Thursday, April 2, 2015

உலகக் கோப்பை யாருக்கு?

(உலகக்கோப்பை துவங்கின புதிதில், போன மாதம் உயிர்மையில் எழுதின கட்டுரை. இப்போது உலகக்கோப்பை முடிந்த நிலையில் சற்றே ஜாலியாக இருக்கிறது மறுபடி படிக்க)

உலகக் கோப்பை தொடர்கள் விநோதமானவை. பொதுவாக சொந்த ஊரில் போட்டி நடந்தால் உள்ளூர் அணிகள் தாம் வெல்லும். ஆனால் உலகக் கோப்பையில் நிலைமை நேர்கீழ். இந்தியாவைத் தவிர வேறெந்த அணியும் உலகக்கோப்பையை சொந்த ஊரில் வென்றதில்லை. அது போல் தொடர் நடக்கும் காலத்தில் வலுவாக உள்ள அணிகள் வெல்லும் என நினைப்போம். ஆனால் உலகக் கோப்பையில் சந்தம்மந்தமில்லாமல் ஒரு சாதாரண அணி அசாதாரணமாய் ஆடி கோப்பையை அடிக்கும். 88இல் ஆஸ்திரேலியா, 92இல் பாகிஸ்தான், 96இல் இலங்கை ஆகியவை சிறந்த உதாரணங்கள். ஆஸ்திரேலியா உச்சத்தில் இருந்த ரெண்டாயிரம் மட்டுமே விதிவிலக்கு. 2011இல் கூட இந்தியா எல்லாரும் எதிர்பார்த்த அணி அல்ல.

 இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அப்போது ஆட்டநிலையில் உச்சத்தில் இருந்தன. இந்தியாவின் வேகவீச்சாளர்கள் காயமுற்று, மூத்த மட்டையாளர்கள் களைத்து, சோர்ந்து போய் இருந்தனர். இந்திய அணித்தலைவர் தோனியே தொடர் முடிவில் இந்தியாவை ஒரு பழைய துருப்பிடித்த காரோடு தான் ஒப்பிட்டார். அந்த கார் அரை இறுதியை தாண்டாது என பலரும் நினைக்க இந்தியா திடீரென வேகமெடுத்து இறுதி ஆட்டத்திலும் மிக நன்றாக ஓடி ஜெயித்தது. ஜெயிப்பதற்கு திறமை, உழைப்பு, ஆவேசம் எல்லாவற்றையும் விட தொடர்ச்சியான முன்னேற்றம் முக்கியம் என இந்தியா நிரூபித்தது.
தற்போது எங்கு ஒருநாள் கிரிக்கெட் நடந்தாலும் ஆடுதளம் மிக தட்டையாக இருப்பதால் சூழல், சோதோஷ்ண நிலை ஆகியவை ஆட்டத்தை பெரிதும் பாதிப்பதில்லை.


 குறிப்பாக 2015 உலகக் கோப்பை நடக்கும் ஆஸ்திரேலியாவில் பந்து வீசுவது இளங்சூட்டிலான பூந்தியை பதமாய் லட்டு பிடிப்பது போல் இருக்கும். கொஞ்சம் தவறினால் சிதறி விடும். அங்கு பந்து மிக குறைவாகவே ஸ்விங் ஆகும். ஆக பந்தை விரட்டுவது எளிது. இங்கிலாந்தில் செய்வது போல் முழுநீளத்தில் (full lenght) வீச முடியாது. வீசினால் நிச்சயம் நான்கு ஓட்டங்கள் தாம். குட் லெங்த் எனும் பந்தை முன்னங்காலில் விரட்டும் நீளம் இங்கு சற்றே சிக்கலானது. ஆஸ்திரேலியாவில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆவதால் குட் லெங்த்தில் வீசினால் பந்தை எளிதாய் பின்னால் சென்று வெட்டவோ புல் (pull) செய்யவோ முடியும். குறிப்பாக ஆஸ்திரேலிய மட்டையாளர்கள் இந்த இரண்டு ஷாட்களை எல்லா பந்துகளிலும் அடிக்க முயல்வதைப் பார்க்கலாம்.
 பொதுவாக இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்று பந்து குறைவாக பவுன்ன்ஸ் ஆகும் நாடுகளில் குட் லெங்துக்கும் முழுநீளத்துக்கும் இடைப்பட்ட ஷார்ட் ஆப் தெ லெங்க்த் (short of the length) ஓட்டங்களை தடுக்க தோதானது. இந்த நீளத்தில் வீசினால் பந்தை விரட்டோ வெட்டவோ எளிதில் முடியாது. ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்த நீளத்தில் வீசினால் எளிதில் பின்னங்காலில் சென்று அடிப்பார்கள். ஆஸ்திரேலியாவில் வீசுவதற்கான சிறந்த நீளம் என்பது முழு நீளத்துக்கும் ஷார்ட் ஆப் தெ லெங்துக்கும் இடையில் இருக்கிறது. அதாவது மட்டையாளனை முன்னங்காலில் விரட்டவும் செய்ய வேண்டும், ஆனால் அடிக்க முடியாதபடி பந்து மட்டைக்கு மேல் எகிறவும் செய்ய வேண்டும். ஆஸ்திரேலியாவில் பொதுவாக இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து என பல அணியை சேர்ந்த வீச்சாளர்கள் திணறுவதன் காரணம் இந்த சரியான நீளம் எதுவென கணிக்க முடியாததனால் தான்.

இதற்கு நீங்கள் இரண்டு மூன்று வாரங்களாவது ஆஸ்திரேலியாவில் ஆடி பழக வேண்டும். அதற்குள் தொடரில் இருந்து தோற்று வெளியேறாது இருக்க வேண்டும். இது மிக சிரமம். அதனாலே இந்த உலகக் கோப்பை தொடர் 2011 தொடரைப் போன்றே மட்டையாட்டத்துக்கு கடா விருந்தாக இருக்கும். நன்றாக மட்டையாடும் அணியினர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவர். அதிரடியாக பந்து வீசுவதை விட புத்திசாலித்தனமாய் பந்து வீசும் அணிகளுக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கும். 2015 பெப்ரவரி 15 அன்று நடந்த இந்தியா பாகிஸ்தான் லீக் போட்டி நல்ல உதாரணம்.
எல்லா உலகக் கோப்பைகளிலும் பாகிஸ்தானின் பந்து வீச்சு தனிச்சிறப்பு கொண்டது தான். இம்முறையும் அவர்களிடம் ஏழடி உயர முகமது இர்பான், போன உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியாவுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகள் எடுத்த வஹாப் ரியாஸ், இம்முறை ஐந்து விக்கெட்டுகள் எடுத்த சொகைல் கான் ஆகிய வேக வீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் முன் இரண்டு தடைகள் இருந்தன. ஒன்று அனுபவமின்மை. அவர்களுக்கு ஆஸ்திரேலிய ஆடுதளங்களில் பந்தை வீச வேண்டிய அந்த கச்சிதமான புள்ளி எதுவென தெரியவில்லை.

 ஆனால் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக ஆஸ்த்ரேலியாவில் டெஸ்ட், ஒருநாள் தொடர்கள் ஆடி வரும் இந்தியாவுக்கு தெரிந்திருந்தது. ஆடுதளம் இம்முறை மெத்தனமாய் இருந்தன. பந்தை கவர் பகுதிக்கு விரட்டுவது சிரமம். அதனால் இந்திய மட்டையாளர்கள் கோலி, தவன் போன்றோர் கவனமாய் அந்த ஷாட்டை தவிர்த்து நிறைய ஒற்றை, இரட்டை ஓட்டங்களை எடுத்தனர். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் இந்தியாவை விரட்ட வைக்கவில்லை. பந்து ஸ்விங் ஆவது குறைய அவர்கள் பவுன்ஸை எதிர்பார்த்து ஷார் ஆப் தெ லெங்க்தில் போட்டனர். இந்தியர்களுக்கு ஆட சுலபமானது. ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யும் ஒவ்வொரு அணியை மாட்டிக் கொள்ளும் பொறி இது. பாகிஸ்தானும் மாட்டிக் கொண்டது. ஆனால் இந்தியா பந்து வீச வந்த போது பாக் மட்டையாளர்களை விரட்ட வைக்கும் நீளத்தில் நிறைய வீசி சிரமம் கொடுத்தது.

அடுத்த தடை. பாகிஸ்தான் பந்து வீசும் போது எப்போதுமே 25-40 ஓவர்களுக்குள் நிறைய விக்கெட்டுகள் எடுக்கும். ஒன்று சுழல் பந்து மூலம். பந்து சுழலாத போது ரிவ்ர்ஸ் ஸ்விங் மூலம். இதற்கு பந்து பழசாவது முக்கியம். ஆனால் கடந்த உலகக் கோப்பைக்கு பின் ஐ.சி.சி ஒரு புது விதிமுறை கொண்டு வந்தது. இதன்படி ஒரு பந்துக்கு பதில் இரண்டு பந்துகள் மாறி மாறி பயன்படுத்தப்படும். விளைவாக இறுதி ஓவரில் கூட பந்து இருபத்தைந்து ஓவர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு புதுசாக இருக்கும். சுழலுக்கு தோதாக மெதுவாக வராது. ரிவர்ஸ் ஆகாது. இவ்விதிமுறையால் ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சு முறை கிட்டத்தட்ட “என்கவுண்டர்” செய்யப்பட்டது எனலாம். ரிவர்ஸ் ஸ்விங்கை நம்பியுள்ள பாகிஸ்தானின் வேகவீச்சும் தன் வீரியத்தை பாதி இழந்தது. இந்த உலகக் கோப்பை ஆட்டத்திலும் பாகிஸ்தானுக்கு பந்து ரிவர்ஸ் ஆனதும் சட்டென விக்கெட்டுகள் சரியும் என இந்தியர்கள் பயந்தபடி இருந்தனர். ஆனால் 46வது ஓவருக்கு பிறகு தான் அது நிகழ எதிர்பார்த்த விக்கெட் சரிவும் நடந்தது. ஆனால் அதற்குள் இந்தியா கிட்டத்தட்ட 300ஐ தொட்டிருந்தது.

இப்போட்டியுடன் இந்தியா தொடர்ந்து உலகக் கோப்பை தொடர்களில் ஆறாவது தடவையாக பாகிஸ்தனை தோற்கடித்தது. இத்தனைக்கும் பாகிஸ்தான் தான் வெல்லும் என இம்முறை எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஆஸ்திரேலிய பயணத்தில் இந்தியா ஒரு அதிகார பூர்வ ஆட்டத்தை கூட வென்றிருக்கவில்லை. பாகிஸ்தான் தனது இரண்டு வார்ம் அப் ஆட்டங்களிலும் நன்றாக ஆடி வென்றிருந்தது. ஆனால் உண்மையான போட்டி வந்ததும் பாகிஸ்தான் நிலைமை “கல்யாண சமையல் சாதம்” ஹீரோ போல் ஆகி விட்டது. தொடர்ந்து ஆறு போட்டிகளிலும் பாகிஸ்தான் இந்தியாவிடம் ஆட்டம் இழப்பதன் காரணம் என்னவாக இருக்க முடியும்?

பொதுவான காரணம் பாகிஸ்தான் மக்கள் மற்றும் மீடியாவின் எதிர்பார்ப்பு உருவாக்கும் அழுத்தம் தாள முடியாது சொதப்புகிறது என்பது. மற்ற உலகக் கோப்பை ஆட்டங்களில் இது தான் உண்மை என்றாலும் இம்முறை பாகிஸ்தான் அணி இந்திய அணியை விட பலவீனமாய் இருந்தது மற்றொரு முக்கிய காரணம். சயித் அஜ்மல் மீதான தடை, முகமது ஹபீஸ், வேகவீச்சாளர் ஜுனைத் கான் ஆகியோரின் காயம் காரணமான விலகல் ஆகியவை பாகிஸ்தான் பந்து வீச்சை வெகுவாக தளர்த்தி இருந்தது. குறிப்பாக 15 முதல் 45 வரையிலான ஓவர்களில் அவர்களால் வழக்கம் போல் விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. பொதுவாக பாகிஸ்தான் மட்டையாட்டத்தில் ஆவேசமாய் அடித்தாடும். இம்முறை 300ஐ விரட்டும் நிலையில் அவர்கள் இந்தியாவின் பாணியை போல செய்தது. முதல் 30 ஓவர்கள் பொறுமையாக ஆடி இறுதி 20 ஓவர்களில் அடித்தாட நினைத்தது. ஆனால் எதிர்பாராத விதமாய் விக்கெட்டுகள் நடுஓவர்களில் விழ அவர்களால் இதை சாதிக்க இயலாமல் போனது.

 இந்த உலகக் கோப்பை ஆட்டம் பாகிஸ்தான் மெல்ல மெல்ல இந்தியாவின் பாதையை தேர்ந்தெடுப்பிருப்பதை காட்டுகிறது. அதாவது பாகிஸ்தான் மெல்ல மெல்ல ஒரு மட்டையாட்ட அணியாக மாறி வருகிறது. அஹ்மத் ஷேஸாத், ஹாரிஸ் சொஹைல், சர்பராஸ், நசீர் ஜம்சத், உமர் அக்மல் போன்ற அட்டகாசமான மட்டையாளர்கள் தோன்றி நன்றாக ஆடி வருகிறார். அடுத்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் போக்கு, பாணி முற்றிலும் வேறாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இம்முறை பாகிஸ்தான் இந்தியாவை போன்று இந்தியாவுக்கு எதிராய் ஆடித் தோற்றுப் போனது என்பது தான் விசித்திரம். ஆனால் இந்த தோல்வி அவர்களது உலகக் கோப்பை வாய்ப்பை பாதிக்கப் போவதில்லை. இந்தியாவை போன்றே அவர்களின் பயணமும் தொடரும். ஏன் இப்படி இந்தியாவிடம் மட்டும் ஒவ்வொரு முறையும் தோற்கிறோம் எனும் குழப்பம் மட்டும் அவர்களின் ரசிகர்களின் மண்டையை குடைந்து கொண்டிருக்கும்.

இந்த ஒரு போட்டிக்கு பின் மட்டுமே இவ்வளவு நுணுக்கங்கள் உண்டென்றால் இத்தொடரின் ஒரு மாதத்துக்கு மேலான பல போட்டிகளுக்கு பின் என்னவெல்லாம் இருக்கும் என யோசியுங்கள். ஒரு சிறந்த வலுவான அணி அதிரடியாக ஒவ்வொருவரையாய் முறியடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைவது என உலகக் கோப்பை வெற்றியை நாம் எளிமைப்படுத்த முடியாது. ஒவ்வொரு ஆடுதளத்திலும் சூழல் மாறுபடும். மைதானத்தின் அளவு மாறுபடும். அதற்கேற்றாற் போல் வியூகங்கள் வகுக்க வேண்டும்.

 உதாரணமாய் இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆட்டம் நடந்த மெல்போர்ன் மைதானத்தில் ஸ்கொயர் பவுண்டரிகள் (square boundaries) நீளமானவை. ஸ்கொயர் பகுதி என்றால் பக்கவாட்டு பகுதிகள். அதாவது புல் மற்றும் கட் ஷாட்கள் அடித்தால் பந்து போய் சேரும் இடங்கள். இந்த மைதானத்தில் நேரான பவுண்டரிகள் பக்கம். நீளம் குறைவு. அதனால் நேராக அடித்தால் எளிதில் நான்கு போகும். பக்கவாட்டில் அடித்தால் இரண்டு ஓட்டங்கள் தான் கிடைக்கும். இதை கணித்து இங்கிலாந்து நிறைய பந்துகளை ஆஸ்திரேலியாவுக்கு குறைநீளத்தில் உயரப்பந்தாக வீசியது. ஆனால் இத்தகைய பந்துகளை ஆடி நன்றாக அனுவம் கொண்ட ஆஸ்திரேலியா ஸ்கொயர் பகுதிகள் நோக்கி வுண்டரி. சிக்ஸர் என கொய்து தள்ளியது. 342 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து இங்கிலாந்து ஆட வந்த போது பந்தை விரட்டும் படியாய் வீசி விக்கெட் எடுத்தது. ஏனென்றால் அந்த ஆடுதளம் மெத்தனமானது. அதனால் விக்கெட் எடுக்க விரட்டும் நீளம் தான் சரிப்படும் என ஆஸ்திரேலியா அறிந்திருந்தது. மைதானத்தின் நீள அகலத்தை கணக்கெடுத்த இங்கிலாந்து அணியினர் ஆடுதளத்தின் குணத்தை கவனிக்கவில்லை. ஆக ரொம்ப கச்சிதமாக திட்டமிடுவது உதவாது. எந்த இறுக்கமும் இன்றி ஆட்டத்தின் போக்கின் படி சென்று தேவையான மாற்றங்களை அவ்வப்போதைக்கு செய்வது இத்தொடரில் அணிகளின் வெற்றிக்கு ரொம்ப அவசியமான திறனாக இருக்கும். இறுக்கமான எதிர்பார்ப்புகளோடு மைதானத்துக்கு வரும் இங்கிலந்து போன்ற அணிகள் திணறும்.

ஆஸ்திரேலியா என்றாலே வேகப்பந்து நெஞ்சுக்கு மேல் எகிறுகிற ஊர் என்றே நினைத்திருக்கிறோம். ஆனால் சமீப காலமாய் ஆஸ்திரேலிய ஆடுதளங்கள் மாறி உள்ளன. இதற்கு காரணம் டிராப் இன் (drop-in) ஆடுதளங்கள். டிராப் இன் ஆடுதளங்கள் இயற்கையாய் மைதானத்துக்குள் உருவாக்கப்படுகிறவை அல்ல. அடுக்கடுக்காய் தனியாய் வெளியே தயாரிக்கப்பட்டு இந்த ஆடுதளங்கள் ஆட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் மைதானத்துக்குள் புதைக்கப்படுகின்றன. நீண்ட காலமாய் வெயிலில் காயாததால் இந்த தளங்கள் சற்றே மெத்தனமாய் இருக்கும். கொஞ்சம் ஆசிய ஆடுதளம் போல் மட்டையாட்டத்துக்கு தோதாக இருக்கும். பாகிஸ்தான்-இந்தியா ஆட்டத்தில் கண்டது போல் சற்று சுழலக் கூட செய்யலாம். பொதுவாய் ஆஸ்திரேலிய மைதானங்கள் கிரிக்கெட் ஆடாத காலங்கள் கால்பந்து, பேஸ்பால் ஆகிய ஆட்டங்கள் பரவலாய் நடைபெறுவதால் சம்பிரதாயமான ஆடுதளங்களை எப்போதும் பராமரிக்க முடியாது. மைதானத்தை தேவையான போது மட்டும் கிரிக்கெட்டுக்காய் பயன்படுத்துவதற்கான ஏற்பாட்டு இந்த டிராப் இன் ஆடுதளங்கள் வெகுவாய் உதவுகின்றன. இம்முறை உலகக் கோப்பையில் டிராப் இன் ஆடுதளங்கள் நிறைய பயன்படுத்தப்பட போவதால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளுக்கு இது சாதகமாய் இருக்கலாம்.

 ஆக ஆஸ்திரேலியாவில் நடந்தாலும் இந்த 2015 உலகக் கோப்பை தொடர் போன்ற முறை இந்தியாவில் நடந்த தொடர் போன்றே இருக்கும். 300க்கு மேல் தளும்பும் பல ஸ்கோர்களை எதிர்பார்க்கலாம். 40 ஓவர்கள் வரை அதிக விக்கெட்கள் இழக்காமல் ஒற்றை, இரட்டை ஓட்டங்கள், அவ்வப்போது ஒரு நான்கு ஓட்டம் என எடுக்கும் மட்டையாட்ட அணிகள் நிறைய தூரம் முன்னேறும்.

நியுசிலாந்தில் நடக்கிற ஆட்டங்களில் அங்குள்ள மைதானங்களின் முட்டை வடிவ அமைப்பு புது அணிகளுக்கு வெகுகுழப்பமாய் இருக்கும். அந்த அமைப்புக்கு ஏற்றபடி கணித்து பந்து வீசுவது மிக முக்கியம். ஆஸ்திரேலியாவை விட அங்கு பந்து அதிகம் ஸிவிங் ஆகும் என்பதால் முழுநீளத்தில் வீசுவதும், மட்டையாட்டத்தின் போது முதல் இருபது ஓவர்கள் கவனமாய் ஆடி விக்கெட்டுகளை பாதுகாப்பதும் அவசியம்.
இந்த தொடருக்கு முன்னாலான அணிகளின் ஆட்ட வரலாறு இத்தொடரின் போது மதிப்பற்றதாகிறது. இந்தியா இதுவரை மட்டமான ஆட்டநிலையில் இருந்தாலும் காலிறுதி மற்றும் அரை இறுதி ஆட்டங்கள் நன்றாக ஆடினால் சட்டென கோப்பையை இரண்டாம் முறை கைப்பற்றும் சக்தி வாய்ந்த அணியாக மாறி விடும். நிறைய லீக் ஆட்டங்கள் உள்ளதால் ஒவ்வொன்றாக ஆடி முக்கியமான கால் இறுதி, அரை இறுதி, இறுதி ஆட்டங்கள் வரும் போது மனதளவில் களைத்திடாமல் இருக்க வேண்டும். இந்த திறன் இந்தியாவுக்கு நிச்சயம் உண்டு. 
ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் ஆஸ்திரேலிய அணிக்கும் அனுகூலங்கள் அதிகம். மிக வலுவான அணியைக் கொண்டிருந்தாலும் தென்னாப்பிரிக்காவுக்கு முக்கியமான கட்டத்தில் தேர் சேற்றில் புதைந்து விடும். கற்ற வித்தைகளும் மறந்து விடும். அதனால் தென்னாப்பிரிக்கா அரை இறுதியை தாண்டும் வாய்ப்பு குறைவே.

சமீபமாக மிக சிறப்பாய் ஆடி வரும் அணி நியுசிலாந்து. மக்கெல்லம் உலகின் சிறந்த அணித்தலைவர்களில் ஒருவர். தோனியை விட மேலானவர். அதிரடியான கள அமைப்புகள், புத்திசாலித்தனமான வியூகங்கள், பந்து வீச்சை அதன் உச்சபட்சத்துக்கு பயன்படுத்தும் திறன் ஆகியவை கொண்டு அவர் நியுசிலாந்தை ஒரு பிரமாதமான அணியாக வடிவமைத்திருக்கிறார். வில்லியம்சனின் மட்டையாட்டம், மக்கெல்லத்தின் அதிரடி ஆட்டம், ஆல்ரவுண்டர் ஆண்டெர்ஸனின் பங்களிப்பு, சௌதி, போல்ட், விட்டோரி ஆகியோரின் பந்து வீச்சு ஆகியவை நியுசிலாந்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணிகளாக இருக்கும். பொதுவாக இவர்கள் பெரிய தொடர்களை வென்ற அனுபவம் அற்றவர்கள் என்பது தான் நியுசிலாந்தின் ஒரே பலவீனம். இந்த அனுபவமின்மை முக்கியமான கட்டங்களில் அவர்களை நிச்சயம் பாதிக்கும். அனுபவம் தரும் முதிர்ச்சியும் மனப்பக்குவமும் கால், அரை இறுதி, இறுதிகளில் தடையை தாண்ட மிக முக்கியம். அதே போல் மக்கெல்லம் மற்றும் வில்லியம்சன் சொதப்பினால் இவர்களது மட்டையாட்டம் நிமிர்ந்து நிற்குமா என்பதும் கேள்விக் குறியே!


என்னுடைய ஊகப்படி இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றுள் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்து சேரும்.

No comments: