Saturday, February 14, 2015

பெரம்பலூர் கூட்டமும் பின்நவீனத்துவமும்

பெரம்பலூர் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக மலையில் எழுத்தாளர்களை அழைத்து பேச வைத்தார்கள். ஒவொரு நாளும் மூன்று எழுத்தாளர்கள் அல்லது பேச்சாளர்கள். எட்டாம் தேதி நான் பேசினேன்.
நிகழ்ச்சியை அற்புதமாக ஒருங்கிணைத்திருந்தார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியின் எழுத்தாளர் சந்திப்பு அல்லது கூட்டங்களுக்கு வருவதை விட ஐந்து மடங்கு கூட்டம். இரவு பத்து மணிவரை கூட்டம் கலையாமல் ஆர்வமாக கேட்டது. பெரம்பலூர் போன்ற ஒரு சின்ன ஊரில் இது வியத்தகு சாதனை. ஒவ்வொரு பஞ்சாயத்தும் நிதி சேகரித்து ஆயிரக்கணக்கான நூல்களை வாங்கி நூலகத்துக்கு அளித்திருக்கிறார்கள். விற்பனை குறைவான ஸ்டால்களில் இருந்து அதிகமாக வாங்கும்படி ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களிடம் கேட்டுக் கொள்ள அதன்மூலம் அனைவருக்கும் நியாயமான விற்பனை அமையும்படி பார்த்துக் கொள்கிறார்கள். பொதுவாக சென்னையை விட ஸ்டால்களில் விற்பனை திருப்திகரமாய் உள்ளதாய் கூறினார்கள். பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தரேஸ் அகமதின் இலக்கிய ஆர்வமும் ஒருங்கிணைப்பு திறனும் தான் இச்சிறப்புக்கு முக்கிய காரணம். அவருடன் இணைந்து நன்றாக பணியாற்றும் அரசு ஊழியர்களையும் பாராட்டியாக வேண்டும்.
தரேஸ் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ஆனாலும் அவருக்கு முக்கியமான தமிழ் எழுத்தாளர்களையும் நூல்களையும் தெரிந்திருக்கிறது. நான் முராகாமி பற்றி பேசப் போவதாக அறிந்ததும் தரேஸ் என்னிடம் சொன்னார் “இவங்களுக்கு முராகாமி எல்லாம் தெரியாது. அதனால கொஞ்சம் எளிமையா சொல்லுங்க”. மேலும் என்னுடன் பாரதி கிருஷ்ண குமார் பேச இருந்தார். அவர் பேசுவது என்றால் ரஜினி பட ரிலீஸ் போல. வேறு யாரும் பக்கத்தில் நிற்க முடியாது. நான் பேசுவதற்காக நிறைய குறிப்புகளை எழுதி என் டெப்லெட்டில் வைத்திருந்தேன். எதிர்பாராத விதமாக என்னை முதலில் பேச அழைத்தார்கள். என்னால் உடனே குறிப்புகளை திறக்க முடியவில்லை. பத்து நிமிடங்கள் தேடினதில் ஒரு கோப்பு மட்டுமே கிடைத்தது. சரி இருப்பதை வைத்து பேசுவோம் என முழுக்க என் நினைவுகளில் இருந்தே பேசினேன். பேசி முடித்ததும் தரேஸ் சைகையால் என்னை பாராட்டினார். மேடையில் இருந்த சு.வெங்கடேசன் என்னை தனிப்பட்ட முறையில் பாராட்டியதுடன் மேடையிலும் என் பேச்சை வெகுவாக பாராட்டினார். பாரதி கிருஷ்ணகுமார் என்னிடம் வந்து “மிகச்சிறந்த பேச்சு. நீங்கள் சொன்ன சில விசயங்கள் என்னை ரொம்ப தொந்தரவு செய்து விட்டன” என்றார். எவ்வளவு பெரிய பேச்சாளர்! என்னையெல்லாம் பாராட்டுகிறார் என்றால் அவரது தாளார மனதை, திறந்த மனதை புரிந்து கொள்ளலாம். மேடையில் அவர் பேசும் போதும் என் உரையை பலமுறை பாராட்டினார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் என்னுடைய வாசகர்கள் சிலரை சந்தித்தேன். அவர்களும் என் பேச்சை பாராட்டினர். நான் நிஜமாகவே நன்றாக பேசி விட்டேனா என குழம்பினேன். எனக்குத் தான் பேசவே வராதே? ஒரு தம்பதி வந்து என் “ரசிகன்” நாவலுக்கு கையெழுத்து வாங்கிப் போயினர். இப்படி அக்கூட்டம் திருப்திகரமாக அமைந்தது. சென்னை கண்காட்சியில் உள்ள ஒரு அந்நியத்தன்மை பெரம்பலூரில் இல்லை என்ப்து குறிப்பிடத் தக்க அம்சம்.
மாவட்ட ஆட்சியர் ரசனைக்காரர். கூர்மையான நகைச்சுவை உணர்வு அவருக்கு. அவர் எனக்கு விடைகொடுக்கும் போது சொன்னார்: “முராகாமி பின்நவீன எழுத்தாளரோ இல்லையோ நீங்கள் பெரம்பலூர் மாதிரி ஒரு ஊருக்கு வந்து முராகாமி பற்றி பேசினது நிச்சயம் பின்நவீனத்துவம் தான்”

No comments: