Tuesday, March 3, 2015

உட்கார்ந்து விளையாடு பாப்பா!

1.22 பில்லியன் மக்கள் உள்ள ஒரு நாட்டில் ஏன் ஒலிம்பிக்கில் பதக்கங்களை அள்ளி வருவதற்காக வீரர்கள் இல்லாமல் போயிற்று என்பது நாம் அடிக்கடி வீராவேசமாக கேட்கும் கேள்வி. ஆனால் நமக்கு ஒரு விளையாட்டு கலாச்சாரம் ஏன் இல்லை என நாம் யோசிக்க தலைப்படுவதில்லை. ஒரு ஓய்வு நாளில் நாம் கடற்கரையிலோ பூங்காவிலோ நண்பர்களுடனோ குடும்பமாகவோ சென்று விளையாடுவதுண்டா?

 ஆனால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியுசிலாந்தில் அத்தகைய கலாச்சாரம் உள்ளது. கோவா, கோவளம் கடற்கரைகளில் வரும் வெள்ளைக்காரர்கள் தம் சிறுகுழந்தைகளைக் கூட அலைச்சறுக்கு பலகையில் ஏற்றி விட்டு விளையாட பழக்குகிறார்கள்.
நம் சீதோஷ்ண நிலை காரணமாகவோ அரிசி, சைவ உணவு காரணமாகவோ உடலை வருத்தி சுறுசுறுப்பாய் இருப்பதில் ஆர்வமற்றவர்களாக இருக்கிறோம். இன்று நகரங்களில் மட்டுமல்ல கணிசமான கிராமங்களில் கூட நம்முடைய ஒரு முழுநாள் என்பது உடலை வருத்தாமல், வெயிலில் வாடாமல் கழிகிறது. அவ்வாறு இருப்பது தான் மேற்தட்டினரின் நிலை என நாம் உள்ளார நம்புகிறோம். நம் பிள்ளைகள் புழுதியில் விளையாடினால், வியர்த்து களைத்து வந்தால் அவர்களின் அந்தஸ்து தாழ்வதாக நம்புகிறோம். நம்முடைய விளையாட்டு அணுகுமுறைக்கு பின்னால் ஒரு நுணுக்கமான சாதிய மனப்பான்மை உள்ளது.
 நீண்ட தூரம் நடப்பது, விளையாடுவது, வீட்டு வேலைகளை தாமே செய்வது, மலை ஏறுவது போன்ற உடலுழைப்பு சார்ந்த விசயங்கள் ஐரோப்பாவில் உயர்வர்க்கத்தினர் இடையிலும் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. ஆனால் இந்தியாவில் உடலை வருத்துவது, வியர்ப்பது என்பது தாழ்ந்த சாதியினரின் அடையாளமாக உள்ளது. அதனாலே கணிசமான இந்தியர்கள் அதை தவிர்க்க விரும்புகிறார்கள். விளைவாக விளையாட்டு என்பதே வாழ்வில் இருந்து கிட்டத்தட்ட காணாமல் போய் விட்டது. இந்தியாவின் ஒரே பிரபல விளையாட்டான கிரிக்கெட்டிலும் கூட பந்து வீச்சிலும் நாம் காலகாலமாக மிக பலவீனமாக இருப்பது இந்த தீட்டு மனோபாவத்தால் தான். யாரோ ஒருவர் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்து பந்தை வீச நின்ற நிலையில் அதை ஸ்டைலாக அடிப்பது நமக்கு பிடித்திருக்கிறது. கிரிக்கெட் ஆடுபவர்களில் இங்கு கணிசமானோர் மட்டையாளர்களாகவே விரும்புகிறார்கள். பந்து வீச்சாளனை நாம் நம் வீடுகளை சுத்தமாகி, நம் சாக்கடைகளை அள்ளும் கூலிக்காரர்களாக பார்க்கிறோம். 

இத்தனை கோடி பேரில் ஒரு சின்ன சதவீதம் தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள். அதிலும் மிக மிக சிறுபான்மையினர் தான் பிற விளையாட்டுகளை முயன்று பார்க்கிறார்கள். நமக்குத் தேவை விளையாட்டு அமைப்புகள், உள்கட்டமைப்புகளோ மட்டுமல்ல. மூளையுழைப்புக்கு நிகராக உடலுழைப்பையும் கருதும் ஒரு அணுகுமுறை மாற்றம் தான்.

நம்முடைய பல வீரவிளையாட்டுகள் காணாமல் போனது பற்றி யோசித்ததுண்டா? மற்போர், சிலம்பம், தொடுவர்மம், நாட்டுச்சண்டைக்கலை ஆகியவற்றில் இன்றும் பயில்பவர்கள் மிகச் சிலர் தான். ஆனால் நாம் இங்கு மிக பரவலாக கற்கும் கராத்தே இங்கிருந்து சீனா சென்று குங் பூவாகி, அங்கிருந்து ஜப்பானுக்கு உலகப்போரின் போது பயணித்து புது வடிவம் பெற்ற ஒரு பாரம்பரியக் கலை வடிவமே. சீனர்களால் ஆயிரக்கணக்கான வருடங்கள் பழைய ஒரு கலை வடிவை தக்க வைத்து உலகம் பூரா பரப்ப முடிகையில் நம்மால் நம் சிலம்பம், அடிமுறைகளை ஏன் உள்ளூரில் கூட பாதுகாக்க இயலவில்லை? 

சீனாவில் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் குங் பூ சிறுவயதில் இருந்து பயில்வது ஒரு முக்கியமான ஒழுக்க கல்வியாக நினைத்து அதை ஊக்குவித்தனர் என்கிறார் புரூஸ் லீ. அதனால் அங்கு காலை வேளையில் பொதுவிடங்களில் எங்கு பார்த்தாலும் யாராவது சிறுகுழுவாக நின்று சண்டைக்கலை பயின்று கொண்டிருப்பார்கள் என்கிறார் அவர். இதனால் அக்கலை மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிப் போயிருந்தது. ஆனால் இந்தியாவில் பொதுவிடங்களில் உட்கார்ந்து வம்பு பேசுவோம். நமக்குத் தெரிந்த ஒரே உடற்பயிற்சி நாவை போட்டு அடிப்பது தான்.

நம்முடைய பிள்ளைகளை அந்தஸ்தை கருதி கர்நாடக சங்கீதம் கற்க அனுப்புகிறோம். ஆனால் அதை தக்க வைப்பதில்லை. சில உயர்தட்டு பள்ளிகளில் சிறுவயதில் இருந்தே குதிரையேற்றம் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் அக்குழந்தை அதை சென்னையில் எங்கே விளையாடப் போகிறது என எனக்கு புரியவில்லை. இப்படி நாம் விளையாட்டை பழக்கினாலும் நிதர்சனத்துக்கு பொருந்தாத மேற்தட்டு மோஸ்தர்களை தான் திணிக்க நினைக்கிறோம்.

விளையாட்டு என்பது சர்வதேச அரங்கில் பதக்கம், கோப்பைகள் வெல்வதற்காக மட்டுமல்ல. அதன் முக்கிய நோக்கம் வாழ்வில் ஒரு சமநிலை அளிப்பது. விளையாட்டு பயிற்சி ஒரு இயல்பான உடல் சார்ந்த தன்னம்பிக்கையை அளிக்கிறது. மனதை நிதானமாக்குகிறது. மனம் நிதானமற்று போகும் போது தான் குடி போதை, மிதமிஞ்சிய கேளிக்கைகளை நோக்கி செல்கிறோம். இன்றைய ஒரு தலைமுறை முழுக்க சுய அழிவு கலாசாரம் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதற்கு, குடித்தும், போதை மருந்துகளில் சிக்கியும், பாலியல் குற்றங்களில் மாட்டியும் அழிவதற்கு இந்த சமநிலையின்மை தான் காரணம். மனம் ஒரு காற்றாடி என்றால் அதன் நூல் நம் உடல். உடல் அறுந்தால் மனதை பிடிக்க முடியாது.
நன்றி: கல்கி

1 comment:

jude raj said...

விளையாட்டு பற்றியும் , உடல் உழைப்பு பற்றி நுண்ணிய பார்வையுடன் சொல்லி இருக்கிறீர்கள். உடலும் மனமும் ஒன்றோரொன்று பின்னி பிணைந்தவை என்பது மறுக்க முடியாதது