Wednesday, March 25, 2015

தென்னாப்பிரிக்காவும் கண்ணீரும்நேற்றைய உலகக்கோப்பை அரையிறுதியில் கிராண்ட் எலியட் ஸ்டெயினின் பந்தில் ஆறு அடித்த நொடி மற்றொரு நாடகம் அரங்கேறியது. தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் மைதானத்தில் மனம் உடைந்து சாய்ந்தனர். மோர்னெ மோர்க்கல், டூப்ளஸி ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். ஸ்டெயின் அப்படியே படுத்து விட்டார். எலியட் சென்று அவரை தூக்கி விட்டார். இவர்களைப் பார்த்து அதுவரை தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த டிவில்லியர்ஸும் அழ ஆரம்பித்தார். அப்படி ஒரு உணர்ச்சி மேலிடல் கடைசியாக இலங்கையிடம் இந்தியா 96 உலகக்கோப்பையில் தோற்று வெளியேறிய போது பார்த்தது. தென்னாப்பிரிக்க துக்கத்தில் வர்ணனையாளர்கள், நிபுணர்கள், மீடியா, எதிரணியினர் என அனைவரும் கலந்து கொண்டனர். அதாவது அந்த ஆட்டத்தை நியுசிலாந்து வென்றது ஒரு குற்றம் என்கிற கணக்கில் அனைவரும் பேச ஆரம்பித்து விட்டோம். உலகக்கோப்பை இறுதிக்கு செல்லும் தகுதி படைத்த அணி தென்னாப்பிரிக்காவே நியுசிலாந்து அல்ல எனும் ஒரு தொனி பரவலாக தென்பட்டது. இது சரியா?

சரி என்றால் தென்னாப்பிரிக்காவே வென்று இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டியது தானே? அவ்வளவு பெரிய இலக்கை தடுத்தாடி வெல்ல ஏன் இயலவில்லை? இலக்கை வென்றது நியுசிலாந்தின் குற்றமா? தென்னாப்பிரிக்கா போன்ற ஒரு ராட்சத திறமையாள அணி ஒரு குட்டி அணியிடம் வீழ்ந்தது ஒரு துன்பியல் நிகழ்வு தான், ஒத்துக் கொள்கிறேன். தொடர்ந்து நாக் அவுட் போட்டிகளில் அவர்கள் சறுக்குவதும் அவலம் தான். ஆனால் அதற்கு அவர்கள் தானே பொறுப்பு. ஒரு நோ பால் அல்லது வைட் பந்து அல்லது சூப்பர் ஓவரில் தோற்றால் அது பரிதாபமே! 92இல் நடந்தது போல் அடைய முடியாத இலக்கு D/L முறையில் அளிக்கப்பட்டாலும் அது பரிதாபம் தான். ஆனால் மழை ஒன்றைத் தவிர இம்முறை தென்னாப்பிரிக்காவுக்கு பெரிய துரதிஷ்டம் நிகழவில்லை. 43 ஓவர்களில் 298 மிக நல்ல இலக்கு. அதை தடுத்தாட முடியாதது தென்னாப்பிரிக்காவின் அணுகுமுறை மற்றும் வியூகத்தில் உள்ள தவறினால் தான். ஏனோ இவ்விசயத்தை யாரும் கவனித்ததாய் தெரியவில்லை.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா முழுக்க இருவேறான அணி. டெஸ்டில் அவர்கள் பந்து வீச்சாளர்கள் தாக்கி ஆடுவார்கள். ஆனால் ஒருநாள் என்றால் இதே வீச்சாளர்கள் தடுத்தாடுவார்கள். பதற்றமாக வீசுவார்கள். இந்தியாவின் தென்னாப்பிரிக்க பயணங்களின் போது ஒருநாள் போட்டிகளில் இந்தியா பெரிய இலக்குகளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடைந்து வென்றிருக்கின்றன. டேல் ஸ்டெயின், மோர்க்கல் போன்றோ ஒருநாளில் அவ்வளவு சாமர்த்தியமான வீச்சாளர்கள் அல்ல. நேற்றைய ஆட்டத்தில் கூட பாகிஸ்தான் என்றால் நியுசிலாந்து இவ்வளவு எளிதாக 298ஐ அடைந்திருக்காது. ஆஸ்திரேலியா கூட வென்றிருக்கும். காரணம் இரு அணிகளும் தாக்கி ஆடும். விக்கெட்டுகளை இலக்காக்கி வீசும். ஆனால் நேற்றைய போட்டியில் முதல் இரு ஓவர்களில் மெக்கல்லம் அடிக்க ஆரம்பித்ததும் தென்னாப்பிரிக்க பின்னங்காலுக்கு சென்று விட்டது. அப்போது சுருட்டிய வாலை இறுதி வரை அவர்கள் நிமிர்த்தவில்லை. ஸ்டெயின், மோர்க்கல், தஹீர் வீசும் போது ஸ்லிப்பில் ஆட்களை நிறுத்தவில்லை என்பதை கவனித்திருக்கலாம். மெக்கல்லம், வில்லியம்சன், கப்தில், டெய்லர் ஆகிய நால்வரின் விக்கெட்டுகள் கூட அதிர்ஷ்டவசமாய் தென்னாப்பிரிக்காவுக்கு கிடைத்தது தான். கொஞ்சம் சாமர்த்தியமாக ஆடி இருந்தால் நேற்று நியுசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கலாம்.
தென்னாப்பிரிக்கா இதுவரை உலகக்கோப்பையை வெல்லாததற்கு இந்த எதிர்மறையான, பயந்தாங்கொள்ளி அணுகுமுறை தான் முக்கிய காரணம். உலகக்கோப்பை வரலாற்றில் ஆக்ரோசமாய், இயல்புணர்ச்சியுடன ஆடாத எந்த அணியும் வென்றதில்லை. மே.இ. தீவுகள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தியா என ஐந்துமே ஆக்ரோசத்தை ஊக்குவிக்கும், நேர்மறையான, தனிப்பட்ட மேதைமையை கொண்டாடும் அணிகள். ஆனால் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகியவை கராறான திட்டம், ஒழுங்குபடி ஆடும் எதிர்மறையான அணிகள். அவற்றுக்கு உலகக்கோப்பை போன்ற பெருந்தொடர்களை வெல்வதற்கு உள்ள முக்கிய தடை இந்த அணுகுமுறையும் கலாச்சாரமும் தான்.
தென்னாப்பிரிக்காவிடம் உள்ள பந்து வீச்சு திறமைக்கு அவர்கள் சுலபமாய் நேற்று வென்றிருக்க வேண்டும். அதை செய்யாமல் பொம்மை தொலைந்த பாப்பா போல் மீடியா முன் தேம்புவது ஏமாற்றுத்தனம்.
இம்முறை நிச்சயம் தென்னாப்பிரிக்கா சாதாரணமாய் choke ஆகவில்லை. பதற்றத்தினால் மட்டும் விழவில்லை. இது இதுவரையிலான தென்னாப்பிரிக்க அணிகளிலேயே மிகச்சிறந்த அணி. டிவில்லியர்ஸ், ஆம்லா, டூமினி, ஸ்டெயின் போன்ற மேதைகள் இதுவரை தென்னாப்பிரிக்காவில் தோன்றியதில்லை (மற்றொருவர் பீட்டர்ஸன் இங்கிலாந்துக்கு சென்று விட்டார்). ஆனால் திறமையை சுதந்திரமாய் வெளிப்பட அனுமதிக்காத ஒரு அழுத்தமான, கட்டுப்பாடான, மூச்சுமுட்டுகிற கிரிக்கெட் சூழல் தென்னாப்பிரிக்காவின் பிரதான தடையாக உள்ளது. இதைப் பற்றி ஹெர்ஷல் கிப்ஸ் தனது சுயசரிதையில் விமர்சிக்கிறார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஒரு சாமியார் மடம் போல் இயங்கும் வரையில் அவர்களால் உலகை ஆள முடியாது.
தென்னாப்பிரிக்கா விலகினதுடன் உலகக்கோப்பையின் தரம் பல மடங்கு கீழிறங்குகிறது. ஸ்டெயின், ஆம்லா, டிவில்லியர்ஸ் போன்றோர் தம் ஆட்டத்தினால் கிரிக்கெட்டை பல மடங்கு மேலே கொண்டு போகிறவர்கள். மற்றொரு உலகத்தில் கிரிக்கெட்டை கொண்டு சென்று ஆடுகிறவர்கள். முன்பு சச்சின் ஆடும் போது தான் கிரிக்கெட் ஒரு அற்புத செயலாக நமக்குத் தோன்றும். தென்னாப்பிரிக்கா நீங்கினதும் உலகக்கோப்பையில் கிரிக்கெட் மீண்டும் மானுடர்கள் ஆடும் சாதாரண ஆட்டம் ஆகி விட்டது.

அதிமானுடர்கள் அழக் கூடாது. அழுகிற போது மானுடர்கள் நாம் அவர்களை நோக்கி இரங்கக் கூடாது. அதைப் போன்ற கேலிக் கூத்து வேறில்லை.

1 comment:

Dinesh said...

good analysis on SA defensiveness