Friday, April 3, 2015

ஜென்: அன்பும் காமமும் அடிதடியும்

Image result for zen

(தி ஹிந்து தீபாவளி மலரில் வெளியான கட்டுரையின் திருத்தப்படாத வடிவம்)
ஜென் என்பது ஒரு கருத்தியல் அல்ல. அது ஒரு மனநிலை. ஜென் பற்றி நீங்கள் படிக்கும் எந்த நூலோ கட்டுரையோ இதைத் தான் வலியுறுத்தும். ஒரு விதத்தில் ஜென்னைப் பற்றி படித்து புரிய முயல்வதே ஜென்னுக்கு எதிரானது தான். அப்படியென்றால் ஏன் அதை புரிந்து கொள்ள முயல வேண்டும்?

ஜென்னை நாம் உருவாக்க வேண்டியதில்லை. அம்மனநிலை ஏற்கனவே நமக்குள் உள்ளது. கண்டடைந்து தக்க வைத்தால் போதும். சிலநேரம் நாம் கெட்டது என நினைப்பது கூட நல்லதாகவே இருக்கும். உதாரணமாய், ஒருவர் மிக அதிகமாய் கோபப்படுபவராக இருக்கலாம். அவருக்கு தான் அவ்வாறு கொந்தளிப்பது பற்றி குற்றவுணர்வும் கூச்சமும் தோன்றலாம். நாம் கட்டுப்பாடில்லாமல் கத்துகிறோமோ, இது அசட்டுத்தனம் இல்லையா என தோன்றலாம். ஆனால் ஜென் கோபப்படுவது தவறில்லை. கோபம் வந்தால் கோபப்படுவதும், அமைதி தோன்றுகையில் அமைதியாக இருப்பதுமே சரி என்கிறது. அப்படியான ஒருவர் இந்த கதையை கேட்க வேண்டும்.

ஒரு ஜென் மடாலயம். அங்கு இரவில் ஒரு பிரயாணி வருகிறார். வாசல் மணியை அடிக்கிறார். வாசலுக்கு வரும் துறவி பிரயாணியிடம் “நீங்கள் யார் என சொல்லுங்கள் அப்போது தான் உள்ளே விடுவேன்” என்கிறார். பிரயாணி தன் செருப்பைக் கழற்றி துறவியின் கன்னத்தில் அடிக்கிறார். துறவி அந்த அடியின் பொருளை புரிந்து கொண்டு புன்னகையுடன் அவரை உள்ளே போக அனுமதிக்கிறார்.

துறவி ஏன் புன்னகைத்தார்? அவருக்கு ஏன் கோபம் வரவில்லை? ஏனென்றால் அவர் அந்த அடியை ஒரு பதிலாக பார்த்தார். என்ன பதில்? அந்த அடி ஒரு அறிக்கை. நான் இப்படிப்பட்டவன் எனும் அறிக்கை. எனக்கு தோன்றுவதை உடனடியாக யோசிக்காமல் பண்ணுவேன் என கூறும் அறிக்கை.

ஒருவரை அறையத் தோன்றுகிறது. எந்த திட்டமிடலோ எதிர்பார்ப்போ இன்றி அறைகிறோம். அதில் ஒரு தூய்மை உள்ளது. தன்னிச்சையான செயல்களில் ஈடுபடுகையில் நீங்கள் உங்களை அதில் இழக்கிறீர்கள். காலமும் இடமும் குறித்த பிரக்ஞை உங்களை பிணைப்பதில்லை. ஒரு அழகான பெண்ணின் அருகில் இருக்கிறீர்கள். அவளது இடுப்பைக் கிள்ள ஆசை எழுகிறது. ஆனால் வேண்டாம் என பின்வாங்குகிறீர்கள். அப்போது உங்கள் மனம் அவளது இடுப்பை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்து கிள்ளிப் பார்க்கிறது. அவ்வனுபவத்தை மிகைப்படுத்தி ரசிக்கிறது. ஏங்குகிறது. அல்லது குற்றவுணர்வால் கசப்படைகிறது.

ஒரு செயலில் ஈடுபடுகையில் நீங்கள் கிளர்ச்சியை உணர்வதில்லை. மிக மிக சுவையான உணவை சுவைக்கையில் அது சுவையாக இருக்கிறதென நினைத்தால் நீங்கள் அதை சுவைக்கவில்லை என அர்த்தம். அந்த உணவை நீங்கள் சாப்பிடுவதே உணராமல் சாப்பிட்டு கொண்டிருப்பீர்கள். அப்போது தான் அது உண்மையில் சுவையானது. நீங்கள் காதலின் உச்சத்தில் இருக்கையில் காதலை உணர மாட்டீர்கள். மிக கோபமாய் இருக்கையில் கோபத்தை உணர்வதில்லை. ஆனால் கோபத்துக்குள் இருப்பீர்கள். ஒரு வீட்டுக்குள் இருக்கையில் வீட்டை பார்ப்பதில்லை. வெளியே இருக்கையில் பார்க்கிறோம். இது நம் வீடு, இதன் அமைப்பு இப்படி, இதனோடு தொடர்புடைய நினைவுகள் இவை என பகுத்துணர்கிறீர்கள். ஆனால் வீட்டுக்குள் இருக்கையில் இது என் வீடு என எண்ணமே இல்லாமல் இருக்கிறீர்கள். அதனாலே சொந்த வீட்டுக்கு வந்ததும் நிம்மதி கிடைக்கிறது. இதுவே அந்நிய வீடென்றால் அதை உள்ளே இருக்கையிலும் தொடர்ந்து உற்று கவனிப்பீர்கள். இந்த பிரக்ஞை உங்களை உறுத்திக் கொண்டே இருக்கும். இப்படி வீட்டுக்குள் வீடு பற்றிய உணர்வில்லாமல் இருப்பதை தான் ஜென் mindfulness என்கிறது.

நான் கொடுத்த மூன்று உதாரணங்களும் – அடிப்பது, கிள்ளுவது, வீட்டுக்குள் இருப்பது - அன்றாட வாழ்வில் மிக சாதாரணமாய் நமக்கு நிகழ்வன என கவனித்திருப்பீர்கள். ஜென் ஒரு தனியான உயர் தத்துவ நிலை அல்ல. அது மனித இயல்பின் பகுதி. அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாய் உணரும் ஒன்று. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அடிக்க தோன்றினால் அடிப்பது, கிள்ளத் தோன்றினால் கிள்ளுவது, வீட்டுக்குள் இருக்கையில் இருப்பது. அடிப்பது. கிள்ளுவது போன்ற தன்னிச்சையான செயல்கள் குற்றங்கள் அல்லவா? சமூக அளவில் அவை குற்றங்களே. ஆனால் ஆன்மீக அளவில் அவை குற்றங்கள் அல்ல. திட்டமிடாத எதுவும் குற்றமல்ல. ஆனால் இவை சற்று கோணலான செயல்கள். சமூக அளவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய செயல்களில் நீங்கள் தடையின்றி உங்களை இழக்கலாம். அது வேலையாகவோ, அன்பு காட்டுவதாகவோ, கலை அனுபவமாகவோ, விளையாடுவதாகவோ இருக்கலாம். கோணலான உதாரணங்களை தந்தது ஜென்னில் ஒழுக்க பார்வை இல்லை என கூறவே. எதையும் யோசிக்காமல் ஒருவரது கழுத்தை பற்றி நெரிப்பதும், தோள்களை கட்டி அரவணைப்பதும் ஒன்று தான் – விளைவுகள் வேறுவேறு என்றாலும்.

சரி நாம் முதலில் சொன்ன கதைக்கு வருவோம். “ஒன்றை பகுத்துணர்ந்து ஆராயாமல் செயல்படுபவன் நான்” என்பதே அந்த பிரயாணி அடி மூலம் விடுத்த செய்தி. அப்படி ஒரு அனுபவத்தில் ஆழமாய் இருக்கிற ஜென் மனநிலை தனக்குண்டு, அதனால் தான் அந்த ஜென் மடாலயத்தில் நுழைய தகுதி கொண்டவன் என்பது தான் அவரது செய்தி. ஆனால் இதை அவர் சொல்லி இருக்கலாமே? ஏன் அடித்தார்?

சொல்லி இருந்தால் அதை பகுத்தறிவுக்கு புரியும் படியாய் ஒரு கருத்தாய், தர்க்கமாய் மாற்ற வேண்டும். அவ்வாறு மாறினதும் அது ஜென் அல்லாமல் ஆகி விடுகிறது. வீட்டுக்கு வந்ததும் அப்பா என அழைத்தபடி குழந்தை தாவி வருகிறது. அதை அள்ளியெடுத்து முத்தம் கொடுக்கிறீர்கள். ஒரு நொடியாவது இது என் குழந்தை, இதன் மீது அன்பாய் இருக்கிறேன், இந்த அன்பை அதனிடம் இப்படி விளக்க போகிறேன் என நினைக்க மாட்டோம். அப்படி நினைத்து முத்தமிட்டால் அந்த பிசிறை, தடுமாற்றத்தை குழந்தை உடனே கண்டுபிடித்து விடும். மேற்சொன்ன பிரயாணி துறவியிடம் விளக்கி இருந்தால் அதில் உள்ள பிசிறை அவர் நிச்சயம் கண்டுபிடித்து அனுமதி மறுத்திருப்பார். தனது ஜென்னை வெளிப்படுத்த ஒரே வழி செயல் தான். “நீ உன்னை விளக்கு” என துறவி கோரும் போது அவருக்கு கோபம் வருகிறது. அவர் அடிக்கிறார். அப்போது அவர் “நான் இப்போது கோபம் கொள்கிறேன். கோபமான மனநிலையாக இருக்கிறேன். இது தான் நான். அடுத்த நொடி இன்னொன்றாக இருப்பேன். ஆனால் இப்போதைக்கு இந்த கோபமே நான். இது தவிர்த்து எனக்கு நிலையான ஒரு அடையாளம் இல்லை” என்கிறார். துறவி ஒரு பெண்ணாக இருந்து அவருக்குள் காமத்தை தூண்டியிருந்தால் அவர் அணைத்து முத்தமிட்டிருக்கலாம். அதுவும் ஜென் தான். “நான் இப்போது காமமாக இருக்கிறேன், அதுவே எனது ஜென்” என பொருள்.

ஜென் பேச்சை மறுத்து செயலை ஏற்க கோருகிறது. வாழ்க்கை என்பது சுணக்கமற்ற செயல்களின் பேரொழுக்கு. மனிதன் அதன் பகுதியாக இருக்கையில் ஜென்னுடன் இருக்கிறான். மனிதன் வாழ்வில் இருந்து தன்னை பிரித்துணர முயல்கையில் தான் அவனுக்கு அறிவும், பேச்சும் தேவையுள்ளது. தன்னை பிரித்துணர்கையில் அவன் தனக்கு ஒரு நிரந்தரமான அடையாளம் உண்டு என நினைக்கிறான். அது தன் தனிமனித அடையாளம் என்கிறான். ஆனால் ஒவ்வொரு நொடியும் நாம் மாறிக் கொண்டே இருக்கிறோமோ? இந்த மாற்றத்தின் ஊடே நாம் எங்கு இருக்கிறோம்? ஒருவன் தனிமனிதனாக தன்னை கோரும் போது காலம் மற்றும் இடம் சார்ந்து தனக்கு ஒரு இறுதியான அடையாளம் அல்லது நிலை இருக்கிறதென நம்புகிறான். ஆனால் ஓரிடத்தில் இருந்தபடியே எத்தனை இடங்களுக்கு சில நொடிகளுக்கு போய் வருகிறோம்! ஒரு நொடியில் எத்தனை வருடங்களை கடந்து விடுகிறோம்! காலமும் இடமும் மனிதன் உருவாக்கின கருத்துருவாக்கங்கள் என்றால் மனிதன் அனைத்திலும் ஒட்டாமல் மிதந்து வருபவன் தானே! அவன் அனைத்திலும் அனைத்துமாக இருப்பவன் தானே!

நம்முடைய அறிவுத்துறைகள், பேச்சு, எழுத்து, விவாதங்கள் அத்தனையும் “நான் இவ்வாறு உங்களில் இருந்து தனித்து இருப்பவன்” என கோருவதற்கான பிரயாசை தான். இப்படி நிறுவி என்ன சாதிக்கிறோம்? தனிமனிதனாக உணர்கையில் தனிமையும் பதற்றமும் தான் நம்மை நெருக்குகிறது. ஏனெனில் தனிமனித உணர்வு போலியானது. செயற்கையாக கட்டுவிக்கப்பட்டது. வாழ்க்கை ஒட்டுமொத்தமானது. ஒட்டுமொத்த இருப்பின் பகுதியாக ஒரு புழுவும், மரமும், மழைத்துளியும், சேறும் சகதியும் இருப்பது போன்றே மனிதனும் இருக்கிறான். நீங்கள் ஒரு ஒட்டுமொத்த இருப்பின் பகுதி என உணரும் போது உங்களுக்கு அபாரமான ஒரு சமநிலையும், தன்னம்பிக்கையும் வாய்க்கிறது. இது குறித்து கூறுகையில் ஆலன் வாட்ஸ் ஆசியர்களுக்கு இயல்பாகவே ஒரு ஜென் மனநிலை உண்டு என்கிறார்.

தனிமனித உருவாக்கம் ஒரு மேற்கத்திய கண்டுபிடிப்பு. மேற்கத்திய சிந்தனை மனிதனை வாழ்க்கையில் இருந்து, இயற்கையில் இருந்து பிரித்து பார்க்கிறது. கல்லையும் மண்ணையும் உயிரற்றதாகவும் மிருகங்கள், பறவைகள், மனிதனை உயிருள்ளவர்களாகவும் பார்க்கிறது. இந்த பிரிவிற்குள் மனிதனை சுய-அறிவு உள்ளவனாய் தனித்து பார்க்கிறது. இவ்வாறு பகுத்து பார்க்கும் போக்கு ஆசிய பண்பாட்டில் இல்லை. நாம் ஒரு கல்லை உயிரற்றதாய் பார்ப்பதில்லை. நாம் ஒரு மரத்தை சுய-அறிவற்ற ஒன்றாய் காண்பதில்லை. கல்லும், மரமும் நமக்கு உயிருள்ள பிராணிகள் தாம். நாம் அவற்றுடன் உரையாடுகிறோம். மனிதன் இங்கு உயிருள்ள, உயிரற்ற, அறிவுள்ள, அறிவற்ற அனைத்து ஜீவன்கள்/பொருட்களுக்கும் சமமாக இருக்கிறான். இயற்கையில் அவனும் கல்லும் ஒன்றாக உள்ளது. அனைத்தையும் உள்ளடக்கிய இயற்கையின் பிரிக்க இயலாத பகுதியாக அவன் உள்ளான்.

இந்த பிரக்ஞையை நாம் மெல்ல மெல்ல ஐரோப்பிய கல்வியினால் இழந்து விட்டோம். நம்மை சுற்றி உள்ள இயற்கைக்கும் நமக்கும் இடையே ஒரு சுவர் எழும்பி விட்டது. ஆனால் கல்வியின் தாக்கமற்றவர்களிடத்து இன்னும் ஒரு ஜென் மனநிலை உள்ளது. நான் ஆய்வு மாணவனாக உள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் வாயில் அருகே ஒரு மரத்தை ஒட்டி ஒரு சின்ன டீக்கடை உள்ளது. ஒருநாள் டீக்கடை நடத்துபவரின் மனைவி அந்த மரத்தடியின் கீழ் இருக்கையில் இறந்து விட்டார். அவர் மரத்திற்கு சந்தனம், குங்குமம் பூசிய அவர் தன் பிள்ளைகளை அழைத்து வந்து “இது உங்க அம்மா” எனக் கூறி வழிபட வைத்தார். இன்றும் அம்மரத்தை அவர் வணங்கி வருகிறார். படித்தவர்களுக்கு இது மூடநம்பிக்கை அல்லது முட்டாள்தனம் என தோன்றலாம். ஆனால் இந்த நம்பிக்கையின் பின் வலுவான ஒரு தத்துவம் உள்ளது. மரணம் ஒரு முடிவற்ற சுழற்சி, யாரும் மறைவதோ தோன்றுவதோ இல்லை, அனைத்தின் பகுதியாக நாம் இருந்து கொண்டிருப்போம் எனும் ஜென் கருத்து உள்ளது. மைல்கல்லை சாமியாக மாற்றி கும்பிடும் கிராமத்தினரை விவேக் கலாய்க்கும் ஒரு சினிமா ஜோக் உள்ளது. ஆனால் அல்லா எனும் ஒரு மனநிலையை, ஆத்மன் எனும் ஒரு கருத்துநிலையை, சிலுவை எனும் ஒரு கொலைக்கருவியை கடவுள் என வழிபடுவதை விட நம் சூழலில் உள்ள கல்லையோ மரத்தையோ இறைவன் என, நம்மை விட்டு பிரிந்த போன ஒருவர் என நம்புவது இன்னும் மேலான ஒரு ஆன்மீக நிலை. கோயிலில் சாமியை கும்பிடுவதை விட ஒரு செடி அல்லது மரத்தை உங்களது முன்னோர் அல்லது பெற்றோர் என நம்பும் போது, அதையே கடவுளாக மாற்றும் போதும் தான் நீங்கள் பிரபஞ்சம் எனும் ஒட்டுமொத்த இருப்பின் ஒரு பிரிக்கயிலாத பகுதி என உங்களை புரிந்து கொள்கிறீர்கள். அதுவே உயர்வான மனநிலை. அம்மனநிலையை அடைய நீங்கள் பகுத்தறிவை வழிபடுவதை, அடுத்தவர் பார்வையை மூடநம்பிக்கை என கொச்சைப்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஜென்னில் பிடிவாதமான பகுத்தறிவாளன் தான் உண்மையான மூடநம்பிக்கையாளன்.

புரூஸ் லீ குங் பூவில் ஜென் மனநிலையை கண்டடைய முயன்றவர். சீன, ஜப்பானிய தற்காப்புக் கலைகள் மனதுக்கும் உடலுக்கும் இடையிலான வேற்றுமையை அழித்து மனம் உடலாக மாற வேண்டும் என்கிறது. ஒன்றை அப்படி செய்யலாமா என யோசித்து செய்கையில் மனமும் உடலும் இரண்டாக உள்ளன. சரளத்தன்மை தடைபடுகிறது. ஆனால் யோசிக்கும் முன் உடல் செயல்பட்டால் எப்படி இருக்கும்? தற்காப்புக் கலைகளில் பல அடவுகள், அடிமுறைகள் இருந்தாலும் அடிப்படை பயிற்சியே சிந்தனையற்று செயல்பட வைப்பது தான். சண்டையிடாத போதும் மனிதனுக்கு ஒரு விழிப்புணர்வு வேண்டும் என்கிறார் புரூஸ்லீ. ஆதாவது நீங்கள் எதையும் யோசிக்காமல் கவனிக்காமல் இருக்கும் போதும் உடல் விழிப்பாக இருக்க வேண்டும். நீங்கள் தனியாக அறையில் இருக்கையில் அல்லது ஒரு இருட்டான பாதையில் நடந்து போகையில் ஒரு எதிரி உங்களை எதிர்பாராது தாக்கினால் எப்படி தடுப்பீர்கள் என கற்பனை செய்ய சொல்கிறார் புரூஸ் லீ. இந்த கற்பனையை ஒரு பயிற்சியாக்க வேண்டும். எதிரி பற்றின பயமோ கோபமோ இன்றி அவனை கையாள்வது பற்றி சிந்திக்க, பயில வேண்டும். மனம் தயாராகும் போது உடலும் தயாராகிறது. எதிர்காலத்தில் நிஜமாகவே அப்படியான சூழல் வரும் போது உடல் தானே மனதின் தூண்டுதல் இன்றி தாக்குதலை தடுக்கும். புரூஸ் லீ தனது சீடர்களுடன் நடைபழகப் போகும் போது திடீரென எதையாவது பேசிக் கொண்டே ஒரு ஆப்பிளை பின்னால் வரும் அவர்கள் மீது வீசுவார். எந்த முன்னெச்சிரிக்கையும் இன்றி அவர்கள் அதை பிடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார். அதற்கு உங்கள் மனம் இரண்டாக இயங்க வேண்டும். ஒரு புறம் சுவாரஸ்யமாக ஒரு விசயத்தை பற்றி அரட்டையடித்துக் கொண்டிருக்கையில் இன்னொரு புறம் மனம் உன்னிப்பாக சூழலை கவனித்தபடியும் இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்களால் எந்த தாக்குதலையும் சமாளிக்க முடியும்.

 ஒருமுறை தன் மடத்தில் உள்ள துறவிகளை புத்தர் வெளியேற சொன்னார். மக்கள் திரள் அதிகமாக உள்ள பகுதியில் சென்று அவர்கள் வாழ வேண்டும்; மக்களோடு இருக்க வேண்டும், ஆனால் அவர்களுடன் இருக்கவும் கூடாது என்றார். சேற்றில் தாமரை போல் இருக்க வேண்டும் என்றார். இது தான் இரட்டை மனநிலை. சேற்றில் இருப்பது, அதாவது உலக வாழ்வில் இருப்பது, ஒரு நிலை. அதில் இருந்தபடி ஒட்டாமல் இருப்பது இன்னொரு நிலை. ஒரு சண்டைக்காரனாக எப்போது முறுக்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அசட்டுத்தனமாக பேசி சிரித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் மனமும் உடலும் அந்த சிரிப்பையும் கடந்து ஒரு விழிப்புணர்வுடன் இருக்கும். இதன் நீட்சியாக விங் சுன் எனும் குங் பூ சண்டை பாணியில் கண்ணை கட்டி சண்டை பயிலும் முறை உள்ளது. எதிரியை பார்க்க முடியாது. ஆனால் எதிரியின் உடலை நம் உடலின் ஒரு பகுதியாக நினைக்க வேண்டும். எதிரிக்கும் நமக்கும் இடையில் கயிறு போல் ஒரு பிணைப்பு உள்ளதாய் உணர வேண்டும். அப்போதும் எதிரியின் ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்றபடி நம் உடல் தயாராகி விடும். ஒரு கராத்தே ஆசான் என்னிடம் ஒரு முறை கூறினார். காற்றில் குத்தி பயிற்சி செய்யும் போது எதிரில் ஒரு எதிரியை கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு போதும் குத்தில் கோபம் இருக்க கூடாது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு ஒருநாள் ஆட்டம். இரண்டாவதாக இந்தியா ஆடுகிறது. சேவாக் மட்டையாளர், சமிந்தா வாஸ் பந்து வீச்சாளர். ஒவ்வொரு பந்தையும் முழுநீளத்தில் (full length) வீச சேவாக அவற்றை விரட்டி ஆடுகிறார். திடீரென்று ஒரு பந்தை வாஸ் குறைநீளத்தில் (short of the length) வீசுகிறார். முன்னே கால் வைத்து விரட்ட வரும் சேவாக் பந்தின் மாற்றத்தை இறுதி நொடியில் கணித்து பின்னே போய் அதை பாயிண்டுக்கு மேல் வெட்டி சிக்ஸர் அடிக்கிறார். கால் நொடிக்கும் குறைவான நேரத்தில் சேவாக எப்படி தன் ஷாட்டை மாற்றும் முடிவை எடுத்தார் என பலருக்கும் வியப்பு ஏற்பட்டது. ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டார்: “என்ன நினைத்து அந்த ஷாட்டை அடித்தீர்கள்?” சேவாக் சொன்னார்: “நான் ஒன்றுமே நினைக்கவில்லை”. அவர் ஒன்றுமே நினைக்காததனால் தான் அந்த ஷாட்டை அடிக்க முடிந்தது. அது தான் அவரது ஜென்.

ஜென் உணர்வு நம்மைப் போன்ற சாதாரணர்களின் அன்றாட வாழ்வில் உண்டா? இருந்தால் பயன் தருமா? நேற்று, இன்று, நாளை என காலத்தை பிரிப்பதை ஜென் ஏற்பதில்லை. அது மனதின் கற்பனையான பகுப்பு என்கிறது. இன்று நேற்றாவதும், எதிர்காலமாவதும் எந்த நொடியில் நிகழ்கிறது? இதைப் படிக்கிற நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்? நிகழ்காலத்தில் என்றால் படித்து முடித்த மறுநொடி அது கடந்த காலம் ஆகிறது. தொடர்ந்து படிக்கிறீர்கள் என்றால் எதிர்காலத்தை நோக்கிய நிகழ்கால பயணத்தில் இருப்பதாய் சொல்லலாம். எனில் ஒவ்வொரு சொல்லை நீங்கள் வாசிக்கையிலும் எதிர்காலத்தை தொடுகிறீர்கள். அவ்வாறு தொடும் நீங்கள் நிகழ்காலத்தில் நின்று தொடுகிறீர்களா அல்லது எதிர்காலத்தில் நிற்கிறீர்களா? இரண்டு காலத்திலும் இருக்கிறீர்களா? எனில் எது உண்மை?

காலப் பகுப்பை நுணுகி ஆராய்ந்தால் அது எவ்வளவு அபத்தமானது என விளங்கும். ஆனால் இந்த பகுப்புணர்வு இன்றி நம்மால் நடைமுறை வாழ்வில் செயல்பட இயலாது. இந்த காலப்பிரக்ஞை நம் சிந்தனையில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஜென் கவனிக்க கேட்கிறது. என் நண்பரிடம் ஒரு இலக்கிய முகாமில் கலந்து கொள்வது பற்றி பேசினேன். அவர் தன்னால் முன்பு போல் பேருந்தில் பயணித்து, தரையில் படுத்துறங்கிட முடிவதில்லை, உடம்பு சொகுசுக்கு பழகி விட்டது, அதனால் முகாமுக்கு போகப் போவதில்லை என்றார். சமீபமாக நான் ஊருக்கு போயிருந்த போது வீட்டில் உள்ள வசதிக்குறைவுகள் சிரமமாக தோன்றின. ஆனால் இதே வீட்டில் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த போது இக்குறைகள் தெரியவில்லையே? இப்போது நான் என் சென்னை வீட்டின் வசதிகளுடன் ஊரிலுள்ள வீட்டின் குறைகளை ஒப்பிட்டு பார்க்கிறேன். அதனால் சிரமம் தெரிகிறது. இந்த ஒப்பீடு நிகழ்வதற்கு காரணம் நான் தொடர்ச்சியாக ஒரே காலத்தில் இருப்பதாய் நினைப்பது தான். ஒரே நேர்கோட்டிலான காலத்தில் எனக்கு இருவேறு வசதிகள் இருப்பதாய் நினைக்கிறேன். இது பிழை என புலப்பட்டது. ஒவ்வொரு நிமிடமும் காலம் மற்றொன்றாக மாறுகிறது. நாம் மூன்று வித காலங்களில் அல்லது மூன்று கோடிக்கு மேற்பட்ட காலங்களில் நொடிக்கு நொடி வாழ்கிறோம். இதில் எதையும் இன்னொன்றுடன் ஒப்பிட இயலாது. ஒன்றோடு ஒன்று தொடர்பற்றது. இதை உணர்ந்ததும் எனது அந்த அசௌகரியங்கள் பற்றின கவலைகளும் மறைந்தன. ஜென் இப்படி கவலைகளில் இருந்து மிகப்பெரிய விடுதலையை நமக்கு அளிக்க முடியும்.

ஒருமுறை “கிஷ்கிந்தாவில்” ஒரு ராட்சத ராட்டினத்தில் ஏறினேன். அது இருவர் அமரும் பெட்டி. இருவர் அமர்ந்தால் மட்டுமே பொருந்தும். ஒருவர் இறங்கினால் இடைவெளி ஏற்பட்டு இன்னொருவரால் பிடித்துக் கொள்ள முடியாது விழுந்து விடுவோம். ராட்டினம் சுற்ற ஆரம்பித்ததும் என் மனைவி பயந்து இறங்கிக் கொள்ள நான் மட்டும் அப்பெட்டிக்குள் தனியாக மாட்டிக் கொண்டேன். நான்கு பக்கங்களில் எங்கு வேண்டுமானாலும் நான் கவிழ்ந்து விடும் நிலை. ராட்டினம் என்னை தட்டாமாலை சுற்ற ஒவ்வொரு சுற்றிலும் தடுமாறிக் கொண்டே வந்தேன். சுற்ற ஆரம்பித்த பின் நாம் என்ன கத்தினாலும் நிறுத்த மாட்டார்கள். ஒரு ராட்டினத்தில் இருந்து குப்புற விழுந்து தான் நான் சாக வேண்டுமா, அது எவ்வளவு அற்பமாக இருக்கும் என யோசித்தேன். பிறகு இன்னொரு யோசனை தோன்றியது. அதன் படி ராட்டினத்தின் சுழற்றலை எதிர்க்காமல் என்னை அதற்கு ஒப்புக் கொடுத்தேன். என் உடலுக்கு இயல்பாகவே ஒரு சமநிலை கிட்டியது. எப்படியோ அதைப் பற்றிக் கொண்டு அதன் போக்கில் சுழன்றபடி தப்பித்தேன். உயரமான இடத்தில் விளிம்பில் நடக்கையிலும் நீங்கள் இதை பயின்று பார்க்கலாம். உடல் தடுமாறினால் அதை சரி செய்ய முயலாது தடுமாற்றத்தை ஏற்றுக் கொண்டால் உதறல் நிற்கும். இதுவும் ஜென் தான்.

சமீபமாக ஜாம்பஜார் சாலையில் ஒரு சம்பவம். நடைபாதையில் ஒருவர் ஓடி வந்தார். தன் மனைவி மற்றும் மகனைப் பற்றி விரசமாக எதையோ அங்குள்ளவரிடம் கூறி பிலாக்கணம் வைத்தார். அவரது மனைவி அருகில் ஒரு தள்ளுவண்டி உணவகம் நடத்திக் கொண்டிருப்பவர். அவர் திடீரென கணவன் மீது பாய்ந்து கரண்டியால் மொத்தினார். உடனே மகனும் சேர்ந்து அப்பாவை கீழே தள்ளி அடித்தார். மகனுக்கு சோர்வாகி விலக, அம்மா சற்று நேரம் அடித்தார். அந்த மனிதர் சத்தம் போடாமல் அடியை வாங்கிக் கொண்டார். பிறகு வாடிக்கையாளர்கள் வர அம்மாவும் மகனும் கடையை கவனிக்க போயினர். இவர் எழுந்து நடைபாதையில் அமர்ந்து ஒன்றும் நடக்காதது போல் வேடிக்கை பார்ப்பதை தொடர்ந்தார். சற்று முன் நடந்த சண்டையில் அடித்தவர்கள், அடிவாங்கினவர் வேறு இவர்கள் வேறு. அது ஒரு காலம். இது ஒரு காலம். சட்டென காட்சி மாறி விட்டது. இதுவும் ஜென் தான். இந்த குடும்பத்தில் கணவனோ மனைவியோ விவாகரத்து கோர வேண்டி இருக்காது.


4 comments:

ராம்ஜி_யாஹூ said...

ஜெமோ பாணியில் மீள் பிரசுரமா

மானிடன் said...

ஜென் கதைகள் நிறைய படித்திருந்தாலும் உங்களின் இந்த கட்டுரை ஜென்னை இன்னும் நெருக்கமாக உணர வைத்தது .அதிலும் அந்த இரட்டை மனநிலை மற்றும் அனைத்தையும் ஒன்றாக பார்க்கும் ஆசிய பண்பாட்டு மனநிலை அருமை.நன்றி.சார்.

venkatesh Balakrishnan said...

Nice

Ram Kumar said...

செம...