Sunday, February 1, 2015

“தங்கமீன்கள்” மற்றும் “பம்பாய்”: காட்சியும் செய்தியும்சினிமாவில் ஒரு காட்சி ஒரு செய்தியை சொல்லும் பட்சம் அமைக்கப்படுகிறது. அந்த செய்தி எப்படி சொல்லப்படுகிறது என்பது தான் அக்காட்சியை சுவாரஸ்யமாக அழகாக மாற்றுகிறது. இப்படியான காட்சிகளை உருவாக்கத்தான் பட விவாதங்களின் போது மண்டையை பிய்க்கிறார்கள். இதை “சீன் பிடிப்பது” என்கிறார்கள். ஒரு காட்சி ஒரு செய்தியின் பல்வேறு பரிமாணங்களை காட்டுவதாய், ஆழத்தை நோக்கி பயணிப்பதாய் இருக்கலாம். “தங்கமீன்களில்” குழந்தை செல்லம்மா வெளியூரில் இருக்கும் அப்பாவைத் தேடி வீட்டிற்கு சொல்லிக் கொள்ளாமல் பேருந்து நிறுத்தத்தில் போய் நிற்கிறாள். அவளைத் தேடி வீட்டார் பல இடங்களில் அலைகிறார்கள். பிறகு ஒரு கடைக்காரர் அவளை அழைத்துக் கொண்டு வீட்டில் விடுகிறார். இப்படி அடிக்கடி வீட்டை விட்டு ஓடிப் போவது அவள் வழக்கம் என்பதால் “சரியான காரணம் சொல்லி விட்டு அவள் உள்ளே வந்தால் போதும்” என்கிறார் பாட்டி. அதுவரை அவளை உள்ளே விட வேண்டாம் என்று செல்லம்மாவின் அம்மாவிடம் கூறுகிறார்.


 தாத்தா பாட்டியின் அதிகாரத்தின் கீழ் வாழ்வதால் அம்மாவுக்கும் வேறு வழியில்லை. அவளை வாசலுக்கு வெளியே நிறுத்தி கோபமாய் விசாரிக்கிறாள். இந்த காட்சியில் மூன்று சட்டங்கள் (frames) இருக்கும். ஒன்று வீட்டின் உள்வாசல். அதில் சாய்ந்து நிற்கும் பாட்டி. அடுத்த வெளிவாசல். அதை ஒண்டி நின்று கேள்வி கேட்கும் அம்மா. அடுத்து வெளி சட்டகம். அதாவது வாசலுக்கு வெளியே நிற்கும் செல்லம்மா. மிக அழகான காட்சி அமைப்பு இது. செல்லம்மா ஏன் தன் அப்பாவைத் தேடி பேருந்து ஏறி தனியாக வெளியூருக்கு போகத் துணிந்தாள் என்பதைக் கூறும் அதே நேரம் இக்காட்சி எப்படி அந்த வீடு எனும் அமைப்புக்குள் மூன்று பெண்களும் மூன்று நிலைகளில் அடைபட்டிருக்கிறார்கள் எனக் காட்டுகிறது. பாட்டி வீட்டின் உள் அடுக்கில் அதிகார உச்சத்தில் இருக்கிறாள். ஆனாலும் அவள் அந்த வீட்டுக்குள் அதன் விதிமுறைகளுக்குள் அடைபட்டிருக்கிறாள். அவள் உருவாக்கும் விதிமுறைகளுக்குள் மருமகள் அடுத்த frameஇல் அடைபட்டிருக்கிறாள். இருவரும் சட்டகத்தின் வெளியே நிற்கும் செல்லம்மாவை ஒழுக்கப்படுத்த முயல்கிறார்கள். செல்லம்மா பற்றிய செய்தியை கூறும் அதேவேளையில் இக்காட்சி குடும்ப அமைப்பின் அதிகாரம், அதனுள் பெண்களே எப்படி பிற பெண்களை ஒடுக்குகிறார்கள் என்பதையும் காட்டுகிறது. தமிழ் சினிமாவின் சிறந்த காட்சிகளில் ஒன்று இது. இப்படியான காட்சியை உருவாக்க இயக்குநருக்கு ஒரு தனி பார்வை வேண்டும். அப்பார்வையே கதைகூறும் எளிய நோக்கத்தை கடந்து படக்கருவியின் கோணத்தை தீர்மானிக்கிறது.

ஆனால் தமிழ் சினிமா பொதுவாக மிக வேகமாய் நகர்வது. மேற்சொன்ன வகை காட்சி இங்கு அரிதானது. சுமார் 15 நொடிகளுக்குள் ஒரு செய்தியை முற்றிலும் வித்தியாசமாக காட்ட வேண்டும். இவ்வகையில் ஒரு காட்சியை பாத்திரத்தின் மனநிலையை அல்லது சூழலையும் கூட சேர்த்து சொல்வதாகவும் சித்தரிக்கலாம். மணிரத்னம் இவ்வகையான பல நல்ல காட்சிகளை உருவாக்கியிருக்கிறார். ஒரு பெண் தன் “உண்டாகியிருப்பதை” எப்படி சொல்ல? பொதுவாக அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுப்பாள். அதைப் பார்க்கும் நாயகன் வியப்பாக நோக்க அவள் வந்து வெட்கமுடன் ஆமாம் என்பாள். அவன் குதூகலத்தில் அவளை வாரியெடுப்பான். ஒரு பாடல் காட்சி இதைத் தொடரும். இது ஒரு தேய்வழக்கு. “பம்பாயில்” இத்தேய்வழக்கை சற்றே மீறி இருப்பார்கள். மனிஷா பயந்த சுபாவம் கொண்ட பெண். காதலனுடன் ஓடி வந்து பம்பாயில் ஒண்டுக்குடித்தனத்தில் வசிக்கிறார். பத்திரிகையாள கணவன் அரவிந்த சாமி மிக அவசரமாக ஒரு அறிக்கை எழுதிக் கொண்டிருக்கிறான். தொந்தரவு செய்தால் அவனுக்கு பிடிக்காது. இது ஒரு கச்சிதமான மத்திய வர்க்க சூழல். யாரும் நேரமில்லை. இரைச்சல். அவசரம். இதனிடையே தான் ஒரு பெண் கர்ப்பமாகியிருக்கும் இனிய சேதியும் தெரிவிக்கப்பட வேண்டும். சுமூகமான விசயம் சுமூகமற்ற சூழலில் சொல்லப்பட வேண்டும். மேலும் மனிஷாவுக்கு குடும்ப ஆதரவு இன்றி ஒரு அந்நிய நகரத்தில் எப்படி தனியே குழந்தைப் பெறப் போகும் என நடுக்கம் இருக்கலாம். நெருக்கடி தான் இந்த காட்சியின் mood. கர்ப்ப செய்தியை சொல்வதுடன் இதையும் காட்ட வேண்டும். மனிஷா கணவனிடம் வந்து தனக்கு பத்து வினாடிகள் வேண்டும் என்கிறாள். அவன் அவள் வழக்கம் போது ஏதோ அன்றாட பிரச்சனையை கொண்டு வருகிறாள் என நினைத்து அவளை பிறகு வர சொல்கிறான். அவள் மீண்டும் அவகாசம் கேட்கிறாள். எரிச்சலாய் “சரி சொல்லு” என்கிறான். அவள் சொல்ல எத்தனிக்க வார்த்தைகள் தடுமாறுகின்றன. அப்போது பார்த்து அடுக்களையில் குக்கர் விசில் அடிக்கிறது. பதற்றமாய் அங்கு ஓடுகிறாள். குக்கரை எடுக்க முயன்று கை சுட்டு விட கீழே போடுகிறாள். பதற்றம் அதிகம் ஆக மேலும் சில பாத்திரங்களை கீழே போடுகிறாள். கணவன் அங்கு வருகிறான். “உங்க கிட்ட பத்து நொடி தானே கேட்டேன். அப்பவே கேட்டிருந்தா இப்படி எல்லாம் ஆகியிருக்காதே” என மென்மையாய் கோபிக்கிறாள். கோபத்தை விட சங்கடம் தான் அவளை ஆக்கிரமித்திருக்கிறது. அவன் என்ன விசயம் எனக் கேட்கிறான். அவள் நெருங்கிப் போய் அவன் காதில் சொல்கிறாள். அவன் ஆச்சரியமாய் குழப்பமாய் பார்க்கிறான். இந்த இடத்தில் இக்காட்சியை முடித்திருந்தால் உலகத்தரமாய் இருந்திருக்கும். ஆனால் தமிழ் சினிமா ஆயிற்றே! கணவன் காதில் முணுமுணுத்ததை எப்படி பார்வையாளர்களுக்கு சொல்ல? அதனால் மனிஷா அடுத்து தன் வயிற்றை தடவிக் காட்டுகிறாள். கணவனின் கையை எடுத்து அங்கே வைக்கிறாள். அவள் முகம் பூரிப்பதை நெருக்கமாய் காட்டுகிறார்கள். இப்போதும் இது நல்ல காட்சி தான், கொஞ்சம் தேவையின்றி நீட்டிக்கப்பட்டு விட்டது. வணிக திரைக்கதை காட்சிகளை எப்படி இவ்வாறு தரமாகவும் உருவாக்குவது என்பதில் சுஜாதா ஒரு ஆசான். 

No comments: