Tuesday, March 17, 2015

கேரட்டும் முயலும்


போன வருடம் மார்ச் மாதம் ஒரு மாலையில் என் மனைவி போனில் அழைத்து சொன்னாள் “கறிக்கடையில் இருக்கிறேன்”.
நான் சொன்னேன் “நல்லது அரைக்கிலோ கோழிக்கறி வாங்கி வா”
“இங்கே ஒரு முயல் பார்த்தேன். ரொம்ப சின்னது. அரைக்கிலோ தான் இருக்கும் என்கிறார்கள்”
“ஓ அப்படியா. ரொம்ப நல்லது. அதையே வாங்கி வா. எனக்கு முயல் கறி சாப்பிட வேண்டும் என ரொம்ப நாள் ஆசை”

“நீ ஒரு மனுசனா? எப்படி கேட்கிறாய் பார்! எந்த ஜீவனையும் விட்டு வைக்க மாட்டியா? இந்த முயலை கசாப்பு செய்ய போகிறார்கள் என்ற வருத்தத்தில் நான் இருக்கிறேன். இப்படியா கேட்பது?”
“சரி வேண்டாம். நான் கேட்டதை மறந்து விடு. எனக்கு சிக்கன் வாங்கி வா”
“இந்த முயலை நான் எடுத்த வரப் போகிறேன். நாம் வளர்க்கலாம்”
“ஓ தாராளமா”
“ஆனா நீ ஒரு சத்தியம் பண்ணனும்”
“என்ன?”
“இனி நீ முயல்கறியே சாப்பிடக் கூடாது”
“ஓ சரி”
“அப்புறம் இந்த முயலை நீ ஏதாவது பண்ணி சாப்பிட்ட நான் உன்னை கொன்னுருவேன்”
“நிச்சயமா”
இப்படித் தான் அந்த முயல் வீட்டுக்கு வந்தது. “நிஷி” என பெயர் வைத்தோம். பார்க்க கழற்றி எடுத்த காலுறையைப் போல தோன்றியது. டிவி, கணினி ஒயர்களை பதம் பார்த்தது. என் புத்தகங்களின் நுனிகளை கடித்துப் பார்த்தது. பக்கத்தில் இருக்கும் போது சாமர்த்தியமாய் வந்து என் நெஞ்சு மயிர்களை கருவப் பார்த்தது. எதாவது யோசனையில் மூழ்கி விட்டால் பக்கத்தில் ஸ்ப்ரிங் போல் துள்ளி வந்து நறுக்கென தோளைக் கடித்தது. அதற்கு என்னைப் போல் உருளைக்கிழங்கு பிடிக்கும் என அறிந்து கொண்டேன். கேரட் சாப்பிட்டு அது மூக்கு சிவந்து உட்கார்ந்திருப்பதை ரசித்தேன். அதற்காய் கொத்தமல்லி, புதினா கட்டுகள் தினமும் வாங்கி வரத் தொடங்கினேன். முயல் தண்ணீர் குடிக்காது என என் மனைவிக்கு புரிய மூன்று வாரங்கள் ஆகின. அதுவரை அவள் வைக்கும் தண்ணீர் கிண்ணத்தை அது தட்டி விட்டு மேலே ஏறி உட்காரும். அவள் அதை ஒரு மருத்துவரிடம் கொண்டு போய் காட்டினாள். காய்கறியில் உள்ள நீரே போதுமென்றார். ஆனாலும் இணையத்தில் முயல் நீர் குடிக்கும் என போட்டிருக்கிறார்களே என குழம்பினாள். எங்கள் குரலுக்கு அது செவி மடுத்து, இரண்டு செவிகளையும் சாய்வாய் தூக்கி கொட்ட கொட்ட விழிக்க மூன்று மாதங்கள் பிடித்தன. வளர வளர சேட்டை குறைந்து என் அருகில் அமைதியாய் உட்கார தொடங்கியது. தடவிக் கொடுத்தால் காதுகளை தாழ்த்தி தலையை குனித்து வாங்கிக் கொள்ள தொடங்கியது. இப்படியே சொல்லிக் கொண்டு போய் ஏதோ ஒரு துர்சம்பவம் அதற்கு நடந்ததாய் சொல்லப் போகிறேன் என நினைக்க வேண்டாம். முயல் ஷேமமாய் இருக்கிறது. இன்று அந்த முயலைப் பற்றி எனக்கும் என் மனைவிக்கும் ஒரு விவாதம் நடந்தது. அதை சொல்லத் தான் இவ்வளவும்.
முயலுக்கு ஒரு கேரட் கொடுத்தோம். கேரட்டை பக்கவாட்டாய் கருவி சூப்பின குச்சி ஐஸ் போல் அது ஆக்குவதை பார்த்துக் கொண்டிருந்த போது மனைவி சொன்னாள் “நம்ம முயல் வீட்டுக்கு வந்து நாளையோட ஒரு வருசம் ஆகுது”
“அப்பிடியா ரொம்ப நல்ல விசயம்”
“இப்போ சொல்லு. ஆனா இதைத் தானே அன்னிக்கு கறியாக்கி கொண்டு வரச் சொன்னே?”
“ஆமா. ஆனா அன்னிக்கு இது என் செல்லப்பிராணி இல்லையே”
“சரி அது போகட்டும். எப்படித் தான் முயலையெல்லாம் சாப்பிடிறியோ? ஒரு பிராணியை விட்டு வைக்கிறதில்ல. தமிழ்நாட்டுக்கு மாட்டுக்கறி தடை வந்தால் உன்னை முதல் ஆளா ஜெயிலில புடிச்சு போடப் போறாங்க பார். நான் கண்டிப்பா ஜாமீன் எடுக்க வர மாட்டேன்”
“சரி வேணாம் விடு. நானே பார்த்துக்கிறேன்”
“அப்போ நீ திருந்த மாட்டே? ஒரு ஜீவனை கொண்ணு சாப்பிடுறது தப்புண்ணு உனக்கு தோணலை?”
“இல்லியே. இப்போ பாரேன். இந்த முயலுக்கு நீ ஒரு கேரெட் கொடுத்திருக்க. கேரட்னா என்ன, கேரட் செடியோட கரு. அதை இந்த முயல் தின்னுது. அது தப்பில்லையா? நீ ஒரு உயிரை இந்த முயலுக்கு தின்ன கொடுக்கிறது தப்பில்லையா?”
“அதெப்பிடி? கேரெட்டுக்கு எங்க உயிர் இருக்கு?”
“இருக்கே. இதை மண்ணில ஊணி வச்சா மழை பெஞ்சு சரியான பருவச் சூழல் வந்ததும் அது அதை உணர்ந்து முளைக்கும். அதுக்குள்ளாடி உணர்வு இருக்குன்னு தான் அதைக் காட்டுது”
“முட்டாள்தனமா பேசாத. கேரட்டுக்கு ஒண்ணும் தெரியாது. அது ஜடம்”
“அப்போ ஏன் முளைக்குது? சரி அதை விட இந்த கேரட்டை ஊணினா முளைக்குங்கிறதை ஒத்துக்கிறியா?”
“ஆமா”
“கேரட்டோட அம்மா இதை உருவாக்கினதே இது முளைச்சு அதோட வம்சம் வளர்ந்து பெருகும்னு தானே. இப்போ இந்த கேரட்டை முயலுக்கு கொடுத்து அந்த அம்மாவோட வம்சத்தையே வேரறுத்திட்டியே. அது நியாயமா?”
“அதான் நிறைய கேரட் நட்டு அதை வளர வைக்கிறோமே?”
“திரும்பவும் பிடுங்கி அதை கொல்லத்தானே? அதே மாதிரி தான் நாங்களும் நிறைய கோழிகளை, முயல்களை, பசுமாடுகளை வளர்க்கிறோம்”
“அது ரெண்டும் ஒண்ணு கிடையாது”
“சரி, இப்போ இந்த கேரட் செடி வந்து என் புள்ளைய புடுங்கி இந்த முயலுக்கு கொடுத்திட்டியேன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவ?”
“பேத்தாத. கேரட் செடிக்குன்னு இல்ல எந்த செடிக்கும் உயிரோ உணர்வோ இல்ல தெரியுமா?”
“யார் சொன்னா? அதுக்கு உயிர் இருக்கு. வளர்க்கிற எந்த பொருளுக்கும் உயிர் உண்டு”
“ஆடு மாட்டை வெட்டினா அது அழுவும். அது நமக்கு கேட்கும். பசு மாடு அழுவுறதை நீ பாத்திருக்கியா?”
“தாவரங்கள் ஆடு மாடு தன்னை தின்ன வரும் போது பிற தாவரங்களுக்கு வேதியல் மாற்றம் மூலமா செய்தி பரப்பும் தெரியுமா உனக்கு? தாவரங்களாலே பேச முயலும். ஆனா அதை கேட்கிற சக்தி நமக்கு கிடையாது. ஆனா பசு, ஆடு, முயல் இதெல்லாம் பேசும் போது அதை உணர்கிற புலன்கள் நமக்கு இருக்கு. அது தான் வித்தியாசம்”
“அப்போ நான் இந்த முயலை காப்பாத்தினது உண்மை இல்லியா? இதைப் பார்த்து எனக்கு தோணின கருணை ஏன் உனக்கு வரல?”
“நீ உன்னோட மனித உணர்வுகளை இந்த முயல் மேல ஏத்தி வைக்கிற. அவ்வளவு தான் விசயம். உன்னால அதே உணர்வுகளை ஏன் ஒரு கேரட் மேல ஏத்தி வைக்க முடியல?”
“ஆமா இப்பிடியே கேரட்டுக்கு உயிர் இருக்கு, அதோட அம்மா வந்து கேட்கும்னு ஊர்ல எங்கியாவது சொல்லு. உன்னை லூசுன்னு சொல்லுவாங்க”
இப்படி எங்கள் உரையாடல் முடிந்தது. கேரட் சுத்தமாய் மறைந்திருக்க முயலின் வாயும் சிவந்தது.
எனக்கு ஒரு மேடையில் பாரதி கிருஷ்ணகுமார் சொன்ன ஜென் கதை நினைவுக்கு வந்தது. ஒரு வனத்தில் நடந்து போகிற துறவி ஒரு சிங்கத்திடம் மாட்டிக் கொள்கிறார். சிங்கத்தின் பிடியில் இருக்கும் அவர் கடவுளிடம் தன்னை காப்பாற்றும்படி இறைஞ்சிகிறார். ரொம்ப நேரம் பிரார்த்தித்த பின் அவர் கண்ணை திறக்கிறார். தான் இன்னும் சாகவில்லை என நிம்மதி கொள்கிறார். தன்னை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்கிறார். அப்போது பார்த்தால் சிங்கம் அவர் முன்னால் கண்ணை மூடி அமர்ந்திருக்கிறது. துறவிக்கு ஆச்சரியம். சட்டென சிங்கம் கண்ணைத் திறக்கிறது. துறவி கேட்கிறார் “இவ்வளவு நேரமும் என்னை தின்னாமல் என்ன செய்து கொண்டிருந்தாய்?”
சிங்கம் சொன்னது “சாப்பிட்டு ரெண்டு வாரம் இருக்கும். தாங்க முடியாத பசி. உணவின்றி அலைந்து கொண்டிருந்தேன். அப்போது பார்த்து கடவுள் சரியாக உன்னை அனுப்பி வைத்து என்னை காப்பாற்றினார். இல்லை நிச்சயம் பசியில் செத்திருப்பேன். அது தான் கண்மூடி கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தேன்”
இதைக் கேட்ட நொடியில் அந்த துறவிக்கு ஞானம் கிடைத்தது.
சரி, இந்த பிரார்த்தனைப் போட்டியில் கடவுள் யார் பக்கம் இருப்பார்? அவர் யாரைத் தான் காப்பாற்றுவார்?

ஒரு கோழியை எனக்கு அனுப்பி ஒரு முயலைக் காப்பாற்றுவார். ஒரு கேரட்டை வேரோடி துடிக்க துடிக்க பிடுங்கி ஒரு முயலுக்கு கொடுப்பார். பிறகு அந்த கோழிக்கும் கேரட்டின் அம்மாவுக்கும் என்ன பதில் சொல்ல என யோசித்துக் கொண்டிருப்பார். ஏதாவது பதில் இருக்கும்!

1 comment:

nanjil madhu said...

மிகவும் ரசித்துப்படித்தேன் அபிலாஷ் . இந்த ஊசலாட்டம் எனக்கு பலமுறை வந்திருக்கிறது நான் அசைவம் சாப்பிடும் ஒரு கிராமத்தான் எங்கள் ஊரில் அவசரமாக சொல்லாமல் வந்துவிட்ட விருந்தினரை உபசரிக்க என் அண்ணன் மகளின் பிரிய முத்துக்கோழியை அறுத்து கறிவைத்த தினம் நான் உணவே உண்ணவில்லை.

"If the Horse befriends the Grass what it will eat"

இப்படியே யோசித்தால் Bonsai வளர்ப்பதும் பால் அருந்துவதும் தான் மகா பாவச்செயல்கள்