Friday, March 27, 2015

வா.மணிகண்டனும் ஜெயமோகனும்

நண்பர் வா.மணிகண்டன் நானும் லஷ்மி சரவணகுமாரும் “வெண்முரசை தட்டையான படைப்பு என கூறியது கேட்டு எங்கள் மீது பொங்கி இருக்கிறார். அவரது சில குற்றச்சாட்டுகளுக்கு எனது பதில்கள் இவை


//தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்கள் சோம்பேறிகள். அதை அவர்களே ஒத்துக் கொள்வார்கள். அதற்கு ஒரு சால்ஜாப்பும் வைத்திருப்பார்கள். ‘உள்ளுக்குள்ளிருந்து பொங்கி வரும் போதுதான் எழுதுவேன் என்பார்கள். ஆனால் அப்படியானவர்கள் ஒரு கட்டத்தில் பதற்றமடைகிறார்கள். இந்த உலகம் தன்னை மறந்துவிடுமோ என்று நடுங்குகிறார்கள். அவர்களுக்கு ஜெயமோகன் அலர்ஜியாகிவிடுகிறார்.//
தமிழில் அதிகமாக எழுதி வரும் இரு படைப்பாளிகள் நானும் லஷ்மி சரவணகுமாரும். எங்களுக்கு எங்கள் இடம் பற்றின பதற்றம் இல்லை. அதனால் இந்த வாதம் செல்லுபடியாகாது.

//வெண்முரசு மிக முக்கியமான முயற்சி. அது வெற்றியடைகிறதா அல்லது தோல்வியடைகிறதா என்பது இரண்டாம்பட்சம். ஆனால் இப்படியான ஒரு முயற்சியை ஜெயமோகனைத்தவிர இன்றைய எழுத்தாளர்கள் வேறு யாராலும் எடுத்திருக்க முடியும் என்று சொல்ல முடியாது. அந்தத் தைரியம் ஜெமோவிடம்தான் இருக்கிறது//

பதிப்பு தொழில் துவங்கினதில் இருந்து உலகம் முழுக்க எண்ணற்ற தொடர்கள் எழுதப்பட்டு வந்துள்ளன. பாலகுமாரனை விட அதிகமாகவா ஜெயமோகன் நாவல்கள் எழுதி குவித்து விட்டார்? இல்லை. அதற்கு தைரியமோ மன உறுதியோ தேவையில்லை. ஒரு வேலையின் அவசியம் தான் கவனத்திற்குரியது. மகாபாரதத்தை திரும்ப எழுதுவது ஒரு விதத்தில் வசதி. திரும்ப திரும்ப அக்கதையை கேட்கும் ஆவல் நாம் அனைவருக்கும் உண்டு. நாளை எஸ்.ரா மகாபாரதத்தை எழுதினாலும் படிப்பார்கள். ஆனால் கேள்வி திரும்ப எழுதுவதன் மூலம் நாம் என்ன புதிதாய் சொல்ல வருகிறோம் என்பது. நான் படித்த வரையில் “வெண்முரசு ஒரு முற்றிலும் புதிதான பார்வையுடன் மறுகதையாக்கம் செய்யப்படவில்லை. ஜெ.மோ உருவாக்கும் கண்ணன், அர்ஜுனன், பீஷ்மர் யாருமே புது உளவியல் பார்வையோ கண்ணோட்டமோ கொண்ட நவீன வடிவங்கள் அல்ல. ஏற்கனவே நம் மனதில் ஆழப்பதிந்த உருவங்களை மீள கொண்டு வருகிறார். சொல்லப் போனால் தூரதர்ஷன் மகாபாரத தொடரில் பார்த்தது போன்றே இருக்கிறார்கள். இதை எழுத ஒரு எழுத்தாளன் தேவையில்லை. தொன்மங்களை மீளுருவாக்கம் செய்யும் போது அதன் வழி சமகால வாழ்க்கையை மறுகட்டமைப்பு செய்து தொகுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அந்நோக்கம் ஜெயமோகனுக்கு இருப்பதாக தெரியவில்லை. “வெண்முரசின் அடிப்படை பிழை அது தான். ஒரு படைப்பின் வழி ஒரு கண்டுபிடிப்பு நிகழ்த்த வேண்டும். ஒரு ஆழமான தத்துவ, உளவியல் விவாதம், கண்டுபிடிப்பு நடக்க வேண்டும். அதற்காகத் தான் நாவல் எழுதப்படுகிறது. தஸ்தாவஸ்கி அளவுக்கு ஒரிஜினலாக இல்லை என்றாலும் ஜெயமோகன் சுயமான எண்ணங்களும் கண்டுபிடிப்புகளும் கொண்டவர். அதுவே அவரது முக்கியத்துவம். ஆனால் கடந்த பத்து வருடங்களில் அவர் எழுதுவதில் எங்கும் அவர் சுயம், படைப்பூக்கம் இல்லை. இது இயல்பு தான்.

ஆனாலும் அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கலாம். ஆழ்மன நோக்கம் இன்றி வெறும் இருப்பை தக்க வைக்க அவர் மகாபாரதத்தை பத்து பதினைந்து வருடங்கள் எழுதிக் கொண்டே போகலாம். இது வெறும் தந்திரம் தான். ஆனால் ஜெயமோகன் மிகவும் திறமையானவர் மற்றும் சிறந்த வாசகர் என்பதால், அவருக்கு நுணுக்கமான மனமும் அபூர்வமான கற்பனையும், சொல்வளமும் உண்டு என்பதால் அவரால் மன ஊக்கம் இன்றியே சுவாரஸ்யமாக எழுதிச் செல்ல முடியும். ஆரம்பநிலை வாசகர்களுக்கு ஆர்வமூட்ட முடியும். ஆனால் தேர்ந்த வாசகனுக்குன் இன்றைய ஜெயமோகன் அலுப்பூட்டுவார். அதனால் தான் நான் அவரை மாவு மிஷின் என்றேன். இதை வெறுப்பில் அல்ல, மிகுந்த ஆவலாதியில் சொல்கிறேன்.

//இவ்வளவு அவசரமான உலகத்தில் ஒரு எழுத்தாளனை ஏன் தொடர்ந்து வாசிக்க வேண்டும்? அதுவும் அதிகமான உழைப்பையும், சிதறாத கவனத்தையும் கோரக் கூடிய வெண்முரசு போன்ற தொடரை ஏன் வாசிக்கிறார்கள்? அதுதான் ஜெயமோகனின் வெற்றி. அடுத்த தலைமுறையில் தீவிரமாக வாசிக்கக் கூடிய ஒரு பெரிய கூட்டத்தை ஜெயமோகன் உருவாக்கிவருகிறார். //

எழுத்தாளன் வாசகனை உருவாக்குவதில்லை மணி. இது தவறான பார்வை. அப்படி உருவாக்கும் பட்சத்தில் அந்த எழுத்தாளனுக்கு பிறகு அந்த வாசகர்கள் என்னாகிறார்கள்? ந.பாவிம், மு.வவின் வாசகர்கள் எங்கே? பாலகுமாரனின், ராஜேஷ்குமாரின் வாசகர்கள் எங்கே? ஒரு படைப்பின் ஒரு புள்ளியில் இரண்டு மனிதர்கள் சந்திக்கிறார்கள். ஒருவன் எழுத்தாளன், மற்றொருவன் வாசகன். இதில் ஒருவர் மேல், இன்னொருவர் கீழ் என்றில்லை. ஜெயமோகனோ சாருவோ இத்தனை வாசகர்களை உருவாக்கியதாக நான் நம்பவில்லை. மொத்த உலகத்தையும் ஒரு குடும்பமாக, பெற்றோர் பிள்ளைகளை பெறுவது போல் எழுத்தாளர் வாசகரை உருவாக்குவதாக நினைக்கிற பிழையான பார்வை இது. வாசிப்பில் எழுத்தாளனும் வாசகனும் ஒரு கட்டத்தில் மறைந்து விடுவார்கள். ஜெயமோகனையும் சாருவையும், கல்கியையும் அகிலனையும், சுஜாதாவையும், பாலகுமாரனையும் இத்தனை ஆயிரம் வாசகர்கள் உருவாக்கினார்கள் என்றும் கூட சொல்லலாம். பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை படைப்பாளிகள் தம் பெயரை படைப்புக்கு முன் போட்டுக் கொள்கிற பழக்கம் இல்லை தெரியுமா? யார் படைப்பையும் யார் வேண்டுமானாலும் எடுத்தாள்வார்கள். அதனால் தான் ஒரு வள்ளுவரா, ஒரு ஔவையா அல்லது பலரா எனும் குழப்பம் ஏற்படுகிறது. நாளையில் இருந்து நாமும் நம் படைப்பின் முன் நம் பெயரை போடவில்லை என்றால் என்னாகும்? அந்த படைப்பு அனைவருக்கும் சொந்தமாகும். எழுத்தாளன் என்பது செயற்கையான ஒரு வணிக ஏற்பாடு அன்றி வேறில்லை. உங்கள் இணையதளத்தை தெளிவாக ஒரு பிராண்டாக மாற்றி வரும் நீங்கள் இதை நன்றாகவே அறிந்திருப்பீர்கள். ரிலையன்ஸ், ஆப்பிள் போன்ற பிராண்டுகளுக்கும் வா.மணிகண்டன், ஜெயமோகன் போன்ற எழுத்தாள பெயர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை.

//வெண்முரசை தினந்தோறும் வாசிக்கக் கூடிய ஏகப்பட்ட வாசகர்களை புத்தகக் கண்காட்சியில் சந்திக்க முடிந்தது//
நான் இதை பொருட்படுத்த மாட்டேன். தல்ஸ்தாய், தஸ்தாவஸ்கி, நீட்சே, பூக்கோ, ஷிசெக் போன்றோரை விரிவாக விவாதிக்கிற, நுணுக்கமாய் அறிந்த ஒருவர் தான் வெண்முரசை மிகவும் விரும்பி வாசிப்பதாய் சொன்னால் மட்டுமே கவனித்து ஏன் என அறிய முயல்வேன். நீங்கள் குறிப்பிடுகிறவர்கள் தீவிரமான வாசகர்கள் அல்ல. அவர்கள் பொழுதுபோக்கு வாசகர்கள். அத்தகைய வாசகர்கள் எனக்கும் உங்களுக்கும் லஷ்மி சரவணகுமாருக்கும் உண்டு. அவர்களை என் ஆழ்மனதில் பொருட்படுத்த மாட்டேன். கொடுமை என்னவென்றால் உங்கள் மேலாளரிடம் விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் போன்ற படைப்புகளை கொடுத்துப் பாருங்கள். இதே வெறியோடு படிக்க மாட்டார்கள். இன்று ஜெயமோகன் தன்னை இந்த தட்டையான பொழுதுபோக்கு வாசகர்களை நோக்கி தகவமைத்துக் கொண்டு விட்டாரோ எனும் ஐயம் எனக்கு உள்ளது.

//அபிலாஷ், லட்சுமி சரவணக்குமார் இரண்டு பேர் மீதுமே எனக்கு மரியாதையுண்டு. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள். அதற்காக ஜெயமோகனின் எழுத்துக்களை பெருமொத்தமாகக் குப்பை என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.//
நாங்கள் இருவருமே “பெருமொத்தமாகக் குப்பை என கூறவில்லை. இருவருக்கும் ஜெயமோகன் மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் கடந்த பத்து வருடங்களாக அவர் உயிரற்ற எழுத்துக்களை சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறார் என்று மட்டுமே நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன்.
இதை ஒரு எழுத்தாளனான நாங்கள் சொன்னவுடன் எங்களுக்கு ஜெயமோகன் மீது பொறாமை, எரிச்சல், கோபம் என பார்க்க கூடாது. தமிழில் இப்போதைக்கு விமர்சகர்கள் என யாரும் இல்லாததால் நாங்களே விமர்சிக்க வேண்டியதாகிறது. ஒன்று எதைப் பற்றியும் கருத்துசொல்லாமல் பல மூத்த எழுத்தாளர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் என் கருத்துகளோடு ஒத்துப் போகிற மூத்த எழுத்தாளர்கள் சிலர் ஜெயமோகன் பற்றி பொதுப்படையில் எழுத அஞ்சுகிறார்கள். என்ன செய்ய? ஊரோடு ஒத்து வாழ்!

// எந்தச் சலனமுமின்றி வெறும் வாசிப்பை மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கக் கூடியவர்களையும் சந்திக்க முடிகிறது. இத்தகையவர்கள் ஜெயமோகனை வாசிக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்//
சரி மணி இந்த வாசகர்களை வெளியே வரச் சொல்லுங்கள். நான் அவர்களுடன் விவாதித்து பார்க்கிறேன். இப்போதைக்கு ஜெயமோகனுக்கு ஆதரவான வாசகர்களாக வெளியே தெரியும் விஷ்ணுபுரம் வட்ட ஆட்கள் மற்றும் ஜடாயு போன்றவர்கள் எழுதுவதை படித்ததில் அவர்களுக்கு தீவிரமான வாசிப்போ, நுண்ணுணர்வோ, பயிற்சியோ இல்லை என்பது தெளிவாகிறது. ஒரு நல்ல வாசகன் என்றதும் நான் வைக்கிற அளவுகோல் ரவிக்குமார், ராஜ்கௌதமன், தமிழவன் போன்றவர்களின் நிலையில் இருப்பவர்கள். அந்தளவுக்கு நுண்ணறிவும் பயிற்சியும் கொண்டவர்களை. ஜெயமோகன் வாசகராக நீங்கள் கோருபவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்? வாசகனின் தரம் எதுவோ அதுவே எழுத்தாளனின் தரமும்! இன்றைய ஜெயமோகனை கொண்டாடுபவர்கள் இன்றைய ஜெயமோகனை தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உலக இலக்கியம், தத்துவம், கோட்பாடுகள் பற்றி விமர்சனம் எழுதி தம்மை சிறந்த விமர்சகர்களாக நிறுவட்டும். பிறகு அவர்கள் ஜெயமோகனின் தரத்தை நிறுவட்டும். அதுவரை நான் அவர்களை பொருட்படுத்த மாட்டேன். ஜெயமோகனின் வாசகர்களை வைத்து அவரை நிறுவ நீங்கள் துணிந்ததால் தான் நான் இத்தனையும் சொல்ல நேர்கிறது. மற்றபடி எனக்கு இந்த நிறுவல்களில் ஆர்வமில்லை.

// ஜெயமோகனை நிராகரிப்பதும் அவர் எழுதிக் கொண்டிருப்பதெல்லாம் குப்பை என்றும் எந்தத் தரவுமில்லாமல் முன் வைப்பதும் அபத்தம். அப்படியொரு வாதத்தை முன் வைக்க வேண்டுமானால் ஒரு விமர்சனக் கட்டுரை எழுத வேண்டும். அந்தப் படைப்பில் என்ன பிரச்சினை இருக்கிறதென்று விரிவாக எழுத வேண்டும். பிறகு வாசகர்கள் முடிவு செய்யட்டும். //
இதை நிச்சயம் ஏற்றுக் கொள்கிறேன். நான் முடிந்தளவு எனக்கு பிடித்த படைப்புகள் பற்றி எழுதி வந்திருக்கிறேன். என்னைக் கவராத படைப்புகளைப் பற்றி எழுதி நேரம் வீணடிக்கக் கூடாது என்பது என் கொள்கை. ஆனாலும் உங்களுக்காக ஜெயமோகனின் சமீபத்திய நாவலொன்றை எடுத்து ஒரு விரிவான விமர்சனம் எழுதி அது ஏன் தட்டையாக உள்ளது என நிறுவுகிறேன். அடுத்த வாரமே செய்கிறேன். ஆனால் அது ஜெயமோகன் மீதான வெறுப்பின் வெளிப்பாடு என அவசரகோலத்தில் சிலர் முடிவு செய்யக் கூடும் என்பதால் ஜெயமோகனின் பழைய சிறந்த நாவல் ஒன்று பற்றியும் விமர்சனம் எழுதி விடுகிறேன். நீங்களே உருண்டு பிரண்டு முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்.


18 comments:

King Viswa said...
This comment has been removed by a blog administrator.
arvind k said...

அபிலாஷ், நீங்கள் ஜெயமோகன் மீது, வெண்முரசு மீது என்ன விமர்சனம் வேண்டுமானாலும் வையுங்கள். அது உங்களது விருப்பம். அந்த விமர்சனத்தில் சொல்லப்படும் கருத்துக்களை வைத்து வாசகர்கள் முடிவுக்கு வரட்டும். ஆனால் போகிற போக்கில் ஜெவின் வாசகர்களை எல்லாம் மன்னாந்தைகள், சுயமாக சிந்திக்க முடியாதவர்கள், சமகால தத்துவ இலக்கிய வாசிப்பு இல்லாதவர்கள் என்றெல்லாம் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை. மேலும் அதென்ன “ஜெவின் வாசகர்கள்”? அவர்களும் இலக்கிய வாசகர்கள் தானே? இப்படி ஒரு குழுவை தொடர்ந்து முத்திரை குத்தி அவதூறு செய்வதன் மூலம் அதிலிருந்து எழுதவரும் ஆட்களை அந்நியப்படுத்தும் செயலையே இங்கு பலர் செய்து கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் பழங்கால உளவியல் தாக்குதல் உத்திகள். ஒருவரை நேரடியாக விவாதித்து சந்திக்க தெம்பில்லாமல் அவரது நண்பர்களை “below the belt” தாக்குவது. இப்படியெல்லாம் அவதூறு செய்துவிட்டு, பிறகு அந்த நண்பர்களிடம் பதிலை வேறு எதிர்ப்பார்க்கிறீர்கள். என்ன சொல்ல…
“தல்ஸ்தாய், தஸ்தாவஸ்கி, நீட்சே, பூக்கோ, ஷிசெக் போன்றோரை விரிவாக விவாதிக்கிற, நுணுக்கமாய் அறிந்த ஒருவர் தான் வெண்முரசை மிகவும் விரும்பி வாசிப்பதாய் சொன்னால் மட்டுமே கவனித்து ஏன் என அறிய முயல்வேன்… இப்போதைக்கு ஜெயமோகனுக்கு ஆதரவான வாசகர்களாக வெளியே தெரியும் விஷ்ணுபுரம் வட்ட ஆட்கள் மற்றும் ஜடாயு போன்றவர்கள் எழுதுவதை படித்ததில் அவர்களுக்கு தீவிரமான வாசிப்போ, நுண்ணுணர்வோ, பயிற்சியோ இல்லை என்பது தெளிவாகிறது… ஜெயமோகன் வாசகராக நீங்கள் கோருபவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்? வாசகனின் தரம் எதுவோ அதுவே எழுத்தாளனின் தரமும்!” என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகிறீர்கள்.
முதலில் நீட்சே பூக்கோ ஷிசெக் தெரிந்த ஒருவர் வெண்முரசை விரும்பி வாசிப்பதாய் சொன்னால் மட்டுமே கவனித்து ஏன் என்று அறிய முயல்வேன் என்கிறீர்கள். இப்படி நீங்கள் சொல்வதே எனக்கு நகைப்பூட்டுவதாக உள்ளது. உங்களுடைய வாசிப்பின் போதாமையையே இது காட்டுகிறது. தமிழில் எழுதப்படும் ஒரு புனைவை வாசிக்க தத்துவம் – அதுவும் மேற்கத்திய தத்துவம் - தெரிந்திருக்க வேண்டும் என்பதே உங்களது முன்முடிவை, அகெடமிக் மேட்டிமைவாதத்தை தான் காட்டுகிறது. சரி, ஒரு பேச்சுக்காக அப்படியே வைத்துக்கொள்வோம். வெண்முரசை படிப்பவர்கள் எல்லாம் சமகால உலக இலக்கியம் மற்றும் தத்துவ அறிமுகம் இல்லாதவர்கள், அதனால் தான் வெண்முரசு போன்ற ஒரு “சர்வசாதாரணமான” படைப்பை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று எதை வைத்து முடிவுக்கு வருகிறீர்கள்? வெண்முரசு விவாதத்திற்கு என்றே தனித்தளம் உள்ளது. அங்கு படைப்பில் உள்ள உளவியல், தத்துவம் எல்லாம் விரிவாக பேசப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் கொஞ்சம் மேய்ந்தாவது பார்க்கலாம்.
மேலும், தகவலுக்காக சிலவற்றை உங்களுக்கு சொல்கிறேன்: நான் ஷிஜெக்கை இருமுறை நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன். ஸீடிபன் க்ரீன்ப்ளாடிலிருந்து ஆலன் லைட்மேன் வரை பலரிடம் விரிவாக உரையாடி இருக்கிறேன். சிலரது வகுப்புகளுக்கும் சென்றிருக்கிறேன். ப்ருனோ லத்தூர், மிஷல் கெலான், கெரன் பராட் போல சமகால தத்துவம் மற்றும் சமூகவியல் துறைகளில் இருப்பவர்கள் பலர் என்னுடைய நண்பர்கள். ப்ருனோ லத்தூர் மற்றும் அவரது மாணவர்களை நெருக்கமாகவே தெரியும். மிஷல் கெலான் என்னுடைய ஆய்வுக்கட்டுரை ஒன்றின் Action Editor மற்றும் Reviewer ஆக இருந்தவர். Research Policy என்ற அந்த புகழ்பெற்ற ஆய்விதழில் கட்டுரையை வெளிவர ஏற்றுக் கொண்டது மட்டும் அல்லாமல் அதற்கு பாராட்டுக் கடிதமும் எழுதியிருந்தார். ஆகவே நீங்கள் சொல்லும் இந்த சமகால தத்துவம் சமூக அறிவியல் போன்றவற்றை வாயை பிளந்து கொண்டு படிக்கும் ஆள் அல்ல நான். அதில் தொடர்ந்து பங்கேற்பவன். கன்ஸ்யூமர் அல்ல, கான்ட்ரிபியூட்டர்.
(இதுநாள் வரை இவற்றையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்ததில்லை. என்னுடைய அக்கறைகள், கனவுகள் வேறு. ஆனால் தமிழ் சூழலில் எல்லாவற்றையும் இப்படி அடிக்கோடிட்டு சொல்லிக் காட்ட வைத்துவிடுகிறார்கள்.)
நானும் வெண்முரசை அதன் மொழிக்காக, நுட்பத்திற்காக வாசிப்பவன் தான். வெண்முரசு வரிசை நாவல்கள் முன்வைக்கும் கதாப்பாத்திர உளவியலை, சமூகச் சித்திரத்தை, அது உருவாக்கும் எண்ணற்ற முரண்களை, அதன் படிம முழுமையை தொடர்ந்து புரிந்து கொள்ள முயல்பவன்.

arvind k said...

“தொன்மங்களை மீளுருவாக்கம் செய்யும் போது அதன் வழி சமகால வாழ்க்கையை மறுகட்டமைப்பு செய்து தொகுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அந்நோக்கம் ஜெயமோகனுக்கு இருப்பதாக தெரியவில்லை. “வெண்முரசின்” அடிப்படை பிழை அது தான்” என்கிறீர்கள். வெண்முரசின் அடிப்படை அமைப்பையே நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே இது காட்டுகிறது. வெண்முரசு மீளுருவாக்கம் அல்ல, மறுஆக்கம் (re-narration). மறுஆக்கம் என்பது இலக்கியத்தில், இலக்கிய விமர்சனத்தில் ஒரு கலைச்சொல். அதெற்கென்று குறிப்பிட்ட அர்த்தம் இருக்கிறது. நீங்கள் எதையாவது படித்துப் பார்க்கலாம்.
திரும்பச் சொல்வது அல்ல வெண்முரசின் நோக்கம். விரிவாக்கிச் சொல்வது, சிலசமயம் மூலத்தில் வரும் மையமான படிமங்களை, உப கதைகளை எல்லாம் கலைத்துப் போட்டு அடுக்குவது. அது உருவாக்கும் தலைகீழாக்கம் என்பது சாதாரணமான ஒன்றே அல்ல. இந்த inductive leapக்கள் தான் வெண்முரசை ஒரு தனித்த இலக்கியப்படைப்பாக ஆக்குகிறது. வெண்முரசின் அமைப்பு என்பது ”மகாராதத்தை காலதீதத்தில் வைத்து நடத்திக் காட்டுவது” என்பது தான். அதற்கு ”இருவகை இணைப்புகளை உருவாக்குவது” என்ற உத்தியை ஜெயமோகன் பயன்படுத்துகிறார். ஒரு இணைப்பு கதையை கடந்த காலம் நோக்கி இணைப்பது. தொன்ம்ங்கள், புராணகதைகள், சூதர்பாடல்கள் வழியாக. உதாரணமாக தாட்சாயணி-அம்பை இணைப்பு. மற்றொரு இணைப்பு நீங்கள் சொல்லும் அதே சமகாலத்தை நோக்கி. அவை கதாப்பாத்திர அமைப்பு, நாடக தருணங்கள் வழியாக சமகாலத்தை குறியீட்டு காட்டுகின்றன. அப்பட்டமாக அல்லாமல் (அதாவது சஷி தரூரின் 'The Great Indian novel' போன்று கேனத்தனமாக அல்லாமல்) மிக மெண்மையாக, நுட்பமாக. தருமனின் கதாபத்திர அமைப்பு காந்தியை சுட்டுவது போல், அல்லது தூது செல்ல கிருஷ்ணனும் பலராமனும் போவதை சமகால புவிசார் அரசியலுடன் இணைப்பது போல் எண்ணற்ற உதாரணங்களை சொல்ல முடியும். நாவல் முன்வைக்கும் திரௌபதி முற்றிலும் ஒரு நவீனப் பெண். பீஷ்மரையும், துருவனையும் டெல்லி சவுத் ப்ளாக்கில் வெளியுரவுத் துறையில் பணியாற்றிய கே.சுப்புரமனியம் போன்ற பல முக்கியான strategistsகளுடன் ஒப்பிட முடியும். அவர்கள் சந்திக்கும் மையமான பிரச்சனைகள், அதையொற்றி நாவலில் வரும் நிகழ்வுகள் எல்லாம் சமகால ஜியோபாலிடிக்சை சுட்டுபவை, அப்படி செய்வதால் அந்த அரசியலை தத்துவ நோக்கில் கேள்விக்குட்படுத்துபவை என்பதையாவது முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
ஆகவே, இவற்றையெல்லாம் நான் உங்களுடன் விவாதிக்க வேண்டும் என்றால் ஒரு படைப்பாளியாக (அல்லது குறைந்த பட்சம் ஒரு விமர்சகனாக) உங்கள் மீது எனக்கு கொஞ்சமாவது நம்பிக்கை வர வேண்டும். இதுவரை அப்படி எந்த நம்பிக்கையும் எனக்கு வரவில்லை. வருங்காலத்தில் அப்படி வந்தால் பார்ப்போம். (உங்களை போல) அவதூறாக இதை சொல்லவில்லை. நீங்கள் எழுதிய நாவல்கள், கதைகள், கட்டுரைகளை படித்துவிட்டே சொல்கிறேன். ஜெயமோகன் மீது நீங்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் சிலவற்றையாவது உங்கள் மீது போட்டுப் பார்க்கலாம். நீங்களும் எழுதிக் குவிக்கிறீர்கள். அது தவறொன்றும் இல்லை. ஆனால் நீங்கள் எழுதும் படைப்புகள் எத்தனை தூரம் நன்றாக வந்திருக்கின்றன என்பதை நீங்களே நேர்மையாக கேட்டுக் பாருங்கள். நான் படித்தவரையில் உங்கள் புனைவு மிகவும் சராசரி. பெரும்பாலான விவரிப்புகள் இடம் சுட்டி பொருள் விளக்கம் தருபவை. Expositionகளாக நீண்டு கொண்டே செல்பவை. நேரடியாகவே சொல்கிறேனே. நான் இதுவரை எழுதியதில் ஒரு குறுநாவல் தான் வெளியாகி இருக்கிறது. இன்னும் சில வரவிருக்கின்றன. ஆனால் ஒரு எழுத்தாளனாக தன்னம்பிகையுடன் என் புனைவுகளை எங்கும் முன்வைக்க முடியும். நான் எழுதிக் கொண்டிருப்பவையின் கனவும் நோக்கமும் பெரியவை. தொடர்ந்து ஒரு ecstatic மனநிலையில் இருந்தால் ஒழிய அவற்றை எழுதி முடிக்க இயலாது. ஆகவே என் மனநிலையையும் நேரத்தையும் உங்களை போன்ற ஆட்களிடம் பேசி வீணாக்க விரும்பவில்லை. சமகால எழுத்தாளர்களாக எஸ்.செந்தில்குமார், கே.என்.செந்தில், கிரிதரன், போகன் சங்கர், இசை போன்றவர்களையே மதிக்கிறேன். சர்வோத்தம்மன், சரவணன், நரேபா, சமஸ் போன்றோர் எழுதும் கட்டுரைகளே எனக்கு முக்கியகாக படுகின்றன. அவர்களிடம் இருந்தே கற்றுக் கொள்ள முயல்கிறேன். உங்களிடம் இருந்தோ, விநாயக முருகனிடம் இருந்தோ அல்ல. ஆகவே நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். அதனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
(போகன் எப்போதுமே எனக்கு பிரியமானவர். அதை அவர் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. மதுரை புத்தக கண்காட்சிக்கு சென்று புத்தகங்களை தூக்க முடியாமல் தூக்கி வீடு திரும்பியது குறித்து அவர் எழுதிய பதிவை பல வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். அன்றிருந்து அவர் மீது எனக்கு மதிப்பு உண்டு. சில கோபங்களும். அவரிடம் நிறைய சண்டை போட்டிருக்கிறேன். சில நேரம் வசைகள் வரை. ஆனால் அவர் மீதும், அவர் வாசிப்பு மற்றும் எழுத்து மீதுள்ள மதிப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது).

Abilash Chandran said...

அன்புள்ள அரவிந்த்
நீங்கள் யார்? உங்கள் குறுநாவல் எது? உங்கள் தன்னம்பிக்கை மிகவும் வேடிக்கையாக உள்ளது. அதற்கு நன்றி.
அடுத்து re-narration எனும் இலக்கிய கோட்பாடு இல்லை. நான் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் செய்கிறவன். அதனால் விரிவாக கோட்பாட்டு பயிற்சி உள்ளவன். நீங்கள் கூறுகிற இணைப்புகள் வெண்முரசில் மிக மேலோட்டமாக, மீளமீள இடித்துரைத்து வாசகன் மீது திணிக்கப்படுகிறவையாக தான் உள்ளன. போகன் புத்தகங்களை சுமக்க கஷ்டப்பட்டார் என்பதா உங்களுக்கு அவர் மீது பிரியத்தை உண்டு பண்ணுகிறது? என்ன பரிதாபம்! நீங்கள் ஒரு மண்ணாந்தை வாசகர் என்பது மேலும் மேலும் நிரூபணமாகிறது.
ஒரு எழுத்தாளனாக, விமர்சகனாக நான் எங்கிருக்கிறேன் என நான் அறிவேன். நீங்கள் தந்துள்ள பட்டியல் வழியே நீங்கள் எங்குள்ளீர்கள் என்றும் அறிய முடிகிறது. வெறுமனே கூட்டம் சேர்ப்பது, குருவின் அடி வருடுவது, கொடி பிடிப்பது வழி நீங்கள் எங்கும் போய் சேர முடியாது. உங்கள் பின்னூட்ட மொழியிலே கூட தனித்துவம் இல்லையே! ஜெயமோகன் உதிர்க்கும் அதே சொற்கள்! அதே தந்திரங்கள்! நீங்கள் எப்படி சொந்தமாய் ஒரு படைப்பை எழுத முடியும்? உங்கள் தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியே வாருங்கள். சொந்தமாக யோசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
ஒரு முதிர்ந்த வாசகனின் முதல் அறிகுறி அவன் தன் அறிவால் யோசிப்பான், தர்க்கத்தால் எண்ணங்களை தொகுப்பான். நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு இங்கு என்னெல்லாம் உளறுகிறீர்கள் எனப் பாருங்கள். முதலில் ஒரு இல்லாத கோட்பாட்டை குறிப்பிடுகிறீர்கள். அடுத்து என்னைப் பற்றி மதிப்பிடுகிறீர்கள். உங்களைப் பற்றி சுயபுளகாங்கிதம், உங்கள் படைப்பு கனவு பிரகடனம், வாசிக்கும் எழுத்தாளர்கள் பட்டியல், அப்புறம் ஏதோ உதிரி மனப்பதிவு. உங்கள் மனம் எழுதிக் கொண்டிருக்கும் போதே துரித ஸ்கலிதம் கொள்கிறது. முதலில் மனக்கட்டுப்பாடு, அடுத்து எழுத்தில் கோர்வை மற்றும் கூர்மை, கடைசியாக என்னிடம் மோத வரலாம்.

Abilash Chandran said...

//சொல்கிறேன்: நான் ஷிஜெக்கை இருமுறை நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன்.// சரி அரவிந்த் ஒரு கேள்விக்காக கேட்கிறேன் - ஹெகலையும் கர்த்தரையும் ஷிஷெக் எந்த புள்ளியில் இணைக்கிறார்? நீட்சேயில் வரும் பாம்பை ஹெய்டெக்கர் என்ன பொருளில் பார்க்கிறார்? To philosophize with a hammer எனும் போது நீட்சே எந்த சமூக வரலாற்று பழக்கத்தை குறிப்புணர்த்துகிறார்? சும்மா இந்த கேள்விகளுக்கு பதில் யோசித்து விட்டு என்னிடம் வாருங்கள் அரவிந்த்.
ஒரு தமிழ் நாவலை வாசிக்க கூட ஐரோப்பிய இலக்கிய தத்துவார்த்த பயிற்சி அவசியம் தான். அவ்வாறு பயிற்சி உள்ளவரின் ஒவ்வொரு அவதானிப்பிலும் அது வெளிப்படும். உங்களைப் போல் பட்டவர்த்தமாய் பெயர்களை உதிர்த்து வேடிக்கை காட்ட மாட்டார்கள். அறிவு சொற்களின் ஊடே சிந்தனையின் ஊடே வெளிப்பட வேண்டும். பெயர் உதிர்ப்பில் அல்ல.

ஜடாயு said...

தேர்ந்த, தெளிவான எதிர்வினை அரவிந்த். அபிலாஷின் விமர்சனத்தில் சாரமில்லை, அவை அவதூறுகள் மட்டுமே. ஆனாலும், அவரும் ஓர் எழுத்தாளர் என்பதால், நீங்கள் பதிலளித்தது தேவையானது தான்.

// ஒரு நல்ல வாசகன் என்றதும் நான் வைக்கிற அளவுகோல் ரவிக்குமார், ராஜ்கௌதமன், தமிழவன் போன்றவர்களின் நிலையில் இருப்பவர்கள். அந்தளவுக்கு நுண்ணறிவும் பயிற்சியும் கொண்டவர்களை. ஜெயமோகன் வாசகராக நீங்கள் கோருபவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்? //

என்கிறார் அபிலாஷ். அவரது பட்டியலில் முதல் இருவர் தலித் சித்தாந்திகளாக, தலித்திய ஆய்வாளர்களாக, தீவிர அரசியல் சார்பு உடையவர்களாக அறியப் படுபவர்கள். அதில் தவறில்லை, ஆனால் "ஆதர்ச இலக்கிய வாசிப்பு' என்பதற்கான அளவுகோல்கள் அல்ல அவை. தமிழவன் ரசனைக்கான நுட்பங்களும், அழகுணர்வும் அற்ற ஒரு வறட்டு கோட்பாட்டு வாதி. இவர்களுடன் ஒப்பிடுகையில் நீங்களும்,நானும், நீங்கள் குறிப்பிட்டுள்ள நமது இலக்கிய நண்பர்களும் உண்மையிலேயே நல்ல இலக்கிய வாசகர்கள். இணையத்திலும் அதற்கு அப்பாலும் தொடர்ந்து இலக்கியம், தத்துவம், கலைகள், வரலாறு என்று பல விஷயங்களையும் தொடர்ந்து, பேசி, விவாதித்து வருபவர்கள்.

சமகாலத்தில் தமிழின் மிகப் பெரிய இலக்கிய ஆளுமை என்றால் அது ஜெயமோகன் தான், அதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா என்ன? எனவே, இலக்கிய வாசகர்களில் *பெரும்பாலர்* ஜெமோ வாசகர்களாக இருப்பதில் என்ன ஆச்சரியம்? சொல்லப் போனால், ஜெயமோகன் என்ற ஒரு இருப்பையே உணராதது போல, அறைக்குள் நிற்கும் யானையைக் கூட பார்க்காதது போல பாசாங்கு செய்து கொண்டு இங்கு ஒரு அற்பக் கூட்டம் இருக்கிறது. சாகித்ய அகாதமி உட்பட அமைப்புகளிலும் அந்தக் கூட்டத்தினர் தான் கோலோச்சுகிறார்கள். இலக்கியத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் மீது தான் அபிலாஷ் பாய வேண்டும்.

வெண்முரசு ஜெயமோகனின் 'இறுதிப் பெரும்படைப்பு' என்ற நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. எனவே, அதில் "புதிதாக" ஏதும் இல்லாமல், இதுவரை வாசகர்கள் பார்த்துவந்த ஜெயமோகனின் வண்ணங்களின் வேறு வேறு பிரிகைகளை மட்டுமே (அவற்றில் சில முற்றீலும் புதிதாகவும் இருக்கலாம) காணக் கூடும், அதில் தவறு ஏதுமில்லை, உலகெங்கும் மகத்தான இலக்கிய ஆளுமைகளுக்கு நிகழ்ந்தது தான் அது. அது ஜெயமோகனின் இடத்தை இன்னும் ஆழமாக உறுதி செய்கிறதே அன்றி குலைக்கவில்லை.

Abilash Chandran said...

அன்புள்ள ஜடாயு
// அவரது பட்டியலில் முதல் இருவர் தலித் சித்தாந்திகளாக, தலித்திய ஆய்வாளர்களாக, தீவிர அரசியல் சார்பு உடையவர்களாக அறியப் படுபவர்கள். அதில் தவறில்லை, ஆனால் "ஆதர்ச இலக்கிய வாசிப்பு' என்பதற்கான அளவுகோல்கள் அல்ல அவை. தமிழவன் ரசனைக்கான நுட்பங்களும், அழகுணர்வும் அற்ற ஒரு வறட்டு கோட்பாட்டு வாதி.// இப்படி தமிழின் முக்கிய எழுத்தாளர்களை சுருக்குவதில் உங்கள் சாதிய, சனாதன மனம் தான் வெளிப்படுகிறது. ரவிக்குமார் தலித் எழுத்தாளர் என்றால் ஜெயமோகன் நாயர் எழுத்தாளரா? மனுஷ்யபுத்திரன் இஸ்லாமிய எழுத்தாளரா? யுவன் பிராமண எழுத்தாளரா? இது மிகவும் அற்பமாக உள்ளது.
//சமகாலத்தில் தமிழின் மிகப் பெரிய இலக்கிய ஆளுமை என்றால் அது ஜெயமோகன் தான்// சமகாலத்தின் சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக நான் அவரை பார்க்கிறேன். என்றுமே எனக்கு அவர் மீது உயர் மதிப்பீடு தான். ஆனால் பீடத்தில் வைக்கிற படிநிலை அணுகுமுறையுடன் எனக்கு உடன்பாடில்லை. அவரைச் சுற்றி அமர்ந்து பூ போட்டு கரையான் போல் ஒரு கூட்டம் அரித்து வருகிறார்கள். கடைசி கால விசிறி சாமியார் போல் ஆகி விட்டார் இன்றைய ஜெயமோகன். ஆனால் விசிறி சாமியார் போல் அவர் அறியாமல் மட்டிக் கொள்ளவில்லை என்பது வித்தியாசம்.
//வெண்முரசு ஜெயமோகனின் 'இறுதிப் பெரும்படைப்பு' என்ற நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. எனவே, அதில் "புதிதாக" ஏதும் இல்லாமல், இதுவரை வாசகர்கள் பார்த்துவந்த ஜெயமோகனின் வண்ணங்களின் வேறு வேறு பிரிகைகளை மட்டுமே (அவற்றில் சில முற்றீலும் புதிதாகவும் இருக்கலாம) காணக் கூடும், அதில் தவறு ஏதுமில்லை// ஜெயமோகன் தன் பழைய எழுத்துக்களை மறு உற்பத்தி பண்ணுகிறார் என உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள். நல்லது. இது இலக்கிய தகுதி என நீங்கள் நினைப்பது வேடிக்கை. தல்ஸ்தாயோ மார்க்வெஸோ முராகாமியோ யாருக்கும் அப்படி நேர்ந்ததில்லை. அவர்கள் சுமாரான படைப்புகளை எழுதியிருக்கிறார்கள். பழைய கருக்களை மறுபயன்பாட்டுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். ஆனால் அவை உலகளவில் விமர்சகர்களால் கவனிக்கப்பட்டதில்லை.
//ஜெயமோகனின் இடத்தை இன்னும் ஆழமாக உறுதி செய்கிறதே அன்றி குலைக்கவில்லை.// இப்படியே பேசி பேசி ஒரு எழுத்தாளனுக்கு தன்னம்பிக்கை அளிப்பது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அஸ்தமன காலத்தில் உங்களைப் போன்றவர்கள் அவர் அருகில் இருப்பது தான் சரி.

Abilash Chandran said...

//இவர்களுடன் ஒப்பிடுகையில் நீங்களும்,நானும், நீங்கள் குறிப்பிட்டுள்ள நமது இலக்கிய நண்பர்களும் உண்மையிலேயே நல்ல இலக்கிய வாசகர்கள். இணையத்திலும் அதற்கு அப்பாலும் தொடர்ந்து இலக்கியம், தத்துவம், கலைகள், வரலாறு என்று பல விஷயங்களையும் தொடர்ந்து, பேசி, விவாதித்து வருபவர்கள்.// ஒரு தேர்ந்த வாசகன் பிரதியை படைப்பாளனை கடந்த ஒன்றாக பார்ப்பான். படைப்பாளியை கராறாய் விமர்சிக்க எந்நேரமும் தயாராக இருப்பார். பூ போட்டு பூஜிக்க மாட்டான். ஒரு தேர்ந்த வாசகனின் முதல் அறிகுறி இது. நீங்கள் ரசிகர்கள், விசிறிகள், சேவகர்கள். வாசகர்கள் அல்ல. உங்களால் எழுத்தாளனின் உடலை, பௌதீக அடையாளத்தை கடந்து பிரதியை பார்க்க இயலவில்லை. உங்களுக்கும் சினிமா நடிக ரசிகர்களுக்கும் அறிவில் தான் வேறுபாடு. நுண்ணுணர்வில், பக்குவத்தில் இரு சாராருமே ஒன்று தான்.

ஜடாயு said...

நான் தலித் எழுத்தாளர்கள் என்றூ சாதி அடையாளத்தை வைத்து சொல்லவில்லை. // தலித் சித்தாந்திகளாக, தலித்திய ஆய்வாளர்களாக // என்று சொன்னேன். அவர்களது சிந்தனையையும் கண்ணோட்டத்தையும் அடையாளப் படுத்தும் இந்த அடைமொழிகளை அவர்களே கூட மறுக்க மாட்டார்கள்.

// சமகாலத்தில் தமிழின் மிகப் பெரிய இலக்கிய ஆளுமை // என்பது பீடம் அல்ல, *அங்கீகாரம்*. தமிழ்ச் சூழலில் இத்தகைய அங்கீகாரத்திற்குத் தகுதியானவர்கள் வாய்க்கும் போது கூட அது அவர்களுக்குத் தரப்படுவதில்லை. பாரதி, புதுமைப்பித்தன் காலம் தொட்டு நிகழ்வது தான் இது.

உயர்மதிப்பீடு என்பதிலும் படிகள் உள்ளன - நல்ல கதை, சிறந்த கதை, ஆகச் சிறந்த கதை போல. உங்களைப் பொறுத்தவரையில் அவர் "சிறந்த ஆளுமைகளில் ஒருவராக" தெரிகிறார். என்னைப் பொறுத்தவரையில் 'மிகச் சிறந்த ஆளுமையாக'. ஜெயமோகனுக்கு நிகரான மற்ற சிறந்த ஆளுமைகள் யார் என்றூ நீங்கள் விமர்சன பூர்வமாக ஒப்பிட்டு, எழுதி நிறுவினால் நல்லது.

'மிகச் சிறந்த' அடைமொழியை வாழும் படைப்பாளி ஒருவருக்குக் கொடுப்பதில் உள்ள அசௌகரியமும் தயக்கமும் சங்கடமும் தான் இதில் தெரியவருகிறது. துரதிஷ்டவசமாக நமக்கு இதில் முன்னுதாரணமும் இல்லை.

ஜடாயு said...

// நீங்கள் ரசிகர்கள், விசிறிகள், சேவகர்கள். வாசகர்கள் அல்ல. உங்களால் எழுத்தாளனின் உடலை, பௌதீக அடையாளத்தை கடந்து பிரதியை பார்க்க இயலவில்லை. //

ஜெயமோகனின் எல்லா எழுத்துக்களையும், தரப்புகளையும் வழிபடுபவன் அல்ல நான். இலக்கியம்,சமூகம், அரசியல் என பல தளங்களில் அவருடன் எதிர்த்தர்ப்பாக நான் விவாதித்த கடிதங்கள் அவரது வலைத் தளத்திலேயே உள்ளன. நான் சுட்டிய இலக்கிய நண்பர்கள் குழுவிலும் அத்தகைய பலர் உண்டு. உதாரணமாக, வெண்முரசு குறித்து ஜெயமோகனின் தீவிர வாசகர் வெ.சுரேஷ் சொல்வனம் இதழில் எழுதிய கட்டுரையைப் பாருங்கள்.

Abilash Chandran said...

// ஜெயமோகனுக்கு நிகரான மற்ற சிறந்த ஆளுமைகள் யார் என்றூ நீங்கள் விமர்சன பூர்வமாக ஒப்பிட்டு, எழுதி நிறுவினால் நல்லது. //
ஜெயமோகனுக்கு நிகரான ஒரு புனைவெழுத்தாளராக நிச்சயம் எஸ்.ராவை கூறலாம். சிறுகதையை மட்டும் எடுத்துக் கொண்டால் அசோகமித்திரன். கவிதையில் மனித மனம் பற்றி நகுலன் அடைந்த தரிசனத்தை நிச்சயம் ஜெயமோகன் பெறவில்லை. ஜெயமோகனிடம் ஒரு முக்கிய குறைபாடு அவரது கண்டுபிடிப்புகள் அல்லது அவதானிப்புகள் அல்லது உளவியல் சித்தரிப்புகள் ஏற்கனவே மேற்கில் அல்லது இங்கேயே செய்யப்பட்டவை. அவர் ஒரு சிறந்த கலைஞர். ஆனால் ஒரிஜினல் அல்ல. உதாரணமாக, தஸ்தாவஸ்கி கர்த்தரை அன்றாட வாழ்வில் துயரப்படும் ஒரு சாதாரண ஆளின் உளவியலில் மறுகண்டுபிடிப்பு செய்தது போன்ற ஒரு ஒரிஜினலான தரிசனத்தை ஜெயமோகனால் அடைய முடியவில்லை. அல்லது மொழியின் வழி ஜாய்ஸோ வூல்போ நிகழ்ச்சிய மனித மனத்தின் சிதறல்கள் பற்றின கண்டுபிடிப்புகளையும் ஜெ.மோ செய்ததில்லை. அதாவது தத்துவார்த்த ரீதியிலோ மொழியின் அடிப்படையிலோ அவர் பரிட்சார்த்தமார்த்தமாக புதுமையாக எதையும் செய்ததில்லை. அவர் ஒரு அட்டகாசமான கலைஞர். அவரை மகத்தான ஆளுமை என ஏற்பதற்கு எனக்குள்ள சிக்கல் இது தான். நான் எழுத்தை தமிழ், மலையாளம், இந்தியா என ஒரு வட்டத்துக்குள் வைத்து பார்க்கவில்லை. தஸ்தாவஸ்கியும் பிரமிளும் ஒரே தளத்தில் நிற்கும் எழுத்தாளர்களே. இருவரையும் ஒப்பிட்டு பார்க்கவே விரும்புவேன். அப்படி ஒப்பிட்டு பார்க்கையில் நான் இவ்வாறான முடிவுக்கு வருகிறேன். ஒரு மகத்தான ஆளுமை நீட்சேயை போல சார்த்தரைப் போல தஸ்தாவஸ்கி, தல்ஸ்தாயை போல இருக்க வேண்டும். அவன் தான் சார்ந்த தளத்தில் மனித மனம் சார்ந்து கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். அவனே மகத்தான அளுமை. ஜெயமோகன் அப்படியான ஒரு ஆள் அல்ல.

Abilash Chandran said...

//ஜெயமோகனின் எல்லா எழுத்துக்களையும், தரப்புகளையும் வழிபடுபவன் அல்ல// இது மிகவும் ஆரோக்கியமானது. பாராட்டுக்குரியது. என் பார்வை குறுகலானது. எனக்கு தெரிந்ததைக் கொண்டு தான் பேசியிருக்கிறேன். ஜெயமோகனை objective ஆக பார்க்கிற ஒரு விஷ்ணுபுரம் வட்ட ஆளை நான் இதுவரை கவனித்ததில்லை. நீங்கள் சுட்டிய சொல்வனம் கட்டுரையை ஏற்கனவே படித்திருக்கிறேன். அது ஜெயமோகன் பேசுவது போலவே எழுதப்பட்டிருக்கிறது. நிறைய முன்முடிவுகளுடன் எழுதப்பட்டதாகவே என் கருத்து. நண்பர் சர்வோத்தமனும் உங்கள் வட்டத்தில் சார்பற்று பேசுகிறவர்கள் இருக்கிறார்கள் என்று கூறினார். அது உண்மையெனும் பட்சத்தில் வாழ்த்துக்கள். எனக்கு தெரிய வரும் போது என் கருத்தை பின்வாங்கி மன்னிப்பு கேட்டே எழுதுகிறேன். ஆனால் எனக்கு அவ்வாறு தோன்றும் வரை காத்திருக்கிறேன்

Abilash Chandran said...

//நான் தலித் எழுத்தாளர்கள் என்றூ சாதி அடையாளத்தை வைத்து சொல்லவில்லை. // தலித் சித்தாந்திகளாக, தலித்திய ஆய்வாளர்களாக // என்று சொன்னேன். அவர்களது சிந்தனையையும் கண்ணோட்டத்தையும் அடையாளப் படுத்தும் இந்த அடைமொழிகளை அவர்களே கூட மறுக்க மாட்டார்கள்.// இங்கு வேறொரு சிக்கல் உள்ளது. வெறும் தலித்தியம் மட்டுமே பேசுகிறவர் தலித் எழுத்தாளர். ஆனால் வாழ்க்கை பற்றியும் மனம் பற்றியும் அரசியல் சமூகம் பற்றியும் ஆழமாக விரிவாக எழுதியுள்ள ரவிக்குமார், இமையம் போன்றோர் தலித் எழுத்தாளர் அல்ல. அவர்கள் எழுத்தாளர்கள். இமையம் சமீபமாக தன்னை தலித் எழுத்தாளர் என அழைத்ததை வலுவாக கண்டித்தது இந்நோக்கில் தான்

மானிடன் said...

தற்போது எழுதும் எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம் தான் எனக்கு உயர்வாகப்படுகிறார். சுவாரசியமான சலிப்பே தராத எழுத்து நடை.ஜிவனுள்ள எழுத்து.அதீத புனைவை வாசிக்க விருப்பமில்லாததால் உண்மைக்கு நெருக்கமான படைப்பை எழுதும் அ.முத்துலிங்கம் அதிகம் வசிகரிக்கிறார். ஜெமோ ,சாரு (மனம் கொத்திப் பறவை மட்டும் விகடனால் படித்தது ) எழுதிய எதையும் படித்ததில்லை. படிக்க இதுவரை ஆர்வமும் வரவில்லை.ஜெமோவுக்கும் சாருவுக்கும் தான் தன்னை மறந்துவிடுவார்களோ என்ற பயமும் பதற்றமும் இருக்கிறது.அதனால் தான் அவ்வப்போது சர்ச்சைகளை கிளப்பி தங்களின் இருப்பை வெளிப்படுத்துகிறார்கள்.ஜெமோனா "புனைவு,படிமம்,தொன்மம்,விழுமியம்".சாருனா "லத்தின் அமெரிக்கா,எல்லா இடத்திலையும் எழுத்தாளனை தலையிலயே வச்சிருக்காங்க ,தமிழ்நாட்டுல தான் யாரும் மதிப்பதேயில்லை".அவ்வளவு தான். இமையம் ஒரு பேட்டியில் சொன்னது தான் நினைவிற்கு வருகிறது " இன்றைக்கு எழுதி நாளைகே செத்துப்போகிற இலக்கியங்களைப் படைத்துவிட்டு யாரும் கொண்டாடலை என்பது எவ்வளவு அபத்தம்".எழுத்து அதற்கான இடத்தைத் தேடிக்கொ ள்ளும் என்று சொல்கிறார்கள். 20 வருடங்களுக்குப் பிறகு இப்போது எழுதுபவர்களில் எத்தனை பேர் நினைவில் இருப்பார்கள் என்று தெரியவில்லை.

Abilash Chandran said...

ஜெயமோகன் அடுத்த பல தலைமுறைகள் நிலைக்கப் போகிற சிறுகதைகள், நாவல்களை படைத்திருக்கிறார். அதில் ஐயமில்லை. அவரது பல கட்டுரைகள் நாம் ஆழமாக கவனித்து படிக்க வேண்டியவை. அதேநேரம் அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரும் அல்ல. சாரு நம் மொழியில் சில கலைப்புகளை செய்தார் என்பது ஒழிய ஆழமான படைப்புகளை உருவாக்கவில்லை. பெரும்பாலும் நகல் படைப்புகள் தாம். சாருவின் ஆளுமையும் படைப்பும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாது. அவரது ஆளுமை நம்மை வசீகரிக்கும் காலம் வரை தான் அவர் படைப்புகளூம் படிக்கப்படும். சாரு நம் காலத்தின் மிக முக்கியமான ஆளுமை. ஒரு தனி குரல். இவ்விருவரும் அ.முத்துலிங்கத்தை விட பல மடங்கு மேலானவர்கள். அ.முத்துலிங்கம் ஈழ எழுத்தின் சுஜாதா. அவ்வளவு தான்

மானிடன் said...

நன்றி அபிலாஷ்.வாசிப்பு மேம்படும் போது இன்னும் கொஞ்சம் நெருக்கமாக படைப்புகளை உணர முடியும் என நினைக்கிறேன்.எஸ்.ரா. என்னும் கதவு வழியாகவே இலக்கிய வாசிப்பு தொடங்கியது. அவரைப் போல போல அமைதியாக இல்லாமல் ஜெமோவும் சாருவும் அடிக்கடி சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டே இருப்பதால் அவர்களின் படைப்புகளை வாசிக்க தோன்றவில்லையோ என்னமோ. நீங்கள் சொன்னது போல ஜெமோ,சாரு மற்றும் எஸ்ரா மூவருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. தற்போது வாசித்துக் கொண்டிருப்பது புயலிலே ஒரு தோனி.

Abilash Chandran said...

பயிற்சி மூலமாகவே நாம் 70% நல்ல வாசகராக முடியும். மிச்சம் நம் அனுபவமும் பார்வையும் நுண்ணுணர்வும் அறிவும் தான். நல்ல வாசகனாகும் போது உயர்ந்த மனிதனாகவும் ஆகிறோம். நிறைய விமர்சனங்கள் படியுங்கள். முடிந்தால் பழைய நிறப்பிரிகை இதழ்கள் தேடிப்படியுங்கள். ராஜ் கௌதமன் படியுங்கள். ஜெயமோகனின் விமர்சனக் கட்டுரைகளும் ஆழமானவை தாம். ஆங்கிலத்திலும் விமர்சனம் படித்தால் உங்கள் பார்வை இன்னும் ஆழமாகும். உளவியலும் தத்துவமும் வாசித்தால் இன்னும் சிறந்த இலக்கிய வாசகன் ஆகலாம். புனைவுகளோடு நின்றால் நல்ல வாசகன் ஆக இயலாது.

Abilash Chandran said...

உங்கள் அக்கறைக்கும் கவனத்துக்கும் நன்றி மானிடன்