Monday, March 30, 2015

புத்தகக் கண்காட்சியும் சிற்றூரும்

ஜூட் ராஜ் எனும் நண்பர் தூத்துக்குடியை சேர்ந்தவர். அவர் ஒரு கேள்வியை கேட்டார். சென்னை போல் ஏன் தன் ஊரில் புத்தகக் கண்காட்சியே நடப்பதில்லை? சிற்றூர்களில் புத்தகக் கண்காட்சி நடத்துவதன் பிரச்சனைகள் பற்றி சில பதிப்பாளர்கள் என்னிடம் ஏற்கனவே புலம்பி உள்ளதால் இது பற்றி சில விசயங்கள் எழுதத் தோன்றிற்று. அவருக்கு நான் எழுதிய பதில் கீழே:


புத்தகக் கண்காட்சி நிறைய சிற்றூர்களில் லாபகரமாய் நடப்பதில்லை என்பதே நிதர்சனம். ஆனாலும் பல பதிப்பகங்கள் பிடிவாதமாய் சிறு புத்தகக் கண்காட்சிகளில் கலந்து கொண்டு நஷ்டமடைகிறார்கள். ஒரு சிற்றூரில் நடக்கும் கண்காட்சியில் கலந்து கொள்ள பதிப்பாளருக்கு புத்தகங்களை வண்டியில் ஏற்றிப் போகும் செலவு, கடையில் இருக்க வேண்டிய ஊழியரின் சம்பளம், தங்க வேண்டிய விடுதி, சாப்பாடு கட்டணம் இவையெல்லாம் போக புத்தக விற்பனை மூலம் சொற்ப லாபம் எஞ்சும் அல்லது நஷ்டம் ஆகும்.
உங்கள் ஊரிலே புத்தகம் வாங்குவதை ஒரு சொகுசு நடவடிக்கையாகத் தான் பலரும் நினைப்பார்கள். அது உண்மையும் தான். புத்தகங்கள் வாசிப்பது, ஓவியம் ரசிப்பது, இசை கேட்பது ஆகியவை எல்லாம் எலைட்டிஸ்ட் மனப்பான்மையின் நீட்சி தான். ஆனால் எலைட்டிஸ்டாக இருப்பதில் தவறேதும் இல்லை. மேட்டிமைத்தனம் தீண்டாத பட்சத்தில் எலைட்டிசம் ஒரு உயர் பண்பாடாக இருக்கும். ஆனால் அந்த உயர் பண்பாட்டை நுகரும் தேவை கணிசமான மக்களுக்கு இல்லை. அவர்களுக்கு வாழ்க்கையை எப்படியோ வாழ்ந்தால் போதும். உங்களைப் போன்றோருக்கு வாழ்க்கையை உன்னதமாக, நுட்பமாக, ஆழமாக வாழ வேண்டும். வாழ்க்கையை ஆழமாக அழகாக வாழ வேண்டும் எனும் எண்ணத்தை முதல் வகை மக்களுக்குள் ஏற்படுத்தினால் மட்டுமே புத்தக விற்பனை சாத்தியமாகும். ஒருமுறை மனுஷ்யபுத்திரன் சொன்னார் “செல்போன், சோப்பு, ஆடை போன்ற பண்டங்கள் எல்லாம் மக்களுக்கு தேவையானவை. அவற்றை உற்பத்தி பண்ணினாலே மக்கள் வாங்குவார்கள். ஆனால் புத்தகங்களை உற்பத்தி பண்ணி அவற்றுக்கான தேவையையும் ஒரு பதிப்பாளன் உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் அவற்றை வாங்கும் அவசியமே மக்களுக்கு இல்லாமல் போகும்”.
 மக்கள் ஏன் புத்தகம் வாங்குவதில்லை என்பதை அவர்கள் தரப்பில் இருந்து புரிந்து கொள்ளவே இதைச் சொன்னேன். அவர்களை அந்த உயர் பண்பாட்டை நோக்கி வரத் தூண்டுகிற பணியை செய்யும் ஆட்கள் நீங்கள் வசிப்பது போன்ற சிற்றூர்களில் இல்லை.
சென்னை போன்ற பெருநகரங்களிலும் ஒரு உயர்பண்பாடு இல்லை தான். ஆனால் இங்கே ஒரு நுகர்வு பண்பாடு உள்ளது. அதனால் இங்கே புத்தகங்களை விற்க முடிகிறது. சிற்றூர்களை விட அதிகமாய் இங்கு புத்தகக் கூட்டங்கள், மக்கள் சந்திப்புக்கான சாத்தியங்கள் உள்ளன. அவையும் புத்தக விற்பனைக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகின்றன.
பெரம்பூர் போன்ற சிறு நகரங்களில் அரசின் உதவியுடன், அங்குள்ள கலெக்டர் மற்றும் பஞ்சாயத்து தலைவர்களின் பங்களிப்புடன் புத்தகக் கண்காட்சி மிகவும் சிறப்பாக லாபகரமாக நடக்கிறது. கண்காட்சியின் போது ஒவ்வொரு கிராமத்து நூலகத்துக்குமான புத்தகங்களை பஞ்சாயத்து சார்பில் வாங்கி கொடுக்கிறார்கள். ஒவ்வொரு நாளின் நிகழ்ச்சிக்கான செலவு ஒரு பள்ளிக்கூடம் ஏற்றுக் கொள்கிறது. மாணவர்களை இலவசமாய் பேருந்தில் அழைத்து வந்து கண்காட்சியை காட்டி இலவசமாய் புத்தகங்கள் வாங்கி அளிக்கிறார்கள். அரசு அளவில் தீவிரமான நுண்ணுணர்வுள்ள அதிகாரிகள், ஒரு திறமையான ஆட்சியாளர் உள்ள பட்சத்தில் உங்கள் ஊரிலும் இது போன்று வெற்றிகரமான கண்காட்சிகளை நடத்தலாம்.
நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு வாசகர் வட்டம் ஆரம்பியுங்கள். வாராவாரம் சின்ன சந்திப்புகள் நடத்துங்கள். முகநூல், பிளாக் போன்ற சாத்தியங்களை கொண்டு விளம்பரப்படுத்தி சமூகமாக்கல் செய்யுங்கள். ஒரு சின்ன சலசலப்பை உண்டு பண்ணுங்கள். உங்கள் ஊரில் ஒரு மாற்றம் வர வேண்டும் என தொடர்ந்து பேசுங்கள். எதிரொலி இல்லாத ஒலியே இல்லை. முதல் கல்லை நீங்கள் தூக்கிப் போடுங்கள்.

நாகர்கோயிலில் எங்கள் ஊரில் கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய சின்ன சின்ன கூட்டங்களில் கலந்து கொண்ட உத்வேகத்தில் தான் நான் ஒரு இலக்கிய வாசகன் ஆனேன். புத்தகங்கள் வாங்க கிடைக்காமல் நிறைய அலைந்திருக்கிறேன். கடன் வாங்கி இரவோடு இரவாக தூங்காமல் படித்திருக்கிறேன். இன்று எங்கள் ஊரில் இருந்து தோன்றி வளர்ந்துள்ள பல எழுத்தாளர்கள் இந்த சிறு கூட்டங்களில் இருந்து முதல் தூண்டுதல் பெற்றவர்களே. புத்தகக் கண்காட்சி என்ன உங்கள் ஊர் தூத்துக்குடியில் அண்ணா நூலகம் போன்று உலகத்தரத்திலான ஒரு பெரிய நூலகமே வரும். நம்பிக்கையோடு இருங்கள்! 

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

சென்னை, நாகர் வாசக வட்ட நண்பர்கள் சிறு தொகை ஒதுக்கலாம், பிற ஊர் புத்தக கண்காட்சிக்கு

jude raj said...

நிதர்சனத்தை புரிய வைத்ததற்கு நன்றி மற்றும்
கண்டிப்பாக என்னால் முடிந்த முயற்சிகளை செய்கிறேன் சார்