Thursday, February 26, 2015

உலகம் பூச்சிகளுக்கானதுதேவ்தத் பட்நாயக் இந்திய தொன்மங்களில் ஆய்வு செய்யும் ஒரு அறிஞர், எழுத்தாளர் மற்றும் ஓவியர். அவருடைய மகாபாரத நூல் “ஜெயா” உலகம் முழுவதிலும் உள்ள பலவகை வாய்மொழி மற்றும் எழுத்துவடிவ மாகாபாரத கதைகளை தொகுத்து எளிமையான சுவாரஸ்யமான வடிவில் கூறுகிறது. இதிலுள்ள கோட்டோவியங்கள் அட்டகாசமானவை. கோட்டோவியங்களுக்காக மட்டுமே இந்நூலை தனியாக ஒருமுறை வாசிக்கலாம். பாண்டவர்கள், குறிப்பாக அர்ஜுனன், யுதிர்ஷ்டிரன், கண்ணன், த்ரௌபதி ஆகியோர் பற்றி முற்றிலும் வேறுபட்ட, ஆழமான தத்துவார்த்த புரிதலை இந்நூல் எனக்கு அளித்தது.

“சீதா” இவரது மற்றொரு நூல். இது ராமாயணக் கதையை கோட்டோவியங்களுடன், வாய்மொழிக் கதைத் தரவுகளுடன் பேசுகிறது. எனக்கு பொதுவாக ராமாயணம் என்றால் அலுப்பான ஒரு ஹீரோயிசக் கதை, ராமன் ஒரு தட்டையான நீதிவான் எனும் எண்ணம் இருந்தது. இந்நூல் அவ்வெண்ணத்தை மாற்றியமைத்தது. ராமனின் உன்னதமான ஒரு ஆன்மீகப் பக்கத்தை காட்டியது. ராமாயணம் மீளமீள நம் மரபில் கூறப்பட்டதன் நோக்கத்தை புரிய வைத்தது.
 புராணங்கள் ஒருவிதத்தில் வாய்மொழிக் கதைகளின் தொகுப்பு தான். அதனாலே அவற்றில் நிறைய முரண்கள் இருக்கும். இம்முரண்களை நியாயப்படுத்த பின்னாட்களில் பல புது கதைகள் புனைந்து சேர்க்கப்படும். உதாரணமாய், த்ரௌபதி துகிலிரியப்பட்ட கதை மகாபாரதத்தில் ஆரம்பத்தில் இல்லை. வெகுபின்னாளில் தமிழக நிகழ்த்துக்கலைஞர்கள் தாம் இக்கதையை ஒரு நாடகீய முத்தாய்ப்புக்காக சேர்க்கிறார்கள். அல்லாவிட்டால் பாண்டவர்கள் அந்தளவு வஞ்சத்துடன், கடுஞ்சினத்துடன் கௌரவர்களை கொன்றொழித்ததற்கு நியாயம் இல்லாமல் போகலாம் என அவர்கள் கருதி இருக்கலாம். அதே போன்று குந்திக்கு நான்கு வேற்று ஆண்கள் வழி குழந்தைகள் பிறப்பதை நியாயப்படுத்தி, அதற்கு தெய்வீக முலாம் பூசி உருவான கதைகள் மற்றொரு உதாரணம்.

“ராமாயணத்தில்” ராமன் ஒரு பக்கம் நீதி, அறத்தின் வடிவமாகவே வருகிறான். ஆனால் அவனே அறம் பிழைக்கிற இடங்களும் வருகின்றன. ஒரு பக்கம் அவன் எந்த லௌகீக உடைமைகள், அதிகாரங்களிலும் ஆர்வமற்ற ஒரு மேன்மையான மனிதனாக வருகிறான். தன் மனைவி தன் உடைமை அல்ல. அவள் தனி உரிமைகள் கொண்ட ஒரு பெண். “அவளை நான் நேசிக்கிறேன் என்பது மட்டும் தான் அவள் மீது எனக்குள்ள பந்தம்” என அனுமனிடம் பேசுகிறான். “அதனால் சீதையை ராவணன் கடத்தும் போது எனக்கு எந்த இழுக்கும் உண்டாவதில்லை. சீதை என் உடைமை அல்ல. என்னை புண்படுத்த சீதையை கடத்துவது ஒரு அபத்தம். இது ராவணனின் தவறான புரிதலினால் விளைந்த செயல். அவன் இந்த உலகையே தான் வென்றடக்க வேண்டிய பொருளாக பார்க்கிறான். அதனால் தன் மதிப்பும் அதிகாரமும் வலுக்கும் என நினைக்கிறான். ஆனால் உண்மையான மதிப்பு என்பது உள்ளே இருந்து வர வேண்டும். நம் மனதை ஆட்சி செய்ய கற்க வேண்டும். உலகை ஆள்வதால் நாம் உலகுக்கு அடிமையாகத் தான் ஆக முடியும். உண்மையான ஆட்சியாளன் தன் ஆன்மாவை அடிபணிய செய்கிறான். ராவணனுக்கு இது புரியாமல் அவன் சீதையை கடத்தி என்னை பழிவாங்க பார்க்கிறான். ஆனால் எனக்கு அவன் மீது கோபமில்லை. நான் சீதையை விடுவிக்க நினைப்பது அவள் எனக்கு சொந்தமானவள் என்ற எண்ணத்தினால் அல்ல. அவளது தனிப்பட்ட சுதந்திரத்தை மீட்டு அளிப்பதற்காகத் தான்” என விளக்குகிறான். இது ஒரு ராமன். பின்னால் மற்றொரு ராமன் வருகிறான். அதாவது ராமனின் முரண்பட்ட மற்றொரு பக்கம்.
இலங்கையை கண்டறிந்து, அங்கு தன் மனைவி உள்ளாளா என அறிய ராமன் சுக்ரீவனிடம் போகிறான். அதற்கு முதலில் சுக்ரீவனை மன்னனாக்க வேண்டும். வாலியை கொல்ல அவனுக்கு உதவுவதாய் ராமன் கூறுகிறான். அதன்படி சுக்ரீவன் வாலியிடம் மோதும் போது பின்னிருந்து தாக்கி கொல்கிறான். பேசாமல் நேரடியாக வாலிடமே மோதி கொன்றிருக்கலாமே? ஆனால் இதற்கு சுக்ரீவன் ஒத்துக் கொள்ளவில்லை. அப்படி ராமன் வாலியை கொன்றால் அவனே வானரப்படைக்கு மன்னனாக நேரடும்; தன் பதவி பறி போகும் என அஞ்சுகிறான். அதனால் தான் வாலியுடன் மோத ராமன் தனக்கு அவனை கொல்ல உதவினால் போதும் என்கிறான். வாலி ராமனின் அம்பில் வீழ்கிறான். அவன் ராமனிடம் கேட்கிறான்: “நான் ராவணனை விட வலிமையில் சிறந்தவன். ஒருமுறை நான் அவனை என் வாலில் கட்டி கிஷ்கிந்தாவில் சிறை வைத்தேன். நீ சுக்ரீவனிடம் போனதற்கு பதில் என்னிடம் உதவி நாடி வந்திருந்தால் நான் உடனடியாய் ராவணனை உனக்காய் கட்டி இழுத்து கொண்டு வந்திருப்பேனே?”. இக்கேள்விக்கு ராமன் பதிலளிப்பதில்லை. இது நியாயமான கேள்வி தானே. வாலியிடம் உதவி நாடியிருந்தால் அது நடைமுறையில் ராமனுக்கு சீதையை மீட்க இன்னும் சுலபமாய் இருந்திருக்குமே?
இதற்கான விடை பின்னால் அனுமன் அசோகவனம் சென்று சீதையை சந்திக்கையில் வருகிறது. அனுமன் அவளிடம் “நானே உன்னை என் முதுகில் சுமந்து ராமனிடம் கொண்டு சேர்க்கிறேன்” என்கிறான். சீதை மறுக்கிறாள். ராமனே வந்து என்னை மீட்பது தான் அவருக்கு பெருமை என்கிறாள். பட்நாயக்கின் “சீதாவில்” சீதை ஒரு சுய-சிந்தனையும், சுய-சார்பும் கொண்ட பெண்ணாக ஒரு புறம் தோன்றினாலும் அவள் தன்னை ராமனின் உடைமையாகவும் தான் இன்னொரு புறம் கருதுகிறாள். வாலி அவளை மீட்டிருந்தாள் அவள் வாலியின் உடைமையாக மாறி இருப்பாள். அதே போல் அனுமன் மீட்டிருந்தாலும் அவள் அனுமனுக்கு கடன்பட்டிருப்பாள். ராமனுக்கு தேவை சீதையை பற்றி தகவல் அறியவும், போர் செய்யவுமான ஒரு படை. அதன் மூலம் அவன் தானே சீதையை மீட்க வேண்டும் என நினைக்கிறான். அதற்கு தன் முன் பணிந்து செயல்படும் பலவீனமான ஒரு ஆள் அவனுக்கு தேவைப்படுகிறது. அதனாலே அவன் சுக்ரீவனை தேர்கிறான். பிரித்தானியர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்த போதும் அவர்கள் பலவீனமான மன்னர்களுடன் நட்பு பாராட்டத் தான் விரும்பினார்கள். ராமாயணமும், மகாபாரதமும் நமக்கு ஒன்றைச் சொல்கிறது. பலவீனமானவர்கள் சுலபத்தில் சுகங்களையும் அதிகாரத்தையும் பெற்று பிரச்சனையில்லாமல் வாழ்கிறார்கள். ஆனால் பலம் மிகுந்தவர்கள் தொடர்ந்து பொறாமை, அதிகார போட்டியில் மாட்டி தன் அடிப்படை உரிமைகளை இழந்து நாடோடிகளாக திரிகிறார்கள். வேட்டையாடப்பட்டு மரிக்கிறார்கள். இரண்டு காப்பியங்களிலும் ராமனோ பாண்டவர்களோ நிம்மதியாக ஆண்டு வாழ்வதில்லை. வாழ்வின் பெரும்பகுதியை வனாந்தரத்தில் கடும் நெருக்கடியில் கழிக்கிறார்கள். பிறகும் அவர்கள் அவமானப்பட்டு சொந்தபந்தங்களை இழந்து அல்லோலப்படுகிறார்கள். பீமனிடம் வீழ்ந்த பின் துரியோதனன் இதைத் தான் அறைகூவுகிறான் “நாங்கள் எங்கள் வாழ்க்கையை முழுக்க அரண்மனையில் சுகமாய் கழித்தோம். இப்போது நீங்கள் எங்களை வீழ்த்திய பிறகும் எதையும் ஆளப் போவதில்லை. உங்கள் சொந்தங்களும் பிள்ளைகளும் இறந்து விட்டனர். இனிமேல் நீங்கள் ஆட்சி செய்வதில் அர்த்தமில்லை. இந்த போரில் உண்மையான வெற்றி உங்களுக்கு இல்லை”. பாண்டவர்கள் செய்த ஒரே குற்றம் கௌரவர்களை விட திறமையானவர்களாக தோன்றி, அதனால் கௌரவர்களுக்கு ஒரு பாதுகாப்பின்மை உணர்வு, பொறாமையை தோற்றுவித்தது தான். இதனால் அவர்கள் வாழ்க்கையின் பெரும்பான்மை காலம் சுகபோகங்களும் நிம்மதியும் அற்று அலைய நேர்கிறது.
இக்காலத்தில் கூட வேலையிடத்தில், சமூகத்தில், குடும்பத்துக்குள் எங்கும் திறமையானவர்கள், வலுவான ஆளுமை கொண்டவர்களைக் கண்டு பிறர் அஞ்சுகிறார்கள். அவர்களை ஒரு பக்கம் விரும்பினாலும் இன்னொரு பக்கம் ஒடுக்கி, வளர விடாமல் முடக்கி வைக்க தலைப்படுகிறார்கள். எங்கு போனாலும் அவர்களுக்கு பிரச்சனைகள் அதிகம் இருக்கும். சதா தன்னை தற்காத்து முன்னெடுத்து நிறுவிக் கொள்ள அவர்கள் போராட வேண்டி வரும். இந்த உலகம் சிறந்தவர்களை கொண்டாடுகிறது என நாம் நினைக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. சிறந்தவர்கள் தாம் மிக அதிகமாய் அவமானத்துக்கும், ஒதுக்குதலுக்கும் உள்ளாகிறார்கள். அவர்கள் எறும்புக் கூட்டத்தின் நடுவே வெல்லக்கட்டி போல் இருக்கிறார்கள். அரிக்கப்பட்டு சிறுக சிறுக காணாமல் ஆகிறார்கள். இதுவரை நீங்கள் சந்தித்து வந்த மனிதர்களைப் பற்றி மனதில் ஓட்டிப் பாருங்கள். பள்ளியில், கல்லூரியில் நீங்கள் பார்த்த மிகத்திறமையான ஆட்கள் யாருமே இன்று சிறந்த நிலையில் அநேகமாய் இருக்க மாட்டார்கள். வேலையிடத்தில் அதிகாரிகளாக, முதலாளிகளாக, அதிக பணமும், அதிகாரமும் வாய்த்தவர்களாக் திறமை குறைந்தவர்கள் தாம் இருப்பார்கள். அனைவரிடமும் பணிந்து போகும், திறமை குறைவானவர்களுக்கே எளிதில் பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலையிடத்தில் பேச்சிலோ செயலிலோ நீங்கள் உங்கள் உயரதிகாரியை விட சற்று உயர்வாக் இருந்தால் அவர் உங்களை கடுமையாக வெறுப்பார். வேலையில் இருந்து உங்களை நீக்க ஆவன செய்வார். வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும். ஆனால் திறமையானவர்கள் இரட்டிப்பு உழைக்க வேண்டும். அவர்களுக்கு சோதனைகள் மிகக்கடுமையாக இருக்கும்.
இதை சுஜாதா ஒரு சிறுகதையில் அருமையாக சித்தரித்திருப்பார். இரண்டு நண்பர்கள். ஒருவன் சோம்பேறி. கல்லூரியில் பிட் அடித்து மாட்டிக் கொண்டு வெளியேற்றப்படுவான். இன்னொருவன் கடுமையாய் உழைத்து முதல் மதிப்பெண்கள் எப்போதும் வாங்குவான். பிற்பாடு ரொம்ப வருடங்கள் கழித்து இருவரும் சந்திக்கும் போது சோம்பேறி நண்பன் உயரதிகாரியாகவும், உழைப்பாளி நண்பன் அவனுக்கு கீழ் எளிய ஊழியனாகவும் இருப்பான். அவன் இவனிடம் சொல்வான் “வாழ்க்கையில் முன்னேற உன்னைப் போல் கடுமையாக உழைத்து படித்து ரொம்ப சின்சியராக இருக்க வேண்டியதில்லை. நான் ஒன்றுமே செய்வதில்லை. எல்லாரையும் சந்தோசமாய் வைத்துக் கொள்கிறேன். யாரிடமும் முகம் சுளிப்பதில்லை. என்னிடம் ஏதோ முக்கியத்துவம் உள்ளதாய் காட்டிக் கொள்கிறேன். எங்கு போனாலும் என்னை ஏற்றுக் கொண்டு முக்கிய பொறுப்புகளை அளிக்கிறார்கள். வாழ்க்கை ரொம்ப சிம்பிள்”. வாலியாய் இருப்பதை விட சுக்ரீவனாய் இருப்பது ரொம்ப ரொம்ப வசதியானது; சிக்கலில்லாலது; ஆபத்தில்லாதது. உங்களை நாலுபேர் மண்டையில் குட்டுவார்கள்; கிண்டலடிப்பார்கள். அதை சற்று பொறுத்துக் கொண்டால் வாய்ப்பு, வசதி, அமைதி என வாழ்க்கை அமையும். டினோசர்கள் அழிந்தாலும் இந்த உலகில் கரப்பான்பூச்சிகள் என்றும் வாழும். உலகம் பூச்சிகளுக்கானது.

1 comment:

chitra chitra said...

Wow! Great. Superb. உண்மை்