Thursday, April 16, 2015

நவீன கவிதை “நீயா நானா”


இந்த குறிப்பிட்ட நீயா நானாவை டிவியில் பார்க்க தவறி விட்டேன். ஆனால் அடுத்த நாளில் இருந்து இதைப் பற்றி தான் பேஸ்புக் கொதித்து நுரை விட்டுக் கொண்டிருந்தது. எதற்குத் தான் திட்டுகிறார்கள் என எனக்கு ரொம்ப நேரமாய் புரியவில்லை. ஆளாளுக்கு வாலை விட்டு தலையை பிடித்து வாய்க்குள் கையை விட்டு என்னவெல்லாமோ பண்ணிக் கொண்டிருந்தார்கள். இப்போது இணையத்தில் அந்நிகழ்ச்சியை பார்த்த பின்னும் ஏன் திட்டினார்கள் என எனக்கு சத்தியமாக புரியவில்லை. நான் பார்த்த நீயா நானாக்களில் சிறந்த அத்தியாயங்களில் ஒன்றாக இதை நினைக்கிறேன். நெகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. நான் மிகவும் நேசிக்கும் ஒரு கலைவடிவம் இப்படி ஒரு பிரைம் டைம் நிகழ்ச்சியில் கொண்டாடப்படும் என நான் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. ஆண்டனி மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.


நிகழ்ச்சியில் பல நல்ல கவிதைகள் நினைவில் இருந்து, நேரடியாக புத்தகத்தில் இருந்தும் வாசிக்கப்பட்டதாய் நினைவு. சமகால கவிஞர்கள் பெரும்பாலும் சமகால கவிஞர்களின் வரிகளையே குறிப்பிட்டார்கள். மனுஷ்யபுத்திரன் தன் காலத்தவர்கள் மற்றும் சீனியர்களின் முக்கிய கவிதைகளை குறிப்பிட்டு சமகாலத்தவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இப்படி இரண்டு தரப்பினரும் கவிதைகளை இப்படி தேர்ந்ததில் ஏதாவது அரசியலா என தெரியவில்லை. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் தனிப்பட்ட முறையில் கூட மனுஷ்யபுத்திரனிடம் இருந்து எழுத்தாளர்கள் பற்றின அபிப்ராயத்தை பிடுங்க முடியாது. வாயை இறுக்கி வைத்துக் கொள்வார். பிறகு இந்த நிகழ்ச்சியிலா சொல்வார்? அதனால் அவர் குறிப்பிட்ட கவிஞர்கள் தவிர பிறர் அவரை அவ்வளவாக கவரவில்லை என புரிந்து கொள்கிறேன். ஆத்மாநாம் பற்றி அவர் பேசினது அற்புதம். குறிப்பாக “ஏதாவது செய்” கவிதையை அவர் வாசித்த விதம்.

சாம்ராஜ் பேசினது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எவ்வளவு அற்புதமான கவிதை வரிகளை நினைவில் இருந்து உருவி சரளமாய் வாசித்தார்! அதுவும் ஞானக்கூத்தனை அவர் மேற்கோள் காட்டிய இடங்கள் ரசிக்கத்தக்கதாய் இருந்தது. முகுந்த் நாகராஜன் கவிதை, இசையின் கவிதை ஆகியவையும் அச்சூழலுக்கு மிகவும் பொருத்தம். சாம் அடிப்படையில் நல்ல பேச்சாளர். அவருக்கு மேடைக்கு ஏற்ற வரிகள் எவை எனத் தெரியும். நல்ல குரலும் கூட. இவ்வளவு கவிதைகளை நெஞ்சு நிறைய காதலியின் முகம் போல் வைத்து ரசித்தால் ஒழிய அவரால் இப்படி கவிதைகளாய் பிரவாகிக்க இயலாது. என்ன ஒரு ரசனைக்காரர்! அவருக்கு நிச்சயம் பரிசை அளித்திருக்க வேண்டும்.

வெயிலும் நன்றாக வாதிட்டார். ஆனால் அவர் கூற வந்த அரசியல் கவிதையை எதிர்தரப்பில் உள்ள சில பெண்கள் தவறாய் புரிந்து கொண்டனர். கவிதை போன்ற உணர்ச்சிகரமான அரூபமான விசயங்களை விவாதித்து விளக்குவது சிரமம். சந்திரா, மனுஷி, வெண்ணிலா, வெய்யில், சாம்ராஜ் இப்படி ஒரு தரப்பினர் மேற்கோள் காட்டின வரிகள் சற்று ரொமாண்டிக்காக இருந்தது. நேர்மாறாக மனுஷ்யபுத்திரனும் போகனும் மட்டும் கராறான நவீன வரிகளை முன்வைத்தனர். ரொமாண்டிக்கான கவிதைகளை பேசுவதில் தவறில்லை. கவனித்ததை சொன்னேன்.

உண்மையில் இது நீயா நானா போலவே இல்லை. ஒரு கவியரங்கம் போல் இருந்தது. எந்த விவாதமும் மோதலும் சிக்கலும் தீர்வும் இல்லை. உஷ்ணமே இல்லை. பூச்சொரிதல் மட்டும் தான். சின்ன வயதில் வைரமுத்து, அப்துல் ரகுமான் ஆகியோர் கலைஞரை மையமாக வைத்து கவி பாடின சன் டீவி அரங்குகள் நினைவு வந்தன. கவிதை மீது ஒரு மயக்கத்தையும் பெருமிதத்தையும் எனக்கு ஏற்படுத்தின நிகழ்ச்சிகள் அவை. இந்நிகழ்ச்சியும் அது போல் பல இளங்கவிஞர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக நவீன கவிதையில் அறிமுகம் கொள்கிற வாசகர்களுக்கு இதில் மேற்கோள் காட்டின பல கவிதைகள் மிகப்பெரிய வியப்பை நிச்சயம் தந்திருக்கும்.

பி.ஏ கிருஷ்ணன் இ.எம்.எஸ் கலைவாணனின் “ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்” தொகுப்பு பற்றி பேஸ்புக்கில் எழுதின குறிப்பை முதலில் படித்த போதே எனக்கு உடன்பாடாக இல்லை. அதை இம்முறை நீயா நானாவில் கோபிநாத் வாசித்த போதும் உவப்பாக இல்லை. காரணம் பி.ஏ கிருஷ்ணன் தலித் எழுத்தை பிறன் (other) ஆக பார்க்கிறார். இவ்வளவு துணிச்சலாக “கவிதை மயிருகள்” என்றெல்லாம் தலைப்பு வைக்கிறார்களா என்கிற வியப்பு தான் அவரது குறிப்பு முழுக்க தொனிக்கிறது. குமரி மாவட்டத்து கவிதைகளை கடந்த 20 வருடங்களாக கவனிக்கிறவன் என்கிற முறையில் எனக்கு இத்தலைப்போ இதில் உள்ள கவிதைகளோ எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. இவற்றை சாதி எதிர்ப்பு, அதிர்ச்சி மதிப்பு கவிதைகளாக பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி பார்ப்பது மேலும் மேலும் இக்கவிதைகளை பிறிதாக மாற்றி வேடிக்கை பார்க்கும் மனநிலையை உருவாக்கும் என நினைக்கிறேன். இவற்றை எல்லா கவிதைகளையும் போன்றே பார்க்க வேண்டும். பார்த்து அதனுள் ஊடுருவி பயணிக்க வேண்டும். மேலும் இப்படியெல்லாம் வெளிப்படையாய் எழுதும் அளவு வளர்ந்து விட்டார்களே என பி.ஏ கிருஷ்ணன் தன்னை ஒரு மேலான இடத்தில் வைத்து தான் வியந்து போற்றுகிறார். அந்த தொனி இந்நிகழ்ச்சியிலும் கலைவாணன் தோன்றும் இடங்களிலெல்லாம் உருவாகி டிராமாவாக மாற்றப்பட்டது எனக்கு உவப்பாக இல்லை.

ஒரு சவரத்தொழில் செய்யும் அப்பா மாலை வீட்டுக்கு வந்து தன் குழந்தையை அணைத்து முத்தமிடுகையில் அவர் கையில் ஒட்டி இருந்த வெள்ளை மயிர்கள் குழந்தையின் பார்வையில் படுகின்றன. இந்த சித்திரம் சாதி ஒடுக்குமுறையை கடந்து ஒரு குழந்தை வெளி உலகம் பற்றி பெறும் படிமம் எனும் அளவில் தான் என் கற்பனையை கிளர்த்துகிறது. அக்குழந்தை சாதி அடுக்குமுறை, தன் தந்தையின் தொழில் பற்றி எல்லாம் யோசிக்காது. ஆனால் நீண்ட காலத்துக்கு அப்பாவை பற்றி யோசிக்கும் போதெல்லாம் அவருக்கு சம்மந்தமில்லாமல் உடலில் ஒட்டி இருக்கும் வெள்ளை மயிர்களை அக்குழந்தையால் மறக்க முடியாது. கறி வெட்டுகிற, பத்து பாத்திரம் துலக்கும் வேலை செய்கிற, மெக்கானிக்காக உள்ள எல்லா அப்பன், அம்மைகள் உள்ள குழந்தைகளுக்கும் வெளியுலக அடையாளத்துடன் வீட்டுக்கு வரும் பெற்றோர்கள் பற்றி பல சித்திரங்கள் இது போல இருக்கும். வீட்டுக்குள் உள்ள அப்பா வேறு, வெளியில் உள்ள அப்பா வேறா? உள் உலகம் வேறு, வெளி உலகம் வேறா என அக்குழந்தை வியக்கும். என்னைப் பொறுத்த வரையில் இதை ஒரு தலித் அரசியல் கவிதையாக சுருக்குவது அதற்கு செய்யும் அநீதி.

 இந்நிகழ்ச்சியை கவியரங்க பாணியில் இன்றி வேறெப்படி செய்திருக்கலாம் என யோசித்தேன். நம் பொதுப்பரப்பில் கவிதை பற்றி உள்ள சர்ச்சைகள், கருத்து முரண்களை ஒட்டி அமைத்திருக்கலாம். உதாரணமாய், திருக்குறள் கவிதை அல்ல என சு.ரா சொன்னார். அது உண்மையா என வினவியிருக்கலாம். வானம்பாடி கவிஞர்களையும் நவீன கவிஞர்களையும் இரு தரப்பாய் உட்கார வைத்து முரண்பாடுகளை அலசி இருக்கலாம். வானம்பாடி கவிதை மரித்து விட்ட சூழலில் ஒரு நல்ல ஆவண வாய்ப்பாக அது இருந்திருக்கும். வள்ளுவர் சமணரா அல்லது இந்துவா? ஏன் அவர் அப்படி “மதமாற்றம்” செய்யப்பட்டார் என பேசி இருக்கலாம். மரபிலக்கியத்துக்கு உரையாசிரியர்கள் சொன்ன பொருளையும் அதற்கு முற்றிலும் மாறுபட்டு அயோத்திதாசர் அர்த்தப்படுத்தியதையும் பேசியிருக்கலாம். இதில் விவாதத்திற்கு அடிதடிக்கு நிறைய சாத்தியங்கள் உண்டு. பாரதி ஒரு சாதிய கவிஞரா அல்லது சாதியை எதிர்த்தவரா என கேட்டிருக்கலாம். அவர் பெண்ணியம் பேசினாரா அல்லது பெண்களுக்கு எதிராக பேசினாரா என பெரும் சண்டை போட்டிருக்கலாம். வெறும் கவிதை என எடுத்துக் கொண்டால் இது போல் எவ்வளவோ சாத்தியங்களை பரிசீலித்திருக்கலாம். முக்கியமாய் நிகழ்ச்சியில் மற்றொரு சிறப்பு விருந்தினராக ஜெயமோகனை கொண்டு வந்திருக்கலாம். தமிழில் கோட்பாடு தவிர்த்த கவிதையியலில் இவ்வளவு மெனக்கெட்ட மற்றொரு எழுத்தாளன் இல்லை. நவீன கவிதை குறித்து அவரிடம் பல வலுவான விநோதமான நம்பிக்கைகள் உண்டு. பெண் கவிதைகளில் சாரமில்லை எனும் அவரது கருத்தை விவாதித்திருக்கலாம்.


 இத்தனை ஆண்டுகளாக நீயா நானா நடத்துகிற ஆண்டனிக்கு இதெல்லாம் தெரியாதிருக்காது. ஆனால் தெளிவாக வேறு விதத்தில் பெரும்பாலும் விவாதமே இன்றி நடத்தியிருக்கிறார்கள். அதுவும் நல்லது தான். இவ்வளவு கவிதை வரிகளை, கவிஞர்கள் முகங்களை, பெயர்களை லட்சக்கணக்கான மனங்களுக்கு கொண்டு சேர்த்துள்ளது ஒரு முக்கிய பணி தான். இது போன்று நவீன கவிஞர்கள் வாசித்து விவாதிக்கும் கவியரங்க பாணி நிகழ்ச்சிகளை வேறு அலைவரிசைகளிலும் முயன்று பார்க்கலாம். பொதுப்பரப்பில் நவீன கவிதையில் சற்றே வணிகத்தன்மை கொண்டவர்களில் ஒரு சிலரேனும் இதன் மூலம் நட்சத்திரங்களாக உருவாக வாய்ப்புண்டு. ஒரு மாற்றத்துக்கு அதெல்லாம் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். இப்போதே போகன் சங்கருக்கு எத்தனை ரசிகைகள்! ஏழெட்டு பெண்கள் சூழ்ந்து அவருக்கு பரிசு வழங்கியதை டிவியில் பார்த்திருக்கும் அவரது வீட்டுக்காரம்மாவுக்கு ஒன்றுமே புரிந்திருக்காது. 

2 comments:

‘தளிர்’ சுரேஷ் said...

இந்த நிகழ்ச்சியை முழுதும் பார்க்கவில்லை! ஆனால் நீங்கள் சொன்ன பகுதி சவரக்காரனின் கவிதை மயிறுகள் பார்த்தேன். எனக்கும் அந்த வரிகள் அவ்வளவு ஈர்ப்பைத் தரவில்லை! பல கவிதைகளை வாசித்த போது கவர்ந்தன. அதே சமயம் காதல் கவிதைகள் அதிகமாக வாசிக்கப் பட்டதாகவே தோன்றியது. மொத்தத்தில் நல்லதொரு நிகழ்ச்சி! பகிர்வுக்கு நன்றி!

Abilash Chandran said...

இல்லை என்னை அக்கவிதை ஈர்த்தது. அக்கவிதைக்கு வந்த எதிர்வினை, அதன் பின்னுள்ள அய்யோ பாவம் உணர்ச்சி தான், பிடிக்கவில்லை. அந்த எதிர்வினையில் ஒரு மேட்டிமைத்தனம் உள்ளது