Monday, March 2, 2015

க்ரியா ராமகிருஷ்ணன் முதல் ஸ்டீவ் ஜோப்ஸ் வரை: அழகியலும் வர்க்கமும்“க்ரியாவின்” புத்தகங்களை அவற்றின் அழகான நேர்த்தியான அமைப்புக்காகவும், அச்சு ஒழுங்குக்காகவும் பிடிக்கும். அந்நூல்களை கையில் எடுக்கையில் உண்மையில் ஒரு ஓவியத்தை வைத்திருக்கும் உணர்வையே தரும். சமீபமாய் வெளிவந்த இமையத்தின் “சாவுச்சோறு” நூலின் அட்டையை மிக மிருதுவாக வழவழப்பாக ஒரு சிவப்பு பின்னணியில் காகங்கள் பறக்கும்படி “க்ரியா” அமைத்திருக்கிறது. காகங்களை எம்போஸ் செய்திருக்கிறார்கள். இந்தளவுக்கு அபாரமான கலை நளினத்தை நாம் காலச்சுவடு, உயிர்மை நூல்களில் கூட காண முடியாது. அழகியலை இவ்வாறு ரசிக்கிற வேளையில் நாம் அதன் வணிக நோக்கத்தையும், இலக்கையும் கவனிக்க வேண்டும். ஒரு இலக்கியப் படைப்பு மிக அழகாய் பதிப்பிக்கப்படுவதால் அதன் தரம் மேம்பட்டு விடாது.


 “க்ரியா” வெளியிட்டுள்ள அந்நியனை நீங்கள் சாணித்தாள் நூலாக படித்தாலும் அது அதே அனுபவத்தை தான் தரும். வாசிக்க ஆரம்பித்ததும் நீங்கள் நூலின் வடிவத்தை கடந்து விடுகிறீர்கள். ஒரு ஏஸி திரையரங்கில், குஷன் இருக்கையில் அமர்ந்து பார்த்தாலும் சாதாரண அரங்கில் பார்த்தாலும் சினிமா ஒன்று தான். என்னுடைய மாணவர்களிடம் நீங்கள் ஒரு நூலின் அமைப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிப்பீர்கள் எனக் கேட்டேன். அவர்கள் ஒரு புத்தகம் அழகாக தோன்றினால் உடனே கையில் எடுக்கத் தோன்றும், அதற்காக வாங்கக் கூட செய்வோம் என்றார்கள்.
அதாவது கலை நேர்த்தியுள்ள புத்தகத்துக்கு இரண்டு பரிமாணங்கள் உள்ளன. ஒன்று அதன் உள்ளடக்கம். இன்னொன்று அதன் அழகிய வடிவம். இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஒரு பிரமாதமான முகப்பு சித்திரம் உங்களுக்கு ஒரு படைப்பு மீது ஒரு கண்ணோட்டத்தை அளிக்கலாம். ஆனால் அது ஒரு விமர்சனம் வாசிப்பது போலத் தான். படைப்பு தனியானது. அதன் உலகை திறந்து உள்ளே போக புறப்பொருட்கள் எதுவும் உதவாது. முக்கியமாய் நூலின் முகப்போ வடிவமைப்போ. நாம் ஒரு புத்தகத்தை அதன் வடிவமைப்புக்காக வாங்கும் போது அந்த புத்தகத்தை வாங்கவில்லை. நிறைய பேர் அழகிய நூல்களை அழகுக்காகவே வாங்கி அடுக்கி வைப்பதுண்டு. நானும் செய்வதுண்டு. இதைப் போன்றே பேனா, செல்போன், சோபா, நாற்காலி, கம்பளம், செருப்பு என எத்தனையோ பொருட்களை பார்க்க வசீகரமாய் இருக்கிறதென வாங்கி வந்து விடுவோம். இயக்குநர் மிஷ்கினிடம் நூற்றுக்கணக்கான கைக்கடிகாரங்கள் உள்ளதாய் ஒரு நண்பர் சொன்னார். ஒரு கையில் இவ்வளவு கடிகாரங்களை கட்ட முடியாது. இவ்வளவு கடிகாரங்கள் வாங்கும் போது நாம் கடிகாரங்களை வாங்குவதில்லை. கலை அழகு சார்ந்த ஒரு மதிப்பீட்டை வாங்குகிறோம். இது மனித மனதின் ஒரு பலவீனம். நம் எல்லார் வீட்டிலும் இவ்வாறு வாங்கிக் குவித்த ஐந்து ரூபாயில் இருந்து ஐயாயிரம் ரூபாய் வரையிலான ஏராளமான பொருட்கள் இருக்கும். கணிசமானவற்றை நாம் பயன்படுத்த மாட்டோம். இப்போது நாம் க்ரியா ராமகிருஷ்ணனிடம் ஒரு கேள்வி கேட்போம்: மனித மனதின் இதே பலவீனத்தை தானே நீங்களும் பயன்படுத்தி ஒரு பொருளை விற்கிறீர்கள்?
இன்னொரு கேள்வி: ஒரு புத்தகத்தை கலைப்பொருளாக மாற்றும் போது நீங்கள் அதை ரெண்டாக உடைக்கிறீர்கள். உடைத்து அதன் கலைநேர்த்தியை, நளினத்தை தனியாக விற்கிறீர்கள். அந்த நளினத்தை வைத்து மனிதன் எந்தவொரு உன்னத அறிவையோ கலை அனுபவத்தையோ பெற முடியாது. உங்கள் “அந்நியனை” நக்கீரன் பதிப்பகம் மலிவான தாளில் பதிப்பித்தால் அது தரம் குறைந்த நாவலாகி விடுமா? விடாது. அப்படி என்றால் உங்கள் கலை அழகுக்கும் இலக்கியத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை தானே?
சுஜாதாவின் நூல்கள் ஒரு காலத்தில் மலிவான பதிப்பில் மோசமான வடிவில் தான் கிடைத்தன. ஆனால் அதனால் சுஜாதாவின் எழுத்து தரும் வாசிப்பு தரமோ அனுபவோ குறைந்து போகவில்லை. அவர் தனது கணிசமான புகழையும் அத்தகையான நூல்கள் வழி தான் அடைந்தார். நான் சுஜாதாவின் ஒரே நூல்களை மலிவு பதிப்பாகவும் உயர்தர பதிப்பாகவும் வாங்கி படித்திருக்கிறேன். சுஜாதாவை வெளிப்படுத்துவதிலும் விலையிலும் தான் வித்தியாசமே அன்றி வேறு வித்தியாசமில்லை. சுஜாதா தன் வாழ்நாள் முழுக்க மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினரின் எழுத்தாளனாக இருந்தார். ரெண்டாயிரத்துக்கு பிறகு உயர்வான தாளில், அழகான அட்டைகளுடன் சுஜாதா பதிப்பிக்கப்பட்டதும் அவர் ஒரு “வர்க்க உயர்வை” அடைந்தார். அதே காலகட்டத்தில் தான் “இடைநிலை” வாசகர்கள் தமிழில் கணிசமாய் தோன்றினார்கள். அவர்களுக்கு வணிகத்தன்மையும் இலக்கியதரமும் கலந்த படைப்புகள் பிடிக்கும். சுஜாதாவிடம் இரண்டுமே உண்டு. அவரிடம் மேற்கத்திய நவீனத்துவத்தின் தன்மைகளும் (அந்நியமாதலை சித்தரிப்பது, பாசாங்கை பகடி பண்ணுவது), தமிழ் வெகுஜன ரசனையும் (பெண்ணுடல் கிளுகிளுப்பு, சுருக்கமாக எளிமையாக விறுவிறுப்பாக கதைசொல்லுதல்) ஒன்றிணைகின்றன. ஆனால் ரெண்டாயிரத்துக்கு முன்பு வரை அவரது வணிக அம்சங்கள் மட்டுமே கவனிக்கப்பட்டன. அதனால் இலக்கியவாதிகள் அவரை ஒரு தரங்குறைந்த எழுத்தாளனாகவே பார்த்தனர். ஒரு காலத்தில் சுஜாதாவை திட்டாத இலக்கியவாதிகளே அதுவரை தமிழில் இல்லை எனலாம். அன்றைய கணிசமான நவீனத்துவ எழுத்தாளர்கள் பிராமணர்கள். அவர்கள் சுஜாதாவை அவரது வணிக சமரசம் காரணமாய் ஒரு “தாழ்த்தப்பட்ட” பிராமணராய் பார்த்தனர். உயர்தர பிரசுரத்துடன் சுஜாதாவின் சமூக அந்தஸ்து வெகுவாக மாறியது. இன்றைய இளைய வாசகர்கள் சுஜாதாவை இலக்கியத்தில் இருந்து பிரித்து பார்ப்பதில்லை. ரெண்டாயிரத்துக்கு பிறகு சுஜாதா நூல்கள் “இலக்கிய தரத்துடன்” அழகாக நேர்த்தியாக –பிரசுரிக்கப்படுவது இதற்கு வெகுவாக உதவியது. இரண்டு வருடங்களுக்கு முன்பு சுஜாதாவின் குறுநாவல்களை “பாக்கெட் நாவல்” வடிவில் பிரசுரமாகின. அதைத் தொடர்ந்து மெரீனாவில் நடந்த ஒரு புத்தக விழாவில் நான் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருக்கையில் ஒருவர் வந்தார். அவர் பாக்கெட் நாவல்களை எடுத்து பார்த்து விட்டு என்னைப் பார்த்து கோபமாக கேட்டார்: “சுஜாதாவை எப்படி இவ்வாறு மலினமாக பாக்கெட் நாவலில் வெளியிடலாம்?”. சுஜாதா தன் வாழ்நாள் முழுக்க அவ்வாறு தான் மக்களை போய் சேர்ந்தார் என இவர் மறந்து விட்டார். அழகான நேர்த்தியான வடிவமைப்பில், நவீன முகப்புடன் பிரசுரிக்கப்படுகையில் ஒரு வணிக எழுத்தாளர் எவ்வாறு இலக்கிய அந்தஸ்து பெறுகிறார், பிறகு அவரை எவ்வாறு உயர்வர்க்கத்தினர் தம் எழுத்தாளனாக கோரத் தொடங்குகிறார்கள், அவரை மீண்டும் மலினமாய் கீழ்த்தட்டு நோக்கி தள்ளப்படுவதை எதிர்க்கிறார்கள் என்பதற்கு சுஜாதா நல்ல உதாரணம். ஒரு புத்தகத்துக்கு வர்க்க அந்தஸ்து மற்றும் இடம் உள்ளது. அதை உருவாக்குவதில் பதிப்பின் அழகியலுக்கு முக்கிய பங்கு உள்ளது.
இன்று சுஜாதா மட்டுமல்ல கணிசமான நூல்கள் மிக நல்ல வடிவில் தான் வெளிவருகின்றன. புத்தகம் என்பது ஒரு அனுபவம், பார்வை, அறிவை தாள்களில் தொகுத்தளிப்பது அன்றி வேறில்லை. பொதுவாக நம்பப்படுவது போல, புத்தகங்கள் அழகாய் பதிப்பிக்கப்படுவது ஒரு கலைசார்ந்த மேம்பாடு அல்ல.
ஒரு புது வகை உயர்வர்க்க வாசகர்கள் தமிழில் கடந்த பத்தாண்டுகளில் தோன்றி உள்ளார்கள். அவர்களுக்கு புத்தகங்களை பண்டமாக்கி விற்பதற்காக தான் புத்தக வடிவமைப்பின் கலை தேவைப்படுகிறது. அவர்கள் நக்கீரன் வெளியீட்டை வாங்க தயங்குவார்கள். சமீபத்தில் காலச்சுவடு கிளாசிக் வரிசை எனும் பெயரில் கடந்த முப்பது வருடங்களில் வெவ்வேறு பதிப்பகங்கள் மூலம் வெளியான முக்கியமான இலக்கிய நாவல்களை செம்பதிப்பாக வெளியிட்டது. விலை நாற்பதில் இருந்து அறுபது சதவீதம் அதிகமாக இருந்தது. போன புத்தக சந்தையில் இதே கிளாசிக் வரிசை நூல்கள் குறைந்த விலைகளில் வேறு பதிப்பகங்களில் கிடைத்தது. அவற்றை வாங்கினவர்கள் இந்த விலை வித்தியாசம் பற்றி என்னிடம் பேசினர். எனக்கு இந்த புத்தகங்களை இருவிலைகளிலும் வாங்க இருவிதமான வாசகர்கள் இருப்பார்கள் எனத் தோன்றியது.
சவேரா ஓட்டலுக்கு ஒரு நண்பர் அழைத்து போயிருந்தார். சோற்றை தனியாக வாங்க சொன்னார்கள். விலை 100. அடுத்து தனியாக சாம்பார் வாங்க வேண்டும். அதையும் நண்பர் 100 ரூபாய்க்கு வாங்கினார். எனக்கு இதன் நியாயம் புரிந்தது. ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு வருபவர்களிடம் இருபது ரூபாய்க்கு சாம்பார் கொடுத்தால் அதை வாங்க மாட்டார்கள். அது தரமற்றது என நினைப்பார்கள். அதற்காக நூறு ரூபாய்க்கு சாம்பார் வாங்க அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அன்று ஒரு மேஜிக் நிபுணர் எங்கள் மேஜைக்கு வந்து இலவசமாக ஒரு மணிநேரம் வித்தை காட்டினார். அவருக்கான கட்டணம் அந்த சாம்பாருக்குள் ஒளிந்திருந்தது. ஒரு புத்தகத்தை வெறும் எழுத்துக்காக வாங்குபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஐம்பது ரூபாய்க்கு சாதாரண ஓட்டலில் சாப்பாட்டுடன் சாம்பாரும் சாப்பிடுகிறவர்கள். அதே உணவை ஐநூறு ரூபாய்க்கு மேஜிக் வித்தை பார்த்தபடி சாப்பிடுகிறவர்கள் ஒரு எண்பது ரூபாய் நாவலை செம்பதிப்பாக 160 ரூபாய்க்கு வாங்கத் தான் விரும்புவார்கள். அவர்களுக்கு அழகான முன்னட்டை, அதில் ஒரு நவீன ஓவியம், செம்மையான எழுத்துரு, வழவழப்பான தாள் ஆகியவை உள்ளடகத்தை விட முக்கியம்.
இரண்டு சாப்பாடுகளுக்கும் சுவை அளவில் பெரிய வித்தியாசமில்லை என கவனிக்க வேண்டும். உணவை உண்ணும் இடம், சூழல், பாத்திரம் ஆகியவற்றில் ஒரு நுணுக்கமான வித்தியாசம் இருக்கும். ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் உண்ணும் போது அவர்கள் “நீங்கள் இப்போது சாப்பிடவில்லை, ஒரு கலை அனுபவத்தை, உன்னதமான நாகரிக அனுபவத்தை, கேளிக்கையை அனுபவிக்கிறீர்கள்” என உணர்த்திக் கொண்டிருப்பார்கள். அங்கு நீங்கள் ஒரு கோப்பை தண்ணீரைக் குடித்தாலும் நீரைக் குடிக்கவில்லை, வேறெதையோ குடிக்கிறீர்கள். ஒரு செம்பதிப்பு, விலைகூடின நாவலை படிக்கையில் நீங்கள் நாவலை படிக்கவில்லை. ஒரு உயர்பண்பாட்டை பண்டமாக துய்க்கிறீர்கள். அதற்குத் தான் கூடுதல் எண்பது ரூபாய்.
ஒரு விலைகூடுதலான நூல் கூடுதல் உறுதியாக இருக்குமே? நீண்ட காலம் பாதுகாத்து வைக்கலாமே? சரி தான். ஆனால் அந்த நீடிப்பின் பயன் என்ன? ஒரு புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிக்கிற பழக்கம் இன்றில்லை. ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் பத்து நல்ல நூல்கள் இருந்த இடத்தில், அதற்கு இணையான நூறு நல்ல நூல்கள் புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. இன்றைய வாசகனுக்கான சவால் புது நூல்களை தொடர்ந்து வாங்கி படிப்பது தான். மீண்டும் மீண்டும் படிப்பதற்கு பதிலாய் புதிது புதிதாய் படிக்க நினைக்கிறோம். உதாரணமாய், இந்த புத்தக சந்தையில் எஸ்.ராவின் “நெடுங்குருதியை” யாரும் வாங்க நினைக்க மாட்டார்கள். அவரது சமீபத்திய நாவலை வாங்கத் தான் முற்படுவார்கள். அதைத் தான் வாசித்து பேசுவார்கள். ஒருவேளை அவரது மிகச்சிறந்த நாவல் பத்து வருடங்களுக்கு முன்பு வெளியானது என்றால்? அவரது வாசகர்கள் எனக் கோருபவர்கள் கூட அதைப் பற்றி கவலைப்படாமல் மிக சமீபமாய் வெளியானதைத் தான் வாங்கவும் வாசிக்கவும் தலைப்படுவார்கள். அதனால் ஒருவர் இன்று “நெடுங்குருதியை” ஐம்பது வருடங்கள் பத்திரப்படுத்தி வாசிப்பார் என எதிர்பார்க்க இயலாது; ஆக ஐம்பது வருடங்கள் நிலைக்கும் பதிப்பு தரத்தில் அது ஏன் இருக்க வேண்டும்?
எந்த ஒரு பொருளுக்கும் அதன் உள்ளடக்கத்தை விட வடிவம் தான் மிக முக்கியம் என உணர்ந்தவர் ஸ்டீவ் ஜோப்ஸ். அவர் தனது ஆப்பிள் கணினியை முதலில் ஒரு சாதாரண பெட்டி போன்ற வடிவில் ஒரு கண்காட்சியில் வெளிப்படுத்தினார். விற்பனை குறைவாக இருந்தது. அதை விட பார்க்க அழகாக தோன்றின வேறு நிறுவன கணினியை தான் மக்கள் வாங்கி சென்றனர். இதை கவனித்த ஜோப்ஸ் ஆப்பிளின் வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தினார். அதிக செலவு செய்து அதன் லோகோ மற்றும் தோற்றத்தை மாற்றினார். ஒரு பொருளை மக்கள் அதன் பயன்பாட்டுக்காக மட்டும் வாங்குவதில்லை. ஒரு கணினியை பயன்படுத்துகையில் ஒரு உயர்ந்த அழகியல், கலை அனுபவத்தை மக்கள் அடைய வேண்டும். அப்போது அக்கணினிக்கு தனி மதிப்பு ஏற்படும் என நம்பினார். இதனாலே பங்குதாரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தும் ஜோப்ஸ் தன் கணினியின் விலையை குறைக்கவில்லை. பல்வேறு தேவையில்லாத வேலைப்பாடுகள் மூலம் விலையை அதிகப்படுத்தத் தான் முயன்றார். உதாரணமாய் அவர் ஒருமுறை ஆப்பிள் வெளியாக வேண்டிய நாளை தள்ளிப் போட்டார். அதனால் கோடிக்கணக்கில் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதை ஜோப்ஸ் பொருட்படுத்தவில்லை. ஆப்பிளின் உலோக தகடு உறைக்கு உள்ளே ஒரு டிஸைன் இருக்கும். ஆப்பிள் கணினியை யாரும் திறந்து சரி செய்ய முடியாது என்பதால் அந்த உள் டிஸைனை வாடிக்கையாளர்கள் தம் வாழ்நாளில் பார்க்க போவதில்லை. ஆனால் ஜோப்ஸ் அந்த டிஸைனில் திருப்தியாக இல்லாததால் அதை மறுவடிவமைக்க வற்புறுத்தினார். அது வீண்வேலை என அவர் ஒத்துக் கொள்ளவில்லை.
இப்படி மிகையாக கலை அக்கறை காட்டி அவர் தன் கணினியை கணினியை கடந்த மற்றொரு கலைப்பொருளாக மாற்றினார். அதற்கு உயர்ந்த விலை இருப்பது நல்லது தான் என அவர் நம்பினார். ஏனென்றால் விலை குறைத்தால் அது மற்ற கணினி போல் ஆகி விடும். ஆனால் அவர் சுப்பர் மேனைப் போல் ஒரு சூப்பர் கணினியை உருவாக்க விரும்பினார். சூப்பர் மேன் ரயிலின் வேகத்தில் ஓடுவார். அதற்கு பதிலாக ஒரு டிக்கெட் வாங்கி ரயிலுக்குள் ஏறி அதே வேகத்தில் சொகுசாக போகலாமே, எதற்கு கூடவே ஓட வேண்டும் என கேட்கக் கூடாது. சூப்பர் மேனென்றால் அப்படித் தான்.
மக்கள் ஏன் இந்த “சூப்பர்” பொருட்களை வாங்க விரும்புகிறார்கள்? இந்த பொருட்கள் நம் வாழ்வனுபவத்தை மிக நுணுக்கமான அளவில் மேலானதாய், நாகரிகமாய், கலைத்தன்மை கொண்டதாய் மாற்றும் என நம்புகிறோம். ஒரு ஐபோனுக்கும் மற்ற செல்போனுக்கும் அது செயல்படும் விதத்தில், அது தரும் அழகியல் அனுபவத்தில் நிச்சயம் வித்தியாசம் உண்டு. ஐபேடை பயன்படுத்தும் நண்பர் ஒருவர் அதற்கும் பிற டேபுகளுக்கும் விளக்க முடியாத ஒரு நுணுக்கமான மேலான வித்தியாசம் உள்ளதாய் கூறினார். எண்பது ரூபாய் ஜட்டிக்கும் இருநூறு ரூபாய் ஜாக்கி ஜட்டிக்கும் என்ன வித்தியாசம்? இன்னும் கொஞ்ச மென்மையாக, உடலில் சரியாய் பொருந்தும் படியாய் இருக்கும். சாரு நிவேதிதாவால் தமிழ் இலக்கிய கதையாடலில் மறுக்க முடியாத இடத்தை பெற்று விட்ட ரெமி மார்ட்டினை ஒரு நண்பர் கொஞ்சம் பருகத் தந்தார். நான் வழக்கமாய் பருகும் சாதாரண விஸ்கிக்கும் அதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. ஒருவேளை ஒரு நுணுக்கமான வேறுபாடு இருக்கலாம். ஆனால் ஒரு சாதாரண விஸ்கியில் இருந்து இருபது மடங்கு அதிக விலை கொண்ட அது இருபது மடங்கு மேம்பட்ட அனுபவத்தை தருவதோ உங்களை வாழ்க்கையின் அத்தனை துக்கங்களையும் மறந்து மேலெழ வைப்பதோ இல்லை. ஒரு அன்பான காதலியை அரவணைத்தபடி அலைகளை பார்த்து நிற்கும் அனுபவத்தை, ஒரு சிறந்த கவிதையை உங்களை மறந்து எழுதும் அனுபவத்தை அது தருமா? தராது. அதை ஒரு உயர்வான நூல் பதிப்போ, ஜாக்கி ஜட்டியோ, ஆப்பிள் கணினியோ, ரெமிமார்ட்டினோ தராது. நம் வாழ்க்கையை நிஜமாகவே மேம்பட்டதாய், மகிழ்ச்சியானதாய் மாற்றாது. ஆனால் அப்படியான ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும்.
இதை நாம் வாடிக்கையாளனின் பண்ட மயக்கம் எனலாம். வர்க்க மயக்கம் என்றும் கூறலாம். மிக எளிதாக பண்பாட்டு மயக்கம் என வைத்துக் கொள்வோம். மனிதனுக்கு மிக அத்தியாவசியம் உணவு, இடம் போன்ற அடிப்படை வசதிகளே. ஆனால் அதற்கு ஓரளவுக்கு பணம் போதும். ஆனால் நமது சமூகம் நாம் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், அதற்காக ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. அப்படி தேவையின்றி உழைத்து மிகையாக சம்பாதிப்பதற்கான தூண்டுதல் தான் இந்த பண்பாட்டு மயக்கம்.
உணவு, வீடு, பயணம், மருந்து இவற்றிக்கு போக மீதமுள்ள பணத்தை வைத்து என்ன செய்ய? நீங்கள் உயர்வர்க்கத்தை அடையும் போது எழும் பிரதான கேள்வி இது? அப்போது நீங்கள் உயர்வான பண்பாட்டு அனுபவங்களுக்காக வாழ ஆரம்பிக்கிறீர்கள். வாழ்க்கையில் விலைமதிப்பான புத்தகங்கள், ரசனையாக உரையாடும் அறிவுஜீவிகள், வழவழவென தொண்டையில் இறங்கும் மது, ஆங்கிலம் பேசும் பாலியல் தொழிலாளிகள், ஒரு ஓவியத்தை போன்ற வீடு, ஜிவ்வென பறக்கும் ஆடி கார், மிருதுவான பளபளப்பான ஆடை ஆகியனவற்றை வாங்கி பயன்படுத்துவீர்கள். ஒரு சமூக நிலையை அடைந்த பின்னர் நீங்கள் பண்பாட்டை தான் பலவடிவங்களில் வாங்கப் போகிறீர்கள். ஆனால் பண்பாட்டை அப்படி வாங்க இயலுமா? பண்பாடு என்பது ஒரு மனநிலை அல்லவா? ஒரு பொருள், ஒரு பண்டம் எப்படி அதைத் தரும்?
நான் சென்னை கிறித்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கையில் என் சகமாணவன் ஒருவன் நைக்கீ செருப்பை அணிந்திருப்பதை பார்த்தேன். அதை அணிகிற அனுபவம் எப்படி ஒரு சுகானுபவமாக இருக்கும் என கற்பனை செய்து ஏங்கினேன். பிறகு நான் எம்.பில் படிக்க கட்டணம் செலுத்தி அதை ரத்து செய்ய நேர்ந்தது. கட்டணத்தை திரும்ப அளித்தார்கள். நான் அதை என் அப்பாவிடம் திரும்ப கொடுக்காமல் நாலாயிரம் ரூபாய்க்கு ஒரு நைக்கீ செருப்பு வாங்கினேன். நான் வழக்கமாய் அணிகிற சப்பல்களில் இருந்து அந்த சப்பல் சற்றே வித்தியாசப்பட்டிருந்தது. சரியாக பொருந்தியது. மிருதுவாக இருந்தது. அவ்வளவு தான். கொஞ்ச நாட்கள் நைக்கீ அணிகிற மிதப்பில் திரிந்தேன். அந்த திகிலுக்காக, மிதப்புக்காக தான் அவ்வளவு செலவு செய்தேன். ஏனென்றால் மற்ற செருப்புகளை போல இதுவும் ஆறுமாதங்களில் கிழிந்தது. நான் கோபமாகி நைக்கீ ஷோரூமுக்கு எடுத்து போனேன். அவர்கள் செருப்பை பார்த்து விட்டு “இந்த செருப்பை நீங்கள் வெயிலில் பயன்படுத்தி இருக்கிறீர்கள். அதனால் தான் கிழிந்து விட்டது” என்றார்கள். அதற்காக தான் ஏஸி அறையில் மட்டும் அணிந்து நடக்க முடியுமா? அப்போது நான் ஒரு பி.பி.ஓவில் ஐயாயிரம் ரூபாய்க்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என் செருப்பின் விலை அறிந்த சகபணியாளர்கள் அதை பார்ப்பதற்காக ஒவ்வொருவராக வருவார்கள். “இதுக்குப் போய் நாலாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினீங்களா?” எனக் கேட்டு சிரிப்பார்கள். அவர்களுக்கு நாலாயிரம் ரூபாய் அனுபவத்தை எப்படி விளக்க என எனக்கு உண்மையில் தெரியவில்லை.
ஒரு விலை அதிகமான பண்டம் உயர்பண்பாட்டை நீங்கள் அடைந்ததான மனமயக்கத்தை தரும். அதற்குத் தான் அந்த விலை. ஒரு அரசு பஸ்ஸில் குலுங்கி ஒடுங்கி பயணிப்பதை விட தனியாய் பேருந்து வசதியானது. உடல் வலி இராது. ஆனால் அதனால் நீங்கள் அதிக மகிழ்ச்சியாய் உள்ளதாய் சொல்லலாமா? இல்லை. வலியற்று சொகுசாய் இருப்பது தான் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது நவீன வாழ்க்கை நமக்கு கற்றுத் தந்த ஒரு போலி நம்பிக்கை. வலியும் பிரச்சனைகளும் சிக்கல்களும் சவால்களும் தான் வாழ்க்கையை ஆழமானதாக, திருப்தியானதாக மாற்றுகின்றன. ஒரு உயர்ந்த பண்பாட்டு அனுபவத்தை நீங்கள் வாழ்க்கையின் சவால்களை நேரடியாக ஏற்று போராடித் தான் அடைய முடியும். அதை வாங்க முடியாது. கலைத்தன்மை உள்ள பொருட்களை வாங்கலாம். ஆனால் கலையை வாங்க முடியாது. ஆனால் காசு மூலம் மேம்பட்ட வாழ்க்கையை வாங்லாம் எனும் மனநிலையை நம் மீது திணித்துத்தான் ஒட்டுமொத்த முதலாளித்துவ சந்தையும் இயங்குகிறது. அவர்கள் பண்டங்களுடன் அத்தகையை நம்பிக்கையையும் தான் உற்பத்தி செய்கிறார்கள்.
சமீபமாக ஹரிஹரனின் கஸல் கச்சேரிக்கு சென்றிருந்தேன். முந்நூறு, ஐநூறு, ஆயிரம், ரெண்டாயிரம், மூவாயிரம் என நுழைவுக் கட்டணத்தை பிரித்திருந்தார்கள். நான் முந்நூறு ரூபாய் வரிசையில் பின்னால் இருந்தேன். கச்சேரி ஆரம்பித்த பின்னரும் ஆயிரம் ரூபாய் இடங்கள் காலியாக இருந்தன. முன்னூறு ரூபாய் ஆட்கள் கட்டணச்சீட்டை கிழிப்பவரிடம் சென்று தங்களை ஆயிரம் ரூபாய் வரிசைகளில் உட்கார அனுமதிக்க கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவர் இரண்டு வரிசைகள் மட்டும் முன்னே உட்காரலாம் என்றார். ஒரு மணிநேரம் போனதும் ரெண்டாயிரம் ரூபாய் வரிசை ஆட்கள் வெளியேறினர். இப்போது முன்னூறு ரூபாய் ஆட்கள் ரெண்டாயிரம் வரிசைக்கு சென்று அமர்ந்தனர். ஆனால் ஏன் அவ்வளவு சிரமப்பட்டு முன்னே போய் இருக்க வேண்டும் என எனக்கு புரியவில்லை. எங்கு அமர்ந்தாலும் ஒலிபெருக்கி மூலம் அங்கு அதே இசை தான் கேட்டது. ஹரிஹரனின் முகத்தை பக்கத்தில் பார்த்தால் அவர்களின் இசை ரசனைக்கு ஏதும் புது திறப்பு கிடைக்குமா? தெரியவில்லை. என் அருகில் ஒரு வடகிழக்கு பெண் இருந்து ஒரு தொலைநோக்கியால் மேடையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் சொல்ல நினைத்தேன்: “தோழி நீங்கள் தொலைநோக்கி மூலம் இசையை பார்க்க முடியாது. துரதிஷ்டவசமாக, அதை நீங்கள் காதால் கேட்க மட்டுமே முடியும்”.
நன்றி: அம்ருதா, பெப்ரவரி 2015

No comments: