Saturday, February 21, 2015

அன்னா கரனீனா: “அதற்கென்ன விருந்து சாப்பிட்டு விட்டு போங்க”


அன்னா கரனீனா நாவலில் எனக்கு ரொம்ப பிடித்த பாத்திரங்களில் ஒன்று ஒப்ளோன்ஸ்கியுடையது. ஒப்ளோன்ஸ்கி கதையின் நாயகியான அன்னாவின் அண்ணன். இவர் ஒரு வெகுளி. ஸ்திரிலோலரும் கூட.
ஒப்ளோன்ஸ்கி தன் குழந்தையின் தாதியின் மீது ஆசைப்படுவார். அவளுக்கு காதல் கடிதங்கள் எழுத அவை அவரது மனைவியிடம் மாட்டும். மனைவி கோபத்துடன் அவரிடம் கடிதம் பற்றி விசாரிக்க ஒப்ளோன்ஸ்கி சிரித்து விடுவார். வேண்டுமென்றே அல்ல. வாழ்க்கையை வெறும் சுகமாக கொண்டாட்டமாக மட்டுமே பார்க்கும் அவருக்கு துரோகம், கோபம், விசுவாசம் ஆகிய விழுமியங்கள் புரியாது. இவற்றுக்காக ஒருவர் உணர்ச்சிவசப்படுவது அவருக்கு நகைச்சுவையாய் தோன்றும். அவரது மனைவியின் அந்த உண்மையான கோபத்தின் ஆழம் அவருக்கு விளங்காமல் சிரித்து விடுவார். எவ்வளவு முயற்சி பண்ணியும் அவரால் முகத்தில் மிளிரும் சிரிப்பை மட்டும் கட்டுப்படுத்த முடியாது.


 சிரித்த முகத்துடன் மனைவியை சமாதானப்படுத்த முயல அவள் வாழ்க்கை வெறுத்து விடுவாள். அதன் பிறகு அவரிடம் பேசவோ குடும்பத்தை பார்த்துக் கொள்ளவோ மறுத்து தனியாய் அறைக்குள் அடைந்து கிடப்பாள். அவளுக்கு அந்தளவுக்கு கணவனை தண்டிக்கும் நோக்கமெல்லாம் இல்லை. ஆனால் அவரது முகத்தில் தெரிந்த அந்த வெகுளிச் சிரிப்பு. அதைத் தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்காகவே அவரை கடுமையாக தண்டிக்க நினைப்பாள்.
பிறகு ஒப்ளோன்ஸ்கியின் தங்கை வந்து அவரது மனைவியை அமைதிப்படுத்தி குடும்ப பிரச்சனையை சரி செய்வார். பிறகு இந்த தங்கை, அதுவும் மணமான அவள், ஒரு இளைஞனைக் காதலித்து அவள் குடும்பம் பெரும் பிரச்சனைக்குள்ளாகும். அவள் கணவன் அவளை விவாகரத்து செய்ய முடிவெடுப்பான். அவன் மனைவியின் அண்ணன் ஒப்ளோன்ஸ்கியை தேடிப் போவோன்.
ஒப்ளோன்ஸ்கி அந்நேரம் தன் வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடு பண்ணிக் கொண்டிருப்பார். திடீரென மைத்துனர் வந்து விட அவருக்கும் சேர்த்து விருந்து சொல்வார். ஆனால் மைத்துனர் “இனி நம் குடும்பங்கள் இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் உன் தங்கையை விவாகரத்து செய்ய போகிறேன்” என்பார். ஒப்ளோன்ஸ்கி ஒரு நொடி வியப்பாய் மைத்துனரைப் பார்ப்பார். பிறகு சற்றும் யோசிக்காமல் சொல்வார் “விருந்தில் கலந்து கொள்ளுங்கள்”
“ஒப்ளோன்ஸ்கி இனி நமக்குள் எந்த உறவும் இல்லை. நானெப்படி…?”
“இருக்கட்டும். இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள் அல்லவா. அதனால் என் விருந்தில் கலந்து கொண்டே ஆக வேண்டும். ரொம்ப விசேசமான உணவு வகைகளை நீங்கள் சுவைக்க போகிறீர்கள்”
இப்படித் தான் ஒப்ளோன்ஸ்கியால் பேச முடியும். அவர் வாழ்க்கையை அந்தந்த நொடிகளில் வாழ்பவர். அந்த வாழ்க்கைநோக்கில் இருந்து காண்கையில் திட்டமிட்ட முடிவுகளும் விதிமுறைகளும் ஒட்டுமொத்த கணிப்புகளும் கொண்ட நம் வாழ்க்கை அபத்தமாகவே தெரியும். எது எவ்வாறு நடந்தாலும் அந்த ஒரு நொடியில் எப்படியும் இருக்க மனிதனுக்கு சுதந்திரம் உண்டல்லவா? அதை பரிபூரணமாக அனுபவிப்பவர் ஒபோன்ஸ்கி.
இந்த காட்சியை நேற்று ரோமிடிநவ் அலைவரிசையில் பார்த்த அன்னா கரினீனா படத்தில் கண்டேன். அருமையான திரைக்கதையாக்கம். 2012இல் வெளியான படம். ஜோ ரைட் இயக்கியது. அன்னாவாக கெய்ரா நைட்லி நடித்திருப்பார். அன்னா என் கற்பனையில் சற்று புஷ்டியாகவே இருப்பார். ஆனால் கெய்ரா ஒல்லியாக உணர்ச்சிப்பிழம்பாக படபடவென துடிப்பாய் பேசுபவராக மாறுபட்ட தோற்றத்தில் இருப்பார். நன்றாக நடித்திருப்பார். இந்த படம் நடிக்கும் போது அவருக்கு 26 வயதிருக்கலாம். அதனால் வ்ரோன்ஸிக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் பெரிதாய் தெரியாது. குழந்தை பிறந்தவுடனான உடல் புஷ்டி காட்சியில் தெரியாது. இதெல்லாம் கொஞ்சம் முரணாக பட்டது. ஆனாலும் ஒரு கச்சிதமான படம்!

No comments: