Sunday, April 19, 2015

தொட்டாற்சிணுங்கிகள்

Hurt by Mrs-Alphabet

உங்கள் படைப்பை யாராவது கிண்டலடித்தால் தாங்கிக் கொள்வீர்களா? ஜென்ம விரோதியாக பாவிப்பீர்களா அல்லது புறக்கணித்து கூலாக கடந்து விடுவீர்களா? சமீபத்தில் நவீன கவிதை பற்றின நீயா நானாவில் இ.எம்.எஸ் கலைவாணனிடம் கோபிநாத் கேட்டார்: “உங்கள் புத்தகத்தை எடுத்துப் பார்க்கும் நான் இவை வெறும் காகிதங்கள் தானே, வேறு என்ன இருக்கிறது என கேட்டால் என்ன சொல்வீர்கள்?”. அதாவது கோபிநாத் அப்படி கருதி கேட்கவில்லை. ஒரு சாத்தியத்தை பரிசீலிக்கும் நோக்கில் கேட்டார். அதற்கு கலைவாணன் “எனக்கு வலிக்கும்” என தன் கரகர தழுதழுத்த குரலில் சொன்னார்.

 இது ஒரு அணுகுமுறை. இன்னொரு அணுகுமுறை இருக்கிறது. ஒரு படைப்பு வாசகன் வசம் போனபின் அது அவனது பார்வை, புரிதல், கவனம், அக்கறை பொறுத்து உருமாறுகிறது. ஆக அதற்கென்று ஒரு நிலைத்த பொருளோ தகுதியோ இல்லை. அது மாறிக் கொண்டிருக்கும். எழுத்தாளனே ஒரு விமர்சகனும் என்றால் தன் படைப்பின் நிலை, தரம் என்ன என புறவயமாய் ஓரளவு கணிக்க முடியும். இதன் படி நீங்கள் வாசகர்களின் பார்வை பற்றி கவலைப்படாமல் விட்டேத்தியாக இருக்கலாம். தொடர்ந்து எழுதுவதற்கு இரண்டாவது அணுகுமுறை தான் சரி என்பது என் கருத்து.
பதினாலு வயதில் இருந்து எழுதத் தொடங்கினேன். 27 வயது வரை நான் தொட்டாற்சிணுங்கியாகத் தான் இருந்தேன். என் படைப்பை யாராவது மறுத்தாலோ பகடி பண்ணினாலோ கண்ணீர் வரும். குரோதம் பொங்கும். பழிவாங்க யோசித்தபடி இருப்பேன். விளைவாக தொடர்ந்து எழுதும் மனத்திடம் இல்லாமல் ஆகும். பல மனக்காயங்கள் வருடக் கணக்காய் ஆறாமல் இருந்திருக்கின்றன. இன்னொரு பக்கம் என்னை பாராட்டி ஏற்றிக் கொண்டவர்களிடத்து உயிரை ஒப்படைத்து விடுவேன். பக்தி பரவசத்துடன் அவர்களுக்கு சூடம் காட்டுவேன். சின்ன வயதில் நான் அந்தளவுக்கு அங்கீகாரத்துக்கு ஏங்கி இருக்கிறேன்.
 நான் அப்போதெல்லாம் என் கல்லூரிக்கு அருகில் இருந்து சு.ராவின் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். துடுக்குத்தன்மாய் நிறைய பேசுவேன். சு.ரா மிக கனிவாய் பொறுமையாய் அதை கவனிப்பார். ஆனால் மதிப்பிட மாட்டார். மிகக் குறைவாகத் தான் அவர் பேசுவார். அவர் மனதுக்குள் ஒரு அளவுகோல் வைத்திருக்கிறார் என நினைப்பேன். அதில் வைத்து அளந்தளந்து வாக்கியங்களை வெளியில் இழுத்து எடுத்து முறித்து காட்டுவார் எனத் தோன்றும். எவ்வளவு நுண்மையான மனம் படைத்த நல்ல மனிதர் என இப்போது புரிகிறது. சு.ரா ரொம்பவே புறவயமான உரையாடல்காரர். மிகையாக எதையும் கூற மாட்டார். “காலச்சுவடு” படிப்பதுண்டா எனக் கேட்டார். நான் “அவ்வப்போது” என்றேன். “அதைப் படித்தால் இப்போது உள்ள நிலவரம், போக்குகள் என்ன என ஒரு புரிதல் கிடைக்கும்” என்றார். அவ்வளவு தான். அது தன் குடும்ப பத்திரிகை என்பதால் அதைப் படித்தால் உன்னதமான இலக்கிய அறிவு கிடைக்கும், எழுத்தாளனுக்கு அது பெரிய படிப்பினைகள் தரும் என்றெல்லாம் சுயவிளம்பரம் பண்ண மாட்டார்.
 ஒருநாள் அவரிடம் இருந்து எனக்கு ஒரு அஞ்சல் அட்டை வந்தது. அதை நான் ஒரு நூறு முறை மாலையில் இருந்து அடுத்த நாள் காலை வரை படித்திருப்பேன். “உங்களை சந்திக்க வேண்டும். நாளை மாலை 6 மணிக்கு வர முடியுமா?”. நான் அப்போது காலச்சுவடுக்கு அடிக்கடி படைப்புகள் அனுப்புவேன். (அவற்றைப் படித்து அப்போது எடிட்டராக இருந்த மனுஷ்யபுத்திரன் நொந்து போயிருப்பார் என நினைக்கிறேன்) என் படைப்புகளில் எதையோ படித்து பிடித்துப் போய் தான் சு.ரா பேச அழைக்கிறார் என நினைத்து நிறைய எதிர்பார்ப்புகளுடன் போனேன். ஆனால் இறுதிவரை சு.ரா என் படைப்பு எதைப்பற்றியும் பேசவில்லை. அது மட்டுமல்ல முக்கியமாய் எதைப்பற்றியும் பேசவில்லை. சும்மா வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தார். போகும் முன் பொறுமை இழந்து “என் கதை ஒன்றை காலச்சுவடுக்கு அனுப்பினேன், படித்தீர்களா?” எனக் கேட்டேன். சு.ரா சற்று யோசித்து “இல்லையே. நான் காலச்சுவடுக்கு வரும் படைப்புகளை பார்ப்பதில்லை. நான் படிக்க வேண்டுமென்றால் என்னிடம் நேரடியாக கொடுங்கள்” என்றார். பிறகு நான் அப்படி அவரிடமே என் கதைகளை காட்டத் துவங்கினேன். என் மனம் புண்படாதபடி ரொம்ப கவனமாய் தன் கராறான கருத்துக்களை சொல்லுவார்.
27 வயதுக்கு பின் நான் எழுத்து மீதான அணுகுமுறையை மாற்றினேன். எழுத்து என்றால் உன்னதமான அதிஅற்புதமான படைப்புகளை உருவாக்கி என்னை நிறுவுவது, கலைஞனாக திகழ்வது என கற்பனையை உதறினேன். நான் என்னை எழுத்தாளன் என்றே நினைத்துக் கொள்ளக் கூடாது என உறுதி கொண்டேன். அது என்னை சரளமாய் கவலையின்றி இயங்க அனுமதித்தது. இப்போதெல்லாம் அடிக்கடி எழுத்தாளன் எனும் மமதை என்னை பிடித்துக் கொள்கிறது. பிறகு அது ஒரு போலி நம்பிக்கை என எனக்கு நானே புரிய வைத்து விடுபடுவேன். எழுத்தாளன் எனும் பிரக்ஞை நம்மை எழுத்தை சுகிக்க விடாமல் பண்ணும். அது தலைக்கு மேல் ஒரு மூட்டையுடன் உட்கார்ந்து ரெண்டுக்கு போவது போன்ற அவஸ்தை. இந்த எழுத்துக்கும் எனக்கும் சம்மந்தமில்லை, நான் தகவல்கள், கற்பனை மற்றும் உணர்ச்சிகளை கடத்தி விடும் ஒரு மின்கம்பி என நினைத்துக் கொள்வேன். என்னில் பாயும் மின்சாரம் எனக்கு சொந்தமல்ல. இந்த விடுபடல் தரும் சுதந்திரம் அபாரமானது. அவ்வளவு சீக்கிரம் எதுவும் உங்களை காயப்படுத்தாது.
அதேவேளை இளம் எழுத்தாளர்கள் இன்று தம் மீது பாயும் விமர்சன அம்புகள் பட்டு மாயமான்களாய் துடிக்கும் வலியும் கவலையும் எனக்கு புரிகிறது. இன்று இளம் எழுத்தாளர்கள் தம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை அரசியல் மற்றும் குழு நடவடிக்கை மூலம் கட்டிக் கொள்ள முயல்கிறார்கள் என ஒரு பேச்சு உள்ளது. அவர்கள் தம்மை யாரும் விமர்சிப்பதை ஏற்க தயாராக இல்லை; தம்மை நிராகரிப்பவர்களை கடும் குரோதத்துடன் பார்க்கிறார்கள் என கூறப்படுகிறது. இப்படித் தான் ஒரு கவிஞரின் தொகுப்பு நன்றாக இல்லை என ஒரு நண்பரிடம் எதேச்சையாக கூறப் போய் அவர் இவரிடம் போட்டுக் கொடுக்க இவர் என்னை வெளியே சந்தித்தால் கோபம் உமிழும் கண்களுடன் சுடுகிறார். பதிலுக்கு அவர் என் கவிதைத் தொகுப்பையும் கடித்து குதறி விட்டார். சரி, போகட்டும் நானும் அவர் தொகுப்பின் கையை பிடித்து இழுத்திருக்க கூடாது, பதிலுக்கு அவரும் இழுத்து விட்டார் என விட்டு விட்டேன். எனக்கு அவரது மனநிலை புரிகிறது.
 கவிஞர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். தூங்கி எழுந்து குடிக்கும் டீ ரொம்ப சூடாய் இருந்தால் கூட கொதிப்படைவார்கள் என நினைக்கிறேன். மேற்சொன்ன நீயா நானாவில் பத்மஜா நாராயணன் தன் கவிதைகளில் சமூக பொறுப்பு இல்லை என பிறர் குற்றம் சொல்லும் போது தன் மனம் மிகவும் வேதனைப்படுவதாய் கிட்டத்தட்ட அழுகிற பாணியில் சொன்னார். எனக்கு கேட்க வருத்தமாய் இருந்தது. இப்படியெல்லாம் அவரை வேதனைப்பட வைப்பது கூட ஒரு சமூக பொறுப்பின்மை தான் இல்லையா?
இந்த சூழலுக்கு என்ன காரணம்? எனக்கு இரண்டு விசயங்கள் தோன்றுகின்றன
 1) ஜெயமோகன், சாரு உள்ளிட்டு பல எழுத்தாளர்கள் நட்பு, பரிச்சயம், பொருளாதார பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிலரை தூக்கிப் பிடிப்பதும் சிலரை போட்டு மிதிப்பதும் செய்து ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கினார்கள். இன்று இளம் எழுத்தாளர்கள் மதிப்புரைகள், விமர்சனங்களில் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அவர்களின் பதற்றம் மற்றும் சந்தேகங்களில் பாதியேனும் நியாயம் உள்ளது. நமக்கு புறவயமான objective விமர்சகர்கள் தேவையுள்ளது. முகம் பார்க்காமல் எழுதுபவர்கள் வேண்டும். எந்தளவுக்கு இலக்கிய வட்டத்தில் நட்பு குறைவோ அந்தளவுக்கு கராறாய் எழுதலாம்
2) நிறைய தொடர்ந்து எழுதுபவர்களுக்கு கிடைக்கும் தன்னம்பிக்கை தனி. அப்போது எதிர்மறை விமர்சனங்கள் நம்மை பாதிக்காது. குறைவாக எழுதும் போது மனம் பாதுகாப்பு வளையம் இல்லாமல் தள்ளாடும். யாராவது தள்ளினால் விழுந்து விடும். எனக்கு ஒருவரது வாசிப்பு மற்றும் விமர்சன பார்வை மீது மிகுந்த நம்பிக்கை இல்லாத பட்சத்தில் அவரது அபிப்ராயத்தை நான் பொருட்படுத்த மாட்டேன். அப்படிப் பட்டவர்கள் மிக மிக சிலர் தான் இங்கே இருக்கிறார்கள். இதை நான் கர்வத்தில் சொல்லவில்லை. தமிழில் பெரும்பாலானோர் உணர்ச்சிவசப்பட்டு வாசித்து உணர்ச்சிவசப்பட்டு கருத்து சொல்கிறார்கள். அதில் எந்த மதிப்பும் இல்லை.

 மாறாக, ஒரு எழுத்தாளனுக்கு தொழில்நுட்பம் சார்ந்த அறிவுரைகள் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாய் ஒரு பாத்திரம் அல்லது அதன் வசனங்கள் பொருத்தமாய் இல்லை என்பது போன்ற அவதானிப்புகள். எளிய வாசகர்களிடம் இருந்து கூட பெற முடியும். அது போல் ஒரு படைப்பு பல தரப்பட்டவர்களிடம் ஏற்படுத்தும் எதிர்வினைகளும் கவனிக்க சுவாரஸ்யமானவை. உதாரணமாய் “ரசிகன் நாவலை ஒரு தோழி படித்து விட்டு ரயிலில் கும்பலமாய் விரசமாய் பேசிச் சிரித்து செல்லும் ஆண்களை ஒட்டுக் கேட்பது போல் இருக்கிறது என்றார். ஆனால் எழுதும் போது நான் அப்படி உணரவில்லை. இப்படி மாறுபட்டவர்கள் படித்து சொல்லும் கருத்துக்களே ஒரு தனி புனைவு போல் சுவாரஸ்யமாய் இருக்கும். மதிப்புரைகளை விட அவை எதிர்பாராத தன்மை கொண்டிருக்கும். ஆச்சரியமாய் முகநூலில் படைப்புகளுக்கு அப்படியான எதர்வினைகளை பார்க்க முடிவதில்லை. பெரும்பாலும் ஒரே மாதிரி தான் ஒரு புத்தகம் அல்லது படம் பற்றி எழுதுகிறார்கள். குழந்தைகள் ரயில்பெட்டி விளையாட்டு போன்ற பாணி பேஸ்புக்கில் பின்பற்றப்படுகிறது.

1 comment:

Pandiaraj Jebarathinam said...

சிறப்பான அலசல்..
நிச்சயமாக முகநூல் விமர்சனங்கள் பிற விமர்சனங்களில் இருந்து பிறப்பதாகவே நினைக்கிறேன்.