Friday, April 10, 2015

ஜெயகாந்தன் பற்றி எம்.டி.எம்: சில மாற்றுக்கருத்துக்கள்

Image result for ஜெயகாந்தன்

எம்.டி.எம் ஜெயகாந்தன் பற்றி எழுதியுள்ள இந்த அஞ்சலிக்கட்டுரை படிக்க வேண்டிய ஒன்று. இதன்  ஒரே சிக்கல் முக்கால்வாசியும் ஒரு ரஜினி ரசிகன் அவரது பட ரிலீஸ் அன்று தியேட்டர் வாசலில் நின்று புளகாங்கிதம் கொள்ளும் தொனியில் உள்ளது. குறிப்பாக ஜெயகாந்தன் பற்றின வாய்மொழிக் கதைகளை எம்.டி.எம் பட்டியலிடுவது. ஜெயகாந்தன் தான் ஒவ்வொரு கதை எழுதும் போதும் மௌனி படிப்பதாய் சொன்னதாய் ஒரு கருத்து இதில் வருகிறது. அது உண்மையென்றால் மௌனியின் கதை அவருக்கு மொழியின் நுணுக்கம், பிரச்சாரம் செய்யாமல் மனதின் ஆழத்துக்குள் பயணிப்பது பற்றி ஒன்றூமே கற்றுத்தரவில்லையா? அல்லது ஜெயகாந்தன் தான் மௌனியை உள்வாங்கிக் கொள்ளவில்லையா? தன்னுடைய எழுத்து பாணியின் தட்டைத்தன்மையை, உருட்டுக்கட்டையால் வீசுவது போன்ற கண்மூடித்தனத்தை உணர்ந்திருந்தும் அவர் தனது வாசகர் பரப்புக்காக தொடர்ந்து அப்படியே எழுதினாரா? ஒருவர் தான் மதிக்கிற ரசிக்கிற ஒரு எழுத்துக்கு நேர்மாறாக எப்படி எழுத முடியும் என எனக்கு சத்தியமாக விளங்கவில்லை.

//ஒப்பிட்டு பார்த்தோமென்றால் அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள் சிறிது போராடிவிட்டு வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து சரணாகதி அடைந்து விடுவார்கள். // இப்படி ஒரு விமர்சனத்தையும் எம்.டி.எம்  அசோகமித்திரன் மீது வைக்கிறார். ஆனால் உண்மை என்பது வேறு. அசோகமித்திரனின் பாத்திரங்களைப் போலத் தான் கணிசமான இந்தியர்கள் சிந்திக்கிறார்கள், வாழ்கிறார்கள். மேற்கத்திய இருத்தலியத்தை ஒரு இந்திய மனோபாவமாக தகவமைத்த மேதை அசோகமித்திரன்.

 இந்தியர்கள் காலத்தை நேர் ஒழுக்காக பார்ப்பதில்லை. துண்டு துண்டான காலச்சிதறல்களில் வாழ்கிறார்கள். அன்றன்றைக்கு அப்போதப்போதைக்கு என்பதே இந்திய மனநிலை. விளைவாக நாம் காலத்தில் ஒரு ஒட்டுமொத்தமான பொருளை தேடுவதில்லை. நாம் அதனாலேயே காலத்தை எதிர்ப்பதில்லை. இதை அசோகமித்திரன் நான் இங்கு சொல்வது போல் கருத்தியலாக காட்டுவதில்லை. வறுமை மற்றும் சூழல் காரணமாய் அன்றாட வாழ்வின் தத்தளிப்புகளில் மாட்டிக் கொள்ளும் மக்கள் வாழ்க்கையை பற்றி சிந்திப்பதற்கே அவகாசம் இன்றி வாழ்ந்து போவதாய் அசோகமித்திரன் மிக எதார்த்தமாக சித்திரிக்கிறார். இம்மக்களால் வாழ்க்கையை எதிர்க்க இயலாது. ஏனென்றால் வாழ்க்கை அவர்களை காலின் கீழ் வைத்து நசுக்கும் ஒரு பயங்கர அரக்கனாய் ஆயிரம் அடி உயரத்தில் எழுந்து நிற்கிறது. அவரது ஒரு சிறுகதையில் ஒரு குழந்தைக்கு உடல்நலமில்லாமல் போகிறது. கடுமையான ஜுரம். கிட்டத்தட்ட இறந்து விடும் நிலைமை. அம்மாவுக்கு அதை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல பணமில்லை. குழந்தையின் அப்பா ஒரு வேலை விசயமாய் வெளியே போயிருக்கிறார். அவர் வந்தால் கொண்டு வரும் பணம் கொண்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லலாம் என அம்மா நினைக்கிறார். ஆனால் குழந்தையின் அப்பா பல்வேறு அற்ப காரணங்களுக்காய் தான் எதிர்பார்த்தவரை சந்திக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க நேர்கிறது. அவர் வரும் முன் குழந்தை இறந்து விடுகிறது. “நீ பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பணம் வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போயிருக்கலாமே” என கணவன் கேட்க அவள் “ஏனோ எனக்கு அப்படித் தோன்றவில்லை” என்கிறாள். கடும் துக்கம், நெருக்கடி வரும் போது மனம் இப்படி உறைந்து விடுவது இயல்பு.
இக்கதையில் எந்த முக்கியமான காரணமும் இன்றி சாதாரணமாய் ஒரு குழந்தையின் உயிர் பிரிந்து விடும். அதைக் காப்பாற்ற பல சாத்தியங்கள் இருந்தும் பெற்றோரால் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போகும். இதை விட நுட்பமாய் இந்திய வாழ்வை வேறு யாரும் சித்தரிக்க இயலாது. இங்கு இப்படித் தான் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு இழப்பு நேர்கிறது. ஒரு ஆஸ்பத்திரியில் எந்த சிகிச்சையும் இன்றி என்னை நான்கு நாட்கள் கோமா நிலையில் நழுவ விட்டு காத்திருந்தார்கள். நான் சிறுக சிறுக செத்துக் கொண்டிருந்த போது என்னைச் சுற்று உறவுகள் குடும்ப உறுப்பினர் இருந்தனர். அவர்களாலும் ஒன்றும் பண்ண முடியாமல் பார்த்திருந்தனர். செயலின்மை என்பது இந்திய வாழ்வியலின் ஒரு எதார்த்தமான பகுதி. ஒரு மனிதன் சாவதும் உயிர் பிழைப்பதும் இங்கு அன்றாட அதிசயங்கள். விளையாட்டுத்தனமாய் அம்மா கையில் இருந்து நழுவி ஓடி திறந்திருக்கும் பாதாள சாக்கடையில் விழுந்து ஆயிரம் பேர் கூடியிருக்கும் பகுதியில் யார் உதவியும் இன்றி சாகும் குழந்தையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கடவுள் அற்ற உலகில் காலம் எனும் கண்மூடித்தனமான இருப்பின் கீழ் மனிதன் எந்த மீட்பு சாத்தியமும் அற்று தவிக்கிறான் என்பது ஐரோப்பிய இருத்தலியம். அதை அசோகமித்திரன் அன்றாட வாழ்வின் கடும் நெருக்கடியில் யோசிக்க கூட அவகாசமோ சக்தியோ இன்றி மனிதன் ” எந்த மீட்பு சாத்தியமும் அற்று தவிக்கிறான்” என்று உருமாற்றுகிறார். இது எவ்வளவு அற்புதமான பார்வை மற்றும் புரிதல். தத்துவம் வாழ்க்கைப்பார்வை ஆகிற மகத்துவமான புள்ளியை கவனியுங்கள். இது போல் ஒரு ஆழத்தை நீங்கள் ஜெ.கெயிடம் எவ்வளவு கண்ணீர் விட்டாலும் காண இயலாது. இதனால் தான் அசோகமித்திரன் வெறுமனே தோற்றுப் போகும் போராட்ட குணமற்ற பாத்திரங்களை உருவாக்கினார் என எம்.டி.எம் கூறுவதை நான் மறுக்கிறேன்.

இன்னொறு விசயம். ஜெ.கெயின் போராட்ட குணமுள்ள கலகக்கார பிராமணப் பையன்களும் பெண்களும், செயற்கையான மொழியில் பேசும் சேரி நபர்களும் ஒருவித கனவுப் பாத்திரங்கள். ஜெ.கெயின் லட்சியவாதம் கூட இந்த பூமியில் கால்பாவாத ஒன்று தான். அவரை நமது தீவிர இலக்கியவாதிகளுடன் ஒப்பிடவே முடியாது. ஏனென்றால் அவர்கள் அவரைப் போல் ரொமாண்டிக்கான லட்சியவாதிகள் அல்ல. அதாவது இந்தியாவில் இயல்பாக விளைந்த கலக மனநிலை இங்குள்ள சம்பிரதாய வாழ்வுடன் எதிர்கொள்ளும் போராட்டத்தை ஜெ.கெ பேசவில்லை. மாறாக இங்கு எங்குமே இல்லாத, அவராகவே கற்பனை பண்ணின ஒரு கலக மனப்பான்மையை இங்கு உள்ள ஒரு இறுக்கமான பண்பாட்டுச் சூழலில் வைத்து அப்போது ஏற்படும் கற்பனையான விளைவுகளைப் பற்றி பேசினார். “அக்னி பிரவேசத்தில்” வருவது போல் இவ்வளவு நாடகத்தனமாய் எந்த தாயும் இம்மண்ணில் நடந்து கொள்ள மாட்டாள். அப்படி ஒரு பிரச்சனை நம் குடும்பங்களில் வந்தால் காதும் காதும் வைத்தது போல் எதுவும் நடந்தும் நடக்காதது போல் இங்கு மறக்கப்படும். ஜெ.கெ காட்டுவது ஒரு ஐரோப்பிய மனம் கொண்ட ஒரு பிராமணத் தாயை. ஜெ.கெ பல்லாயிரம் வாசகர்களைக் கவர்ந்ததற்கு தாம் பார்க்க விரும்பும் ஒரு கனவுலகை, கொஞ்சம் எதார்த்தம், வியர்வை கசகசப்பு பாதிக்கப்பட்ட மக்கள், கலக உணர்வு, இந்திய ஆன்மீகம், பற்றற்ற சித்தர் என கலந்து அவர் தந்தது தான். இதையே தான் கலகம் இன்றி பாலகுமாரனும் செய்தார். எப்போதுமே வெகுமக்கள் எழுத்தில் இந்த கனவில் மிதக்கும் போதை இருக்கும். அது இயல்பே. மக்கள் ஆசைப்பட்டு செய்ய முடியாததை சித்தரித்து அவர்களின் ஏக்கத்தை தணிப்பதே வெகுஜன கலைஞனின் பணி. வாழ்க்கையை எந்த தப்பித்தல் மனோபாவமும் இன்றி நேரடியாக அணுகி தனிமனித தேடல், ஆய்வு, சிந்தனை மூலம் புரிந்து கொண்டு அதை வெல்லலாம் எனக் காட்டுவது இலக்கிய எழுத்தாளனின் பணி. ஆனால் இதை குழப்பி “ஜெயகாந்தனோடு ஒப்பிடும்போது தி.ஜானகிராமன், பி.எஸ்.இராமையா, ஆர்.ஷண்முகசுந்தரம் ஆகிய தமிழ் நாவலாசிரியர்களுக்கு எந்த விதமான உலகப்பார்வையும் இருப்பதாகவே தெரிவதில்லை. ” என்று எம்.டி,என் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. அவர் ஏன் இலக்கிய எழுத்தாளர்களை இம்மூவருடன் சுருக்கிக் கொள்கிறார் என்றும் எனக்கு விளங்கவில்லை.

இறுதியாக ஜெயகாந்தனின் இறுமாப்பு, பிடிவாதம் இதையெல்லாம் ஏன் கம்பீரம் என புரிந்து கொள்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை. உண்மையான கம்பீரம் என்பது தன்னிடம் கேள்வி கேட்பவரிடத்து புன்னகையை பதிலாக தந்த புத்தனிடத்து இருக்கிறது. மக்கள் தன் பேச்சை கேட்காது வன்முறையில் ஈடுபட்டால் அந்த ஏமாற்றத்தை பட்டினி கிடந்து தன் உடலை வருத்தி வெளிப்படுத்திய காந்தியிடம் இருக்கிறது. ஒரு ஜென் கதை உண்டு. ஒரு குருவிடம் ஒரு சீடன் ஞானம் கற்பதற்காக போகிறான். பல மாதங்கள் ஆகியும் குரு எதுவுமே சொல்லித் தரவில்லை. காத்திருந்து பொறுமை இழந்த சீடன் ஒருநாள் நேரடியாகவே கேட்டு விடுகிறான். “ஏன் எனக்கு ஞானம் அறிவிக்காமல் ஏமாற்றுகிறீர்கள்?”
குரு அவனை வெளியே நடக்க அழைத்துப் போகிறார். அவர்கள் நடந்து நடந்து ஒரு வெட்டவெளியை அடைகிறார்கள். குரு அவனை சுற்றிப் பார்க்க சொல்கிறார். அவன் பார்க்கிறான். பிறகு அவர் சொல்கிறார் “நான் உனக்கு எதையும் மறைக்க வில்லையே. எல்லாமே திறந்து தானே இருக்கிறது. பிறகு நான் உனக்கு எதைக் காட்ட?”
இந்த குருவிடம் கம்பீரம் உள்ளது. உண்மையான கம்பீரம் அமைதியில் இருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் இல்லை.
தனக்கு ராஜராஜன் விருது அறிவிக்கப்பட்ட போது “இந்த திராவிடப் பயல்களுக்கு இப்போதுதான் கண் தெரிந்ததா?” என ஜெயகாந்தன் கத்தியதில் கம்பீரம் இல்லை. விருதையும் அங்கீகாரத்தையும் அவ்வளவு முக்கியமாய் நினைப்பதால் தான் அவ்வளவு கோபம் வருகிறது. கோபம் இருக்க வேண்டும். ஆனால் அது நம் பகுதியாக அல்லாமல் நம் வழி பாய்ந்து மறைகிற ஒன்றாக இருக்க வேண்டும்.

நாம் ஜெயகாந்தனாக நினைத்து வழிபடுவதும் வியப்பதும் விவாதிப்பதும் அவர் கவனமாய் புகைப்படங்கள், மேடைப்பேச்சுகள், அறிக்கைகள், கருத்துக்கள், எழுத்து நடை மூலம் கட்டமைத்த ஒரு பிம்பத்தை தான் என்பதை நாம் மறந்து விட முடியாது. தன் மீசை, தலை அலங்காரம் ஆகியவற்றை அவர் இறுதி வரை ஒரே மாதிரி தக்க வைத்ததை பாருங்கள். எம்.ஜி.ஆர், கலைஞர், மைக்கேல் ஜாக்ஸன், ஹரிஹரன், இளையராஜா போன்று பொது ஊடக பிம்பங்களை கட்டமைத்தவர்கள் எல்லாரும் இதை செய்திருக்கிறார்கள். வைரமுத்து ஒரு கூட்டம் முடித்து இன்னொரு கூட்டத்துக்கு போகும் முன் காரில் தன் ஆடையை மாற்றுவார் என ஒரு நண்பர் கூறினார். தனது முறுக்கின மீசை, ஜுப்பா, வெள்ளை செருப்பு, மடுக்கு நடை உருவாக்கும் பாவனை தனது எழுத்து நடை அளவுக்கு வாசகனிடத்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என வைரமுத்து உணர்ந்த்ருக்கிறார். ஜெயகாந்தன் அவருக்கு முன்னரே இதை அறிந்து ஒரு வாழ்க்கைக் கலையாகவே ஆக்கினார்.

 இதை ஜெயகாந்தனின் இயல்பு எனக் கூறினால் ஏற்க மாட்டேன். ஏனென்றால் இயல்பாகவே ஒரு தோற்றத்தை முன்னெடுப்பவர்களிடத்து காலந்தோறும் சிறு மாற்றங்களும், பிசிறுகளும் தெரியும். சாதாரணமாகக் கூட மேடையில் தோன்றுவார்கள். தம் பலவீனத்தையும் அச்சத்தையும் குழப்பத்தையும் கூட மேடையேற்றுவார்கள். காந்தியை உதாரணமாய் சொல்லலாம். அவர் பிற பெண்களிடத்து தான் செய்த சோதனைகளை வெளிப்படையாய் முன்வைத்தார். தன் மனைவியை ஒருமுறை விவாகரத்து செய்து, மறுமணம் செய்ய திட்டமிட்ட போது அதைப் பற்றியும் எழுத நினைத்தார். நேருவிலும் பட்டேலும் தான் அவரைத் தடுத்தார்கள். ஆனால் ஜெயகாந்தனின் தடுமாற்றங்கள் எதுவும் நமக்குத் தெரியாது. அவரது பிம்பம் கட்டுவிக்கப்பட்ட போலியான ஒன்று என்பதற்கு இது ஒரு உதாரணம்.

 ஒருவேளை ஜெயகாந்தன் தனது கோபத்தை ஒரு பாவனையாக கொண்டிருக்கலாம். அது பொது சமூகத்துக்கான நடிப்பாக கூட இருக்கலாம். நான் அப்படி அவர் உருவாக்கின அந்த பிம்பத்தை பற்றித் தான் நானும் இம்முடிவுக்கு வருகிறேன்.

 உண்மையான ஜெயகாந்தனை எனக்கு தெரியாது. எம்.டி.எம்முக்கும் தெரியாது. “மனிதன் ஒரு மகத்தான சின்னப்பயல்” எனக் கூறிய ஜி.நாகராஜனிடத்தும் ஒரு கம்பீரம் இருந்தது. ஜி.என் சொன்னதை ஜெ.கெ புரிந்து கொண்டாரா எனத் தெரியவில்லை. ஒருவேளை புரிந்து கொண்டு தன்னை ஒரு கோபக்கார ஹிப்பியாக வாழ்நாளெல்லாம் காட்டுவதற்கு இன்னொரு பக்கம் நடித்துக் கொண்டிருந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?


4 comments:

கவிப்ரியன் கலிங்கநகர் said...

மிக நேர்மையான விமர்சனம்.

Sam Gideon said...

தங்கள் மதீப்பீடு நன்றாக வந்துள்ளது. உங்களுடைய கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. குறிப்பாக அக்னி பிரவேசம் கதையில் என்னுடைய கவனிப்பு கவனிப்பு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். பஸ்ஸுக்குக் காத்திருக்கும் கதாநாயகியை(அந்த வார்த்தையைத் தமிழ்ப் படக் கதாநாயகி விவரணையோடுதான் நினைக்க வேண்டியுள்ளது) வர்ணிக்கும்போது கதைசொல்லும் ஆசிரியர் தானே உணர்ச்சிவசப்பட்டு கீழே இறங்கும் தன்மை வர்ணனையில் வெளிப்படுகிறது. 'அம்மன் சிலை போன்று அழகாக பார்க்கும்போது அப்பிடியே தூக்கிச் சென்றுவிடலாம் என்பதாகத் தோன்றும்' என்ற வகையில் ஒரு தொடர் வரும். இது போன்று பல சான்றுகளைக் குறிக்கலாம்.

Anonymous said...

அபிலாஷ் Good one.

chitra chitra said...

இதே போக்கு ஜெயமோகனிடத்தும் உள்ளது.