Sunday, May 10, 2015

செய்தித்தாள் எப்படி டிவி ஊடகத்தை ஜெயித்தது?

Newspaper. by inbrainstorm

சின்ன வயதில் எனக்கு செய்திகள் ரொம்ப திராபையான ஒரு விசயமாக தோன்றின. அப்போதெல்லாம் விளையாட்டு செய்திகள், அதுவும் குறிப்பாக கிரிக்கெட் செய்திகள், மட்டும் தான் படிப்பேன். ஏன் விளையாட்டு செய்திகளை முதல் பக்கத்தில் போடுவதில்லை என நான் யோசித்ததுண்டு. இப்போது அதுவும் நிகழ்ந்து விட்டது. ஆங்கில ஹிந்துவின் முதல் பக்கத்தில் கிரிக்கெட் செய்தி மற்றும் கிரிக்கெட் பத்தி ஒன்று கூட வருகிறது. வெகுசீக்கிரத்தில் சினிமா சேதிகளும் அது போல் வரும் என நினைக்கிறேன்.


கொஞ்ச நாள் “மாலைமலரில்” வேலை பார்த்தேன். அது செய்திகள் மீதான என் பார்வையை மாற்றியது. செய்திகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, உருவம் அளிக்கப்படுகிறது என கவனித்தேன். சில நாட்களில் எங்கள் எடிட்டர் இவ்வாறு அலுத்துக் கொள்வார் “இன்னிக்கு செய்தி எதுவுமே நல்லா இல்ல, அடச் சே”. பிறகு போக போக நானும் அப்படி யோசிக்க ஆரம்பித்தேன். செய்தி நிச்சயம் உண்மையானதாக இருக்க வேண்டும். ஆனால் செய்தியின் முக்கியத்துவம் உண்மையை அறிவது அல்ல. ஒரு கதை படிக்கிற சுவாரஸ்யம் தான் செய்தியை நோக்கியும் நம்மை ஈர்க்கிறது. வேலை செய்யும் இடத்தில் கூட்டமாக நின்று புரளிகளை கேட்கிற ஆர்வம் இருக்கிறதல்லவா அது தான் செய்தியின் வணிக ஈர்ப்பு. இல்லாவிட்டால் தினசரி இவ்வளவு தகவல்களை அறிந்து மனிதனுக்கு என்ன பயன்?

அப்டேட்டாக இருக்க வேண்டும். அதற்காக படிக்கிறேன் என சிலபேர் சொல்வார். ஆனால் நீங்கள் அப்டேட்டாக இருக்கிறீர்கள் என யார் அக்கறைப்படுகிறார்கள்? அதற்கெல்லாம் எங்கே நேரம்? சதா இணையமும் டிவியும் செய்திகளை நம் கண்களில் திணித்துக் கொண்டிருக்கும் சூழலில் அப்டேட்டாக இருப்பதற்கு எந்த பிரயத்தனமும் தேவையில்லை. கண்களை மூடாமல் இருந்தால் போதும்.

தகவல்கள் தான் முக்கியம் என்றால் ஏன் நேற்றைய செய்திகளை நாம் பொதுவாக சீந்துவது இல்லை? ஒன்றுக்கு மேற்பட்ட செய்தித்தாள்களை மேய்கிறவர்களுக்கு ஒரே செய்தியின் தகவல்களுக்கு இடையே நுண்ணிய வேறுபாடுகள் இருப்பதை காண இயலும். தகவல்கள் வேறாக இருக்கின்றனவே என யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. பெயர்கள், இடங்களைத் தவிர யாருக்கும் தகவல்களும் முக்கியம் அல்ல. சம்பவம் தான். அதுவும் ருசிகரமான சம்பவம்.

 சுவாரஸ்யம் என்றதும் தினத்தந்தியின் சதக் சதக் நினைவுபடுத்தப்படும். ஆனால் தெ ஹிந்துவின் மொழி கூட அடிப்படையில் ஒரு கதையாடலை கொண்டது தான். இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்துப் படித்தால் எனக்கு ஒவ்வொறு அறிக்கையும் ஒரு கதையாகத் தான் படுகிறது. உதாரணமாக ஆங்கில ஹிந்துவில் கோலப்பன் அடிக்கடி திமுக வாரிசு அரசியல், போட்டிகள், பூசல்கள் பற்றி எழுதுவதை படித்துப் பாருங்கள். “பொன்னியின் செல்வனில்” இருந்து ஒரு சதியாலோசனை அத்தியாயத்தை பிய்த்து ஆங்கிலத்தில் மொழியாக்கியது போல் பரபரப்பாக இருக்கும்.
மனிதர்களுக்கு தம்மைச் சுற்றி நடக்கிற கதைகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் மிகுதி. மிருகங்களுக்கும் தாம். நாய்கள் புழக்கம் உள்ள ஒரு தெருவுக்கு உங்கள் நாயை அழைத்துப் போனால் அது மிகுந்த ஆர்வத்துடன் மண்ணை முகர்ந்தபடியே வரும். அங்குலம் அங்குலமாய் ஆராயும். அதன் மூலம் அங்கு அதிகாரத்தை ஸ்தாபிக்க மூத்திரம் பெய்துள்ள நாய்களை கணக்கெடுக்கும். ஒரு புதுப்பகுதிக்கு போன உடனே நாய் அங்கு ஏற்கனவே எவ்வளவு நாய்கள் உள்ளன, அவை எப்படிப் பட்டவை என ஒருவாறு கணித்து விடும். அதனால் தான் வாக்கிங் அழைத்துப் போகிற நாய்களை தெருநாய்களுக்கு பிடிப்பதில்லை. அவை அங்கங்கே மூத்திரம் பெய்து ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட அதிகார வரையறைகளை மறுவரையறை செய்கின்றன. குழப்பம் உண்டு பண்ணுகின்றன. பத்திரிகை படிக்கிற நாமும் இவ்வாறு முகர்ந்து பார்க்கும் வீட்டு நாயைப் போலத் தான்.

செய்திகளை படிப்பது போன்றே செய்திகளை உருவாக்குவது, அதை பரப்புவது ஆகியவையும் அதிகாரத்துடன் சம்மந்தபட்டவை. அலுவலகங்கள், டீக்கடைகள், முகநூல், நண்பர்கள் கூடுமிடங்கள் எல்லாமே செய்திகள் திரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்படுவதற்கான களங்கள் தாம். பத்திரிகைகள், செய்தி அலைவரிசைகள் இதை திட்டமிட்டு வணிக நலனுக்காக, அரசியல் ஆதாயத்துக்காக செய்கின்றன. உதாரணமாக திமுக அனுதாபியான ஒரு நண்பர் முன்னர் முகநூலில் ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார். ஒரு நள்ளிரவில் அவர் பைக்கில் போய்க் கொண்டிருக்கிறார். கடுமையான போக்குவரத்து நெரிசல். அவருக்கு பின்னால் ஒரு ஆம்புலன்ஸ் வீரிட்டலரியபடி வருகிறது. சிலர் வேண்டாவெறுப்பாக வழிவிடுகிறார்கள். சிலர் முந்திக் கொண்டு போகிறார்கள். முன்னே போகிற ஒரு கார் சட்டென ஒதுங்கி நின்று கொண்டு ஆம்புலன்ஸை போக அனுமதிக்கிறது. அக்காரில் ஸ்டாலின் இருக்கிறார். ஸ்டாலின் இவ்வாறு பொதுநல நோக்கு மிக்க ஒரு நல்ல மனிதர் எனும் செய்தியை நண்பர் பகிர்கிறார். எப்படி காருக்குள் இருந்தவர் ஸ்டாலின் என நண்பர் அந்த இருட்டான வேளையில் கண்டறிந்தார் என தெரியாது. இது அவருக்கு நடந்ததாகவோ அல்லது வேறு ஏதாவது நண்பர் தனக்கு நடந்ததாக கூறி அதை நண்பர் தன் செய்தியாக திரித்து முகநூலில் எழுதியிருக்கலாம். ஆனால் இது போல் செய்திகளை உருவாக்கும் ஆர்வம் மனிதர்களுக்கு மிகுதியானது. முகநூல், வலைப்பூக்கள் மற்றும் நேரடி அரட்டைகளில் இது போல் எத்தனையோ செய்திகள் உருவாக்கப்படுவதை நீங்கள் கவனிக்கலாம். இது நாய் ஏற்கனவே மூத்திர வீச்சம் அடிக்கும் பகுதியில் தன் பங்குக்கு காலை தூக்கி தீர்த்தம் தெளிப்பது போன்றது.
செய்தித்தாளில் முழுக்க படிக்க வேண்டியதில்லை என்பதை நான் சற்று தாமதமாகத் தான் கற்றுக் கொண்டேன். அதனாலே எனக்கு அது ஆரம்பத்தில் அலுப்பூட்டியது. பிறகு தான் ஒவ்வொரு நாள் செய்தித்தாளின் உள்ளும் நமக்கான ஒரு தனி செய்தித் தாள் ஒளிந்துள்ளதை கவனித்தேன். தினமும் அதைத் தவறாமல் படித்து விடுவேன். நிறைய நேரம் இருந்தால் அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு செய்தியையும் படிப்பேன். ஆனால் அனைத்து செய்திகளும் நமக்கானவை அல்ல.

செய்தி அறிக்கையின் வடிவமும் சுவாரஸ்யமானது. சில செய்திகளுக்கு தலைப்பை தாண்டி எந்த முக்கியத்துவமும் இல்லை என அதன் எடிட்டரே நன்கு உணர்ந்திருப்பார். நாமும் படம் பார்த்து தலைப்பை வாசித்து கடந்து விடலாம். உள்ளே ஒன்றும் இருக்காது. முதல் பத்திக்கு மேல் எதுவும் இல்லாத அறிக்கைகள் உள்ளன. தந்தியில் இவற்றை அதிகமும் பார்க்கலாம். ஏனென்றால் அறிக்கையின் முக்கிய அங்கமான கதையை தலைப்பு, படம் மற்றும் உபதலைப்புகள் மூலம் முழுவதுமாய் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மிச்சம் எல்லாம் “இப்படியான மரத்தை தான் அசோகர் நட்டார்” வகையாகத் தான் இருக்கும்.
இன்னும் சில செய்திகளுக்கு ஒரு தொடர்ச்சி உருவாக்கப்பட்டு சுவாரஸ்யம் உண்டு பண்ணப்படும். ஆங்கில ஹிந்துவில் தொடர்ச்சியாக வந்த தானே தீப்பற்றி எரியும் குழந்தை பற்றின அறிக்கைகள் உதாரணம். பெருமாள் முருகன் செய்திகளும் மற்றொரு உதாரணம். பெருமாள் முருகன் மிக சமீபமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனு உட்பட ஹிந்துவில் பிரசிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் அச்செய்திக்கு உயிரளிக்க முடியவில்லை. இது போன்ற தொடர் செய்திகளின் வளர்ச்சி ஒரு தொடர்கதை போன்றே இருக்கும்.
“மாலைமலரில்” குறுஞ்செய்தி மூலமாக செய்திகளை பிரசுரிக்கும் ஒரு பிரிவு துவங்கினார்கள். அதற்காக நான் சில செய்திகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்தேன். தினசரி வெளியாகும் சோதிட பத்தியை எனக்கு அளித்தார்கள். திருவல்லிக்கேணியை சேர்ந்த ஒரு சோதிடர் தான் எழுதி வந்தார். அதை மொழிபெயர்க்க மொழிபெயர்க்க ஒரு விசயத்தை கவனித்தேன். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட ராசியின் பலனை, அதன் பிரச்சனைக்கான தீர்வை கொடுத்திருப்பார். ஒரு ராசிக்கான பலன் அடுத்த வாரம் அடுத்த ராசிக்கு போய் விடும். கொஞ்சம் கலைத்துப் போட்டு வாராவாரம் அதே ராசிபலனைத் தான் அவர் அனுப்பிக் கொண்டிருந்தார். மனிதர்களுக்கு அடிப்படையான பிரச்சனைகள் என அவர் சிலவற்றை வகுத்திருந்தார். தனம், நலம், குடும்ப நிலைமை, எதிர்பாராத பயணம் இப்படியான சில விசயங்கள். எப்படியும் எல்லாருக்கும் மாறி மாறி இது குறித்த கவலைகள் தானே. இந்த உளவியலை வைத்து அவர் காய் நகர்த்திக் கொண்டிருந்தார். இதைத் தனித்தனியாக வாசித்தால் கண்டுபிடிக்க முடியாது. மூன்று, நான்கு வார ராசி பலன்கள் மொத்தமாக எனக்கு கிடைத்ததால் பிடிபட்டது. எனக்குத் தோன்றியது – எதற்கு இதைப் போய் மாங்குமாங்கென்று ஒவ்வொரு முறையும் மொழியாக்க வேண்டும்? ஒரு வாரம் மொழிபெயர்த்தை அடுத்த வாரம் சற்றே மாற்றுவேன். ஒரு ராசிக்கான பலனை இன்னொன்றில் பொருத்துவேன். சில சொற்களை மட்டும் புதிதாய் புகுத்தி கொடுத்து விடுவேன். அவ்வளவு தான். என் வேலை சுளுவாக முடியும். நான் இருந்தது வரை இது குறித்து யாரும் சந்தேகம் எழுப்பவில்லை. அந்த சோதிடரே படித்துப் பார்த்தால் கூட சந்தேகம் எழாது. கவனமாய் இரண்டு பிரதிகளை வைத்து ஒப்பிட்டால் மட்டுமே கண்டுபிடிக்க இயலும். அதனால் தான் எனக்குத் தோன்றும் செய்தித்தாளில் வருகிற சோதிடப் பக்கம் ரொம்ப சுவாரஸ்யமான பகுதி என. மனித உளவியலை நன்கு புரிந்து கொண்ட ஒருவர் தான் அதை நன்றாக தொடர்ந்து மக்கள் படிக்கும்படி எழுத முடியும்.
ஒரு செய்தி அறிக்கை எழுதுவது ஒரு தனியான கலை. கட்டுரை எழுதுவதை விட சிரமமானது. டெக்கான் கிரானிக்கல், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளின் கோணல்மாணலான அறிக்கைகளை படிக்கிறவர்களுக்கு அது இன்னும் நன்றாக புரியும். நல்ல அறிக்கை எழுத கூர்மையான மனம் வேண்டும். செய்திகளை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி எளிமையாக தருவது எளிதான காரியம் அல்ல. அதை விட சிரமம் ஒரு அறிக்கையை கதை போல எழுதுவது, ஆனால் இது கதை அல்ல செய்தி எனும் உணர்வையும் அதேவேளை வாசகனுக்கு அளிப்பது. இது ரொம்ப ரொம்ப முக்கியம். எக்ஸ்பிரஸ், கிரானிக்கலின் பலவீனம் அறிக்கைகள் கதையாக வெகுஎளிதில் பல்லிளித்து விடும் என்பது. அதாவது எல்லாமே கதை தான், ஆனால் தகவல்களை நாம் தருகிற விதத்தில் ஒரு வறட்டு கரார்தனம் அதில் தொனிக்க வேண்டும். சிரிக்காமலே டைமிங் நகைச்சுவை சொல்வது போன்ற கெட்டிக்காரத்தனம் அது.

ஆங்கில ஹிந்து பத்திரிகையின் செய்தி உருவாக்கத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தை கடந்த ஐந்து வருடங்களில் கவனித்திருப்பீர்கள். இப்போதெல்லாம் வறட்டு அதிகார பூர்வ செய்திகளை விட பரபரப்பான, சற்றே உணர்ச்சிகரமான செய்திகளுக்கு தான் அதிகமாய் முன்னணி இடம் அளிக்கிறார்கள். இதை நான் ஒரு வீழ்ச்சியாகப் பார்க்கவில்லை. முக்கியமான செய்தி என்றால் எது? ஒரு ஊழல் வெளிப்படும் தருணம், பட்ஜெட் அறிக்கை, வெளியுறவுத்துறை அமைச்சர்களின் துடுக்குத்தன அறிவுப்புகள், எதிர்க்கட்சியுடனான ஆளுங்கட்சி மோதல்கள் இவையெல்லாமே சுவாரஸ்யமான கதைகள் தாமே. அறிவார்ந்த முக்கியத்துவம் கொண்ட எந்த பகுதியும் இவற்றில் செய்திக்குரியது ஆகாது. அதை நடுப்பக்க அலசல் கட்டுரையில் மட்டுமே பேச முடியும். “பிரதமர் பாகிஸ்தானை எச்சரித்தார்” என்பதிலும் ஷஷிதரூருக்கு பாகிஸ்தானிய பத்திரிகையாளருடன் கள்ள உறவா எனும் கேள்வியிலும் ஒரே நாடகிய மோதல் தானே இருக்கிறது! ஒன்று இரு நாடுகளுக்கு இடையிலானது, இன்னொன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலானது.
 “மாலைமலரின்” மொழியாக்க பிரிவில் இருக்கையில் அலுவலகம் முடிய இரவு பதினொரு மணியாகும். அப்போது நிருபர்கள் அனைவருக்கும் ஒரு செல்போன் வாங்கி அளித்தார்கள். எந்த செய்தி வந்தாலும் உடனே அழைத்து எடிட்டர் அல்லது துணை எடிட்டரிடம் அவர்கள் சொல்லி விட வேண்டும். தந்தியின் நிருபர்கள் ரொம்பவே கெட்டிக்காரர்கள், அனுபவசாலிகள் மட்டுமல்ல ஆர்வக்கோளாறு மிக்கவர்களும் கூட. போன் சதா கிணுகிணுத்துக் கொண்டே இருக்கும். சில்லறை செய்திகள் திருப்பதி உண்டியலில் போல கொட்டிக் கொண்டே இருக்கும். இது எங்களுக்கு தலைவலியாக மாறியது. ஒருநாள் இரவு நாங்கள் கிளம்புவது எத்தனமாகிக் கொண்டிருந்தோம். மணி பத்தே முக்கால் இருக்கும். ஒரு கிராமத்தில் இருந்து ஒரு நிருபர் அழைத்து சுருக்கமாக ஒரு செய்தி சொன்னார். மாலை நான்கு மணி அளவில் ஒருவர் தன் பக்கத்து வீட்டு பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து அப்பெண்ணுடன் சரசத்தில் ஈடுபட்டார். கதவை சாத்த மறந்ததால் அவரது கணவன் வந்ததும் மாட்டிக் கொண்டார். பெரிய பிரச்சனையாகி விட்டது. இது தான் செய்தி. எடிட்டர் கோபத்தில் அதை போட முடியாது என்று விட்டார். அப்போது யோசிக்க இந்த அற்ப செய்தி எனக்கு ரொம்ப தமாஷாக பட்டது. இப்போது யோசித்தால் இச்செய்தியில் எந்த தவறும் இல்லை எனத் தோன்றுகிறது. இதை செய்தவர் ஒரு உள்ளூர் அரசியல்வாதியோ தொழிலதிபரோ என்றால் அது சட்டென முக்கியத்துவம் பெற்றதாகி விடும். சஷிதாரூர் என்றால் முதல் பக்கத்திலேயே வந்து விடும். வெறும் குப்புசாமி என்றால் வராது. ஆனால் செய்தி ஒன்று தானே. இது போன்ற ஒரு சந்தர்ப்பம் வாழ்க்கையில் வந்தால் என்னவாகும் என அறிய ஒரு வாசகனுக்கு ஆர்வம் இருக்கும் தானே? இதை கொஞ்சமே கொஞ்சம் திரித்து வழக்கை போலிசார் விசாரித்து வருகிறார்கள் எனப் போட்டால் முழுசெய்தியாகி விடும். அல்லது இரு குடும்பத்தினருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வருகிறது என்றால் அச்செய்தி மேலும் பிரசுரத்தகுதி கொண்டதாகும். அடிப்படையில் எந்த செய்திக்கும் தேவை பின்னணி தான். பின்னணியை பொருத்தினதும் ஒரு கதை ஒரு செய்தியாகிறது.

ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் டிவி ஊடகம் பெரும் வளர்ச்சி அடைய அது அச்சு செய்தி ஊடகத்துக்கு கொள்ளி வைத்து விடும் என பயந்தார்கள். ஆனால் செய்தித்தாள்கள் பிழைத்தது மட்டுமன்றி இன்று பல்கி பெருகி உள்ளன. உடனுடக்குடன் அறிவது தானே செய்தியின் முக்கியத்துவம். ஆனால் ஆறிப் போன செய்தியை அடுத்த நாள் வாங்கி ஏன் மக்கள் வாசிக்கிறார்கள்? அதுவும் இன்று இணையம் டிவியை முந்திக் கொண்டு நமக்கு செய்திகளை உடனுக்குடன் பகிர்கின்றது. முக்கியஸ்தர்களின் டிவிட்டர் அறிவிப்புகளை அடுத்த நொடியே படிக்கிறோம். ஆனால் அவை அடுத்த நாள் தான் அச்சு பத்திரிகையில் பிரதான சேதியாக வெளியாகின்றன. இச்சூழலில் செய்தித்தாள்கள் எப்படி தாக்குப்பிடிக்கின்றன?

 இங்கு தான் செய்தியின் சூட்சுமம் உள்ளது. செய்தி என்பது உடனுக்குடன் அறிய வேண்டிய வஸ்து என்று டி.வி மீடியா தவறாக புரிந்து கொள்கிறது. உடனுக்குடன் செய்தியை அளிப்பதும், அதிகமாய் காட்சிகளை ஒளிபரப்புவதும்வே அலைவரிசைகளின் முன்னிரிமை. இது செய்தியின் கதைத்தன்மையை கொன்று விடுகிறது. செய்தி என்பது உயிரற்ற ஒரு பொருளை பெயர்த்து குப்பிகளில் அடைத்து அடுக்கியதாக டி.வி செய்தியில் மாறுகிறது. அதுவும் உடனுக்குடன் ஒரு செய்தியின் தகவல்கள் அப்டேட் ஆவதும், புதுபுது செய்திகள் இடத்தை ஆக்கிரமிப்பதும், ஏகப்பட்ட நிபுணர்களின் வாதபிரதிவாதங்கள் ஏற்படுத்தும் குழப்பமும் செய்தியின் மிச்சசொச்ச ஆன்மாவையும் கொன்று விடுகிறது. இதனாலே இன்றும் ஒருநாள் பழைய செய்தியை அடுத்த நாள் பத்திரிகையில் ஒரு கோர்வையான தெளிவான கதையாக வாங்கிப்படிக்க மக்கள் விரும்புகிறார்கள். மக்களின் கதை கேட்கும் ஆர்வத்தின் நீட்சி தான் செய்தி வாசிப்பது என்பதற்கு இதைவிட சிறந்த சான்று வேறு இராது. ஒரு சிறந்த சேதி நிருபர்களால் அவசர அவசரமாக மைக் பிடித்து எச்சில் முழுங்கி துப்பப்படும் துண்டு தகவல்களால் உருவாவதில்லை. ஒரு நல்ல சேதி ஒரு கைதேர்ந்த எடிட்டரின் புரிதல் மற்றும் பார்வையால் வடிகட்டப்பட்டு உருவாகிறது.

செய்தித்தொகுப்பு எனும் வடிவத்திலும் டி.வி மீடியாவால் சோபிக்க முடியவில்லை. அடிப்படையில் எதற்கும் பொறுமையின்மை எனும் நிலை அங்குள்ளதால் டி.வி மீடியாவால் எதிர்காலத்திலும் மக்களின் செய்தி ஆர்வத்துக்கு முழுமையாக தீனிபோட இயலாமல் போகும். உண்மையில் மற்றொரு செய்தி ஊடகமாக, கிட்டத்தட்ட செய்தித்தாளுக்கு நெருங்கி வரும் சாத்தியமும் களமும் இணையத்தில் உண்டு. ஆனால் இணையத்தில் செய்திகள் உருவாக்கப்படாமல், டிவி மீடியா உருவாக்கும் செய்திகள் அங்கு விவாதிக்கப்படுகின்றன. வெளியே சொல்ல முடியாத திருட்டுத்தனமான செய்திகள், புரளிகள் பிரசுரிக்க இணையதளங்கள், முகநூல் பக்கங்கள் உள்ளன. ஆனால் ஒரு ஊரின் தனித்துவமான செய்திகளை ஒரு சின்ன குழுவாக சேகரித்து மிக சுலபமாக ஒரு செய்தித்தாளை இணையத்தில் நடத்த இயலும். முகநூலில் உடனுக்குடன் அப்டேட் செய்ய இயலும். அதன் மூலம் விளம்பரங்கள் நாடி வணிக நலனும் பெற முடியும். ஆனால் இப்போதைக்கு இணைய பதிவர்கள் இவ்விசயத்தில் கவனம் செலுத்தவில்லை.

ஓட்டப்பந்தயத்தில் முயலை தோற்கடித்த ஆமையாக டி.வி, டிவிட்டர், முகநூல் ஆகியவற்றுடன் போட்டியிடாமல் அவற்றின் மூலம் செய்திகளை சுலபமாக திரட்டி செய்தித்தாள்கள் வளர்ந்து வருகின்றன. முன்னெப்போதையும் விட இன்று செய்திக்கட்டுரைகள் எழுதுவது, பேட்டி எடுப்பது நிருபர்களுக்கு எளிதாகி விட்டது. இன்னொரு புறம் தினசரி ஏதாவது ஒரு தலைப்பை கண்டடைந்து, பேச ஆட்களை தேடி ஒரு விவாத நிகழ்ச்சி நடத்த டிவி ஒருங்கிணைப்பாளர்கள் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 “நீயா நானா” வெற்றி கண்டதற்கு ஒரு காரணம் அது டி.விக்குள் பத்திரிகை செய்தியின் சூட்சுமத்தை உணர்ந்து வெளிப்படுத்தியது; ஒரு ரியாலிட்டி ஷோ வடிவில் மக்களை பேச வைத்து அவர்களிடம் இருந்து செய்திகளை கதையாக அந்நிகழ்ச்சி உருவாக்கினது. மக்களின் செய்தியை அது அம்மக்களிடமே விற்கிறது. அது அடிப்படையில் கவர் ஸ்டோரி வடிவை மிக அழகாக காட்சிப்படுத்துகிறது. பொறுமையாக ஒரு செய்தியை எடுத்துக் கொள்கிறது. உதாரணமாக, மருத்துவமனைகள் இன்று மக்களை கொள்ளையடிக்கின்றனவா? இச்செய்தியினுள் பல இழைகளை பிரித்து மெல்ல மெல்ல இறங்கி செல்கிறது. ஒரு செய்திக்குள் பல செய்திகள், கதைகள் என விரிகிறது. ஆதாரங்கள், உண்மைக்கதைகள் என செய்தியை வலுவாக்கிறது. இறுதியாக சிறப்பு விருந்தினர் மூலம் ஒரு வித்தியாசமான பார்வையை செய்திக்கு அளிக்கிறது. இந்த பொறுமையும், மெல்ல மெல்ல ஒரு கதையை நம்பகத்தன்மையுடன் கட்டியெழுப்பும் லாவகமும் பிற டி.வி செய்தி நிகழ்ச்சிகளில் இல்லை. “நீயா நானா” அடிப்படையில் ஒரு விவாத நிகழ்ச்சி அல்ல. அது ஒரு நவீன வில்லுப்பாட்டு. ரியாலிட்டு ஷோ தன்மை கொண்ட கூத்து நாடகம். இதை உணராமல் இதன் அச்சில் சில விவாத நிகழ்ச்சிகளை பிற அலைவரிசைகள் உருவாக்கி தோல்வி கண்டன. மாலையானால உட்கார்ந்து கதை கேட்க இன்றும் மனித மனம் ஏங்குகிறது. அந்த ஏக்கத்தை “நீயா நானா” நிறைவு செய்கிறது.

எதிர்காலத்தில் செய்தித்தாளின் வடிவம் முழுக்க மாறும் என்கிறார்கள். ஒவ்வொரு வாடிக்கையாளனுக்கும் அவனது தேவை, விருப்பம், வாழ்க்கைப்பார்வையை ஒட்டி தனியாக தேர்ந்தெடுத்த செய்திகள் இணையம் மூலம் தனி பிரதியாக கொடுக்கப்படும் என ஊகிக்கிறார்கள். இன்று முகநூல் மற்றும் மின்னஞ்சல் நிறுவனங்கள் நமது இணைய புழங்கல் வரலாற்றைக் கொண்டு நமக்கேற்ற பொருட்களை நம்மிடம் சந்தைப்படுத்த முயல்கிறதை பார்க்கிறோம். இதன் அடுத்த கட்டம் தான் இப்படி தனிமனித தன்மை கொண்ட பிரத்யேக செய்தித்தாள் எனும் கனவு. ஒவ்வொரு பிரதியும் அவரவர் ஆர்வம், தேவை பொறுத்து தனித்துவமானதாக இருக்கும். மென்பொருள் மூலம் இது சுலபமாக சாத்தியப்படும் என நினைக்கிறேன். எனக்கு கிரிக்கெட், அறிவியல், சினிமா பிடிக்கும் என்று கொள்ளுங்கள். இந்த பிரிவுகளுக்கு உள்ளே சில குறிப்பிட்ட செய்திகளை அதிகம் வாசிப்பேன். குறிப்பிட்ட ஆளுமைகள், கட்சி, நிறுவனங்கள், பொருட்கள், பண்டங்கள் பற்றி எனக்கு குறிப்பான செய்திகள் வேண்டும். இவை மட்டுமே என் மின் செய்தித்தாளில் இருக்கும். ஆனால் இந்த வடிவம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான். எனக்கு ஒரு செய்தி வந்தால் நான் பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். பிறரும் அதை அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டு சாத்தியமும் இல்லாவிட்டால் அது செய்தியே அல்ல. செய்தி படிக்கும் தேவைக்குள் கூட்டாய் கதைகேட்கும் சுவாரஸ்யம், வேட்கை, விழைவு செயல்படுகிறது. அதனாலே எதிர்காலத்திலும் நாம் ஒரே மாதிரியான, அனைவரும் விவாதிக்கக் கூடிய, சமூகத்தின் மனசாட்சியை ஒரேமாதிரி உலுக்குகிற, ஒரே சமூக செண்டிமெண்டுகளை தொட்டுணர்த்துகிற, ஒரே சமூக அச்சத்தை கிளர்த்துகிற செய்திகளை நாடிப் படித்துக் கொண்டிருப்போம்.

செய்தி வடிவம் மனித மனதை போன்றே புராதனமானது. ஒரு ஆண் ஒரு பெண்ணைக் முதலில் கண்டதும் உடனடியாய் எங்கே பார்ப்பான் என்பதைப் போன்றே எந்த செய்தியை நோக்கி மனம் செல்லும் என்பதும் எந்த காலத்திலும் மாறப் போவதில்லை. 
(நன்றி: அம்ருதா, ஏப்ரல் 2015)

1 comment:

jude raj said...

செய்தி தாள் பற்றி உங்கள் அனுபவம் மற்றும் கருத்துகளை தெரிவித்ததற்கு நன்றி சார்.