Saturday, April 4, 2015

வன்முறையின் பல முகங்கள்


-    Image result for slap
யாராவது அடித்து விட்டால் என்ன செய்வது என்பது ஒரு தத்துவார்த்த கேள்வி தான். திரும்ப அடிக்க வேண்டுமா அல்லது அமைதியாக தாங்கிக் கொள்வது நலமா?

எதற்கு வம்பு என்று தான் நாம் ஆரம்பத்தில் நினைப்போம். அதனால் எதிர்பாராமல் யாராவது வம்புக்கிழுத்து நம் மீது கையை வைத்தால் ஒதுங்கி வந்து விடுவோம். எப்படி வாய்ச்சண்டையை தவிர்ப்பது நல்லது என நினைக்கிறோமோ அது போலத் தான் இதுவும் என கருதுகிறோம்.
ஆனால் இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. காதை மூடிக் கொண்டால் நம்மை யார் என்ன திட்டினாலும் அது நம்மை பாதிக்காது. மனம் அமைதியாகும். அல்லது ஒருவரது வசைக்கு கண்ணியமான மொழியில் கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் உடல் தாக்குதல் அப்படி அல்ல. அது ஒரு அந்தரங்கமான தொடுகை போல. உங்கள் நிலத்தில் ஒரு ஆக்கிரமிப்பு போல. ஒருவர் உங்கள் வீட்டு வாசலில் ஒன்றுக்கு போவதைப் போல. ஒருவர் உங்களை அடிப்பது போல் பாவனை செய்து சற்றே தொட்டு விட்டால் கூட அவர் உங்கள் உடலை சொந்தம் கொண்டாடி விடுகிறார். பிற்கு உடலை மீட்க நீங்கள் திரும்ப அவரை அடிக்க வேண்டும். அல்லது அப்படி ஒரு பாவனை பண்ண வேண்டும். இது ஒரு விளையாட்டு தான். அதிகார விளையாட்டு. ஆனால் இதை ஆடத் தெரியவேண்டும். மிக முக்கியம்.
கணவன் மனைவி, நண்பர் இடையே போல் யாராவது ஒருவர் அத்துமீறி கைவைத்தால் பொறுத்து விட்டு விடக் கூடாது. அப்படி செய்தால் உங்கள் உடலை நீங்கள் மதிக்கவில்லை; அதை இன்னொருவருக்கு ஒப்புக் கொடுத்து விட்டீர்கள் எனப் பொருள். திரும்ப லேசாக பெயருக்கு ஏனும் ஒரு தடவை அடித்திட வேண்டும். இது தான் உறவுக்குள் சமநிலையை தக்க வைக்கும். திரும்ப அடித்தால் உறவு நிலைகுலையும் என நினைத்தீர்கள் என்றால் தவறு. திரும்ப அடிக்காமல் இருந்தால் தான் உறவு சீர்குலையும். ஏனென்றால் ஒருமுறை அடிவாங்கி விட்டால் உங்கள் உடல் அவருக்கு சொந்தம். உடல் தான் மனிதனின் உச்சபட்ச அடையாளம். அதையே இன்னொருவருக்கு கொடுத்து விட்டால் பிறகு நீங்கள் அடிமை தான். அது உங்கள் தன்னம்பிக்கையையும் பாதிக்கும். மனதில் அது உழன்று கொண்டே இருக்கும். திரும்ப கை வைக்கும் வரை ஒரு தேவையற்ற வன்மம் கனன்று கொண்டு இருக்கும்.
திரும்ப அடிப்பதை விட உடனே அடிப்பது முக்கியம். அந்த தன்னிச்சையான instinctive ஆன செயல்பாடு நம்மிடம் இன்று காணாமல் போய் விட்டது. பத்து நிமிடம் கழித்து யோசித்து அடிக்கப் போனால் அப்போது உங்கள் மனம் களங்கமாகிறது. விஷமாகிறது. அப்போதே உடனுக்குடன் அடிக்கும் போது மனம் தூய்மையாக களங்கமற்று இருக்கிறது. நவீன வாழ்வில் எப்போதும் ஒரு தயக்கம் வருகிறது. எதிர்பாராது ஒன்று நடந்தால் தன்னிச்சையாக உடனுக்குடன் எதிர்வினையாற்றாமல் என்ன செய்வது என பரீட்சை ஹாலில் மாணவன் கேள்வித்தாளை வைத்து யோசிப்பது போல் வியக்கிறோம்.
இயற்கையில் மிருகங்களுக்கு எதிர்பாராத செயலுக்கு எப்படி செயலாற்ற என மிகச் சரியாக தெரிகிறது. வீட்டில் நாய் வளர்க்கிறீர்கள் என்றால் அதன் கழுத்தில் கீழிருந்து பிடிக்க முயலுங்கள். உடனடியாய் உங்கள் கையை கவ்வும். அதுவும் மிக வேகமாய் உங்கள் கை அதன் சருமத்தை தொடும் முன் வாயால் பிடித்து விடும். நான் என் நாயுடன் அடிக்கடி இந்த விளையாட்டை ஆடுவேன். நான் விளையாடுகிறேன் என புரிந்து விட்டால் அது என் அசைவை கவனிக்கும். யோசிக்கும். அப்போது அதை எளிதில் தோற்கடிக்கலாம். அது பிடிக்கும் முன் நான் அதன் கன்னம் அல்லது கழுத்தை தொட்டு விட்டால் எனக்கு ஒரு பாயிண்ட், அல்லாவிட்டால் அதற்கு ஒரு பாயிண்ட் என வகுத்துக் கொள்வேன். ஆனால் இது விளையாட்டு என நாய் யோசிக்காத நேரம் இருக்கிறதில்லையா அப்போது அதை தோற்கடிப்பது மிக சிரமம். நாயிடம் இருந்து கற்க வேண்டியது இதைத் தான்.
சமீபத்தில் ஒரு மதுக்கூடத்தில் வைத்து என் எழுத்தாள நண்பர் ஒருவரை மற்றொரு எழுத்தாளர் காலால் உதைத்துவிட்டார். இவர் புத்தகத்தை அவர் முகநூலில் மட்டம் தட்டி விட்டார் என்பது தான் காரணம். நண்பர் இதை உதாசினித்து சண்டையை தவிர்த்தார். இத்தனைக்கும் கால் லேசாக பட்டது அன்றி சரியான உதை ஒன்றுமல்ல. ஆனாலும் நண்பருக்கு வீட்டுக்கு வந்த பின்னும் அவமான உணர்வு போகவில்லை. தன்னை தாக்கிய நண்பன் பற்றி முகநூலில் பதிவு எழுதினார். இதனால் சமாதானம் உண்டாவப் போவதில்லை. பதிலுக்கு அவருக்கு பாவனையாக ஒரு உதை விட்டிருந்தால் சமனப்பட்டிருக்கும். இரு சாராருக்கும் வருத்தம் இருக்காது.
எனக்கு இது சம்மந்தமாக ரெண்டு அனுபவங்கள் உள்ளன.
நான் கல்லூரியில் படிக்கும் போது தோழி ஒருத்தியின் விடுதி விழாவுக்கு போயிருந்தேன். அவர் மிகவும் நெகிழ்ந்து விட்டார். மேற்தட்டு பெண் அவர். அவர்கள் வழக்கப்படி பொதுவெளியில் எனக்கு ஒரு முத்தம் தர முயன்றார். சும்மா உதட்டால் கன்னத்தை ஒத்தம் கொடுக்கும் வகை முத்தம். கூச்சத்தில் நான் விலக அது வேறு எங்கோ பட்டது. அரைநொடி தான். பிறகு அடடா என்ன தவறு செய்து விட்டோம் எனப் புரிந்தது. அந்த முத்தத்தை ஒழுங்காக வாங்கி இருந்தால் அவ்வளவு புனிதமாக இருந்திருக்கும். ஆனால் தவிர்த்ததும் அது களங்கமாகி என் மனதுக்குள் உட்கார்ந்து உறுத்தத் தொடங்கியது.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு ஒரு நல்ல நண்பன் இருந்தான். அவனை வேறு சிலர் என்னை அடிக்கும்படியாய் தூண்டி விட்டனர். பள்ளி முடிந்ததும் அவன் இருக்கையில் இருந்த என்னிடம் வந்து “ஏண்டா உன்னை அடிக்க முடியாதா?” எனக் கேட்டு என் கன்னத்தில் அறைந்து விட்டான். எனக்கு சற்று நேரம் ஒன்றும் விளங்கவில்லை. பிறகு எனக்கு அவமானத்தில் அழுகையே வந்து விட்டது. என்ன செய்யலாம்? ஆசிரியரிடம் புகார் செய்யலாம். வீட்டில் சொல்லலாம். அவனை கூப்பிட்டு விசாரித்து தண்டனை அளிப்பார்கள். ஆனால் அது அவனை ஒழுக்கப்படுத்துவதாக அமைந்து விடும். என்னை அடித்து என் உடலை சொந்தம் கொண்டாடுவதை மறுப்பதாக ஆகாது. வீட்டில் சொன்னால் அவனது அப்பாவை பார்த்து என் அப்பா பேசி பிறகு இருவீட்டாருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தை நடக்கும். அது எனது அவமானத்தை ஊர் அறிய சடங்கு போல் நிகழ்த்தி அதிகாரபூர்வமாய் நிறுவுவதாகும். நான் என் அத்தானிடம் போய்க் கூறினேன். அவரை அழைத்துக் கொண்டு மறுநாள் மாலை அவன் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது போனேன். அவரைப் பார்த்ததும் அவன் பயந்து மதில் ஏறிக் குதித்து ஓடிப்போனான். பிறகு இரவில் அவனுடைய அப்பா அவனை அழைத்துக் கொண்டு வந்து அவனை மன்னிப்பு கேட்க வைத்தார். நாங்கள் மீண்டும் நண்பர்கள் ஆனோம். ஆனால் நான் முதலில் ஆசிரியரிடமோ பெற்றோரிடமோ சென்றிருந்தால் எங்களுக்குள் உள்ள வெறுப்பு பன்மடங்கு வளர்ந்திருக்கும்.
அகிம்சை கோட்பாடு இதற்கு நேர்மாறானது அல்லவா? ஆனால் அகிம்சை இரு சாராரிடத்தும் விழுமியங்கள் செயல்படுகிற சூழலில் அரசியல் களத்தில் உதவுகிற ஒரு ஆயுதம். அடி வாங்குவதன் மூலமாக அடிக்கிற மனிதனின் மனசாட்சியை கூசச் செய்கிற வித்தை. ஆனால் நடைமுறை வாழ்வில் இதை பிரயோகிப்பது அசட்டுத்தனம். நடைமுறை வாழ்வில் யோசித்து செய்கிற அரசியல் இல்லை. நேரடியான வன்முறையும் இல்லை. குறியீட்டு வன்முறை தான். அங்கு அகிம்சை உதவாது.
பழிவாங்கும் நோக்கில் நடக்கிற படுகொலைகள் நியாயமா? இல்லை. திட்டமிட்டு செய்கிற எந்த வன்முறையையும் தவிர்க்கப்பட வேண்டியது தான். அதே போல் உயிர்சேதம் ஏற்படுகிற வன்முறையும் கூட. மிருகங்களை கவனியுங்கள். கோபத்தில் இன்னொரு மிருகத்தை காயப்படுத்தாது. தெருவில் நாய்கள் சண்டையிடுவதைப் பாருங்கள். குரைத்து சீறி அச்சுறுத்துவதோடு நிறுத்திக் கொள்ளும். வேறு காரணத்தால் காயப்பட்டு தன்னுயிருக்கு அஞ்சும் நிலையில் இருக்கும் நாய் தான் பக்கத்தில் வரும் மனிதனையோ மிருகத்தையோ தாக்கும். மிருகங்கள் தமக்குள் யாரையும் சண்டையில் காயப்படுத்தக் கூடாது எனும் விதிமுறை கராறாய் பின்பற்றுகின்றன. ஆனால் மனிதர்கள் மனித உடலை அதிகாரத்தை செயல்படுத்துவதற்கான பரப்பாக, இலக்காக மாற்றின காலத்தில் இருந்து அர்த்தமற்ற வன்முறை தோன்றியது. சித்திரவதை, பலி கொடுப்பது, மரண தண்டனை, காவல்நிலைய படுகொலைகள், வதை முகாம்கள், திருமண உறவுக்குள் திட்டமிட்டு நடக்கிற வன்முறை, பள்ளியில் மாணவர்கள் மீது ஒழுக்கத்தின் பெயரில் நடக்கிற வன்முறை என ஒவ்வொன்றுமே அர்த்தமற்றது தான்.
 பேச்சாலோ செயலாலோ மனிதனை கட்டுப்படுத்த முடியாது போகும் போது, அவன் ஆன்மாவை முறிக்க இயலாது போகும் போது உடல் மீது அதிகாரம் செலுத்த முயல்வார்கள். ஏனென்றால் உடல் மீது அத்துமீறல் நிகழும் போது அதை ஆன்மாவாலோ அமைதியாலோ நீங்கள் கடந்து போக முடியாது. உடல் உங்கள் மனதின் ஒரு பகுதி. அதை இன்னொருவர் கையில் ஒப்படைத்தால் நீங்கள் அடிப்படை மரியாதையை இழந்து விடுகிறீர்கள். அதன் பிறகு உங்கள் உடலை மீட்பது எளிதல்ல. தார்மீக ரீதியாக இன்னொருவரின் அடிமையாகி விடுகிறீர்கள். ஒரு பெண்ணைக் கட்டுப்படுத்த வேறு வழியின்றி போகும் போது தான் அவளை கூட்டத்தில் உரசுவது, முகத்தில் ஆசிட் வீசுவது, பலாத்காரம் செய்வது ஆகியன நடக்கின்றன. இந்த வன்முறை நிகழும் சில நிமிடங்களில் மட்டும் நீங்கள் முழுக்க இன்னொருவரின் பொருள் ஆகிறீர்கள். சொந்த உடலைப் போல் அவர் உங்களை கட்டுப்படுத்த, பயன்படுத்துகிறார். சொந்த உடலை தற்காலிகமாக ஏனும் இழப்பது மனிதனின் ஆதார இருப்பை நிலைகுலைய வைக்கிறது. பீதியையும் அடையாளக் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. பிறகு அவன் தன்னை தாக்கியவனிடம் தன்னை ஒப்புக் கொடுக்கிறான். அவன் மனம் உடல் மீதான பிடிப்பை இழக்கையில் தன்னையே இழக்கிறது. “பாஸ்கர பட்டேலரும் என் வாழ்க்கையும்” எனும் சக்கரியாவின் நாவலில் பாஸ்கர பட்டேலர் எனும் நிலவுடைமையாளர் ஊருக்கு புதிதாக வரும் கதைசொல்லியான நிலமற்றவன் தன்னை மதிக்கவில்லை என உணர்ந்ததும் அவனை அடித்து வீழ்த்துகிறார். துப்பாக்கியால் சுடுவதாய் பயம் காட்டி துரத்துகிறார். அவன் மனைவியை பலாத்காரம் செய்கிறார். மனைவி அவன் உடலின் நீட்சி. அவளை அவர் புணர்ந்ததும் அவன் முழுக்க தன்னை அவருக்கு ஒப்புக் கொடுக்கிறான். அடிமையாகிறான். அவரால் கட்டுப்படுத்ததும் பொம்மையாகிறான். பாஸ்கர பட்டேலரின் ஆளுமையின் பகுதியாக தன்னை கருத ஆரம்பிக்கிறான். வன்முறையின் நோக்கம் இவ்வாறு நம் உடலை நம்மிடம் இருந்து களவாடி நம் சுயத்தின் அடித்தளத்தை தகர்ப்பது தான். மிருகங்கள் இவ்வாறு அதிகார வேட்கையின் பொருட்டு இன்னொரு உடலை தாக்கி வசப்படுத்துவது இல்லை. இது மனிதனுக்கே உரித்தான ஒரு கோளாறு.
சில வருடங்களுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் இரு கவிஞர்களுக்கு இடையில் சண்டை நடந்தது. கட்டிப் புரண்டு நடந்த இச்சண்டையின் இறுதியில் ஒருவர் இன்னொருவரின் விரலை கடித்து விட்டார். இந்த சண்டைக்கு காரணம் ஒருவரால் தனக்கு மிக பிடித்தமான தேவதச்சனின் கவிதைகளின் சிறப்பை இன்னொருவருக்கு புரிய வைக்க முடியவில்லை என்பது. மொழியால் இன்னொருவரை ஏற்க வைக்க முடியாத போது உடல் வழி விவாதம் நிகழ்த்தியாவது கவிதையின் சூட்சுமத்தை புரிய வைப்போம் எனத் தான் இந்த சண்டை நடக்கிறது.
இன்னொரு சம்பவம். ஒரு சாதுவான குணம் கொண்ட எழுத்தாளர். மிக அடாவடித்தனமாய் எழுதும் இன்னொரு எழுத்தாளர். இரண்டு பேரும் ஆட்டோவில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அடாவடி எழுத்தாளர் தமிழ் ஒரு முட்டாள்களின் மொழி, இங்கு படிப்பதற்கு எதுவுமே உருப்படியாய் இல்லை என்ற கணக்கில் பேசுகிறார். சாது எழுத்தாளருக்கு ரத்தம் கொதிக்கிறது. ஆனால் அவருக்கு என்ன பதில் சொல்ல எனத் தெரியவில்லை. ஆட்டோவை நிறுத்தி அவரை இறங்க சொல்கிறார். அவரது கன்னத்தில் அறைகிறார். ஆட்டோவில் ஏறி போய் விடுகிறார். இது உங்களுக்கு காட்டுமிராண்டித்தனமாய் தெரியலாம். சிலநேரம் மொழி செயலிழந்து போகும். அப்போது அடி மட்டும் தான் பேச முடியும். இரண்டு சம்பவங்களிலும் வன்முறைக்கு பின்னால் கவிதை மீதான ஒரு அளப்பரிய அன்பும், இப்பண்பாடு மீதான மரியாதையும் இருப்பதைக் காணலாம். அன்பு மிகும் போது அதன் வழியாக வெளியாகும் வன்முறை அதனளவில் பரிசுத்தமாக, உயர்வானதாக ஆகிறது. கண்ணப்பர் கண்ணைப் பிடுங்கி அளித்தது போன்ற ஒரு செயல் இது. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
உலகம் பூரா எழுத்தாளர்கள் இது போல் பரஸ்பரம் அடித்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். கவிஞர் வேலஸ் ஸ்டீவஸ்டுனான ஹெமிங்வேயின் சண்டை பிரசித்தமானது. வேலஸ் ஸ்டீவன்ஸ் ஒரு மது விருந்தின் போது ஹெமிங்வேயைப் பற்றி அவதூறாக பேசுகிறார். அதைக் கேட்க நேர்கிற ஹெமிங்வேயின் சகோதரி உர்சுலா அழுது கொண்டே வீட்டுக்கு வந்து ஹெமிங்வேயிடம் சொல்கிறார். வெளியே மழை கொட்டுகிறது. மாலை வேளை வேறு. இருட்டாக இருக்கிறது. ஆனால் ஹெமிங்வே சற்றும் சிந்திக்காமல் விருந்து நடக்கும் இடம் நோக்கி ஓடுகிறார். அங்கே அப்போது தான் ஸ்டீவன்ஸ் வெளியே வந்து கொண்டிருக்கிறார். அவர் தன் நண்பர்களிடம் சொல்கிறார் “அந்த ஹெமிங்வே மட்டும் இப்போது இங்கே வரட்டுமே! அவனை நான்…” அவர் சொல்லி முடிக்கும் முன் ஹெமிங்வே அவர் முன்னால் நிற்கிறார். இருவரும் வெளியே பொதுவிடத்துக்கு வந்து சண்டை போடுகிறார்கள். ஹெமிங்வே மூன்று முறை முகத்தில் குத்திட ஸ்டீவன்ஸ் கீழே விழுகிறார். காயம் குணமடைந்த பிறகு அவர் ஹெமிங்வேயை பார்க்க வருகிறார். இருவரும் பேசி சமாதானமாகிறார்கள். எழுத்தாளர்கள் தாம் அவமதிக்கப்படும் போது தாம் சார்ந்த மொழியும் அதன் விழுமியங்களும் நம்பிக்கைகளும் அவமதிக்கப்படுவதாய் உணர்கிறார்கள். அபரிதமான பண்பாட்டு வேட்கை தான் அவர்களை அதிகம் சண்டை போடுகிறவர்களாவும் ஆக்குகிறது. இதில் தன்னலம் ஏதுமில்லை.
இப்போது பழிவாங்கலுக்கான வன்முறைக்கு வருவோம். உண்மையில் இந்த வன்முறை பழிவாங்கலுக்காக நடக்கிறதா? இல்லை. இன்னொரு உடலை கையகப்படுத்தி உளவியல் ரீதியாக சிதைக்கும் பட்சம் நடக்கிறது. தர்மபுரியில் பா.ம.க தலித்துகளின் முன்னூறு குடிசைகளை எரித்து, அவர்களை தாக்கி, உடைமைகளை அழித்த சம்பவத்தை உதாரணமாக கூறலாம். ஆனால் தன்னெழுச்சியால் ஒருவரை அடிப்பதும் திரும்ப அடிப்பதும் பழிவாங்கல் அல்ல. தன்னெழுச்சியால் ஒருவரை தாக்குவது ஒருவரை அன்பாக அரவணைத்து முத்தமிடுவது போல. அதன் அடியாழத்தில் ஒரு அன்பு இருக்கிறது. பூரணமான அன்பு என்பது ஒருவரை உடலளவில் நேசிப்பது. அப்படி நேசிக்கிற ஒரு ஆளால் உடலளவில் தான் வெறுப்பையும் காட்ட முடியும். அதில் எந்த தவறும் இல்லை. உங்கள் மூளைக்குள் துவக்கம் கொள்ளாத வரை எந்த தாக்குதலிலும் சிக்கல் இல்லை. சொல்லப்போனால் சிந்தனையற்ற இயல்பான வன்முறையில், அதிகார வேட்கையற்ற வன்முறையில் சேதம் இராது. அதற்கு ஒரு சுயவரைமுறை உண்டு.

பொதுவாக வன்முறையை சரியாய் பிரயோகிக்க தெரிந்தவர்களுக்கு ஒரு பொறுப்புணர்வு இருக்கும். சண்டை என்பது ஒரு அற்புதமான கலை. அக்கலையை நாம் அறியாதிருப்பதனால் தான் சமூகத்தில் இவ்வளவு வன்முறை நிலவுகிறது. வோங்க் சுன் லியோங் சீனாவை சேர்ந்த ஒரு விங் சுன் சண்டைக் கலைஞர். புரூஸ் லீக்கு கற்பித்தவர். விங் சுன் குங் பூவில் சமகால மேதை என இவரை கருதுகிறார்கள். விங் சுன் சண்டை பாணியை நீங்கள் “முகமூடி” படத்தில் விரிவாக பார்க்கலாம். சமீபமாக வந்துள்ள “ஐ”யில் ஹீரோவும் வில்லனும் விநோதமாய் குத்துச்சண்டை போடுவதை பார்க்கலாம். அதாவது வேகமாய் கையால் பெடல் மிதிப்பது போல் குத்துவது. இது விங் சுங் பாணி தான். இந்த வோங் சுன் லியோங்க் பற்றி The King of Talking Hands எனும் ஒரு ஆவணப்படம் வந்துள்ளது. இதில் ஒரு சம்பவம் வருகிறது. வோங் சுன் ஒரு நண்பருடன் ஒரு இரவில் மதுக்கடைக்கு போகும் போது நண்பரை கொல்வதற்காக கத்தியுடன் ஒரு கூட்டம் வருகிறது. இருவரும் ஓடுகிறார்கள். இது சண்டையின் அடிப்படை பாடம் என வோங் சுன் சொல்கிறார். அதாவது நிஜமாய் நடப்புலகில் ஒரு சண்டை வந்தால் சண்டைக்கலைஞன் தனக்கு அடி படாமல் தவிர்க்க வேண்டும் அல்லது ஓடி விட வேண்டும். இது கோழைத்தனம் அல்ல. தற்பாதுகாப்பு. ஏனென்றால் ஒரு சண்டைக்கலைஞன் யாரையாவது தாக்கினால் அது பலமடங்கு ஆபத்தானதாகும். அதனால் வோங் சுன் ஓடுகிறார். ஆனால் ஆயுததாரிகள் துரத்தி வந்து அவரை சூழ்ந்து கொள்கிறார்கள். அவர்கள் ஒரு சந்தைப் பகுதியில் இருக்கிறார்கள். வோங் சுன் ஒரு கடையில் இருந்து இரண்டு கட்டைகளை எடுத்துக் கொண்டு அற்புதமாய் சண்டையிட்டு அவர்களது ஆயுதங்களை தட்டி விடுகிறார். பிறகு மீண்டும் ஓடி தப்பிகிறார். “நீங்கள் ஏன் ஒரு கத்தியை எடுத்து சண்டை போடாமல் கட்டையால் தாக்கினீர்கள்?” என அவரிடம் கேட்கிறார்கள். அவர் சொல்கிறார் “நானும் ஒரு கத்தியால் தாக்கியிருந்தால் இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பேன்”. சண்டைக்கலை தெரிந்தவர்கள் இதனால் தான் எப்போதும் சண்டையை தவிர்த்து ஓடுகிறார்கள். ஏனென்றால் சண்டையின் போது அவர்களை விட அடுத்தவர்களுக்கு தான் ஆபத்து அதிகம். நம் சமூகத்தில் மக்களுக்கு சண்டைக்கலை பரவலாக சொல்லிக் கொடுக்கப்பட்டால் வன்முறை கணிசமாக குறையும்.
நன்றி: உயிரெழுத்து, பெப்ரவரி 2015

No comments: