Thursday, January 15, 2015

பெருமாள் முருகனின் சர்ச்சை பற்றிய சர்ச்சைகள்


தான் எழுதுவதை நிறுத்தப் போவதாகவும், தன் புத்தகங்களை பின்வாங்குவதாகவும் பெருமாள் முருகனின் அறிக்கை வெளியிட்ட போது மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த சூழல் மீது சட்டென ஒரு கடும் வெறுப்பு தோன்றியது. பெருமாள் முருகனின் அறிக்கை சிறுபிள்ளைத்தனமாக சிலருக்கு தோன்றலாம். ஆனால் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகும் போது நீங்கள் பெரிய வெகுமதி இன்றி சமூக நோக்குக்காய், தனிப்பட்ட விருப்பத்துக்காய் செய்கிற ஒன்றை நிறுத்தி விடலாம் எனத் தோன்றும். இனி உன்னிடம் ஒரு போதும் பேச மாட்டேன் என ஒரு காதலி போனை துண்டிப்பது போலத் தான் இது. ஒரு உணர்ச்சிகரமான எழுத்தாளன் இப்படித் தான் இருப்பான்.


தமிழில் இதற்கு முன்னும் ரசூல் மற்றும் மனுஷ்யபுத்திரன் மதவாதிகளின் ஒடுக்குமுறையை எதிர்கொண்டிருக்கிறார்கள். மனுஷ்யபுத்திரனை திட்டுவதற்காக ஒரு தனி கூட்டமே நடத்தினார் ஜனாலுய்தீன். ரசூலை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள். அவர் வருடக்கணக்கில் ஒடுக்குமுறையை சந்தித்தார். ரசூல் இப்பிரச்சனையை எப்படி சமாளித்தார் என எனக்கு புரியவில்லை. ஏனென்றால் அவர் குடும்பம் அதே பகுதியில் தொடர்ந்து வசித்தது. மனுஷ்யபுத்திரன் பிடிவாதக்காரர். அவரை எளிதில் காயப்படுத்தலாம், ஆனால் அச்சுறுத்த முடியாது. ஈகோவை ஒரு கவசம் போல் அணிந்து கொள்பவர் அவர். அந்த கவசத்தின் மீது கல்லெறிந்தால் அது இரட்டிப்பு கெட்டியாகும். மேலும் அவர் சென்னையில் வசிக்கிறார். ஒருவேளை வஹாபியத்தால் தூண்டபட்ட இஸ்லாமியர் மத்தியில் கிராமத்தில் தன் தொழிலை செய்து வாழும் நிர்பந்தத்தில் இருந்திருந்தார் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும்.

பெருமாள் முருகன் பிரச்சனை இதை விட பன்மடங்கு பெரியது. இது ஒரு சாதிப் பிரச்சனை. ஆயிரக்கணக்கான மக்களிடம் அவரது நாவலில் உள்ள பாலியல் சித்தரிப்புகளின் பிரதிகள் கொண்டு சேர்க்கப்பட்டன. அதை மட்டும் படித்தவர்கள் அவர் தம் சாதியை கொச்சைப்படுத்துவதாய் கொதித்தார்கள். இலக்கியம், கோட்பாடு எல்லாம் புரியாதவர்கள் படித்தால் அப்பகுதியில் திருவிழா சடங்குகளில் பங்கு பெறுபவர்கள் அனைவரும் தேவடியா மகன்கள் எனும் பொருள் தான் கிடைக்கும். மக்களின் வெறுப்பு அவர் மீது குவிகிறது. அதுவும் இது சாதி துவேசமாக மாற நீங்கள் எதிர்தரப்புடன் விவாதிக்கவே முடியாது எனும் நிலை தோன்றுகிறது. நம் சமூக பெண்களை அவமானப்படுத்தி விட்டான் எனும் கொச்சையான அவப்பெயர் அவர் மீது சுமப்பத்தபடும் போது கிராமியச் சூழலில் அது தரும் நெருக்கடி கடுமையானது. தொடர்ச்சியான போராட்டங்கள், கடை அடைப்பு அச்சுறுத்தல் எனும் நிலை வரும் போது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறது. அங்கு அவர் அச்சுறுத்தப்படுகிறார். மன்னிப்பு கேட்கிறார். பிறகு மன்னிப்பு கேட்ட கூச்சமும் சங்கடமும் அவமானமும் அவரை இந்த அறிக்கையை எழுத வைக்கிறது.

அவர் இப்பிரச்சனையை வேறு விதமாய் கையாண்டிருக்கலாம் தான். குறிப்பாய் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி மற்றும் மீடியாவிலும் நேரடியாகவும் சக எழுத்தாளர்களின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில் அவர் தலைகுனியாமல் நிமிர்ந்து நின்று போராடி இருக்கலாம். ஆனால் அவர் அப்படித் தான் செயல்பட்டிருக்க வேண்டும் என நாம் வலியுறுத்த முடியாது. நெருக்கடிக்கு உள்ளாகும் போது மனிதர்கள் எதையும் செய்வார்கள். மண்டியிடுவார்கள், ஓடுவார்கள் அல்லது திரும்ப அடிப்பார்கள். அல்லது திரும்ப அடித்தவர்களே சற்று நேரத்தில் மண்டியிடுவார்கள். பெருமாள் முருகனின் மென்மையான, உணர்ச்சிகரமான அணுகுமுறை தான் அவரது பின்வாங்கலுக்கு காரணம். அதில் எந்த குற்றமும் இல்லை. ஏனென்றால் இறுதியில் அவரது நிலைக்கு அவர் தான் பொறுப்பாகிறார். சுமூகமாக போவதோ முரண்டு பிடிப்பதோ அவர் உரிமை. அவர் ஒரு அமைப்பின் பொறுப்பாளியாக இருந்து அடுத்தவர்கள் சம்மந்தப்பட்ட விசயத்தில் ஒரு பிரதிநிதியாக பலவீனமாக செயல்பட்டால் நாம் அவரை குற்றம் சொல்லலாம். ஆனால் இவ்விசயத்தில் ஒரு எளிய மனிதனாக உடைந்து போவதற்கு அவருக்கு உரிமையுண்டு.

பெருமாள் முருகனை பெரியார் போன்ற போராளிகளுடன் ஒப்பிட்டு அவர் ஏன் மன உறுதியுடன் இல்லை என கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை. மனம் உடைவதற்கும், கண்ணீர் மூலம் ஆதரவு தேடுவதற்கும் அவருக்கும் உரிமை உண்டு.அவர் அரசியல்வாதியாக இருந்து இப்படி ஒரு முடிவெடுத்தால் நீங்கள் விமர்சிக்கலாம். ஆனால் அப்படி அல்லவே. எனக்கு அவரது நிலைப்பாட்டின் பின் ஒரு உண்மையான உணர்ச்சி உள்ளதாய் தோன்றுகிறது.
இது ஒரு மீடியா ஸ்டண்ட் எனவும் நான் நினைக்கவில்லை. இதன் மூலம் கடந்த இரு நாட்களில் அவரது நாவல் “மாதொரு பாகன்” 350 பிரதிகள் விற்றதாய் சேதி வந்தது. ஆனால் அதனால் பதிப்பாளருக்கு தான் லாபமே அன்றி முருகனுக்கு அல்ல. அவர் அரசு பேராசிரியராக இருக்கிறார். அவர் சம்பளத்துக்கு இந்த ராயல்டி தொகை துச்சமானது. ஆனால் கிடைக்கும் அவப்பெயரோ மிகப்பெரியது. சர்ச்சையின் மூலம் கிடைக்கும் எதிர்மறை பெயரினால் தமிழில் எழுத்தாளனுக்கு எந்த பயனும் இல்லை. இங்கிலாந்தில் வாழும் ஒரு ரஷ்டி பயன்பெறலாம். ஆனால் தமிழில் சூழல் வேறு. மேலும் அவர் இதற்கு முன் சர்ச்சைகளை விரும்பி பின்னால் சென்றதாயும் வரலாறு இல்லை.

ஒன்று தடைசெய்யப்பட்ட நாவலினால் எழுத்தாளன் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பணத்தை அடைய வேண்டும். அல்லது அவனை ஒரு கலகவாதியாக சமூகம் கொண்டாட வேண்டும். இரண்டு நிலைகளும் இங்கு இல்லை. பொதுவாக சர்ச்சைக்குள்ளாகும் எழுத்தாளன் அதன் மத்தியில் தனிமைப்படுத்தப்படுவான். அவன் மீது அடிக்கப்படும் சாணியை கழுவவே அவனுக்கு நீண்ட காலம் எடுக்கும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டி.ஹெச் லாரன்ஸின் நாவல் தடை செய்யப்பட்ட போதும் அதனால் ஒரு இருட்டில் தள்ளப்பட்டதாகவே அவர் உணர்ந்திருப்பார். தடை செய்யப்பட்ட நூலின் திருட்டு பிரதிகளை அதிகமாக மக்கள் படித்தாலும் எழுத்தாளன் அகமகிழ போவதில்லை. ஏனென்றால் சமூகத்துக்கு தேவைப்படும் ஒரு உண்மையை சொல்வதாக நம்பியே ஒரு எழுத்தாளன் ஒரு வித்தியாசமான களத்தை எடுத்துக் கொள்கிறான். அது தூற்றப்பட்டு பின்னர் ரகசியமாக படிக்கப்படுவது இருட்டில் ஒரு பெண் வருடப்படும் உணர்வை ஒத்தது. அது ஒரு அவமானம் தான். பரவலான அவமானம் என்பது கிளுகிளுப்பானதா சொல்லுங்கள்?
எழுத்து அதன் நோக்கத்துக்காக விவாதிக்கப்பட வேண்டும் எனத் தான் எழுத்தாளன் விரும்புவான். ஆனால் முற்றிலும் தவறாக அது புரிந்து கொள்ளபட்ட பின் என்னதான் பன்மடங்கு வாசகர்களால் கவனிக்கபட்டாலும் வாசிக்கக்கப்பட்டாலும் புத்தகத்தின் மீது படிந்த கரிய கறையை யாராலும் நீக்க முடியாது. ஒருவரை பாலியல் வன்முறை செய்து விட்டு பரிகாரமாக சில லட்சங்கள் பணம் தருவது போன்றது இது. இதனால் பெருமாள் முருகன் மகிழ்ச்சி அடைகிறார் என சொல்வது பாதிக்கப்பட்ட பெண் தன் மீதான வன்முறையை உள்ளூர ரசித்தாள் என சொல்வதைப் போல. நாம் அந்தளவு கொச்சைப்படுத்த வேண்டியதில்லை.

அடிப்படையில் எழுத்தாளன் என்னதான் மாறுபட்ட பார்வையுடன் இருந்தாலும், கலகவாதியாய் செயல்பட்டாலும் இந்தியாவில் அவன் மக்களின் நன்மதிப்பை பெற்றே ஆக வேண்டும். அந்த நன்மதிப்புக்கும் அவன் பிரதிக்கு கிடைக்கும் மதிப்புக்கும் ஒரு கண்காணாத நுண்ணிய தொடர்பு உள்ளது. சமூக குற்றவாளி ஆக்கப்பட்ட ஒரு எழுத்தாளன் இங்கு தன் இடத்தை ஒரு பகுதி இழக்கவே செய்கிறான். ஏனென்றால் நாம் வாழ்வது பிரான்ஸில் அல்ல. அதனால் சாதி, மதம், செக்ஸ் சம்மந்தப்பட்ட பரவலான சர்ச்சைகள் ஒரு எழுத்தாளனுக்கு இழப்பாகவே முடியும். அதை பெருமாள் முருகன் நன்கு உணர்ந்திருப்பார். அதனாலே அவர் இதில் இருந்து வெளியே வர நினைக்கிறார். தன்னுடைய நாவல் யாரையும் தவறாய் சித்தரிக்கவில்லை என மீளமீள சொல்கிறார். “ஆமாம் நீங்கள் அப்படி நினைத்தால் எனக்கு பொருட்டில்லை” என இறுமாப்பாய் கூறவில்லை. நம் நாட்டில் கலாச்சார சூழல் அப்படி. இங்கு எழுத்தாளன் பொதுவெளியில் தன்னையும் எழுத்தையும் பிரித்து வைக்க முடியாது. எப்படி பொதுவெளியில் ஒருவன் நாகரிக விழுமியங்களை வேறுவழியின்றி பின்பற்ற நேர்கிறதோ பிரதியும் அவ்வாறு செய்ய வேண்டியதாகிறது. இச்சிக்கல் சின்ன இலக்கிய வட்டத்துக்குள் இல்லை. 

ஆனால் புத்தகங்கள் வெளியே பொதுவில் போகும் போது தணிக்கை இயல்பாகவே நிகழ்கிறது. குறிப்பாக இந்தியாவில். உதாரணமாய் பெருமாள் முருகன் தனது நாவலை நிச்சயமாக இந்த பாலியல் சித்தரிப்புடன் பாடத்திட்டத்தில் வைக்க முடியாது. இதைச் சுட்டிக் காட்டி அவருக்கு சாகித்ய அகாதெமி போன்ற அரசு விருதுகளைக் கூட மறுப்பார்கள். இங்கு சூழல் அப்படி. அதனால் தான் ஒரு சர்ச்சை காரணமாய் ஒரு பிரதி பொதுவுக்கு வந்ததும், பொது நாகரிகத்தை ஒட்டி அதை எழுத்தாளனே தணிக்கை செய்ய வேண்டியதாகிறது. தன் பிரதியின் “ஒழுங்கீனத்துக்கு” மன்னிப்பு கேட்க வேண்டியதாகிறது. நீங்களோ நானோ யாராக இருந்தாலும் ஒருவேளை அதைத் தான் செய்திருப்போம். இந்தியாவில் அதை செய்யாதவர்கள் பொதுவெளிக்குள் இருந்து பேச முடியாது.

எந்த ஒரு சர்ச்சையிலும் மீடியாவுக்கோ, பதிப்பாளருக்கோ லாபம் இருக்கும். இதை தவிர்க்க முடியாது. ஹிந்து, தமிழ் ஹிந்து உள்ளிட்ட பத்திரிகைகள் இதற்கு இவ்வளவு கவனத்தை ஆரம்பத்தில் இருந்து தந்திராவிட்டால் இந்து மக்கள் கட்சியும் கொங்கு வேளாளர் சாதிக்கட்சியினரும் பிரச்சனையை இவ்வளவு பெரிதுபடுத்தி இருக்க மட்டார்கள் தான். ஆனால் இது எந்த வன்முறை அல்லது போராட்டத்தின் அடிப்படை விதி. திருப்பி அடிக்காவிட்டால் வன்முறை வளராது. அதற்காக அடிவாங்கிக் கொண்டே இருக்க முடியாது. போராட்டங்களின் தவிர்க்க முடியாத உள்முரண்பாடு இது. அதே போல் ஒரு போராட்டத்தை பாதியில் கைவிடப்படவும் நேரும். அது போராடுபவரின் உரிமை. ஆனால் இதை வைத்து எழுத்தாளனை கொச்சைப்படுத்தக் கூடாது.

காலச்சுவடு இச்சர்ச்சையை பயன்படுத்தி புத்தகம் விற்கக்கூடாது எனவும் நாம் கோர முடியாது. ஏனென்றால் புத்தகம் சட்டரீதியாக தடை செய்யப்படவில்லை. காலச்சுவடு ஸ்டாலில் அந்நாவல் வைக்கப்படவில்லை. பதிலுக்கு வேறு ஸ்டால்களில் வைத்து கறுப்பு டிக்கெட் போல் விற்றார்கள். காவல்துறையின் மறைமுக வலியுறுத்தல் காரணம் என்கிறார்கள். இது ஒரு அபத்த கேலிக்கூத்து.
பெருமாள் முருகனின் செயல்பாடுகளில் கவன ஈர்ப்பு விழைவு இருக்கிறது தான். ஆனால் அது தெருவில் அடிபட்டு விழுகிறவன் அழுது ஓலமிட்டு தன் மீது கவனத்தை ஈர்ப்பது போல. அது நியாயமான கவன ஈர்ப்பு. ஒரு உண்மையான பிரச்சனையில் எப்போதுமே கவன ஈர்ப்பு தேவை தான்.

பெருமாள் முருகன் இதை சட்டரீதியாக எதிர்கொண்டிருக்கலாம். ஆனால் இதைக் கூறும் போது ஏன் பிற எழுத்தாளர்களோ இணையத்தாக்குதலுக்கு உள்ளாகும் பெண் எழுத்தாளர்களோ பொதுவாக நீதிமன்றத்தை நாடுவதில்லை எனவும் நாம் கேட்க வேண்டும். ஒருவேளை காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை இவர்கள் இழந்து விட்டார்களா? ஏதாவது ஒரு சமூகப் போராளியை, எழுத்தாளனை நீதிமன்றம் சாதி, மத அமைப்புகளுக்கு எதிராக பாதுகாத்தததாய் சமகாலத்தில் வரலாறு இல்லை. பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் சட்டத்தாலும் காவல்துறையாலும் கைவிடப்பட்டு அவர்கள் ஊரை விட்டு ஓடியதாகத் தான் வரலாறு.


4 comments:

Veer said...

சரியாய்ச்சொன்னீர்கள் !

கவிப்ரியன் கலிங்கநகர் said...

அருமையான அலசல்.

Swara Vaithee said...

பெருமாள் முருகன் பின் வாங்கியதை பார்த்து பலரும் அதிர்ச்சியாவதற்கு காரணம், எழுத்தாளனை எதோ ஹீரோ போலவே நினைத்து வந்திருக்கிறார்கள். அமைதிப்பேச்சுவார்த்தையின் போது ஆக்ரோசமாக எழுந்து பஞ்ச் வசனம் பேசிவிட்டு வெளியே வருவார் என்றே நினைக்கிறார்கள்.

Seshadri said...

TN govt also should have taken action or sent explanation to Mr. P.Murugan for since he is a govt staff (govt. college professor ) through his action he is creating in-balance in social environment.

i believe it will.

(at least ADMAL govt use this for Community votes score)

Seshan