Saturday, May 2, 2015

இடம் பிடிப்பது

Dog's Life by tortuegraphics

முன்னேறுவதற்கு ஆள் பிடிக்கணுமா வேலை செய்யணுமா? எவ்வளவு அதிகமாய் ஆள் பரிச்சயம் உண்டோ அவ்வளவு எளிதாய், சீக்கிரமாய் உங்களுக்கு வேலை வாய்ப்புகள், புகழ், பணம் ஆகியவை கிடைக்கும். ஆனால் இவ்வாய்ப்புகளை பயன்படுத்தி உயர்வதற்கு உழைக்க வேண்டும். பெரும்பாலும் ஆள்பிடிக்கிற வேலையில் சமர்த்தாக உள்ளவர்கள் வேலையில் சொதப்புவார்கள். அதாவது கிடைக்கிற வாய்ப்புகளை நாய் வாய் தேங்காய் போல் வைத்துக் கொண்டு அலைவார்கள். தாமும் பெரிதாய் பயன்படுத்த மாட்டார்கள்; அடுத்தவர்களுக்கும் கொடுக்க மாட்டார்கள்.


உழைப்பு வேறு ஒரு மனநிலையை கோருவது. மனதின், உடலின் மொத்த ஆற்றலையும் ஓரிடத்தில் குவிப்பது தான் உழைப்பு. நான் சொல்வது அலுவலகத்துக்கு போய் எந்திரத்தனமாய் கோப்பை நகர்த்துகிற உழைப்பல்ல. படைப்பூக்கமான உழைப்பு. ஒரு தொழில்முனைவோனின், கலைஞனின், சிந்தனையாளனின், தன் வேலையில் தனித்துவமாய் இயங்குபவனின் உழைப்பு.

 என் பார்வையில் அதிகமாய் மக்களிடம் புழங்கி நன்றாய் வலைதொடர்பாக்கம் செய்பவர்கள் உருட்டப்படும் சப்பாத்தி மாவைப் போன்றவர்கள். அவர்கள் பரந்து பரந்து கிழிகிற அளவுக்கு மெல்லிசாய் சல்லிசாய் ஆகி விடுவார்கள். ஒரு திசையை நோக்கி உக்கிரமாய் செயல்படும் ஆற்றல் அவர்களுக்கு இருக்காது. ஏனென்றால் அதிகமாய் மக்களுடன் சேர்ந்து பயில பயில அவர்களின் எண்ணங்கள் தாம் உங்களில் அதிகமாய் செயல்படும். உங்கள் மூளை காலியாகி, ஸ்விட் ஆப் நிலைக்கு சென்று விடும். அடுத்தவர்கள் உங்களுக்காய் சிந்திப்பார்கள். நீங்கள் அடுத்தவர்களுக்கு ஏற்றபடி செயல்படுவீர்கள். வாழ்க்கையில் ஒரு நடுநிலைக்கு போக இந்த சமூகத்துக்கு வளைந்து கொடுக்கும் சாமர்த்தியம் போதும். ஆனால் உச்சத்துக்கு போக இது உதவாது.

படைப்பூக்கம் கொண்ட உழைப்புக்கு ஒருவிதமான கிறுக்கு, தனித்துவம், மூர்க்கம், தனிமை தேவையுள்ளது. சமூகமாக்கலுக்கு முதல் தேவை சொந்தமாய் கருத்தோ நிலைப்பாடோ இல்லாமல் இருப்பது. அடுத்து மனதை வெளிநோக்கி குவிப்பது. முதல் ஆள் கடுமையான சமூக தனிமைக்கு ஆட்படுவார். இரண்டாமவர் உள்ளே காலியாக உணர்வார். பேஸ்புக்கில் அதிக நேரம் செயல்பட்டால் நிறைய நண்பர்களும், கவனமும், அதனாலான வாய்ப்புகளும் அமையும். ஆனால் அடிக்கிற திசையில் பறக்கிற கொடி போல் ஆகி விடுவீர்கள். சொந்தமாய் எதையும் தீவிரமாய் செய்ய இயலாது. இரண்டையும் சமநிலையுடன் செய்ய அபூர்வமான ஆற்றல் வேண்டும். நம்மில் பெரும்பாலானோருக்கு அது கிடையாது.

இது ஒரு புறம் இருக்கட்டும். ஒரு திறமையான ஆள் இங்கு கண்டுகொள்ளப்படுவதே இல்லை என அடிக்கடி பேசிக் கொள்கிறோம். இவ்வளவு நெரிசல் கொண்ட நம் சமூகத்தில் இது இயல்பு தான். இங்கே ஆட்கள் அதிகம், இடம் குறைவு. இணையமும் உலகமயமாக்கலும் நிறைய இடம் உள்ளதாய் ஒரு பாவனையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இப்போதும் ஒரு மனிதன் தன் திறமையை வெளிப்படுத்த, கவனமும் வாய்ப்புகளும் அடைய நிறைய நிறைய போராட வேண்டி உள்ளது. ஒரு விவாத நிகழ்ச்சி நடத்தும் டிவி ஒருங்கிணைப்பாளர் ஒருமுறை சொன்னார். அரசியல் விவாதங்களில் கலந்து கொள்ள குட்டித்தலைவர்கள் போட்டோபோட்டி போடுகிறார்கள் என. எனக்கு அபத்தமாய் இருந்தது.
இத்தலைவர்கள் டி.வியில் தோன்றி பேசுவதை கூடியமட்டும் தமக்கு சாதகமாய் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் பெறுவார்கள். நான் கடந்து சில ஆண்டுகளில் பல முறை டி.வி நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன். ஆனால் எனக்கு அதைக் கொண்டு ஆதாயம் பெறத் தெரியாது. எனக்கு அதனால் பிரச்சனைகள் தாம் அதிகம். வேலை பார்க்கிற இடங்களில் மேலதிகாரிகள் என்னை இதற்காக வெறுப்பார்கள். ஒரு மேலதிகாரி கொடுத்த வதை தாங்காமல் நான் ராஜினாமா பண்ணி ஓடி வந்து விட்டேன். அவருக்கு என்னிடம் எரிச்சலூட்டும் முக்கியமான விசயம் டி.வியில் என் மூஞ்சியை பார்ப்பது தான். உண்மையில் என் இடத்தில் இந்த அரசியல்வாதிகள் இருக்க வேண்டும். அதற்காய் பல இடைநிலை அரசியல்வாதிகள் கடுமையாய் முயன்று கொண்டிருக்கவும் கூடும். அவர்களுக்கு அந்த இடத்தைப் பெற பிரயத்தனிக்க வேண்டி உள்ளது. ஆனால் எனக்கு அது கேட்காமலே வந்தது. ஒரு கிரிக்கெட் உலகக்கோப்பையை ஒட்டி முதன்முறை நீயா நானாவில் பங்கேற்றது தான் துவக்கம். பிறகு நான் கூப்பிட்டால் வருகிறேன், சென்னையில் இருக்கிறேன், அவர்களுக்கு பொருத்தமாய் பேசுகிறேன் என்பதற்காய் அவ்வப்போது அழைக்கிறார்கள். நானும் அதிக உபத்திரவமில்லாத பொழுதுபோக்கு என்பதற்காய் போய் வருகிறேன். டி.வியில் பேசுவது தோசை சுடுவதை விட எளிய காரியம். கொஞ்சம் தயாரித்துக் கொண்டு போனால் போதும். ஒருமணிநேர நிகழ்வில் ஐந்து நிமிடம் பேசினால் அதிகம்.

நான் எப்படி எனக்கு அவசியமே இல்லாமல், அதிக பிரயத்தனங்கள் இன்றி அவ்வப்போது ஒரு டி.வி நிகழ்ச்சி இடத்தை பிடித்துக் கொள்கிறேனோ அதே போல் வேறு சிலர் வேறு துறைகளில் செய்வதை பார்க்கிறேன். சில கல்லூரிகளில் பேசச் செல்லும் போது அங்குள்ள ஆங்கில பேராசிரியர்களுக்கு சரளமாய் பேசக் கூட வருவதில்லை என பார்த்திருக்கிறேன். அவர்கள் மாதம் ஐம்பதாயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்கியபடி இலக்கணப் பிழையான ஆங்கிலத்தை வகுப்பில் பேசுகிறார்கள். என்னுடன் ஆங்கில இலக்கியம் படித்த ஒரு மாணவனுக்கு மிக மிக சுமாராய் தான் ஆங்கிலம் வரும். அவன் பெற்ற மதிப்பெண்களும் குறைவு. படித்து முடித்ததும் அவனுக்கு தெரிந்த ஒருவர் மூலமாய் அரபு நாடொன்றில் ஆங்கில ஆசிரியராய் வேலை கிடைத்தது. லட்சங்களில் சம்பாதிக்கிறான். நான் முதுகலைப்படிப்பில் அவனை விட பத்து விழுக்காடு அதிகம் வாங்கி தங்கப்பதக்கம் பெற்றேன். ஆனால் எனக்கு கிடைத்த முதல் வேலையில் சம்பளம் 2500. அப்போது துவங்கி 14 வருடங்களாய் ஒரு சாதாரண வேலைக்கு நான் அல்லாட வேண்டி இருக்கிறது. சமீபமாய் என் கல்லூரியில் படித்த தோழி ஒருவரை சந்தித்தேன். படித்து முடித்ததும் துறையில் உள்ள பேராசிரியர் ஒருவரே அத்தோழியை அங்கு ஆசிரியராய் சேர்ந்து கொள்ளக் கேட்டாராம். அவர் அங்கு சற்று காலம் பணி புரிந்து விட்டு இப்போது மற்றொரு பல்கலையில் பணி புரிகிறார். அவருக்கு மடியில் வந்து விழுந்த வாய்ப்பை பெற நான் நிறைய போராடி இருக்கிறேன். நான் முதுகலையில் படிக்கிற போது அனைத்து பேராசிரியர்களுக்கு என்னை பிடிக்கும். எல்லா செமஸ்டிரலும் முதல் மதிப்பெண் வாங்குவேன். ஆனால் படிப்பு முடித்த பின் என்னிடம் ஒருவர் கூட அங்கு வேலைக்கு சேர கேட்கவில்லை. சரி போகட்டும் என நானே இரண்டு முறை முயன்றேன். நிராகரித்தார்கள். ஒருமுறை என் உடல் குறையை காரணமாய் சொன்னார்கள். ஆனால் உண்மையான காரணம் அது மட்டுமல்ல என எனக்குத் தெரியும். என் நண்பர்களுக்கு இருந்த ஆள் பரிச்சயம் எனக்கு இல்லை. செல்வாக்கு உள்ளவர்களிடம் நான் தொடர்பில் இருப்பதில்லை. வாய்ப்புகளுக்காய் கண்ணைத் திறந்து காத்திருப்பதில்லை. பதிலுக்கு என் துறையில் முழு ஆற்றலையும் செலுத்தி உழைக்கிறேன். ஆனால் அண்ணாவின் “செவ்வாழையில்” வருவது போல் வாழைக்குலை பழுத்து தயாரானது வேறொருவர் வந்து வெட்டி எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். சரி, எடுத்துக் கொண்டு போகிறவர்கள் முழுக்க பயன்படுத்துவார்களா என்றால் இல்லை. வீணடிப்பார்கள்.

ஒரு சின்ன இடமாய் இருக்கலாம். உங்கள் திறமை, தகுதிக்கு அது நியாயமாய் உங்களுக்கே வர வேண்டியதாய் இருக்கும். ஆனால் அப்படி நடக்காது. அந்த சின்ன இடத்துக்காய் நீங்கள் உயிரைக் கொடுத்து போராட வேண்டும். ஒரு நீண்ட இருக்கையை கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். அதன் நுனியில் ஒடுங்கி ஒட்டியபடி இருப்பது தான் நோக்கம். அதற்காய் வாழ்க்கை முழுக்க யாரையாவது தள்ளி இடித்துக் கொண்டு கண்ணிமைக்காமல் போராட வேண்டும். ஆனால் சிலநேரம் ஒரு இடம் நம் வருகையை எதிர்பார்த்து இருப்பதும் உண்டு. இதெல்லாம் ஏன் இப்படி நிகழ்கிறது என்பது வாழ்க்கையின் விசித்திரம். ஒரு வலைப்பூவை ஆரம்பித்து அதை ஆயிரம் பேர் படிக்க வைப்பது, பேஸ்புக்கில் நூறு லைக் வாங்குவதில் ஆரம்பித்து வேலை, சம்பாத்தியம், காதல், திருமணம் என சாதாரண சாதாரண விசயங்களுக்கு தான் அசாதாரண உழைப்பு தேவையுள்ளது. அட, ஆயிரம் பேர் வாசிக்கிற இலக்கிய பத்திரிகையில் ஒரு கட்டுரை வரவழைக்க கூட நிறைய பேரை முந்தி துண்டு போட்ட வைக்க வேண்டும்.

இதையெல்லாம் நினைத்து நான் ஓய்ந்து போகிற வேளையில் தான் என் மனைவி தான் சோறு போடும் தெருநாய் ஒன்றின் கதையை சொன்னாள். அது ஒரு வயதான நாய். அதை கருத்தடை பண்ணி வேறு ஒரு இடத்தில் இருந்து எங்கள் பகுதிக்கு மாற்றிக் கொண்டு வந்து விட்டனர் கார்ப்பரேஷன் ஆட்கள். இடமாற்றம் செய்வதை விட ஒரு நாயை நீங்கள் அடித்துக் கொன்று விடலாம். அந்தளவுக்கு கொடுமையான பிரச்சனை அது. புது இடத்தில் அந்நாயால் நிம்மதியாய் எங்கும் தூங்க முடியாது. பிற நாய்கள் அடித்து துரத்தும். எங்கு சாப்பாடு கிடைக்கும் என தெரியாது. அப்படி கண்டுபிடித்தாலும் அங்கு ஒரு எச்சில் இலைக்காய் பத்து நாய்களிடம் சண்டை போட்டு கடி வாங்கி காயம்பட வேண்டும். அந்த நாய் வந்த புதிதில் பல இடங்களிலாய் அலைந்து கொண்டே இருக்கும் என்றாள் என் மனைவி. பிறகு மூன்று மாதங்கள் தாக்குப்பிடித்த பின் அதற்கு ஒரு நாய்க்குழுவில் இணைய வாய்ப்பு கிடைக்கிறது. சில நண்பர்களை அமைத்துக் கொண்டு அது குழுவை விரிவு படுத்தி ஒரு நல்ல பகுதியை பிடித்துக் கொண்டது. இப்போது அது தன் இடத்துக்கு பிற நாய்களை வர அனுமதிப்பதில்லை. அப்படி மீறி வந்தால் தன் தோஸ்துகளின் துணையுடன் அடித்து துரத்தும். அப்பகுதியில் ஒரு காலியான வீட்டின் மொட்டை மாடியில் இரவில் தூங்கிக் கொள்ளும். அங்குள்ள வீட்டுக்காரர் ஒருவர் தினமும் அந்நாய்க்கு உணவளிக்கிறார். அது போக அங்கு ஒரு சிக்கன் 65 தள்ளுவண்டி கடையும் உள்ளது. அக்கடை மாலை 6 மணிக்கு துவங்கியதும் நம் நாய் அங்கு போய் நின்று கொள்ளும். மீதம் வருகிற எலும்புத் துண்டுகளை பொறுக்கித் தின்னும். இப்படி உணவு, தூங்க இடம், கொறிக்க எலும்புத்துண்டுகள், பாதுகாப்புக்கு நண்பர்கள் என எல்லாமே அமைந்து விட்டது. ஆனால் இந்த சாதாரண தேவைகளை நிறைவேற்ற அது மூன்று மாதங்கள் பட்டினியிலும், மோசமான தாக்குதல்கள் மத்தியிலும் பிடித்து நிற்க வேண்டி இருந்தது.

மனிதப் பிரச்சனைகள் மனிதப் பிரச்சனைகள் மட்டும் அல்ல. அடுத்த முறை நாய்ப்பிழைப்பு எனும் போது இதை நினைத்துக் கொள்ளுங்கள்!

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்ன .
மனிதர்களின் சிபாரிசு மூலம் இடம் பிடித்தல் + உழைப்பு + ராசி தெய்வங்களுக்கு பரிகார பூஜை
இந்தக் கூட்டல் இருந்தாலும் வெற்றி வரும், வராது என்பதே வாழ்க்கை என்று கூறினால்
அடுத்த தலைமுறை எந்த ஃ பார்முலாவை பயன் படுத்த வேண்டும் வாழ்க்கையில்

Abilash Chandran said...

நான் சொல்ல வருவது இது தான்: பெரிய விசயங்களை கூட செய்து விடலாம். ஆனால் அற்ப விசயங்களான இடம் பிடித்தல், வேலை அடைதல், துண்டு போடுதல் போன்றவற்றுக்கு அசாதாரணமான போராட்டம் தேவையுள்ளது. இப்படித் தான் இதை செய்ய முடியும் என நான் கூறவில்லை. ஆனால் வாழ்க்கை இப்படி அபத்தமாய் இருக்கிறது என்கிறேன்