Tuesday, April 28, 2015

உயிர்மை நூல்களின் தரமும் அபாண்ட குற்றச்சாட்டும்

’’ மனுஷ்ய புத்திரன் நாலாந்தர மான வணிக எழுத்துகளை இலக்கியம் என்ற பெயரில் பதிப்பிக்கிறார்”.என ஜெயமோகன் கூறியிருக்கிறார்.
ஒருவருக்கு எதிரான எந்த ஒரு அவதூறும் அவரை முன்னெடுப்பதற்கான ஒரு நல்வாய்ப்பையும் சேர்த்தே அளிக்கிறது. ஜெயமோகனின் இந்த கூற்றை எடுத்துக் கொள்வோம். இது உண்மையா? எனக்குத் தெரிந்த கடந்த பத்து வருடங்களில் தமிழில் வெளிவந்த மிக முக்கியமான புனைவு நூல்களை உயிர்மையும், தமிழினியும் சேர்த்து கொணர்ந்துள்ளன. முக்கியமான கட்டுரை நூல்கள், ஆய்வு நூல்கள், மொழியாக்கங்கள் காலச்சுவடில் இருந்து வந்துள்ளன. கவிதைகளை பொறுத்த மட்டில் உயிர்மை, காலச்சுவடு, புதிய எழுத்து ஆகிய பதிப்பகங்களை சொல்லலாம்.
உயிர்மையில் பெரும்பாலான முக்கிய தமிழ் எழுத்தாளர்களின் நூல்களும் வந்துள்ளன. அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தவற்றை ஒரு பட்டியல் போடுகிறேன்.

ஜெயமோகனின் முழு சிறுகதைத் தொகுப்பு, குறுநாவல் தொகுப்பு உட்பட அவரது பல நல்ல நூல்கள் உயிர்மையில் தான் வெளிவந்தன. சரி, அவரை தவிர்த்து பார்ப்போம்.
 எஸ்.ராவின் கிட்டத்தட்ட எல்லா சிறப்பான நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகளும் உயிர்மையில் தான் வந்தன. அவற்றில் எஸ்.ராவின் சிறுகதைகளின் முதல் முழுத் தொகுதி எனக்கு மிகவும் பிடித்தமானது. அதே போல் “நெடுங்குருதி” தமிழில் எழுதப்பட்டதற்காய் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மொழியாக்கப்பட்டு உலக அரங்கில் கொண்டாடப்பட வேண்டிய நூல். அதையும் உயிர்மை தான் வெளியிட்டது. 
தியோடர் பாஸ்கரன் மற்றும் ஷாஜியின் கட்டுரைத் தொகுப்புகள் புதுவெள்ளம் போல் பாய்கிற தன்மை கொண்டவை. இன்றும் படிக்க புதுமை ஜொலிக்கிற எழுத்து.

யுவனின் “பெயரற்ற யாத்ரிகன்” எனும் ஜென் கவிதை மொழியாக்க தொகுப்பு ஒரு அற்புதமான ஆன்மீக, கவித்துவ அனுபவத்தை தரும் நூல்.கவித்துவ செறிவுடன் மொழியாக்கப்பட்ட இக்கவிதைகள் தமிழ் கவிதை மொழிக்கு வளம் சேர்ப்பவை. இளம் எழுத்தாளர்களுக்கு வாசிக்க வாசிக்க பெரும் தூண்டுதல் அளிப்பவை. யுவனின் “தோற்றப்பிழை”, “கைமறதியாய் வைத்த நாள்” இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதைத் தொகுப்புகள். “தோற்றப்பிழை” பற்றி ஒரு விமர்சனக் கட்டுரை எழுதி உள்ளேன்.

மொழியாக்கத்தில் உண்ணி.ஆரின் “காளி நாடகம்” முக்கியமான தொகுப்பு. உண்ணி.ஆரை விட நல்ல எழுத்தாளர்கள் தமிழில் இருக்கிறார்கள் என்றாலும் அவர் வாசிக்கத்தக்க எழுத்தாளர்.

சுகுமாரனின் “இழந்த பின் இருக்கும் உலகம்”, “வாழிய நிலனே” ஆகிய கட்டுரைத் தொகுப்புகள் அவரது அற்புதமான நடைக்காக பலமுறை நான் வாசித்தவை. அவரது “பூமியை வாசிக்கும் சிறுமி” மொத்தத் தொகுப்பு தமிழ் நவீன கவிதையின் ஒரு தனித்தடத்தை அடையாளம் காட்டுகிற ஒன்று.

”கடைசி டினோசர்” உள்ளிட்டு தேவதச்சனின் வேறு சில கவிதைத் தொகுப்புகளையும் நம்மால் மறக்க இயலாது. தற்காலத்தின் மிகப்பெரும் கவி ஆளுமை அவர். அவரது முக்கியமான தொகுப்புகள் உயிர்மை வழித்தான் நம்மை அடைந்தன.

பூமா ஈஸ்வரமூர்த்தி என்னை மிகவும் கவர்ந்த மற்றொரு கவிஞர். நாம் போதுமான அளவு இவரை கவனிக்காமல் விட்டு விட்டோம் என நினைக்கிறேன். மிக முக்கியமான கவிஞர். ஆதவனின் கதைகளை ஏனோ இவர் அடிக்கடி நினைவுறுத்தினாலும் எனக்கு ஆதவனை விட இவரை அதிகம் பிடிக்கும்.

ந.முருகேச பாண்டியனின் சரளமான ஒழுக்குநடையும் அங்கதமும் நுட்பமான பார்வையும் எனக்கு பிடிக்கும். அவரது விமர்சனக் கட்டுரைகளை விட பத்திக் கட்டுரைகள் கூடுதல் சுவையானவை. உயிரோசையில் வந்த பத்தியின் நூல் வடிவமான “கிராமத்து தெருக்களின் வழியே” ஒரு நல்ல நூல். “குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: அவரது முனைவர் பட்ட ஆய்வு நூல். இதுவும் தனித்துவமானது.

வாசந்தியின் நான்கு கட்டுரைத் தொகுப்புகள் உயிர்மையில் வந்துள்ளன. உயிர்மையில் நான் வேலை பார்த்த ஒரு மாதத்தில் இந்நான்கு தொகுப்புகளின் பிழைதிருத்துநர் பிரதியை படித்து பின்னட்டை குறிப்பு தயார் செய்ததாய் நினைவு. வடகிழக்கு மாநிலங்கள் ஏன் இந்தியாவை வெறுக்கின்றன என்பது பற்றின அவரது ஒரு கூர்மையான அனுபவக் கட்டுரை நினைவுள்ளது. அவருக்கே உரித்தான பல முக்கியமான அனுபவங்கள் இவற்றில் உள்ளன.

தமிழ் நடையை புதுப்பித்த, உற்சாகமும் குதூகலமும் அரட்டைத்தன்மையும் நிரம்பியதாக மாற்றின சாருவின் பல நூல்களும் உயிர்மை வெளியீடுகளே! அவற்றை குறிப்பிடாமல் போக முடியுமா? அதோடு மனுஷ்யபுத்திரனின் கவிதைத்தொகுப்புகளும். இரண்டு பேரையும் பற்றி ஏற்கனவே நிறைய எழுதப்பட்டுள்ளதால் அடுத்து சிலரை பார்ப்போம்.

மணாவின் “எம்.ஆர்.ராதா: காலத்தின் கலைஞன்” அனைவரும் படிக்க வேண்டிய ஒரு முக்கிய தொகுப்பு நூல். வாசிக்க வாசிக்க எம்.ஆர்.ராதாவின் ஆளுமை போல் திகைப்பூட்டும் மற்றொருவர் இருக்க முடியாது. ஒரு நல்ல நாவலுக்கு கிட்டத்தட்ட இணையான நூல்.

பிரம்மராஜனின் “சமகால உலகக்கவிதை” ஒரு மொழியாக்க சாதனை. நம் உலகக் கவிதை வாசிப்பை துவங்க அது ஒரு அரிச்சுவடி. மொழியாக்கம் சற்றே சிக்கலாக இருந்தாலும் கூட மிக மிக முக்கியமான நூல்.

வா.மு கோ.முவின் நூல்களில் “சொல்லக் கூசும் கவிதை”, “கள்ளி” என்னை கவர்ந்தவை. மனோஜின் “புனைவின் நிழல்” தமிழின் சிறந்த புனைவெழுத்தாளர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்துகிறது. அவர் மிக குறைவாக எழுதுவது மிகப் பெரிய துரதிஷ்டம். ஒரு அட்டகாசமான ஸ்டைலிஸ்ட் அவர். நுட்பமான பகடி வேறு.

முகுந்த் நாகராஜனின் முதல் கவிதைத் தொகுப்பான “அகி” தான் அவரது சிறந்த தொகுப்பு. அது உயிர்மையில் வெளிவராவிட்டாலும் பிற தொகுப்புகள் - அவை சற்றே மாற்றுக்குறைவு என்றாலும் - உயிர்மையில் வந்திருக்கின்றன. தனித்துவமான மொழியும் பார்வையும் கொண்டவரான அவர் சமகால தமிழ்க்கவிதையில் ஒரு அற்புத நிகழ்வு. கவிதை மிகவும் அலுப்புத்தட்ட தொடங்கி இருந்த போது அவர் தோன்றி, அதை மிகவும் உயிர்ப்புள்ளதாக, களங்கமற்ற தன்மை கொண்டதாக்கினார்.

பொ.கருணாகரமூர்த்தியின் “பெர்லின் இரவுகள்” ஒரு அட்டகாசமான சுயசரிதை நூல். மிகவும் தனித்துவமானது. அ.முத்துலிங்கத்தின் நூல்களில் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” மிகவும் சுவாரஸ்யமான, வியக்கத்தக்க தொழில்நேர்த்தி கொண்ட புனைவு போன்ற கட்டுரைகளின் தொகுப்பு. இது பற்றி விமர்சனக் கட்டுரை ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

லஷ்மி மணிவண்ணின் நூல்களில் உயிர்மை வெளியீடான “வெள்ளைப்பல்லி விவகாரம்” படிக்க வேண்டிய ஒன்று. கூர்மையான உளவியல் பார்வையை ஒட்டுமொத்த சமூகம் மீதான உளவியல் விசாரணையாக மாற்றும் புனைவை இந்நூலில் பார்க்கலாம். காப்காவின் “உருமாற்றம்” படித்து விட்டு இந்நூலில் மணிவண்ணன் எப்படி ஒரு மனநல மருத்துவமனையை சமூகமாய் கட்டமைக்கிறார் என கவனித்தால் மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கும்.

ஹவியின் “இசைக்குமிழி” ஒரு நல்ல கவிதைத் தொகுப்பு. ஏனோ பிறகு அவரை அதிகம் வாசிக்க நேரவில்லை.

கி.ராஜநாராயணின் கடிதங்களின் தொகுப்பும் உயிர்மையில் வந்துள்ளது. மிகவும் வியப்பேற்படுத்தும் பல விசயங்களை தாங்கிய ஒரு ஆர்வமூட்டும் தொகுப்பு. இது பற்றி விரிவாக பேச வேண்டும். பிற்பாடு நிச்சயம் எழுதுவேன்.’

ஷாவநாஸின் எழுத்து நடையும் நளினமான சித்தரிப்புகளும் வசீகரமானவை. அவரது “அயல்பசி”, “முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்” தமிழின் தனித்துவமான நூல்கள்

தமிழவன் உயிரோசையில் எழுதின பத்தி என்னை அப்போதே வெகுவாக கவர்ந்தது; என் சிந்தனைகளை கிளர வைத்தது. அக்கட்டுரைகளின் தொகுப்பு “தமிழுணர்வின் வரைபடம்” ஒரு முக்கியமான நூல். தமிழ் தேசியத்தை உணர்வுகளின் அரசியலாக அல்லாமல் ஒரு இன அடையாள மறுகட்டமைப்பாக ஈழத்தை மையமாக வைத்து யோசிக்கும் இந்நூல் ஈழ கனவின் வீழ்ச்சிக்கு பின் உணர்வு ரீதியாக என் இதயத்தில் தனி இடம் பிடித்தது. இந்நூலைப் பார்க்கும் போதெல்லாம் நடந்ததை எண்ணி என் இதயம் ஒரு நொடி இடறும்.

மனுஷ்யபுத்திரனின் கட்டுரைத் தொகுப்புகளில் அவரது ஆரம்ப இரு நூல்களான “எப்போதும் வாழும் கோடை”, “காத்திருந்த வேளையில்” ஆகியவை துக்கம் கனத்த விழிகளின் இமைமுடிகள் கொண்டு எழுதப்பட்டவை போன்ற தோற்றம் கொண்டவை. அப்படி ஒரு கவித்துவமும் கூர்மையும் அங்கதமும் கொண்டவை. அவரது பிற்காலத் தொகுப்புகளை விட இவை அதிகம் பிரியத்துக்குரியவை.

இந்திரஜித்தின் “ரயிலுக்காக காத்திருப்பவர்கள்” என்னை வியக்க வைத்த கவிதைத் தொகுப்பு. இவ்வளவு கூர்மையாக, தீவிரமாக, துல்லியமான நடையில் கவிதை எழுதக் கூடியவரா இந்திரஜித் எனத் தோன்றியது. நாம் நிச்சயம் விவாதிக்க வேண்டிய தொகுப்பு.

இறுதியாக சுஜாதாவுக்கு வருவோம். “காந்தளூர் வசந்தகுமாரன் கதை” நாவல் மொழியில் ஒரு நுணுக்கமான பரிசோதனையை நிகழ்த்திய நூல். அவரது நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கணையாழி பத்தி ஆகிய தொகுப்புகளும் முக்கியமானவை. அவர் இலக்கியவாதியோ வெகுஜன எழுத்தாளரோ இடைப்பட்டவரோ ஒரு தமிழ் வாசகனோ எழுத்தாளனோ அவரை தவிர்த்து வாசிப்பை நிறைவு செய்ய இயலாது. என்னைப் பொறுத்தவரையில் காட்சிபூர்வமாய், சுருக்கமாய் எழுதுவது பற்றி அவரிடம் இருந்து நாம் நிறையவே கற்கலாம்.

சமீபமாய் வெளிவந்த பல நல்ல நூல்களில் விநாயக முருகனின் “ராஜீவ் காந்தி சாலை”, போகனின் “தடித்த கண்ணாடி போட்ட பூனை” இரண்டும் முக்கியமானவை. கடந்த ஐந்து வருடங்களில் வந்த பல நல்ல நூல்களை நான் இங்கு விட்டிருக்கலாம். அவற்றைப் பற்றி பிறகு நிச்சயம் எழுதுகிறேன்.

நான் இங்கு பட்டியலிட்டிருப்பவை உயிர்மையில் வந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களில் ஒரு குண்டூசி முனை அளவு தான். அதுவும் என் தனிப்பட்ட ரசனைக்கும் ஈடுபாட்டுக்கும் தேடலுக்கும் உட்பட்ட நூல்கள் மட்டுமே. உங்களுக்கு வேறு பல நூல்கள் முக்கியமாய் தோன்றலாம். அவற்றையும் சேர்த்து வைத்து நாம் கேட்கலாம்: இவையெல்லாம் ஜெயமோகன் சொல்வது போல் “நாலாந்தர மான வணிக எழுத்துகளா?”. அவர் ஒரு சில நூல்கள் மீது குறிப்பாய் அப்படியான குற்றச்சாட்டு வைக்கிறார் என்றால் நாமதை தனியாக விவாதிக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாய் உயிர்மை நூல்களை இப்படி உலக்கை இடி இடிப்பது இங்கு குறிப்பிட்டுள்ள அத்தனை எழுத்தாளர்களையும் அவமதிப்பது போல் ஆகும். அது நியாயமல்ல! கண்டனத்துக்குரியது!
1 comment:

Alad Manoj Peter said...

எப்பொழுது உங்கள் போர் முடியும்.