Sunday, February 22, 2015

அவநம்பிக்கைகளின் பேருருக்காலம்: “ரசிகன்” நாவல் மதிப்புரை – அழகிய பெரியவன்
மகத்தானவற்றின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும், உறுதிப்பாடும் பொய்த்துப் போகிறபோது நொறுங்கிவிடுகிறோம். அவநம்பிக்கை மேலெழுகிறது. குழப்பங்களும், வினாக்களும் தோன்றுகின்றன. இதுநாள்வரை நாம் எதன்மீது பற்றுவைத்திருந்தோமோ அது இற்று விழுகிறது. நம் மனதிலேயே எதிர்வாதம் தோன்றி நம்மை உருமாற்றம் செய்கிறது. நாம் அதுவரை நம்பிக்கொண்டிருந்தவைக்கு எதிரானவராக அத்தருணத்தில் மாறிவிடுகிறோம். ஆர். அபிலாஷ் எழுதியிருக்கும்ரசிகன்நாவல், நம்பிக்கைகள் பொய்த்துப் போனபின்பு ஒரு மனிதன் எப்படி அவனுக்கே எதிரானவனாக மாறுகிறான் என்பதைச் சித்தரிக்கிறது.


கலை பற்றிய முக்கியமானதொரு நூலை எழுதிய அன்னதா சங்கர் ராய் அந்நூலில், ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்:
நாம் மறுபடி ஒரு யுக சந்தியில் வந்து நிற்கிறோம். வாஸ்தவத்தின் உண்மையான உருவம் எது என்ற விஷயத்தில் நம் சந்தேகம் தீராவிட்டால், அந்தச் சந்தேகத்தின் நிழல் கலையின் மேலும் விழத்தான் செய்யும். சந்தேகம்தான் இந்த யுகத்தில் மேலோங்கி நிற்கும் குரலாகும். விஞ்ஞானம், பொருளாதாரம், புரட்சி இவற்றின் வெற்றிகள் இந்தச் சந்தேகத்தின் குரலை அடக்க முடியவில்லைதர்க்கவாதம் ஒடுங்கிப்போய்த் தர்க்கத்தின் எதிர்மறையே எங்கும் மேலோங்கி நிற்கிறது.” (கலை, அன்னதா சங்கர் ராய். தமிழில் சு. கிருஷ்ணமூர்த்தி. 2011. அகல், சென்னை – 14)
அபிலாஷின் நாவல் சற்றேரக்குறைய இந்தச் சந்தேகத்தை தன் மையமாகக்கொண்டு இயங்குகிறது என்று சொல்வேன். ஒரு காலகட்டத்தின் மீது, ஒரு தத்துவத்தின் மீது, மனிதர்களின் மீது எழும் சந்தேகம். சந்தேகமே வினாக்களாக, விவாதமாக மாறுகிறது.
இந்தியாவில் தத்துவ விசாரங்களுக்கு எப்போதுமே குறைவிருந்ததில்லை. நவீன காலத்துக்கு முன்பிருந்தே பௌத்தம் அந்த அம்சத்தை இங்கே தொடங்கி இன்னும் பிறவற்றோடு இருந்துகொண்டுள்ளது. மதம் சார்ந்தும், இனக்குழு சார்ந்தும், பொருளாதாரம், பண்பாடு, வாழ்முறை போன்றவற்றை சார்ந்தும் தத்துவங்கள் உருவாகி நிலைபெற்றுள்ளன. இவற்றுள் உலக அளவிலேயே பெரும் செல்வாக்கு செலுத்தியது மார்க்சியம்.
இந்தியாவில் அதன் தாக்கம் அளப்பறியது. தீவிர சிந்தனையாளர்கள் எவரும் மார்க்சியத்தை பரிசீலிக்காமல் அதைக் கடந்திருக்கமுடியாது. மூளையால் உணரப்படும் ஒன்றாக இராமல், வயிற்றால் உணரப்படும்படி இருப்பதே மார்க்சியத்தின் மெய்மை. பசியுள்ளவனும், பசியைப் பற்றிய விசாரம் உள்ளவனும் இயல்பாகவே மார்க்சியத்தின்பால் போய்ச் சேர்வான்.
இந்நாவலில் வரும் மய்யப்பாத்திரமான சாதிக்கும் அப்படித்தான் போய்ச் சேர்கிறான். மார்க்சியத்திடம். “எந்து சஹாவே?” என்று வரும் தோழர்களுக்குத் தருவதற்கு ஒன்றுமில்லாமல், கஞ்சித் தண்ணீரை சூடு பண்ணித்தரும் அளவுக்கு அவன் வீட்டில் வறுமை. சாதிக் தீவிரமாய்ப் படிக்கிறான். மானுவியல், மாற்று சினிமா, இலக்கியம், இசை என பலவற்றின் மீதும் அவனுக்கு அறிவார்ந்த ஈடுபாடு இருக்கிறது. நோய்வாய்ப்படிருக்கும் அம்மாவுக்குக்கூட செலவு செய்யாமல், நண்பன் அனுப்பிய பணத்தைக்கொண்டுசெங்கதிர்பத்திரிகை நடத்துகிறான். நோய் தீவிரமடைந்து அம்மா சாகிறபோதும் அவன் குற்ற உணர்வு கொள்வதில்லை.
தன்னுடன் இருக்கும் மூர்த்தி, வெங்கட், அலெக்ஸ், சந்தீப், சங்கர் போன்ற நண்பர்களுக்கு சாதிக் அறிவாசானைப் போலத் திகழ்கிறான். ஊர் ஊராய்செங்கதிர்இதழை விற்கிறான். பொதுவுடைமைக் கட்சியோடு அவனுக்கு நெருக்கமாகத் தொடர்பிருக்கிறது.
தாஸ்தாயெவ்ஸ்கி, தால்ஸ்தோய், பாரதி, புதுமைப்பித்தன், நகுலன் என இலக்கியம் படித்திடும் சாதிக், இலக்கியவாதிகளுடனும் தோழமை பாராட்டுகிறான் மட்டமான ரசனையை, மட்டமான சினிமாவை விமர்சிக்கிறான் சாதிக். ரஜினிகாந்தின்பாண்டியன்திரைப்படத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் போஸ்டர்களையும், தட்டிகளையும் கிழித்து தன் கோபத்தை வெளிப்படுத்துகிறான். அந்த ரசிகர்களுடன் மோதலிலும் இறங்குகிறான்.
சாதிக், தீவிர முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைஞன். எண்பதுகளிலும், தொன்னூறுகளிலும் காணக்கிடைத்த இளைஞன். ஏகாதிபத்தியம், சாதியம், முதலாளியம், உலகமயம் போன்றவற்றுக்கெதிராய் கடுமையான விமர்சனங்களை உடைய இளைஞன். இப்படிப்பட்ட இளைஞனான சாதிக், பாஷா சாதிக்காக மாறும் முரண் ஒரு கொடூர நகைச்சுவையாய் நம்முன் திடுமென்று உருவாகித் திரண்டு நிற்கிறது. என்னைப் பொறுத்தவரையில் பேரதிர்ச்சி தரும் திருப்பம் இது என்பேன்.
ஆண்டிரே பாஸின், தார்கோவ்ஸ்கி, டால்ஸ்டாய், தெரிதா, காம்யூ எனப் பேசிய சாதிக் ரஜினி ரசிகர் மன்ற சுவரொட்டிகளை ஒட்ட நாயாய் அலைகிறான். கடவுள் மறுப்பு பேசியவன் ராகவேந்திரர் கோவிலுக்குப் போகிறான். ரஜினியைத் தன் தெய்வமாகப் பாவிக்கிறான். ஒரு புள்ளியிலிருந்து நாம் முற்றிலும் எதிர்பாராத பிறிதோர் புள்ளிக்கு சாதிக் நகர்வதை இந்நாவல் அபாரமாக நம்முன்னால் விரிக்கிறது.
நிஜவாழ்வில் நான் பல தீவிர மார்க்சிய தோழர்கள் வேறோர் புள்ளிக்கு நகர்ந்திருப்பதை பார்த்திருக்கிறேன். திராவிட அரசியலில், ஆர். எஸ். எஸ் சில் விவசாயச் சங்கத்தில், சாதிய அமைப்புகளில், சுழற் சங்கம் போன்றவற்றில் மார்க்சிய தோழர்கள் சேர்ந்து தங்களை முற்றிலுமாய் உருமாற்றிக் கொண்டதை நான் அறிவேன். இம்மனிதர்களின் பயணம் குறித்த எழுத்துப் பதிவுகள் நம்மிடையே ஏதும் இல்லை. சோவியத் ஒன்றியம் வீழ்த்தப்பட்டபோது எழுந்த மனநெருக்கடிகளையும், பதைபதைப்பையும் நம் மொழி பதிவு செய்திருக்கிறதா என்று தெரியவில்லை. மார்க்சிய தத்துவத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையிலேபின் தொடரும் நிழலின் குரல்வந்துள்ளது. ஆனால், தனிமனிதநிலையில், மனித பலவீனங்களால் ஒரு மார்க்சியவாதி சிதையும் சித்திரம் தமிழில் உருவாக்கபட்டதில்லை. ”ரசிகன்நாவலில் அபிலாஷ் அதை செய்திருக்கிறார்.
தத்துவத்தின் தோல்வியல்ல தனிமனிதத் தோல்வியே சாதிக்கின் தோல்வி என்று இந்நாவல் சொல்கிறது. இதுவே என் அனுமானம். தத்துவங்களின் பின்னால் மறைந்துகொண்டு போலியாய் உலவுபவர்களைப் பகடி செய்யும் Black humor நாவல் இது.
மூன்று பகுதிகளாக இருக்கும் இந்நாவல் முதலிரண்டு பகுதிகளில் சாதிக் பற்றியே பேசுகிறது. அவனின் கலை இலக்கிய செயல்பாடுகளையும், காதலையும் நுட்பமாய் பதிவு செய்கிறது. இதற்கு எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளின் காலகட்டம் உசிதமாக இருக்கிறது. சாதிக், கலாசாகரன் என்ற பெயரில் எழுதும் ராஜகோபாலன், தாஸ், சிவக்குமார், வேதமணி போன்ற எழுத்தாளர்களுடனும், பதிப்பாளர்களுடனும் நெருங்கிப் பழகுகிறான். இன்றும் தமிழ் இலக்கிய உலகில் கோலோச்சியபடியுள்ள சில கவிஞர்களும் எழுத்தாளர்களும் மேற்சொன்ன பெயர்களில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். கலாசாகரன், நகுலனைக் கொண்டாடும் கவிஞர்! வேதமணி, பல புகழ்பெற்ற எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்த பதிப்பாளர்! இவர்களெல்லாம் யாரென்று அறிந்து கொள்ள முடிகிறவர் நீண்டகால வாசிப்பு பழக்கம் கொண்டவராக இருக்க வேண்டும். இல்லையேல் அவ்வாறான நண்பர்களிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டியிருக்கும். இவற்றுள் சிவக்குமார் மற்றும் தாஸ் ஆகிய இரு எழுத்தாளர்களின் சித்திரங்கள் நுட்பமானவை. கடுமையாய்ப் பகடி செய்யப்படுபவை. இப்பதிவுகளை செய்வதில் அபிலாஷ் சில இடங்களில் எல்லை மீறுகிறார். தமிழ்த்தேசியம் பேசுகிற, மரபுக்கவிதைகளை எழுதுகிற, முதியவரைப் பற்றிய விவரணைகள் அதிர்ச்சியை உண்டு பண்ணூகின்றன. குறிப்பிட்ட இப்பதிவு, பகடி என்ற நிலையை தாண்டிச்சென்று தனிமனித அவதூறில் முடிவதாகத் தோன்றுகிறது. மொழிப்பற்று கேலிக்குரிய ஒன்றா என்ன?
கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாய் தமிழில் நடந்த தத்துவ விசாரணைகளையும், கலை இலக்கியச் செயல்பாடுகளையும் இந்நாவல் சாதிக் என்ற பாத்திரத்தின் வழியே கணக்கிலெடுத்துக் கொள்கிறது. கூர்ந்த அறிவோடு இக்காலத்தின்வழியே நாம் பார்த்த பலவற்றின் மீதும் பார்வையை செலுத்துகிறது. ஆனால் அவையெல்லாமே வாழ்வின் முரண்களாய், அவற்றின் ஊடாட்டமாய் உருக்கொள்ளாமல் வெறுமனே சாதிக் மேற்கொள்ளும் உரையாடலாய் மட்டுமே முடிந்து போகின்றது.
மார்க்சியம், இடஒதுக்கீடு, கலை இலக்கியம் என்றெல்லாம் பேசத் துவங்கும் நாவலும், நாவலின் பாத்திரங்களும் இறுதியில் புலனாய்வு இதழியல், ஊழல், திரைப்படம், நீலப்படம், ஊடகம், நாயக வழிபாடு, தனிமனிதத் துதி, கார்ப்பரேட் ஆன்மீகம் என்று முடிவது நம் காலத்தின் குறியீடு. ஆனால் இம்மாற்றத்தையும், சீரழிவையும் ஆழமாய் அலச முடியாமல் நின்றுவிடுவதால் இந்நாவல் இறுதியில் ஓர் அவநம்பிக்கையையே கையளிக்கிறது. சாதிக் உளவியல் சிக்கல் மிகுந்த பாத்திரமாக படைக்கப்பட்டிருப்பதால் தத்துவங்களிடம் ஆழமாய் போய்ச்சேர்கிற தனி மனிதர்களின் தோல்விகளே அத்தத்துவ முன்னெடுப்புக்கு தடையாகிவிடுகின்றன என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அத்தத்துவங்களை எதிர்த்து நிற்கும் பண்பாடு, மொழி, சாதி, ஆணாதிக்கம், மதம், பொருளாதாரக் கட்டமைப்பு போன்றவற்றிலேயே நமக்கான விடை இருக்கிறது. இதை நாவல் எங்குமே பேச மறுக்கிறது. தீவிர மார்க்சியனாக இருக்கும் சாதிக் திடீரென்று ரஜினி ரசிகனாக மாறுவதற்கான காரணம் எதுவும் நாவலில் இல்லை. இதற்குப் பதிலாக சாதிக்ஒவ்வொரு நேரத்திலேயும் ஒரு மனநிலைக்குள்ள வந்திடறோம்என்கிறான். ஆனால், நாவலைப் படித்துக் கொண்டிருக்கும் ஒரு வாசகனால், “மனநிலை என்பதே உருவாக்கப்படும் ஒன்றுதான் சாதிக்என்று சொல்லிவிடமுடியும்!
பல நேரங்களில் சாதிக் தன்னை ஒரு கோமாளியாக்க் கருதிக்கொள்கிறான். கோமாளித்தனம் கூரிய அறிவோடு இணைந்த்து. அது சாதிக்கிடம் இல்லை. சாதிக்கின் தத்துவவிசாரங்கள் சமூகக் காரணிகளோடு மோதும் தருணங்களை அடுக்குகளாகக் கொண்டு இந்நாவலை அமைத்திருந்தால் அபிலாஷ் தமிழின் மிக முக்கியமானதொரு படைப்பைத் தந்தவராக கொண்டாடப்பட்டிருப்பார். இந்த வாய்ப்பு இதில் நழுவிப்போய்விடுகிறது.
சாதிக்கின் அவநம்பிக்கைகளும், கோமாளித்தனமும் அவனை இந்த நிலைக்குத் தள்ளியது என்பதற்கான அக, புற காரணிகள் பதிவாகவில்லை. இந்நாவல் முழுவதிலும் வருகின்ற பெண் பாத்திரங்களைப் பற்றி தனியே பேசவேண்டும். சாதிக்கின் காதலிகளாக இருக்கின்ற ரெஜினாவும் பிரவீணாவும், டியூஷன் டீச்சரும் தனித்தனி குணபாவம் கொண்டவர்கள். சந்தீப்பின் காதலியான ரதி பல ஆண் நண்பர்களோடு பழகுகிறாள். பிரவீணா இன்றைய நவீன பெண் பிம்பத்தைத் தர முயல்கிறாள். அவளும் சாதிக்கின் பாத்திரத்தைப் போன்றே சிதைந்த மனநிலையை கொண்டவளாக இருக்கிறாள். சாதிக், பிரவீணா, மூர்த்தி, ரதி போன்ற பாத்திரங்கள் பாலுறவில் நாட்டமற்றோ அல்லது திருப்தி அடையாதவர்களாகவோ, அல்லது சுய வதை செய்து கொள்கிறவர்களாகவோ இருக்கிறார்கள். இதன்வழியே உளவியல் சிக்கல் மிகுந்த, சிதைந்துபோன மனநிலை கொண்ட நவீன மனிதர்களாக உருமாற்றம் கொள்கின்றனர்.
ஒரு பெரும் கனவாய் எழுந்து அபத்தமாய் சிதைந்து போயிருக்கும் நம் காலத்தின் ஒரு விள்ளலை அபாரமாக காட்சிப்படுத்துவதின் வழியே தனித்துவமானதோர் படைப்பாகத் தன்னை முன்னிறுத்துகிறது அபிலாஷின்ரசிகன்என்ற நாவல்.
 நன்றி: http://newtamiltimes.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/

No comments: