Friday, April 24, 2015

அன்புள்ள ஜெயமோகன்


Image result for jeyamohan

சமீபமாக ஒரு நண்பரிடம் சு.ரா பள்ளியில் இருந்து தோன்றிய எழுத்தாளர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு பள்ளி இருக்கிறதோ இல்லையோ, சு.ராவுடன் நெருக்கமாய் இருந்தவர்கள் தமிழின் முக்கிய எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், யுவன் இப்படி உங்களையும் சேர்த்து இந்த பட்டியல் நீளமானது. அவர் இந்த எழுத்தாளர்களை உருவாக்கவில்லை. அவர்கள் மீது உரிமை கோரவில்லை. தன் அருகாமையையும் பிரியத்தையும் அவர்களுக்கு அளித்தார். ஏன் இது போன்ற முக்கியமான எழுத்தாளர்கள் உங்கள் அருகாமையில், நட்பில் இருந்து தோன்றவில்லை? நீங்கள் முன்னிறுத்திய ஒருசிலரை ஏன் வாசகர்கள் பொருட்படுத்தவில்லை?
இதற்கு ஒரே காரணம் தான் தோன்றுகிறது. நீங்கள் உங்கள் நண்பர்கள் ஒன்று சேவகர்களாகவோ புரவலர்களாகவோ அல்லது உபத்திரவமற்ற வாசகர்களாகவோ இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். உங்கள் வாசகர்களில் சிறப்பாக தனித்தன்மையுடன் யாராவது எழுத முற்பட்டால் அவர்களை முளையிலேயே கிள்ளி விடுவீர்கள். சராசரியாக எழுதினால் ஊக்குவிப்பீர்கள். உங்கள் வாசக வட்டத்துக்குள் தனிமனித சுதந்திரத்துடன் யாரும் விவாதிப்பதையோ எழுதுவதையோ உங்களால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. நீங்கள் சதா உங்களைச் சுற்றி உள்ள உலகை கட்டுப்படுத்த வேண்டும் என எண்ணுகிறீர்கள். அப்படி கட்டுப்படுத்த நீங்கள் கடவுளாக இருக்க வேண்டும்.

 உங்கள் கட்டுப்பாட்டை மீறி அடுத்தவர்கள் இயங்குவதாய் தோன்றும் போது பதற்றமாகி சாபமிடத் துவங்குவீர்கள். உங்கள் கோபம் முழுக்க அச்சத்தில் இருந்து வருகிறது. உங்கள் அச்சம் எல்லாரையும் கட்டுப்படுத்தி வைக்காவிட்டால் உங்களால் நிலைக்க முடியாது எனும் கற்பனையில் இருந்து வருகிறது. “கரமசோவ் சகோதரர்களில்” மூத்த துறவி தன்னைத் தேடி வரும் பிறரை நேசிக்க முடியாத, கடவுளை நம்ப இயலாத ஒரு பெண்ணிடம் இவ்வாறு சொல்வார் “நீ முதலில் உனக்கு நீயே சொல்லிக் கொள்ளும் பொய்களை நிறுத்து. அப்பொய்களை அடையாளம் கண்டாலே அவை காணாமல் போய் விடும். உன் பொய்களை நீ கைவிட்டால் உலகம் பற்றின அச்சம் விலகும். அச்சம் விலகினால் உன்னால் பிறரை நேசிக்க இயலும்”. இவ்வரிகள் தஸ்தாவஸ்கி உங்களையும் உத்தேசித்து எழுதியதாய் உணர்கிறேன்.
போகன் போன்றோர் உங்கள் வட்டத்தில் இருந்து விலகியது உங்களது சகிப்பின்மை காரணமாகத் தான். உங்களுக்கு இணையான நண்பர்கள் தேவையில்லை. கயிறு கட்டி நடை பழக நாய்க் குட்டிகள் போதும். ஒவ்வொரு நாய்க்குட்டிக்கும் ஒரு பெயரளித்து உங்கள் வட்டத்து வாசகராக, அடிமையாக வைத்துக் கொள்கிறீர்கள். சு.ரா தன் நண்பர்களை தனக்கு சமமாக நடத்தியது போல் உங்களால் ஒருநாளும் இயலாது. ஏனென்றால் அடிப்படையில் நீங்கள் சகமனிதர்களை மனிதர்களாகவே பார்ப்பதில்லை. நீங்கள் சுரண்டி காரியம் சாதிக்க வேண்டிய மனித வளங்களாக (resources) பார்க்கிறீர்கள். இவ்விசயத்தில் ஐ.டி நிறுவன முதலாளிகளுக்கும் உங்களுக்கும் அதிக வேறுபாடில்லை.
ஒரு குறிப்பிட்ட தந்திரத்தை தான் நீங்கள் இளம் எழுத்தாளர்கள் மீது பிரயோகிக்கிறீர்கள். அவர்கள் படைப்பை கடுமையாய் தாக்கி தன்னம்பிக்கையை குலைய செய்து, அவர்களை அடிமையாக்குவது. ஒன்று அவர்கள் இதற்கு பயந்து உங்கள் முன் கைகட்டி நிற்பார்கள். அல்லது எழுதுவதையே நிறுத்தி ஓடி விடுவார்கள். இதை ஒரு “இலக்கிய விழுமிய தாக்குதல்” எனக் கூறலாம்.
உங்கள் மீது பெரும் மதிப்பு கொண்ட வாசகர்கள் எழுத்தாளர்களாகவும் இருக்கும் பட்சத்தில் இத்தாக்குதலுக்கு உடனடியாய் இரையாவார்கள். ஆனால் தொடர்ந்து ஒரே தந்திரத்தை இருபது வருடங்களாய் பயன்படுத்தி பயன்படுத்தி அது வெளுத்து நார்நாராகி விட்டது. இன்றுள்ள எழுத்தாளர்கள் உங்களது “இலக்கிய விழுமிய தாக்குதலை” போகிற போக்கில் உதாசீனிக்கிறார்கள். எள்ளி நகையாடுகிறார்கள். ஏனென்றால் உங்கள் விழுமியங்கள் நிரந்தரமானவை அல்ல, சமய சந்தர்பத்துக்கு ஏற்ப மாறுபவை என அவர்கள் அறிவார்கள். உதாரணமாய், ஒருவர் இன்னின்ன காரணங்களுக்காய் இலக்கிய தகுதியற்ற எழுத்தாளர் என்றால் அதே மதிப்பீட்டை அனைத்து எழுத்தாளர்களுக்கும் பொதுவாக வைக்க வேண்டும். சு.ரா அவ்விசயத்தில் தெளிவாக இருந்தார். கெ.என் சிவராமனின் “கர்ணன் கவசத்தை” உங்களுக்கு பிடித்த பின்நவீனத்துவ நாவல் என்று கூறிய பின் நீங்கள் எந்த நாவலை திட்டினாலும் பாராட்டினாலும் அது நகைச்சுவையாகவே பார்க்கப்படும். ஏனென்றால் “கர்ணன் கவசம்” தான் உங்கள் மதிப்பீட்டு அளவுகோல் என்றால் பிற உயரிய படைப்புகள் அதற்கு சமமானதாகவோ அல்லது கீழாகவோ இருக்க வேண்டும் அல்லவா! நீங்கள் சொல்வது போன்றே வாசகர்கள் இனி “கர்ணன் கவசத்தை” படித்து விட்டு நீங்கள் எதிர்பார்க்கிற எழுத்தின் தரம் என்ன என புரிந்து கொள்ளட்டும்.
ஏழு வருடங்களுக்கு முன்பு என்னைப் பற்றி நீங்கள் ஒரு அவதூறு கட்டுரை எழுதின போது எனக்கு நீங்களா இந்தளவுக்கு தரம் தாழ்ந்து பேசுவீர்கள் என அதிர்ச்சி ஏற்பட்டது. பிறகு நீங்கள் பிற மனிதர்களுக்கு எந்த அடிப்படை மரியாதையும் அளிப்பதில்லை எனப் புரிய அதிர்ச்சி விலகியது. இத்தனைக்கும் நான் உங்களைப் பற்றி என்றுமே தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதினதில்லை. உங்கள் எழுத்தையும் கருத்துக்களையும் மட்டுமே புறவயமாய் விமர்சித்தேன். அது உங்களை கடுமையாய் எரிச்சலூட்ட என்னை தனிப்பட்ட முறையில் இடுப்புக்கு கீழ் தாக்கி எழுதினீர்கள். எனக்கு இரண்டு காலிலும் ஊனம், என் அம்மா என்னைத் தூக்கிக் கொண்டு உங்களைப் பார்க்க வருவார் என என்னென்னவோ பொய்யாக கற்பனையில் எழுதினீர்கள். முதலில் ஒருவரை உடல்ரீதியாய் தாக்குவது. அதன் மூலம் அவர் கடுமையாய் தாழ்வுமனப்பான்மை கொண்டு விழுந்து விடுவார் என எதிர்பார்க்கிறீர்கள். இல்லையென்றால் அவர் நாணயமற்றவர் என்பீர்கள். இது சமூக அளவில் அவமானப்படுத்தி ஒடுக்கும் முயற்சி. உங்கள் இரு முயற்சிகளும் என்னை சற்றும் காயப்படுத்தவோ ஒடுக்கவோ இல்லை. இதை விட பலமடங்கு மோசமான வசைகளை தாங்கித் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். இப்போது போகன் மீது நீங்கள் அதே மலினமான தாக்குதலைத் தான் தொடுக்கிறீர்கள். அவர் நாணயமற்றவர். மனுஷ்யபுத்திரனுக்கு கப்பம் கட்ட உங்களை தாக்குகிறார் என்கிறீர்கள். போகன் உங்கள் தந்திரத்தை புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.
உங்களுடைய ஒரு முக்கியமான மனப்பிறழ்வு உங்களுக்கு எதிராக ஒரு சதிக்கூட்டம் நடப்பதாக நினைப்பது. ஒரு காலத்தில் இடதுசாரிகள். பிறகு கண்ணன். அடுத்து மனுஷ்யபுத்திரன். இப்படி ஒவ்வொருவராக உங்களுக்கு எதிராக படை திரட்டி தாக்குதல் தொடுப்பதாக பீதி கொள்கிறீர்கள். ஆனால் யாருக்கும் அதற்கு நேரமில்லை. அப்படி உங்களை அழிக்கும் நோக்குடன் யாரும் மெனக்கெடுவதும் இல்லை. போகனுக்கு உங்கள் மீது கடும் கோபம் இருக்கலாம். அது நீங்கள் அவரை சமமாக நடத்தவில்லை எனும் வருத்தத்தில் வரும் வெறுப்பு. அவரைப் போன்று சுயபோக்கு கொண்டவர்கள் உங்கள் அடிமை முகாமில் இருந்து மோதி வெளிவருவது இயல்பு தான். உயிர்மையில் நூல் வெளியிடும் முன்பில் இருந்தே அவர் உங்களைத் தாக்கி கேலி பண்ணி எழுதித் தான் வந்தார்.
 கண்ணன் மீதான உங்கள் வெறுப்பும் இது போன்று ஒரு கற்பனையான பீதியில் இருந்து தான் தோன்றியிருக்கும் என நினைக்கிறேன். அப்போதே நீங்கள் அடிக்கடி சு.ராவுக்கு தொலைபேசியில் அழைத்து அவர் மனதை புண்படுத்தும் நோக்கில் “ஒரு கூட்டத்துக்கு போயிருந்தேன். அங்கே உங்கள் கதையை ஒருவர் ரொம்ப தட்டையாக, தன்னெழுச்சி அற்று இருக்கிறதெனக் கூறினார்” என ஊசியால் குத்துவது போல் கூறுவீர்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி நீங்கள் உங்கள் “மதிப்பீட்டு தாக்குதலை” சு.ரா மீதே அன்று தொடுத்திருக்கிறீர்கள். இளம் எழுத்தாளர்களை விட்டு வைக்கவா போகிறீர்கள். (சிறுவயதில் உங்கள் அப்பாவோ, ஆசிரியரோ இது போல் புண்படுத்தும் விதமாய் பேசி உங்களை ஒடுக்கி இருக்கலாம். அவர்களிடம் இருந்து நீங்கள் இந்த ஊசி கொண்டு குத்தும் வித்தையை கற்றிருக்கலாம் என நினைக்கிறேன்).
சு.ரா கண்ணனுக்கு அளித்த இடம் உங்களை தொந்தரவு பண்ணியதென்றால் மனுஷ்யபுத்திரன் விசயத்தில் சாரு நிவேதிதாவுக்கு அவர் அளித்த சுதந்திரம் உங்களை கடுமையாய் எரிச்சலூட்டியது. அதன் உச்சகட்டம் தான் சாரு உங்கள் நூலை கிழித்ததை ஒட்டி நீங்கள் உயிர்மையை பகிங்கரமாய் சபித்து விட்டு வெளியேறியது. அதற்கடுத்து சில வருடங்களில் சாரு சில கூடுதல் இலக்கங்களை குறி வைத்து உயிர்மையில் இருந்து வெளியேறி கிழக்குக்கு சென்றார். நீங்கள் சற்று பொறுத்திருந்தால் உங்கள் நோக்கம் உங்கள் முயற்சியின்றியே நிறைவேறி இருக்கும்.
 ஆனால் காலச்சுவடிலும் உயிர்மையிலும் உங்களுக்கு எதிராக பிறர் முன்னிறுத்தப்படுவதாக நீங்கள் நினைத்து பதற்றம் கொள்வது வீண் கற்பனையின்றி வேறில்லை. உங்களை முன்வைத்து இங்கு எதுவும், நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ, நடப்பதில்லை. ஏனென்றால் மக்களுக்கு அவர்களுக்கான வேலைகளும் நோக்கங்களும் உள்ளன. தங்களைப் பற்றி நினைப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. பிறகெப்படி உங்களைப் பற்றி நினைத்து சதித்திட்டம் தீட்டுவது?
சில குடிகார கணவர்கள் சதா தம் மனைவியின் நடத்தையை சந்தேகப்படுவதைப் போன்ற மனப்பிறழ்வு இது. நீங்கள் தகுந்த ஒரு மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது.
மற்றொரு விசயம். உங்கள் கோபம் தொடர்ந்து உங்களை சிலர் பகடி செய்தால் தோன்றுவது. ஏன் ஒரு சிறு கேலி வாக்கியம் கூட உங்கள் மூக்கு நுனியை சிவக்க வைக்கிறது? இன்று நாம் ஒரு “எள்ளி நகையாடும் கலாச்சாரத்தில்” வாழ்கிறோம். சமூக வலைதளங்கள் சுயமுன்னெடுப்பை மிகுதியாக சாத்தியமாக்கி உள்ளது. இதனால் பெருகி வீங்கும் அகங்காரத்தை சமன் செய்ய நாம் நம்மையும் பிறரையும் பரஸ்பரம் கேலி செய்து கொள்கிறோம். தன்னை யாரும் கேலி பண்ணக் கூடாது என நினைத்து சுயபகடி செய்து கொள்ளும் பலரை இணையத்தில் பார்க்கிறேன். கேலி கிண்டல் ஆகியவை யாரையும் இன்று காயப்படுத்துவதில்லை. ஆனால் நீங்கள் இன்றுள்ள இந்த பண்பாட்டு மாற்றத்தை புரிந்து கொள்ளவில்லை. போகனோ பிறரோ உங்களை சிறிது கிண்டல் செய்தால் உங்களுக்கு பத்து தலைகளிலும் கோபம் ஏறி நர்த்தனம் செய்கிறது. இது காலத்துடன் நீங்கள் கொள்ளும் முரண்பாடே அன்றி உங்களை பகடி செய்கிறவர்களின் குற்றம் அல்ல.

சுஜாதா விருதுகள் தூஷணை பதிவுகளில் என்னைப் பற்றி ஒரு வரி சொல்லி இருக்கிறீர்கள். இன்னும் பத்து வருடங்கள் நான் எழுதினாலும் நீங்கள் என்னைப் பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை என்று.
 உங்களுடைய “விஷ்ணுபுரம்” வெளியான போது சு.ரா தினமணியில் அது தனக்கு பிடிக்கவில்லை என எழுதினார். அது உங்களை கடுமையாய் கோபப்படுத்த அவரை தன் கட்டுரைக்கு தானே மறுப்பு எழுதும்படி வலியுறுத்தினீர்கள். சு.ரா இறுதி வரை உங்கள் நாவலை ஏற்கவில்லை என்பதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இது ஒரு அசட்டுத்தனமான அணுகுமுறை. ஒரு நாவல் ஒரு மூத்த எழுத்தாளனின் மதிப்பீட்டை எதிர்பார்த்து எழுதப்படும் ஒன்றல்ல. யார் மதிப்பீடும் ஒரு படைப்புக்கு முக்கியமல்ல. ஒரு படைப்பு வாசகனுடன் உரையாட வேண்டும். அவனுக்கு தேவையானது அதில் இருந்தால் மட்டுமே அதை வாசிப்பான். இன்றைய சூழலில், குறிப்பாக, ஒரு படைப்பை எந்த விமர்சனம் கொண்டும் மூடி மறைக்க இயலாது. விமர்சனம் என்பது படைப்புக்கும் வாசகனுக்குமான உறவுக்கு அப்பாற்பட்ட ஒரு தனி விளையாட்டு. ஒரு வாசகனுக்கு ஒரு படைப்பைப் பற்றி பேசுவதற்கான ஒரு தர்க்க மொழியை அது உருவாக்கி அளிக்கும். மற்றபடி ஒரு படைப்பை அதனால் அழிக்கவோ உருவாக்கவோ மேலெடுக்கவோ இருட்டடிக்கவோ இயலாது. இதை நான் நன்றாக அறிவேன். நீங்கள் சு.ராவின் பாராட்டுக்காக ஏங்கியது போல் நான் உங்கள் பாராட்டுக்காக ஏங்கவில்லை.
ஏழு வருடங்களுக்கு முன்பு நான் எந்த இலக்கிய மதிப்பும் அற்ற எழுத்தாளன் என்றீர்கள். அதன் பிறகு நான் இரு நல்ல நாவல்களை, பல நூறு நல்ல கட்டுரைகளை எழுதி பல மடங்கு வாசகர்களை கூடுதலாக பெற்றேன். உச்சமாக சாகித்ய அகாதமி விருதும் பெற்றேன். இப்போது மீண்டும் என்னை அதே முறையில் நீங்கள் சாபமிட்டிருப்பது இது போல் பல நன்மைகளை எனக்கு தரும் என நம்புகிறேன். அதனால் நன்றி.
இறுதியாக எனக்கும் கலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றீர்கள். உண்மை தான். கலை என்ற அந்த பெண்ணுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.


No comments: