Friday, April 10, 2015

வாழ்த்துக்கள் வா.மணிகண்டன்!

Image result for வா மணிகண்டன்


வா.மணிகண்டன் சரளமான, நகைச்சுவை ததும்பும் அனுபவக் கட்டுரைகள் எழுதுவதில் சமர்த்தர். கடந்த பத்து வருடங்களில் பத்திரிகை பத்தியாளர்கள், பிளாகர்கள் கூட நாட்டு நடப்பு, அரசியல், சமூகம் என நகர்ந்து விட்டாலும் மணிகண்டன் தன்னுடைய காணி நிலத்திலேயே வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். தனக்கு பிடித்தமான பாணியில் எழுதுவது தான் அவர் எழுத்து புதுமையுடன் இருப்பதற்கு காரணம் என நினைக்கிறேன்.


எப்படி அவருக்கு மட்டும் தினமும் ஒரு சுவாரஸ்யமான அனுபவம் வாய்க்கிறது என நண்பர்கள் கலாய்ப்பது கேட்டிருக்கிறேன். ஆனால் அப்படியான அனுபவங்கள் எல்லாருக்கும் உள்ளது. நாம் கண்ணைத் திறந்து பார்த்தால் நம்மையே ஒரு subject ஆக மாற்றிக் கொள்ள முடியும். பிறகு நம்மை கவனித்து நம்மைப் பற்றியே நிறைய எழுத முடியும். இது ரொம்ப ரிஸ்கான எழுத்து பாணி. எழுத்தில் அடர்த்தி குறையும். திடீரென சரக்கு தீர்ந்து போகலாம். அப்போதெல்லாம் அடுத்தவர்களைப் பற்றி எழுதலாம். படித்த புத்தகம், பார்த்த படம் என எழுதலாம். இதையெல்லாம் மணிகண்டன் செய்கிறார். இத்தனை காலமாய் அவர் இவ்வகை எழுத்தின் மூலம் தன் பால் வாசகர்களை கட்டிப் போட்டிருக்கிறார் என்பதே ஒரு தனி சாதனை.

எனக்கு மணிகண்டனை ஏழு வருடங்களுக்கு முன்பிருந்து தெரியும். எனக்கு முன்பே எழுத வந்தவர். ஒரு புத்தகக் கண்காட்சியில் சேர்ந்து சுற்றினது நினைவுள்ளது. பழக இனிமையானவர். யாராவது தும்மினால் கூட தோளை வளைத்து கைகளை குவித்து வணங்கி விடுவார். கட்சிக்காரர்களிடம் மட்டும் பார்க்கக் கிடைக்கிற பணிவு. அது அவர் இயல்பாகத் தான் இருக்க வேண்டும். எல்லாரிடமும் அவர் அப்படி இருந்து தான் பார்த்திருக்கிறேன்.

MBA படித்து நிர்வாகத்தில் இருக்கும் ஒரு மேலாளர் போல மிகத் தெளிவாக திட்டமிட்டு, நிறைவேற்றுவதற்கான காலம், வழிமுறை எல்லாம் யோசித்து எழுதுவார். தமிழில் வேறு யாரிடமும் நான் இதைப் பார்த்ததில்லை. ஒருமுறை கண்காட்சியில் கவிதை நூல்களாக வாங்கித் தள்ளினார். “ஏங்க திறந்து கூட பார்க்காம வாங்குறீங்க?” எனக் கேட்டேன். பாவம், நாம வாங்காம யாருங்க வாங்குவாங்க என்பது போல் பதில் சொன்னார். ஆனால் மனிதர் அடுத்த மூன்று மாதங்கள் கவிதை மதிப்புரைகளாக எழுதித் தள்ளி விட்டார். காலச்சுவடில் அவர் மதிப்புரைகள் சிலவற்றை பார்த்த நினைவு. இப்படி திட்டமிட்டால் நடத்தி விடுவார். அவரது “நிசப்தம்” இணையதளத்தின் ஒவ்வொரு பதிவின் பின்னும் இந்த திட்டமிடல் உண்டு.
எனக்கு நள்ளிரவில் விழித்திருந்து எழுதப் பிடிக்கும். ஒருநாள் இரவு 2 மணிக்கு மணிகண்டன் சாட்டில் வந்து என்னுடைய “இன்றிரவு நிலவின் கீழ்” தொகுப்பை படித்து முடித்து விட்டதாக சொன்னார். அதைப் பற்றி எழுதப் போவதாய் சொன்னார். ரொம்ப மகிழ்ச்சி எழுதிக் கொடுங்கள் என்றேன். அடுத்த ஒரு மணிநேரத்தில் ஒரு சரளமான நல்ல விமர்சனத்தை எழுதி அனுப்பி விட்டார். எனக்கு யாராவது காலத்தை காப்சியூளாக சுருக்கி விட்டார்களோ என வியப்பாக இருந்தது. படித்தேன், எழுதப் போகிறேன், இதோ எழுதி விட்டேன்…அப்படி ஒரு வேகம். அட இவர் என்னை விட வெறி பிடித்த எழுத்தாளராக இருக்கிறாரே என அப்போது தான் தோன்றியது. இப்படி வேகமாய் சரளமாய் எழுதக் கூடியவரை ஏன் அதிகமாய் பத்திகள் பத்தி எழுத பயன்படுத்தவில்லை என அப்போது வியந்திருக்கிறேன். இதை நினைத்தது ஆறு ஏழு வருடங்களுக்கு முன். அவரது நிசப்தம் இணையதளம் ரேஸில் ஜாக்கியை உதறி விட்ட குதிரை போல தெறித்தோட ஆரம்பிக்கும் முன். அதன் பிறகு அவர் கல்கியில் ஒரு நல்ல தொடர் எழுதினார். ரோபோ பற்றி. அதை அவர் புத்தகமாக கொண்டு வர வேண்டும். அதிலும் ரோபோட்டிக்ஸை விட தனது அனுபவங்களைத் தான் சுவாரஸ்யமாய் சொல்லி இருப்பார். (வா.மணிகண்டன் நாளை ஒரு சிரமமான தேர்வெழுத போனால் கூட எந்த கேள்விக்கும் தன்னைப் பற்றி ஒரு பதில் எழுதி தப்பித்து வந்து விடுவார் எனத் தோன்றுகிறது.) இப்போது தினமணி இணையதளத்தில் ஒரு தொடர் எழுதுகிறார். நான் நடுவில் ஒரு சின்ன லெட்டர் பேட் பத்திரிகையில் வேலை பார்த்த போது முதல் வேலையாக வா.மணிகண்டனை அதில் எழுதக் கேட்டேன். ஒத்துக் கொண்டார். இரண்டு வாரங்கள் கழித்து “என்னங்க தொடரை எப்போ ஆரம்பிக்கலாம்?” என்றார். “அதான் எனக்கும் தெரியல மணி. ஏன்னா என்னை வேலையில் இருந்து அனுப்பி விட்டார்கள்” என்றேன். குங்குமம், விகடன், ஹிந்து போன்ற பத்திரிகைகளில் அவர் ஒரு ரவுண்ட் போய் வர வேண்டும் என்பது என் ஆவல்.

என்னிடம் வா.மணிகண்டனின் தாக்கம் ஒரு விதத்தில் உண்டு. நான் பொதுவாய் அதிகம் பத்திரிகைகளில் எழுதுபவன். அங்கு எழுதுவதை இங்கே என் பிளாகில் கொண்டு போடுவேன். பிளாக் எனக்கு டாக்குமெண்டுகளை சேர்த்து வைக்கும் கோப்பு போல. தினமும் எழுதி நிறைய வாசகர்களை தொடர்ந்து வரவழைக்க வேண்டும் என நினைக்க மாட்டேன். ஆனால் தினமும் வா.மணிகண்டனை படிப்பது என்னையும் தொடர்ந்து பிளாகிங் செய்ய வைத்தது. சமீபத்தில் என் பிளாகிற்காகவே நான் தனியாக சில கட்டுரைகள் எழுதியதற்கு அவரது தாக்கம் தான் காரணம்.

வா.மணிகண்டனை “நிசப்தத்திற்கு” முன், பின் என பிரித்துக் கொள்ளலாம். “முன்” காலத்தில் அவர் நல்ல கவிஞர். என் மன அவசங்களை வெளிப்படுத்தி ஆறுதல் தேட அக்காலத்தில் கவிதை எழுதினேன் என அவர் சமீபத்தில் எழுதினார். ஆனால் அது உண்மை அல்ல. பொது வாசகர்களுக்காக தன் கவிதைகளை அவரே பழிக்க வேண்டியதில்லை. பல நல்ல கவிதைகளை எழுதி இருக்கிறார். மரண வீடு பற்றின சற்றே நீளமான கவிதை ஒன்று நினைவுள்ளது. அக்காலத்தில் அவர் உயிரோசையில் எழுதினது, என்னிடம் பகிர்ந்து கொண்டவை கவனிக்கத்தக்க கவிதைகள் தாம். அசோகமித்திரனின் ஒரு கதையில் ஒருவர் பெரும் சக்திகளைப் பெறுவதற்காக வருடக்கணக்கில் தியானம் இருப்பார். ஆனால் விழிப்புணர்வு பெறுவதற்கு ஒருநாள் முன்பு பொறுக்க முடியாது தியானம் கலைந்து எழுந்து விடுவார். ஒரே ஒரு நாள் தானே பொறுத்திருக்கலாமே எனத் தோன்றும். வாழ்க்கை அந்தளவுக்கு அபத்தமானதா என நினைப்போம். எனக்கு வா.மணிகண்டன் இன்னும் சில வருடங்கள் தொடர்ந்து கவிதை எழுதி இருக்கலாம் எனத் தோன்றும். கவிதையில் அந்த ஒழுக்கு, தொடர்ச்சி முக்கியம். சட்டென சில கதவுகளைத் திறந்து கொண்டு இன்று இசை இருக்கிற இடத்துக்கு வந்திருக்கலாம். இப்போதும் ஒன்றும் குறையில்லை. அவர் தன் கவிதை எழுத்தை தொடரலாம்.

பத்து வருடங்களுக்கு முன்பு பிரபலமாய் இருந்த பிளாகர்கள் எங்கே? நின்று விட்டவர்களை மறந்து விட்டோம். நானும் வா.மணிகண்டனும் பிறரும் எழுதும் பிளாக் பதிவுகளுக்கு எதிர்காலத்தில் எந்த மதிப்பும் இல்லை. ஒரு முப்பது நாப்பது வருடமேனும் நிலைக்கிற படைப்புகளை எழுத வேண்டியதும் அவசியம் தான். ஏனென்றால் நாம் எப்போதும் இன்றிலேயே நின்று கொண்டிருக்க முடியாது. ரொம்ப ரொம்ப கஷ்டம் அது.

அவர் மீது இன்னொரு சின்ன குறை. சில பிரச்சனைகளுக்கு அவர் வேண்டுமென்றே பொது வாசகர்களின் செண்டிமெண்ட்களை ஒட்டி எதிர்வினையாற்றுகிறார். இது அவரை அவர்களுக்கு நெருங்கி உணர வைக்கிறது. ஆனால் இது அவரது உண்மையான நிலைப்பாடு அல்ல என எனக்குத் தெரியும். இலக்கிய, தீவிர அரசியல், சித்தாந்த வாசனை அற்றவர்களுக்கு தோதாக தன்னை “தகவமைக்கிறார்”. ஆனால் அப்படி தன்னை வளைத்துக் கொள்வது தேவையா என்ன? ஒருவேளை இது தான் அவரது உண்மையான ஆளுமை என்றால் “நிசப்தத்திற்கு-முன்” மணிகண்டன் பொய்யா? அவரை சங்கடத்துக்கு உள்ளாக்க இதை எழுதவில்லை. கேட்க தோன்றியது அவ்வளவு தான். அதே போல் வா.மணிகண்டனிடம் இரு மொழிகள் உள்ளன. ஒன்று அவரது மொழி. இன்னொன்று சுஜாதா பாணியிலான மொழி. இதில் எது ஒரிஜினல்? இதையும் நான் அவரை சங்கடத்துள்ளாக்க கேட்கவில்லை.

இப்படி இப்படியாப் பட்ட வா.மணிகண்டனுக்கு இன்று பிறந்த நாள். முதலில் ஒரு வாசகனாகவும் பிறகு நண்பனாகவும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். 

No comments: