Tuesday, February 3, 2015

கொலைகாரனுக்கு கொலை தண்டனை கொடுக்கலாமா? - ஒரு விவாதம்

இது நண்பர் லஷ்மி கணபதிக்கும் எனக்கும் இடையிலான மரண தண்டனை பற்றி ஒரு விவாதம்.


வணக்கம் அபிலாஷ்.
மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்து உங்களது கருத்துகளில் எனக்கு ஒரு கேள்வி. கொலை என்பது குற்றமாயினும் போரில் அது குற்றமாக பார்க்கப்படுவதில்லை. தீவிரவாதிகளில் மனிதம் பாராட்டி ஒரு ராணுவ வீரன் இறந்தாக செய்தி சென்ற வாரம் வந்தது. மனிதம் பாராட்டப்படுவது சரி எனில் இவர் இறந்திருக்க மாட்டார் தவறெனில் ஏன் கொலைக்கும் மரண தண்டனைக்கும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு குரல்கள்?
அப்பொழுது யார்வேண்டுமானாலும் போர் செய்கிறோம் எனக்கூறி யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாமா?

இயக்குநர் SPEILBERG SAVING PRIVATE RYAN இல் தன் குழு வீரனை கொல்லும் நாஜி வீரனை மன்னிக்கும் மில்லர் கதாபாத்திரத்தை மீண்டும் அதே நாஜி வீரன் கொலை செய்ய வைத்திருப்பார். உண்மையில் HITLER மாண்டு போகாமல் சரணடைத்திருந்தால் அவரை மன்னித்‌திருக்க முடியுமா?

முடியாமல் போனால் இந்த வாதம் ஏன் இன்னும் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது?
அன்புடன்
லஷ்மி கணபதி
அன்புள்ள லஷ்மி கணபதி,
நீங்கள் கேட்பது கொலைக்கு எதிரான ஒரு பொது அறம் சாத்தியமா என. நாம் கசாப்பின் மரண தண்டனையை எதிர்க்கும் போது இன்னொரு முனையில் ஒரு ஐ.எஸ்.ஐ எஸ் ஒரு அப்பாவியின் கழுத்தை வெட்டி மரண தண்டனை கொடுத்துக் கொண்டிருப்பார். எல்லை கடந்த பயங்கரவாதத்தில் இந்தியா நிறைய இளைஞர்களை பலி கொடுக்க நேர்கிறது. நாம் கொல்வது தவறென்றால் அவர்கள் கொல்வது மட்டும் சரியா? அவர்களை தடுக்க முடியாவிட்டால் நாம் ஏன் நம்மை தடுக்க வேண்டும்?
இக்கேள்விகளுக்கான என் பதில் இது: கொலைகளை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று பாதுகாப்புக்காகவோ சண்டையின் போது தவிர்க்க இயலாமலோ நடக்கும் கொலைகள். இன்னொன்று திட்டமிட்டு நிறைவேற்றப்படும் கொலைகள்.
 இரண்டாவது வகை கொலைகள் தான் தவிர்க்கப்பட வேண்டியவை. எதிர்க்க வேண்டியவை. அதாவது தீவிரவாத தாக்குதல் கொலை,  அரசு அமைப்பு தனிநபர் மீது நிகழ்த்தும் மரண தண்டனை கொலை. முதல் வகை கொலைகள் தவிர்க்க முடியாதவை. மனிதன் அடிப்படையில் ஒரு கொலைக்கருவி தான். அவனால் கொல்லுவதை முழுக்க தவிர்க்க இயலாது. எந்த நொடியிலும் யாரும் கொலை செய்யும் மனநிலைக்கு தள்ளப்படலாம். ஆனால் இரண்டாவது வகை கொலைகள் உண்மையில் மனிதனை திருத்தவோ குற்றத்தை தடுக்கவோ நடப்படுவதில்லை. அவை மனித உடலை சிதைத்து அழித்து அதன் மூலம் பொது மக்களை அச்சுறுத்தி அடக்குவதற்காக நடக்கிறது.
 மரண தண்டனை என்பது அரசின் ஒரு அதிகார பிரகடனம். சில நேரம் பொது சமூகம் தம்மில் சிலர் மீது அதிகாரம் காட்ட கூட மரண தண்டனையை வலியுறுத்துகிறது. மரண தண்டனை என்பது கையில் மாட்டியனை பொதுமக்கள் மொத்தும் தர்ம அடி போலத் தான். மரண தண்டனைக்கு பயந்து ஏன் குற்றங்கள் குறைவதில்லை என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். மரண தண்டனை என்றல்ல எந்த தண்டனையும் குற்றங்களை குறைப்பதில்லை. சமூக விலக்கம் பற்றின பயம் தான் குற்றங்களை குறைக்கிறது.
போர் கூட திட்டமிட்டு ஒரு நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் பொருட்டு நிகழ்த்தப்படுகிற ஒரு பெரும் மனித பலிச் சடங்கு தான். எளிய மக்களை கொன்று அரசாங்கங்கள் சமரச மேஜையில் தேனீர் அருந்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மறக்கும். மக்களின் உயிர் இவர்களுக்கு (ஷேக்ஸ்பியர் சொன்னது போல்) பீராங்கிக்குள் நிரப்பும் கச்சாப்பொருள் போலத் தான். இதைத் தான் நாம் எதிர்க்க வேண்டும். கொலைகளை அல்ல. நம் உடலை வைத்து அரசும் சமூகமும் பகடையாட்டம் ஆடுவதை எதிர்க்க வேண்டும். அதனால் தான் நான் மரண தண்டனையை எதிர்க்கிறேன்.
கொலைக்குற்றங்களை மட்டுமல்ல பெரும்பாலான குற்றங்களை அன்பினாலும் பண்பாட்டினாலும் மட்டுமே குறைக்க முடியும். தண்டனைகள் குற்றத்திற்கு ஏதுவான சூழலைத் தான் உருவாக்கும். உதாரணமாய் ஒரு முறை குற்றம் செய்தவரை நிரந்தர குற்றவாளி ஆக்குவதே நம் தண்டனைக் கூடங்களின் நோக்கம்.
பழிவாங்கும் உணர்ச்சி நம் மனதில் ஆழத்தில் காமம், அச்சம் போல் உறைந்து கிடக்கிறது. அது சக்தி வாய்ந்த உணர்ச்சி. ஆனால் இவ்வுணர்ச்சி பாதுகாப்பின்மையினால் தோன்றும் பீதியின் மற்றொரு வடிவம் தான். தில்லியில் இளம்பெண் ஒருத்தி கொடூரமாய் பேருந்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட போது இத்தேசத்தின் பெண்களுக்கும், பெண்களின் சார்பில் ஆண்களுக்கும் தாங்கவொண்ணாத அச்சம் ஏற்பட்டது. அந்த மூன்று குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும் என கூக்குரல் எழுந்தது. ஆனால் கொன்று விட்டால் நம் தெருவில் போகிற பிற பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடுமா என நாம் யோசிப்பதில்லை. அக்குற்றம் நடந்து, குற்றவாளிகளில் இருவர் சிறையிலேயே கொல்லப்பட்ட பின்னரும் கூட பல பலாத்கார குற்றங்கள் நம் தேசத்தில் நடந்தன. இது ஏனென்றால் குற்றம் செய்கிறவர்கள் தாம் பிடிபட மாட்டோம் என பிடிவாதமாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை குலைத்தால் உலகில் அத்தனைக் குற்றங்களையும் தடுத்தி விடலாம். ஆனால் அது சாத்தியமில்லை. குற்றம் என்பது ஒரு சாகசம். சாகசத்தின் பின்னால் அபாரமான, தர்க்கத்தை கடந்த ஒரு தன்னம்பிக்கை உள்ளது. மரண தண்டனை என்பது நமது தற்காலிக மனத்திருப்திக்காக ஒருவனின் உடலை சிதைக்கும் ஒரு தற்காலிக சல்ஜாப்பு மட்டும் தான். சாமிக்கு கிடாய் வெட்டி சாந்தி செய்வது போல் இந்நாட்டின் கோடானு கோடி மக்களின் அற்ப மனநிம்மதிக்காக ஒருவனை தூக்குக் கயிற்றில் தொங்க விடுகிறோம். எப்படி வெட்டப்படும் கிடாயை சாமி கேட்பதில்லையோ அது போல் கொல்லப்படும் உயிரை நீதிதேவதையும் கேட்பதில்லை.
அன்புடன்

ஆர்.அபிலாஷ்

No comments: