Monday, April 6, 2015

எங்கிட்ட ஒரு காசிருக்கு


Image result for sparrow

சின்ன வயதில் என் அப்பா அடிக்கடி ஒரு நாட்டுப்புற கதை சொல்வார். ஒரு குருவிக் கதை. அதை அண்ணாத்துரை ஒரு மேடையில் சொன்னதாக கூறுவார். ரொம்ப நகைச்சுவையான அட்டகாசமான கதை.
கதை இப்படி போகிறது. ஒரு ராஜாவும் அவர் மந்திரியும் வேட்டைக்கு வனத்துக்கு போகிறார்கள். வேட்டை முடித்து இருவருமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு குருவி இவ்வாறு பாடுவது கேட்கிறது:
“என் கிட்ட ஒரு காசிருக்கு யாருக்கு வேணும்
யாருக்கேனும் தேவையிருந்தா வாங்கிட்டு போங்கோ”

முதலில் ராஜா இந்த பாடலை ஆர்வமாய் கேட்கிறார். பாவம் குருவி ஒரு காசை வைத்துக் கொண்டு என்ன பாடு பட்டு பாடுகிறது என யோசிக்கிறார். ஆனால் குருவி ரிப்பீட்டில் பாடிக் கொண்டே இருக்கிறது. ராஜாவுக்கு எரிச்சலாகிறது. காவலர்கள் அழைத்து அந்த குருவியை துரத்த சொல்கிறார். ஆனால் அது பறந்து மற்றொரு கிளையில் அமர்ந்து மீண்டும் பாடுகிறது. துரத்த துரத்த அது சுற்றி சுற்றி பறந்து வந்து பாடுகிறது. ராஜாவுக்கு தலை வலி எடுக்கிறது. மண்டையை பிய்க்கிறார். காதைப் பொத்தி தூங்க முயல்கிறார். முடியவில்லை. அவர் கைகளைத் துளைத்து குருவியின் பாடல் டிரில்லிங் மிஷின் சத்தம் போல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அவர் மந்திரியை அழைத்து அந்த காசை வாங்கி விட்டு குருவியை அனுப்பும் படி சொல்கிறார். மந்திரியும் அவ்வண்ணமே செய்கிறார். காசை கீழே போடும் குருவி சில நிமிடங்கள் அமைதியாக இருக்கிறது. ராஜாவுக்கு நிம்மதி. ஆனால் சில நிமிடங்கள் போனதும் குருவி மீண்டும் பாடுகிறது.
“எங்கிட்ட இருந்து ராஜா காசை
தட்டிப் பறிச்சாரு
இந்த ராஜா சொந்த நாட்டை எப்படி ஆள்வாரு”
ராஜாவுக்கு அவமானமாகி விடுகிறது. குருவி வேறு பறந்து பறந்து தம்பட்டம் அடிக்க காவலர்கள், சேடிகள், ராணி என சேதி பரவுகிறது. ராஜா உடனே மந்திரியை அழைத்து காசை திரும்பக் கொடுக்க சொல்கிறார். குருவி அதை வாங்கி பவ்யமாய் தன் கால்களுக்கு கீழ் இடுக்கிக் கொண்டு மந்திரியை பார்த்தது. மந்திரி இனிமேலாவது பாடாதே ப்ளீஸ் என கெஞ்சுகிறார். குருவி பதில் சொல்லவில்லை. மந்திரி போனதும் குருவி மீண்டும் பாடுகிறது:
“எனக்கு பயந்து ராஜா காசை
திருப்பி கொடுத்தாரு
இந்த ராஜா சொந்த நாட்டை
எப்படி ஆள்வாரு”
அட இதென்ன கொடுமை என யோசித்த ராஜா தன் பரிவாரங்களுடன் உடனடியாக காட்டை விட்டு கிளம்பினார். ராஜாவையும் பரிவாரங்களையும் துரத்திக் கொண்டு குருவி தனக்கு பயந்து ராஜா காட்டை விட்டே ஓடுகிறார் இவரெல்லாம் எப்படி நாட்டை ஆளப் போகிறார் என பாடிக் கொண்டு பறந்தது.
இக்கதையை அண்ணா தன் மீது அற்ப குற்றச்சாட்டுகளை வைக்கும் அரசியல்வாதிகளை பகடி செய்ய கூறியதாய் கேள்வி, என் நிலைமை அந்தளவுக்கு எல்லாம் தீவிரம் இல்லை. ஒரு பேக் ஐடி பேஸ்புக்கில் என்னை டேக் செய்து தேவையில்லாமல் வம்பு பண்ணிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அவர் அழிசாட்டியங்கள் எனக்கு சுவாரஸ்யமாய் பட்டதால் ஈடு கொடுத்தேன். பிறகு இப்போது நேரம் கம்மியாக இருப்பதால் அவரை கையாள முடியாது என நினைத்து மற்றொன்று செய்தேன். ராஜாவைப் போல் காட்டை விட்டு ஓடவெல்லாம் இல்லை. இந்த நவீன யுகத்தில் இம்மாதிரி குருவிகளையெல்லாம் எதிர்கொள்வது எளிதாகி விட்டது. பிளாக் செய்து விட்டேன். இனிமேல் குருவி பாடுவது எனக்கும் கேட்காது. நான் பேசுவது குருவிக்கும் கேட்காது. செல்லாக்காசை அதுவே வைத்துக் கொள்ளலாம்.
ஒரு பிரச்சனையை ஒட்டி சண்டை போடுவதற்கு என்னைப் பொறுத்த மட்டில் ரெண்டு தகுதிகள் வேண்டும். ஒன்று தர்க்கரீதியாக நிதானமாய் பேச வேண்டும். அல்லது ஒரு லட்சியத்துக்காக சண்டை போடலாம். லட்சிய மோதலில் உணர்ச்சிவசப்பட்டு கத்தினாலும் நியாயம் உண்டு. ஆனால் இம்மாதிரி குருவிகளும் யோசிக்கவும் தெரியாது, லட்சியமும் கிடையாது.
 ஒன்று ஏதாவது ஒரு கட்சி அல்லது ஒரு ஆளுமை மீது சாய்ந்து கொண்டு அது அல்லது அவர்கள் சம்மந்தப்பட்ட ஒரு விமர்சனத்துக்காக எதிர்வினை எனும் பெயரில் அமளிதுமளி பண்ணுவார்கள். வெறும் சத்தம் தான். உருப்படியாய் ஒரு வாதம் இருக்காது. இவர்களுக்கு தேவை இந்த சந்தர்பத்தை ஒட்டி கவனத்தை தம் மீது திருப்புவது. நீங்கள் என்னதான் நியாயமாய் தர்க்கரீதியாய் விவாதித்தாலும் அதை கவனிக்க மாட்டார்கள். சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
 கட்சி பற்றி சொன்னேன் அல்லவா. இவர்கள் கட்சி விசுவாசிகளாக கூட இருக்க மாட்டார்கள். அக்கட்சிக்கு ஓட்டுப் போடுவார்களா, அதன் சித்தாந்தம் முழுமையாய் தெரியுமா என்பதும் சந்தேகமே. ஆனால் அந்த கட்சிக்காக வரிந்து கட்டி இவர்கள் சண்டை போடுவது பார்த்தால் அந்த கட்சியின் உண்மையான உறுப்பினர்களே வியந்து மூக்கில் விரல் வைப்பார்கள். அடுத்த வருடம் அரசியல் சூழல் மாறினால் ஒன்று அமைதியாவார்கள். அல்லது அதே கட்சியை திட்டி பஞ்சாயத்து பண்ணுவார்கள். இவர்களுக்கு தேவை சாய ஒரு தூண். யாராவது கவனித்து பேச ஒரு அடையாளம்.
 ஆழமாய் இவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது. ஆளுமைகளைப் பொறுத்த மட்டில் தம்மைப் பற்றி சதா பீற்றிக் கொள்ளும் கர்வம் தலைக்கேறியவர்களிடத்து இவர்கள் எளிதில் கவரப் படுவார்கள். அதாவது இரும்புத் தூள் காந்தத்தினால் ஈர்க்கப்படுவது போல். உங்களுக்கே தெரியும் காந்தத்துடன் ஒட்டிக் கொண்டால் இரும்புத் துகளுக்கும் சற்று கந்தத் தன்மை வந்து விடும். இந்த “ஆளுமைக் கடன்” பெற்று தம் தாழ்வு மனப்பான்மையை சரி கட்டத் தான் சாரு, ஜெ.மோ வாசகர் வட்டத்தில் அமளிதுமளி பண்ணும் “அண்ணனின் விழுதுகள்” சேர்கிறார்கள். சுத்தமாய் ஆளூமையே இல்லாதவர்கள் ஆளுமை வீங்கினவர்கள் பால் சேர்கிறார்கள். குள்ளமான ஆண்கள் சற்றே உயரமான பெண்களைப் பார்த்து காமம் கொள்வது போன்ற மனப்பான்மை இது. இவர்களுக்கு இலக்கியத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. பேய் பிடித்தவர்கள் பேயோட்டியிடம் செல்வது போல் இவர்களும் ஆளூமை வீங்கின சில எழுத்தாளர்களை அண்டுகிறார்கள்.
மற்றொரு முக்கியமான விசயம். ஜெ.மோ மற்றும் சாருவின் வட்டத்தில் “விழுதுகள்” அல்லாத சமநிலை கொண்ட வாசகர்களும் இருக்கிறார்கள் எனத் தெரியும். அவர்களில் கணிசமானோர் ஒரு கட்டத்தில் விலகி விடுவார்கள் அல்லது விலகி விட்டார்கள். அறிவிருந்தாலும் தைரியம் இல்லாதவர்கள் சிலர் ஒட்டிக் கொண்டிருப்பார்கள். நித்தி ஆசிரமத்தில் இருந்து வெளிவர பயந்து இன்னும் இருப்பவர்களைப் போல. Cult அமைப்புக்குள் ஒருமுறை நுழைந்து விட்டால் நீங்கள் முழுக்க அடிமை மனப்பான்மையை உதறி வெளிவருவது சிரமம். அங்கே விழிப்புணர்வுடன் இருப்பவர்கள் நிச்சயம் தப்பிப்பார்கள்.
நான் “ஜெ.மோ வாசகர்கள்” என்ற போது இந்த “விழிப்புணர்வு” கொண்டவர்களையும் சேர்த்து சொல்லவில்லை. ஆனால் அந்த வட்டத்தில் யார் முன்னிலைப்படுகிறார்களோ அவர்களைக் குறித்து சொன்னாலும் வட்டத்தின் பெயரை பொதுவாகத் தானே சொல்ல வேண்டும். திமுக ஊழலினால் சீரழிந்து விட்டதென்றால் எல்லா திமுக உறுப்பினர்களும் அதற்கு உடந்தை என்றல்ல. உள்ளேயே ஒன்றும் செய்ய முடியாமல் பொருமுகிறவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் திமுக என்றதும் நாம் ஒட்டுமொத்தமாய் தான் விமர்சிக்க வேண்டி இருக்கும். இது ஒரு நடைமுறை சிக்கல். அதனால் ஜெ.மோ வட்டத்திலேயே மனத்தெளிவு கொண்ட, அடிமை மனப்பான்மை இல்லாத, பேனர் கட்டி, கூட்டம் நடத்தும் வேலைக்கார மனப்பான்மை இல்லாதவர்கள் என் சொற்களினால் புண்பட வேண்டாம்.
இறுதியாக எழுத்தாளனுக்கு கூட்டம் நடத்தி புரமோஷன் செய்யும் வாசகர் வட்டத்தினர் பற்றி. இது ஒரு வாசகனின் வேலை அல்ல. இது பதிப்பாளர் வேலை. பதிப்பாளர் செய்யாத பட்சத்தில் எழுத்தாளனே செலவு செய்து ஆள் வைத்து செய்ய வேண்டும். வாசகர்களை இவ்வாறு பேனர் கட்டி, டிரைலர் எடுத்து வெளியிட்டு, பரப்புரை செய்து, கூட்டம் நடத்த தூண்டுவது ஒரு எழுத்தாளன் செய்யக் கூடிய வேலை அல்ல. அது தன்னிடம் மாட்டுபவர்களை சுரண்டும் செயல். இதைச் செய்ய சில “வாசகர்களே” கூட முன்வருவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இவர்கள் உண்மையான வாசகர்கள் அல்ல. இவர்கள் இலக்கிய சூழலின் ஒட்டுண்ணிகள். இத்தகைய செயல்கள் மூலம் எழுத்தாளன் மீதுள்ள வெளிச்சம் தன் மீதும் சற்றே விழாதா என காத்திருப்பவர்கள். என் ஊரை சேர்ந்த நண்பர் ஒருவர் ரொம்ப துடிப்பாக இலக்கிய கூட்டங்களுக்கு வருவார். ஒருநாள் என்னிடம் வந்து “உயிர்மை” மாடியில் வைத்து புதிதாய் வெளிவந்த நாவல்கள் பற்றி கூட்டங்கள் நடத்தலாம் என சொன்னார். ஆனால் அம்முயற்சி எடுபடாத உடன் அவர் சாருவிடம் பேசி அவருக்கு ஒரு வாசகர் வட்டம் ஆரம்பிக்க முயற்சி எடுத்தார். அங்கு பணம் களவாடியதற்கக சாரு அவரை வட்டத்தில் இருந்து நீக்கினார். இப்போது அவர் எங்குமே இல்லை. இவர்கள் “களவாணி” படத்தில் கிரிக்கெட் மேட்ச் நடத்துகிறோம், விழா எடுக்கிறோம் என பணம் திரட்டி ஆட்டையை போட்டு குடித்து கும்மாளமிடுகிற விமல் கோஷ்டியை போன்றவர்கள். இவர்களை இவ்வாறு செயல்பட அனுமதிப்பதன் வழி ஒரு வாசகர் வட்டம் தன் பாதையில் இருந்து விலகுகிறது.
 உண்மையான வாசகன் எழுத்தாளன் மீதல்ல பிரதி மீது தான் அக்கறை கொண்டிருப்பான். எழுத்தாளனின் புகழைப் பரப்புவது, புத்தகங்களை அதிகம் விற்க செய்வது ஒரு வாசகனின் வேலை அல்ல. ஆங்கில பதிப்பகங்கள் இதற்காக சம்பளம் கொடுத்து எடிட்டர், சப் எடிட்டர்களை நியமித்து வேலை வாங்குகிறது. அது பற்றி நானே என் பிளாகில் விரிவாக முன்பு எழுதி இருக்கிறேன்.

வாசகர் வட்டங்கள் ஒரு எழுத்தாளனின் படைப்புகள் பற்றி சார்பற்ற கட்டுரைகளை வெளியிடலாம். கருத்தரங்குகள் நடத்தலாம். வேறு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் சின்ன சின்ன கூட்டங்களை நடத்தலாம். சுருக்கமாக முன்பு நிறப்பிரிகை போன்ற சிறுபத்திரிகை அமைப்புகள் இயங்கியது போல் செயல்பட வேண்டும். உண்மையான வாசகர்களின் பணி அறிவு மற்றும் கலைசார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது. உதாரணமாய் நண்பர்கள் விநாயக முருகன் மற்றும் விஜய மகேந்திரன் இணைந்து அயல் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி விவாதிக்கும் கூட்டங்களை நடத்த துவங்கி இருக்கிறார்கள். ஹருகி முராகாமியின் சிறுகதைகளை விவாதித்து முதல் கூட்டம் நடத்த போகிறார்கள். இது போன்ற ஏதாவது ஒரு கூட்டத்தையாவது சாரு அல்லது ஜெ.மோ வாசகர் வட்டங்கள் நடத்தி இருக்கிறார்களா? இல்லை. தங்கள் எழுத்தாளர் பரிந்துரைக்கும் எழுத்தாளர்களை விடுத்து சுயமாக தாம் படிக்கும் எழுத்தாளர்களை விவாதிக்கும் அரங்குகளை நடத்தி உள்ளார்களா? இல்லை. அப்படி என்றால் இவர்களின் இலக்கிய ஆர்வம் என்பது தான் என்ன? காங்கிரசில் குஷ்பு செய்யும் வேலைக்கும் நீங்கள் செய்யும் வேலைக்கும் என்ன வித்தியாசம்?

No comments: