Wednesday, April 1, 2015

உலகக்கோப்பையில் நம் ஆட்டநாயகர்கள்


-    (இரு வாரத்துக்கு முன்பான “கல்கி” இதழில் வெளியான கட்டுரை. உலகக் கோப்பை அரை இறுதிக்கு முன்பு எழுதியது)

 Image result for india 2015 worldcup

ஆஸ்திரேலியா, நியுசிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பையில் இந்தியா தன் ஆறு ஆட்டங்களையும் நிறைவான முறையில் வென்று தனது குழுவில் முதலிடத்தில் உள்ளது. இந்த ஏறுமுகத்துக்கு காரணமான நட்சத்திரங்கள் யார் யார் எனப் பார்ப்போம்.


விராத் கோலி:
இந்திய பொருளாதாரத்துக்கு பெட்ரோல் விலை போன்றது விராத் கோலியின் ஆட்டம் இந்திய அணிக்கு. கோலி தொடர்ந்து ஓட்டங்கள் குவிப்பதே இந்தியா அரை இறுதிக்கு செல்ல ஒரே வாய்ப்பு என நிபுணர்கள் கணித்தனர். ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு சற்று முன்பு முத்தரப்பு தொடரில் கோலியில் ஆட்டநிலை தரை தட்டியது. அவருக்கும் தோனிக்கும் அதிகாரப் போட்டி என கூறப்பட்டது. இதோடு கோலிக்கும் அனுஷ்கா ஷர்மாவுக்குமான காதல் பற்றின கிசுகிசுக்கள் பத்திரிகை செய்திகளில் லெக் பீஸ் போல் ஆனது. எப்போதெல்லாம் அனுஷ்கா பற்றி பேச்செழுந்ததோ அப்போதெல்லாம் கோலியின் ரத்தம் கொதித்தது. விளைவாக அவர் ஒரு பத்திரிகையாளரை தவறாக அடையாளம் புரிந்து கொண்டு வசைபாடினார். இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை கடுமையாக கண்டித்தது. இவ்வளவு குழப்படிகளுக்கு மத்தியிலும் கோலி தன் நிதானத்தையும் முதிர்ச்சியையும் ஆட்டத்தில் இழக்கவில்லை என்பது ஆச்சரியம். மட்டையுடன் களத்தில் இறங்கும் போது தனது கோப ஆற்றலையெல்லாம் ஆட்டத்தில் குவித்து எந்திரம் போல் ஓட்டங்களை குவிக்கும் அபார திறமை கோலிக்கு உண்டு. மைதானத்துக்குள் அவர் ஒரு கமல், வெளியே சிம்பு என்றாலும். பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஆட்டத்தில் அவர் அடித்த சதம் (107) அவரது புத்திசாலித்தனத்துக்கும் கவனத்துக்கும் சான்று. கோலிக்கு தேவையெல்லாம் ஒற்றை, இரட்டை ஓட்டங்கள் தாம். முதல் நாற்பது ஓட்டங்களை அவ்வாறு பெற்று விட்டால் பிறகு அவர் சதம் அடிப்பதில் இருந்து அவரே நினைத்தாலும் தடுக்க முடியாது. போஸ்டர்களையும் எச்சில் இலைகளையும் தின்று வாழும் சென்னையின் பசுமாடுகளை போன்றவர் அவர். ஆட்டநிலை அவருக்கு பொருட்டே அல்ல. சாமர்த்தியமாக காய்நகர்த்தி எந்த ரிஸ்கும் இன்றி சதம் அடிக்கும் விதம் அவர் ஒருநாள் ஆட்டத்தை ஒரு கலையாக மாற்றி விட்டார்.

ஷிக்கர் தவன்
2013இல் ஷிக்கர் தவன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் தன் முதல் ஆட்டத்தில் 187 அடித்த போது அவரை அதுவரை கவனித்து வந்த பலராலும் நம்ப முடியவில்லை. ஒன்பது வருடங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் துணை நடிகராக இருந்து வந்தவர் அன்று முதல் இந்திய அணியின் மீசை முறுக்கிய முதன்மை நாயகன் ஆனார். தவன் இது போல் தன் ரசிகர்களை அடிக்கடி அதிர வைப்பார். டெஸ்டுகளில் மோசமான ஆட்டநிலையில் இருப்பார். கடுமையாய் அவர் விமர்சிக்கப்படுவார். திடீரென ஒருநாள் ஆட்டங்களில் அபாரமாய் ஆடி கவனம் பெறுவார். அவருக்கு வெளிநாட்டில் ஆடவராது என கூறினார்கள். ஆனால் சாம்பியன்ஸ் கோப்பையில் இங்கிலாந்திலும், பின்னர் நியுசிலாந்தில் டெஸ்டுகளில் அபாரமாய் சதங்கள் அடித்தார். தவன் அடிக்கடி ஸ்டார்டிங் டிரபிள் கொண்ட ஒரு பார்முலா ஒன் கார். ஓடத்தொடங்கினால் பிறகு பிடிக்க முடியாது. உலகக்கோப்பைக்கு சற்று முன் வரை அக்கார் ஒரு அங்குலம் கூட நகரவில்லை. ஆனால் உலகக்கோப்பையில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அரைசதத்தின் போது சட்டென இக்கார் சீறிக் கிளம்பியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 137 ரன்கள் அடித்து அனைவரையும் முந்தி முன்னிலைக்கு போனது. தவனின் இந்த சதத்தின் சிறப்புகள் பவர் பிளே முடிந்த பிறகான மத்திய ஓவர்களில் அவர் ஒற்றை, இரட்டை ஓட்டங்களை சாமர்த்தியமாய் எடுத்த பாங்கு, இரண்டாவது பவர் பிளேயில் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களை காக்காய் விரட்டுவது போல் சிதறடித்த கம்பீரம், அதன் பிறகும் கவனம் இழக்காமல் கிட்டத்தட்ட இறுதி வரை நின்று ஆடிய நிதானம் ஆகியவை. தவன் மற்றொரு ஆட்டத்தில் ஐயர்லாந்துக்கு எதிராய் எண்பது சொச்சம் பந்துகளில் 100 அடித்தார். புயலைப் போல் அவர் சுழன்றடித்த வேகத்தில் அன்று ஐயர்லாந்தின் குடிசை வீட்டு பந்து வீச்சாளர்களின் கூரைகள் காணாமல் போயின. அவ்வாட்டத்திலும் தவன் தான் ஆட்டநாயகன்.

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா மற்றொரு பார்முலா ஒன் கார். அவரது பிரச்சனை ஆனால் வேறு. அவருக்கு முதல், இரண்டாவது கியர்கள் போடத் தெரியாது. எடுத்த உடனே வேகம் தான். முட்டி விபத்தாகி பல சமயம் ரெய்னா சீக்கிரமே வெளியேறி விடுவார். ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 92க்கு 4 விக்கெட்களை இழந்து உலகக்கோப்பை லீக் போட்டிகளில் தன் முதல் தோல்விக்கான தயார்நிலையில் இருந்தது. தோனியும் ரெய்னாவும் இணைந்து 196 ஓட்டங்களை ஒரு இந்திய மத்தியர் வர்க்க அப்பா பெண்ணுக்கு நகை சேர்ப்பதை போல் அக்கறையாய், கவனமாய் சேர்த்தனர். இதில் ரெய்னாவின் 110 ஓட்டங்கள் தனிச்சிறப்பானது. அன்று அவர் தன் ஈகோவை அடக்கிக் கொண்டு இரண்டாவது கியரில் பொறுமையாக ஓட்டினார். எப்போதெல்லாம் புது பொம்மை வாங்கின குழந்தை போல் பந்து நோக்கி உணர்ச்சிவசப்பட்டு அடித்தாரோ அப்போதெல்லாம் தோனி அவரை அமைதிப்படுத்தினார். சரியான ஆட்டநிலையில் இல்லாத போதும் தன் உழைப்பு, கவனம் மூலம் ரெய்னா எடுத்த இச்சதம் அவருக்கு தனது இன்னொரு பரிமாணத்தை காட்டிக் கொடுத்தது. சற்றே கோலியிடம் இருந்து கற்றுக் கொண்டால் அவரால் இது போல் பல சதங்களை அடிக்க முடியும் என உணர்ந்து கொண்டார்.

அஷ்வின்
கடந்த இரண்டு வருடங்களாக அஷ்வினின் ஆட்டநிலை மோசமாய் தான் இருந்து வந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் கட்டுப்பாடோ கூர்மையோ ஒன்றி வீசினார். ஆனால் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அஷ்வினின் பந்து வீச்சு மேம்பட்டது. ஆஸ்திரேலியாவிலும் அவர் நன்றாக வீச ஆரம்பித்தார். உலகக்கோப்பையில் இந்தியாவின் மிக முக்கிய வீச்சாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். குறிப்பாக யு.ஏ.இ அணிக்கு எதிராக 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா சுலபமாய் அவ்வாட்டத்தை வெல்ல உதவினார். அஷ்வினின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் தன் வேகத்தை தொடர்ந்து மாற்றுவது, இரண்டு விரல்களுக்கு இடையில் பந்தைப் பிடித்து வீசும் ஆர்ம் பந்தை பயன்படுத்தும் புத்திசாலித்தனம் மற்றும் அவர் தைரியமாய் பந்தை காற்றில் மிதக்க விடுவது (flight). அஷ்வின் இந்த ஆட்டத்தில் ஆட்டநாயக விருதைப் பெற்று இந்தியாவின் உலகக்கோப்பை எழுச்சியில் பந்து வீச்சாளர்களின் பங்கு அளப்பரியது என நிறுவினார்.

முகமது ஷாமி

ஷாமி இந்த உலகக்கோப்பையில் இந்தியாவின் முதன்மை ஏவுகணை. பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றிகளுக்கு அடித்தளம் அமைத்தவர் இவர் தான். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து எதிரணியை கோழியை போல் தண்ணீருக்குள் முக்கி மூர்ச்சையடைய வைத்தார். ஆஸ்திரேலிய ஆடுதளங்களில் சற்றே குறைநீளத்தில் வீசக் கற்றுக் கொண்டதும், நியுசிலாந்தில் முழுநீளத்துக்கு வீசி தன்னை தகவமைத்துக் கொள்ள முடிந்ததும் ஷாமியின் சிறப்பான வீச்சுக்கு காரணங்கள். 

No comments: