Tuesday, March 24, 2015

குற்றம் கடிதல்

Image result for kutram kadithal


சமீபத்திய சென்னை திரைப்பட விழாவில் என்னை மிகவும் கவர்ந்த படங்களில் ஒன்று “குற்றம் கடிதல்”. அப்போதே அதைப் பற்றி எழுத உத்தேசித்தேன். ஆனால் நேரம் வாய்க்கவில்லை. இப்போது தான் சரியான வேளை. அப்படத்துக்கு இவ்வருடத்துக்கான சிறந்த தமிழ்ப்படம் எனும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் பிரம்மா மற்றும் பிற நடிக, நடிகையர், குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். “குற்றம் கடிதல்” திரையரங்குகளில் வெளியாவதற்கு இந்த விருது வழிகோலும் என எதிர்பார்ப்போம். மிகவும் மகிழ்ச்சி அளிக்கிற விருது இது.

“குற்றம் கடிதல்” பாலாஜி சக்திவேல் பாணியிலான படம். ஒரு ஆசிரியை செய்யும் குற்றம், அதன் சமூக, உளவியல் பின்னணி, கொஞ்சம் அறிவுரை, நுணுக்கமான நடிப்பு, ஆவணப்பட தொனி என படம் பயணிக்கிறது. 

 வகுப்பறைக்குள் ஒரு சிறுவன் இழைக்கிற குற்றம், எதேச்சையாய் அவனை தண்டிக்க நினைத்து ஒரு ஆசிரியை இழைக்கிற மற்றொரு குற்றம், இதற்கான காரணங்கள் என்ன எனும் விவாதம் இது தான் இப்படத்தின் மையம்.

மாணவர்கள் அடிக்கடி இது போல் தாக்கப்படுவது பற்றி செய்தி கேள்விப்படுகிறோம். இப்படம் இதற்கு கூறும் காரணம் ஆசிரியர்கள் குழந்தைகளை தம் குழந்தைகளாக எண்ணி நேசிப்பதில்லை என்பது. படத்தின் பாதியில் பாரதியின் “சின்னஞ்சிறு கிளியே” பாடலின் அருமையான காட்சிப்படுத்தல் வருகிறது. அப்பாடலின் ஊடே ஆசிரியை அச்சிறுவனை தன் மகனாக ஏற்று உண்மையான அன்பை உணர்வது காட்டப்படுகிறது. தமிழ் சினிமாவின் சிறந்த பாடல் காட்சிப்படுத்தல்களில் இது ஒன்று. மிகுந்த காட்சிபூர்வமாய், நெகிழ வைப்பதாய், ஆழம் மிக்கதாய் உள்ளது இப்பாடல்.

அறம், குற்றவுணர்வு, நன்மை தீமைக்கு இடையினான குற்றமனதின் ஊசலாட்டம் ஆகிய கருக்கள் இப்படத்தில் முதிர்ச்சியுடன் கையாளப்பட்டுள்ளன. சொல்லப்போனால் இவை சற்று கிறுத்துவத்தன்மை கொண்ட கருக்கள். பொதுவாக இந்திய சினிமாவில் குற்றவுணர்வின் தத்தளிப்பு பற்றி அதிகம் பேசப்பட்டதில்லை. இது ஒரு ஐரோப்பிய பிரச்சனை. குறிப்பாக ரஷ்ய நாவல்களில் மிக விரிவாக அலசப்பட்டுள்ள விசயங்கள் இவை. அதனால் இவற்றை தமிழ் சினிமாவில் பேசக் கூடாதென்று இல்லை. தாராளமாய் செய்யலாம். படத்திற்கு பெரும் ஆழத்தையும் தீவிரத்தையும் அவை அளிக்கும்.

ஒரு கட்டத்திற்கு மேல் படத்தில் அறிவுரை ரொம்ப தூக்கல் என்பது ஒரு சின்ன பலவீனம். ஆனால் குற்றத்தை அலசுவதில் பாலாஜி சக்திவேலை விட ஆழமாய் பிரம்மா பயணிக்கிறார்.

இப்படத்தில் நாயகியின் தோழியான மற்றொரு ஆசிரியை வருகிறார். அவருக்கு விடுப்பு தேவைப்படுவதால் அவரது வகுப்பை நாயகி எடுக்க நேர்கிறது. அடிவாங்கும் சிறுவனை அந்த ஆசிரியை மிகவும் செல்லங்கொடுத்து அன்பாக பார்த்துக் கொள்வார். அவனது குறும்புகளை அவர் மிகவும் ஊக்குவிப்பார். மெர்லின் ரொம்ப தீவிரம் என்றால் அவர் ஜாலியான பெண். இரண்டு ஆசிரியைகளும் இரு துருவங்கள். இதில் எது சரி?

 அச்சிறுவனும் குற்றம் செய்திருக்க கூடாது தானே. அதற்கு அவனுக்கும் இடம் அளித்தது ஜாலியான ஆசிரியையும் அவரைப் போன்றவர்களும் தானே. என்னைப் பொறுத்த வரையில் மாணவர்களை ஓரளவு கண்டிப்புடன் நடத்த வேண்டும். தண்டிக்கவும் வேண்டும். ஆனால் உடல்ரீதியாகவோ கோபமான மொழியின் வாயிலாகவோ அல்ல. மிக நுணுக்கமாக உளவியல் ரீதியாய் மாணவர்களை கட்டுப்படுத்த இயலும்.

இச்சிறுவனை தனியாக அழைத்து இரண்டு நிமிடம் அவனது அப்பா, அம்மா பற்றி விசாரித்தாலே போதும் அவன் அமைதியாகி விடுவான். அது பலிக்காவிட்டால் அடுத்த கட்டமாக அவனை அசம்பிளியில் மாணவிடம் மன்னிப்பு கேட்க வைக்கலாம். ஒருநாள் முழுக்க வெளியில் நிற்க வைக்கலாம். அவன் அம்மாவிடம் புகார் அளித்து விசாரிக்கலாம். அதுவும் பலிக்காவிட்டால் அவன் வசிக்கிற பகுதிக்கு சென்று அங்குள்ளவர்களிடம் அவனது சுபாவத்தை பற்றி பேசினால் போதும். நான் எத்தனையோ மாணவர்களை முதல் முறையிலேயே அடக்கி இருக்கிறேன். என் வகுப்பில் மிக மோசமான சேட்டைக்காரர்களை பார்த்திருக்கிறேன். அவர்களை நான் திட்டியதோ வெளியே அனுப்பியதோ கூட இல்லை. அவர்கள் பக்கத்தில் போய் உட்கார்த்து பத்து நிமிடம் நட்பாய் பேசுவேன். குடும்ப சூழல் பற்றி விசாரிப்பேன். முன் பெஞ்சில் உட்கார வைத்து அவர்களிடம் பேசிக் கொண்டே இருப்பேன். அவர்கள் அதற்கு மேல் எனது எல்லா வகுப்பிலும் அமைதியாக இருப்பது மட்டுமன்றி அடுத்த மாணவர்களையும் அமைதி ஆக்குவார்கள். என் செல்லம் ஆகி விடுவார்கள். எங்கு போனாலும் என்னைப் பார்த்து அன்பில் குழைவார்கள்.

மாணவர்களை சொந்த குழந்தையாக பாவிப்பது நடைமுறையில் எழுபது பிள்ளைகள் இருக்கிற நெருக்கடியான வகுப்புகளில் சாத்தியமில்லை. மேலும் அன்பு காட்டுவது நமக்கு ஒரு இடைஞ்சலாக கூட மாறும். உணர்ச்சிவசப்பட்டால் பாடம் கற்பிக்க முடியாது. ஒரு நல்ல ஆசிரியருக்கு ஒரு விலகல் மனப்பான்மை அவசியம். மாணவர்களை கட்டுப்படுத்த முயலக் கூடாது. கையாள வேண்டும்.

 அச்சிறுவனை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லையே எனும் கோபம் தான் நாயகியை அவனை தாக்க வைக்கிறது. அவனை எப்படி கையாள்வது என யோசித்திருந்தால் பிரச்சனை சுலபமாக முடிந்திருக்கும். ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு தன்னை பொறுப்பாக நினைப்பது ஒரு பிழையான அணுகுமுறை. பொறுப்பாக நம்மை நினைக்கும் போது தான் மாணவரின் நடத்தை நமக்கு கோபம் உண்டு பண்ணுகிறது. மாணவர்கள் அடிப்படையில் குழந்தைகள் என்றாலும் அவர்கள் தீமையும் சிக்கலும் நிறைந்த மனிதர்களே. அவர்களை ஒழுக்கப்படுத்துவது அல்ல வழிகாட்டுவது தான் ஆசிரியரின் பொறுப்பு.

மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலை ஏற்காத போதும் ஆசிரியர் கவலைப்படல் ஆகாது. எப்போதும் மாணவர்களை நமக்கு இணையாக நினைக்க வேண்டும். எப்படி நம்மால் குற்றமற்றவராக இருக்க இயலாதோ அது போன்றே அவர்களாலும் முடியாது. நாம் அவர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும். அவர்களுக்கு எது நடந்தாலும் அவர்களே பொறுப்பு. ஆசிரியர் அல்ல. ஆசிரியரால் ஓரளவு உதவ மட்டுமே முடியும். இந்த தெளிவு இருந்தால் எந்த வகுப்பிலும் ஆசிரியருக்கு பிரச்சனைகள் ஏற்படாது. ஆசிரியர்களால் மாணவர்களுக்கு காயங்களும் ஏற்படாது. அடிப்படையில் வகுப்பறை குற்றங்கள் ஆசிரியர்கள் தம் வேலையில் மிதமிஞ்சி உணர்ச்சி வசப்படுவதால் நடக்கின்றன.

நான் முன்னர் வேலை செய்த கல்லூரியில் ஒருநாள் மதியத்திற்கு மேலான மாலை கல்லூரி நடந்து கொண்டிருந்தது. பகல் கல்லூரியை சேர்ந்த மாணவன் ஒருவன் ஒரு வகுப்பின் பக்கமாய் நடந்து ஜன்னல் கதவை தட்டி ஓசை எழுப்பினான். உள்ளே வகுப்பில் இருந்த தமிழ் ஆசிரியர் வெளியே வந்து அவனிடம் கோபமாய் கத்தினார். மிரட்டினார். அவன் எதிர்த்து பேச இருவருக்கும் இடையே தகராறு மூண்டது. கோபத்தில் அவர் அவனை அடித்தார். அவன் லோக்கல் பையன். உடனே சென்று உள்ளூர் ஆட்களை திரட்டி வந்து கல்லூரியை தாக்கினான். மாணவர்களை திரட்டி வேலை நிறுத்தம் ஆரம்பித்தான். தொடர்ந்து ஒருவாரம் கல்லூரி இயங்கவில்லை. கல்லூரியின் கட்டிடங்கள் மற்றும் இயற்கைக்கு கடுமையான சேதம் ஏற்பட்டது. பெயர் களங்கப்பட்டது. இத்தனையும் நடந்தது ஒரு ஆசிரியரின் உணர்ச்சிவேகத்தால். தன்னை எதிர்த்து எப்படி ஒரு மாணவன் பேசலாம் எனும் கர்வத்தால். அப்பையனை அவர் உதாசினித்திருந்தால் அது ஒரு பிரச்சனையே ஆகியிருக்காது.


அதே கல்லூரியில் என்னுடைய வகுப்பொன்றில் வேறொரு துறையின் வேறொரு வகுப்பு மாணவன் இருந்ததை சற்று பிந்தி கண்டுபிடித்தேன். என்னை ஏன் ஏமாற்றி வகுப்பில் உட்கார்ந்தான் என எனக்கு கோபம் ஏற்பட்டது. நான் என் துறைத்தலைவரிடம் தெரிவித்தேன். அவர் அவனை அழைத்து கண்டித்தார். அவன் என்னிடம் வந்து கோபமாய் பேசினான். நான் அவன் துறைத்தலைவரிடம் புகார் சொன்னேன். அவனுக்கு நெருக்கடி அதிகமானது. இதனிடையே அவனது காதலியாகிய ஒரு மாணவி என்னைத் தேடி வந்து நிலவரத்தை விளக்கினாள். என் வகுப்பு துவங்குவதற்கு முன் அவன் அவளைப் பார்க்க வகுப்புக்கு வந்திருக்கிறான். நான் சட்டென உள்ளே நுழைய அவனால் வெளியே போக முடியவில்லை. என் வகுப்பின் மாணவன் போல் நடித்து முழு வகுப்பும் அங்கேயே இருந்தான். இந்த கதை தெரிந்ததும் எனக்கு அந்த ஜோடி மீது பரிதாபம் ஏற்பட்டது. சிரிப்பாகவும் வந்தது. அப்பெண் என்னிடம் மன்னிப்பு கேட்டாள். நான் அப்பையனின் துறைத்தலைவரிடம் சென்று புகாரை பின்வாங்கி பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டேன். அதுவரை ஈகோ பிடித்து என்னை பார்க்குமிடமெல்லாம் முறைத்து திரிந்த மாணவன் என்னைத் தேடி வந்து மன்னிப்பு கேட்டான். நான் பரவாயில்லை என்றேன். அவன் அதற்கு பிறகு பத்து தடவையாவது என்னிடம் மன்னிப்பு கேட்டிருப்பான். என்னை எங்கு பார்த்தாலும் மிகுந்த மரியாதையும் அன்பும் காட்டுவான்.

 நான் அவனை தாராள மனதுடன் மன்னித்து விட்டதாய் அவன் நினைத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஆரம்பத்திலே அவனிடம் கோபம் இல்லை. அவனுக்கு ஒரு வகுப்புக்கு சென்று காதலியுடன் அமர்வது எப்படி ஒரு விளையாட்டோ அது போல் இதுவும் எனக்கு விளையாட்டு தான். அவன் காதலி வந்து உண்மையை சொல்லியிரா விட்டால் இவ்விளையாட்டை இன்னும் சில வாரங்கள் தொடர்ந்திருப்பேன். ஆனால் எப்போதும் அவனை சீரியசாக எடுத்து பழிவாங்கவோ திருத்தவோ முயன்றிருக்க மாட்டேன். அது என் வேலை அல்ல.

No comments: