்க வேண்டும் என்றார். புரியவில்லை என்று எழுத்தாளனை குறை கூறக் கூடாது என்றார். எனக்கு எல்லா கட்டுரைகளும் எல்லாருக்கும் புரிய வேண்டியதில்லை எனத் தோன்றுகிறது. ஒரு வாசகனாக எனக்கு புரியாத பல கட்டுரைகள் உள்ளன. அவற்றை பிறகு படிப்பதற்காய் ஒதுக்கி விடுவேன். ஆனால் எனக்கு புரிய வேண்டியது நிச்சயம் ஒருநாள் புரியும் என்பது என் நம்பிக்கை. மேலும் மூன்று நாட்களுக்கு முன்பு தான் அண்ணா நூலகத்தில் ஒருவரை சந்தித்தேன். அவர் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணி செய்தவர். நல்ல வாசகர். அவர் “தங்கமீன்கள்” கட்டுரையைப் பற்றி குறிப்பாய் பேசினார். தன்னை மிகவும் கவர்ந்ததாய் பாராட்டினார். இது போல் பலரும் அக்கட்டுரையை பாராட்டி உள்ளனர். ஆனால் என் மனைவிக்கு மிகவும் பிடிக்காத கட்டுரை அது. அடிக்கடி அக்கட்டுரையை குறிப்பிட்டு கண்ணில் அனல் பறக்க “அந்த படத்தை கூட மன்னித்து விடுவேன், ஆனால் உன்னை மன்னிக்க மாட்டேன்” என்பாள். நான் இதையெல்லாம் வைத்து என்னவிதமான முடிவுக்கு வருவது சொல்லுங்கள்.

அடிப்படையில் எதைப் பற்றி எழுதினாலும் புரிய வேண்டும் என்பது என் நம்பிக்கை. தத்துவம், அறிவியல் போன்றவை விதிவிலக்கு. அதைப் படிக்க கொஞ்சம் கூடுதல் பிரயத்தனம் வேண்டும். அப்போதும் கூட ஒரு தர்க்க ஒழுங்கு மற்றும் தெளிவுடன் எழுதினால் அரைகுறையாகவேனும் ஒரு சிக்கலான விசயத்தை பேசி விட முடியும். நான் அடிப்படையில் ஒரு ஆசிரியன். நான் எழுதுவது புரியவில்லை என்றால் என் பக்கம் தவறு இருக்கிறதா என்று தான் முதலில் யோசிப்பேன். அடுத்த முறை இன்னும் தெளிவாக எழுத வேண்டும் என உறுதியெடுப்பேன். என் இஷ்டப்படி எழுதுவேன், வேண்டுமென்றால் படி எனது என் நிலைப்பாடல்ல. என்னை யாராவது படிக்கும் போது தான் எழுத்து நிறைவு கொள்கிறது. எனக்கு தத்துவம் பற்றி எழுத விருப்பம் அதிகம். பின்னணி தெரியாதவர்களுக்கு புரியாமல் போகவும் சாத்தியம் அதிகம். ஆனால் எனக்கு சொல்லும் விசயம் பற்றி தெளிவிருந்தால் வாசகனுக்கு புரியும் என்பது என் நம்பிக்கை. அதனால் வாசகனுக்கு புரியவில்லை என்றால் எனக்குத் தான் தெளிவில்லையோ என யோசிப்பேன். இப்படி வாசக புரியாமையை பல விதங்களில் பார்க்கலாம்.

அரவிந்தன் பேச்சு மிக நன்றாக இருந்தது. அவரிடம் கனலும் லட்சியவாதம் நம் சூழலுக்கு இன்று மிக அவசியம். இமையம் தன் பேச்சில் நாவல்களை பேசுபொருளின் அடிப்படையில் பட்டியலிட்டதைப் பற்றி அரவிந்தன் கூறும் போது, ஒரு நாவல் அது என்ன கூறுகிறது என்பது அல்ல எப்படி கூறுகிறது என்பதைப் பொறுத்தே முக்கியத்துவம் கொள்கிறது என்றார். சினிமா விமர்சனம் எழுதி நிறைய வாசகர்களை அடைவதில் இன்று எழுத்தாளனுக்கு உள்ள விருப்பம், தம் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்பின்மை ஆகியவற்றை சாடினார். எனக்கு இன்னொரு ஐயம் தோன்றியது. ஒரு எழுத்தாளன் தீவிரமாகவே இருக்க வேண்டும் என அவனே முடிவு செய்ய வேண்டுமா அல்லது அவன் இயல்பாகவே தீவிரமாய் இருக்க வேண்டுமா? இன்றுள்ள சூழலின் விளையாட்டுத்தனம், கேளிக்கை ஆகியவற்றின் பகுதியாக அவனும் மாறி விடக் கூடாதா? அதனுள் இருந்து அது பற்றி அவன் எழுதக் கூடாதா? இது பற்றி எனக்கு தெளிவான விடைகள் இல்லை.


நன்றாய் திட்டமிட்டு, பொருட்செலவுடன் நேர்த்தியாய் இக்கருத்தரங்கை நடத்திய வாசகசாலையின் கார்த்திகேயன், அருண், பார்த்திபன் ஆகியோருக்கு என் பாராட்டுக்கள். இவர்கள் சாரு வாசகர் வட்டத்தில் முன்பு செயல்பட்டு பின்னர் தப்பித்து வந்து இன்று பொதுவான இலக்கிய கூட்டங்கள் நடத்துவது ஆரோக்கியமானது. முன்பு அவர்களின் உழைப்பும் ஆற்றலும் ஒரு தனிமனிதனுக்கு வளர்ச்சிக்கு பயன்பட்டது. இப்போது அது நம் சூழலுக்கு, பண்பாட்டுக்கு, வாசகர்கள், எழுத்தாளர்கள் என அனைவருக்கும் பயன்படுகிறது. எழுத்தாளனுக்கான புரொமோஷன் கூட்டம் நடத்துவது அந்த எழுத்தாளன் அல்லது பதிப்பாளனின் வேலை. அதை வாசகர்களை வைத்து செய்வது கூலியில்லாத அப்பட்டமான சுரண்டல். அந்த சுரண்டலில் இருந்து மீதமுள்ள வாசகர்களும் தப்பித்து இது போன்ற பயனுள்ள செயல்களில் ஈடுபட வேண்டும். 

4 comments:

ராம்ஜி_யாஹூ said...

u missed raja sundararajan speech with intention or without intention. you too

Abilash Chandran said...

I was having lunch at the time

rajasundararajan said...

என்னுடைய பேச்சு மதிய உணவுக்கு முந்தித்தான் நிகழ்ந்தது. அதை அபிலாஷ் முழுக்கமுழுக்கக் கேட்டார். அவர் மதிய உணவு சாப்பிடுகையில் அவர் அருகில் நான் இருந்து அவரோடு பேசிக்கொண்டு இருந்தேன்.

Abilash Chandran said...

என்னவொரு அழகான கவித்துவமான பின்னூட்டம் ராஜசுந்தர்ராஜன்