Wednesday, January 28, 2015

வாத்தின் கால்களும் கொக்கின் கால்களும் - அபிலாஷ் சந்திரனின் ‘கால்கள்’ நாவல் குறித்து – ஸ்ரீபதி பத்மநாபான்றைய நாவல்களில், ஆண்பெண், மேல்வர்க்கம்ஒடுக்கப்பட்ட வர்க்கம் என்று பல எதிர்நிலைகளுக்கிடயேயான உணர்வுப் போராட்டங்கள், எதிர்நிலைகளுக்கிடையான சமூக அரசியல் ஆகியவற்றை நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் வாசித்த அபிலாஷ் சந்திரனின்கால்கள்நாவல் இவற்றிலிருந்தெல்லாம் விலகி, அல்லது இவற்றோடு சேர்த்து, ஆரோக்கியமான உடல்உபாதையுள்ள உடல் என்ற எதிர்நிலைகளுக்கிடையேயான சமூக அரசியலைப் பேசுகிறது.


மது என்கிற இளம்பெண் தன் வீட்டில் இளம்பிள்ளை வாதத்துக்கான சிகிச்சை மேற்கொள்ளும் காட்சியில் இந்த நாவல் துவங்குகிறது. அவள் அறிந்த அவளைச் சுற்றிலும் இருப்பவர்கள், தந்தை, தாய், வைத்தியர், பக்கத்து வீட்டுக்காரர்கள், தெரு வாசிகள், அவளின் நண்பர்கள், கல்லூரித் தோழிகள், ஊரார் எல்லோருமே பெரும்பாலும் உடற்குறைபாடுகள் ஏதும் இல்லாதவர்கள். அவளோ சிறு வயது முதல் உடற்குறைபாடுடன் போராடிக்கொண்டிருப்பவள். அவளுடைய வளைந்து சூம்பிய கால்களை நிமிர்த்தி நேராக்கியே தீர்வது என்று அவளைச் சூழ்ந்த சமூகம் மிகவும் அக்கறை கொண்டிருக்கிறது. அவளையும் அக்கறை கொள்ள வைக்கிறது.

எப்போதேனும் வருகிற உபாதையைப் போன்றதல்ல இது. இந்த உடல் எப்போதுமே ஒரு உபாதையைச் சுமந்துகொண்டிருக்கும்போது, அந்த உபாதையைப் பற்றிய உணர்வு பல சமயங்களில் அனிச்சையாய் மரத்துப் போய் விடுகிறது. இது ஒரு தனிப்பட்ட மனித உடலுக்கும் ஒட்டு மொத்த சமூகத்தின் உணர்வுக்கும் இடையிலான போராட்டமாகவே இருக்கிறது. ஒருத்திக்கும் உலகத்துக்குமான போராட்டம் அல்லது கொடுக்கல் வாங்கல்.

மதுவின் தந்தை அவள் மேல் பெரும் பாசம் வைத்திருப்பவர். அவளுடைய கால்களை எப்படியேனும் சரி செய்து விடுவது என்ற நோக்கத்தில் மத்தியதரக் குடும்பத்தின் தலைவனால் செய்ய முடிந்த அளவில், நாட்டு வைத்தியர்களின் எண்ணெய்த் தைலங்களிலேயே நம்பிக்கை வைத்திருப்பவர். எம்ஜியாரின் தீவிரமான ரசிகர். மகளுடைய உபாதையைத் தீர்க்கமுடியாத கையறு நிலை அவரை தினமும் குடித்துவிட்டு உளறும் குடிகாரனாகவும் கோபக்காரனாகவும் மாற்றியிருக்கிறது. அல்லது அதுதான் காரணம் என்று மற்றவர்கள் எண்ணும்படியாக ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்.

மது பருவமடைந்த பெண்ணாக இருந்தாலும் அவளுடைய உடல் குறைபாடு காரணமாக சிறு பெண்ணாகவே பார்க்கப்படுகிறாள்; பாவிக்கப்படுகிறாள். அந்த வீட்டுக்கு திடீரென யார் வருகை தந்தாலும் மது தொடைகளுக்கு மேல் பாவாடையை ஏற்றி விட்டு கால்களை நீட்டி எண்ணெய் தடவிக் கொண்டிருப்பதைக் காண முடியும். அவள் சட்டென்று எழ வேண்டிய அவசியமே இல்லை. அந்த நிலையிலேயே அவள் தொடர்ந்து இருந்தால் போதுமானது. யாரும் அதை வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. அவளுடைய அறையின் ஜன்னல்களுக்கும் திரை இல்லை. அவள் உடை மாற்றுவதற்கான தனிமை கூட அவளின் குறைபாடு காரணமாக அவளுக்கு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஆண் நண்பர்கள் வீட்டுக்கு வருவதற்கோ அவளிடம் ஒட்டி அமர்ந்து பேசுவதற்கோ எந்தத் தடையும் இல்லை. அவளுக்கு ஸ்கூட்டர் ஓட்டப் பழக்கிவிடும் நண்பன் கார்த்திக் அவளுடைய வீட்டில் ஒருவனாகவே தினமும் வந்து போகிறான். அவன் அவளுடைய கன்னத்தையோ இடுப்பையோ கிள்ளினாற்கூட அதைப் பார்த்து அப்பா தப்பாக நினைத்துக்கொள்ளமாட்டார் என்கிறாள் அவள். ஏனென்றால் அவளுடன் பழகுபவர்கள் எல்லோருமே கல்மிஷமில்லாதவர்கள். ஆனால் ஊரில் உள்ள அவளது சம வயது பெண்கள் அவளிடமிருந்து கொஞ்சம் விலகியே இருந்தார்கள். அதே சமயம் கல்லூரியில் அவளுடைய தோழிகள் நெருங்கிப் பழகுகிறார்கள். இந்த விநோதம் அவள் நண்பனுக்குப் புரிவதேயில்லை. இது எந்த விதமான பாலியல் அரசியல் என்று கேட்கிறான் அவன்.

சிறு வயதிலிருந்தே காலில் காலிப்பர் பொருத்தித்தான் அவள் நடக்கிறாள். காலிப்பர் அவளுக்குப் பிடிக்காத ஒன்று. காலிப்பர் இல்லாமலேயே நடக்க முடியும் என்று பிடிவாதமாய் நடந்து அடிக்கடி விழுந்து விடுகிறாள். அதை மாட்டும்போது உணரும் வலியும் அவ்வப்போது காலிப்பரை சரி செய்வதற்காக நகரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்வதும் பெரும் வாதையாய் இருந்தன அவளுக்கு. நிஜமான நடையின்றி, தலையில் அடிவாங்கிய தவளைக் குஞ்சைப் போல நடக்கும் இந்த வாழ்வின் நிதர்சனத்தை எப்படி மாற்ற முடியும்? “நான் நடந்துதான் என்ன செய்யப் போகிறேன்?” என்று அப்பாவிடம் கேட்கிறாள் அவள்; அவர் அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.

அவர் பழைமைவாதியாகவே இருக்கிறார். அவளுக்கு தொளதொள சட்டையும் நிறம் மங்கிய பாவாடையும் மட்டுமே போதும் என்று நினைக்கிறார். அவரிடமிருந்து சுடிதார் வாங்குவதற்கான பணத்தைப் பெற அவள் மன்றாட வேண்டியிருக்கிறது. ஆனால் அவளை எப்படியாவது நடக்கவும் ஸ்கூட்டர் ஓட்டவும் வைத்துவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் என்பதும் ஒரு அரசியலாகவே இருக்கிறது. அது கருணை காட்டுகிற அரசியல்; அல்லது கருணை காட்டுவதன் மூலமாக தங்களின் வலிமையை நிரூபித்துக் கொள்ளும் சமூகத்தின் அரசியல். அவள் ஓட்டும் ஸ்கூட்டருக்கு லைசன்ஸ் அவசியமில்லை. அல்லது அவசியமா என்பதே அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. லைசன்ஸை காண்பிக்குமாறு யாரும் அவளை நடுரோட்டில் தடுத்து நிறுத்தப் போவதில்லை. ஆனால் விபத்து ஏற்படுத்திவிட்டால் அவள் தண்டனை பெற்றுத்தான் ஆகவேண்டும். லைசன்ஸ் வழங்குவது என்றால் எந்த அடிப்படையில் வழங்குவது? இரண்டு சக்கர வாகனம் என்றா, மூன்று சக்கர வாகனம் என்றா? அதனாலேயே அவளுக்கு லைசன்ஸ் தரத் தயங்குகிறார்கள் அதிகாரிகள். ஆனால் அவளுக்கு அந்தக் கருணையும் பச்சாதாபமும் தேவையில்லை. லைசன்ஸ் பெற்றுத்தான் வண்டி ஓட்டுவேன் என்கிறாள் அவள். பெரியவர்களுக்குத்தான் இந்த சந்தேகங்களும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. அவள் வண்டி ஓட்டி போகும் பாதையில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் அதை எளிமையாகநாலு கால் வண்டிஎன்று பெயரிட்டு பின்னாலேயே ஓடி வருகிறார்கள்.

மதுவைச் சூழ்ந்து இருக்கும் உலகம் எப்போதும் ஒரு ஒழுங்குடன் இயங்கிகொண்டிருக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது எல்லோரும் பலவிதமான ஒழுக்கங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். உடல் ரீதியான ஒழுங்கு ; உணர்ச்சி ரீதியான ஒழுங்கு ; அறிவு ரீதியான ஒழுங்கு என்று பல வகைப்பட்ட ஒழுக்கங்களால் ஆகியிருக்கிறது புற உலகம். அவளுக்கு இந்த எல்லா வகையான ஒழுங்குகளும் அன்னியமானவையாகவே இருக்கின்றன. தான் நினைத்தபடி உடல் ரீதியாக நடக்கவோ ஓடவோ முடியாது. தான் நினைத்தபடி உணர்ச்சி ரீதியாக காதலிக்கவோ கலவி கொள்ளவோ முடியாது. ’இவளுக்கு பெரிதாய் என்ன தெரிந்துவிடப் போகிறதுஎன்று அறிவுபூர்வமான விவாதங்களும் அவளிடமிருந்து விலக்கியே வைக்கப்பட்டிருக்கின்றன. இதன் வேறொரு படிநிலையாக அவள் நண்பனுடனான உரையாடல்களில் அவள் வயதுள்ள பெண்கள் பேசத் தயங்கும் பல விஷயங்களையும் தயக்கமில்லாமல் அவளால் பேச முடிகிறது. அவனுக்கும் அவ்வாறே. நல்ல ஆரோக்கியமான அழகான பெண்ணிடம் இந்த விஷயங்களை நிச்சயமாக அவனால் பேசியிருக்க முடியாது.

தன் உடல் குறித்து அவளுக்கு இயல்பிலேயே இருக்கக்கூடிய குற்ற உணர்வை அல்லது தாழ்வு உணர்வை அவள் மெல்ல மெல்லக் கடந்து வருகிறாள். குற்ற உணர்வு என்பது தன் இயல்பு அல்ல. கருணை காட்டுவதன் மூலமாக மற்றவர்கள் ஏற்படுத்துவதுதான் அந்த குற்ற உணர்வு என்பதை அவள் புரிந்து கொள்கிறாள். பிடிவாதமாய் இருந்து ஸ்கூட்டருக்கு லைசென்ஸ் பெறுவதன் மூலம் அந்த கருணையை அவள் மறுதலிக்கிறாள். நிதர்சனமான வலியுடனே தன் வாழ்க்கையைத் தொடர்கிறாள்.

கால்கள்என்னும் இந்த நாவலை வாசிக்கும்போது ஒரு கதையாடலாக இல்லாமல் மனித மனங்களின் உணர்வுகளின் கலவையாகத்தான் எனக்குள் இடம்பிடித்துக் கொண்டது. தாவோயிசத்தின் பிதாமகனான லாவோத்சுவின் சீடர் சாங் சு சொல்கிறார்: ”வாத்தின் கால்கள் நீளம் குறைந்தவை என்றாலும் அதற்கு வலி ஏற்படுத்தாமல் அதன் கால்களை நாம் இழுத்து நீட்ட முடியாது. கொக்கின் கால்கள் நீளம் அதிகமானவை என்றாலும் அதற்கு வலி ஏற்படுத்தாமல் அதன் கால்களை நாம் குறுக்கிவிடவும் முடியாது.”

சமூகம் மதுவின் கால்களை வாத்தின் கால்களாகப் பார்க்கிறது. மது தன் கால்களை கொக்கின் கால்களாகப் பார்க்கிறாள். ஆனால் உலகில் மாயையெல்லாம் கிடையாது. அது நிதர்சனமானது. உடலும் வலியும் ஒன்றுதான் என்ற நிதர்சனம். உடல் உள்ளவரை வலி இருந்தே தீரும் என்ற நிதர்சனம்.

நான் சமீபத்தில் வாசித்த தமிழ் நாவல்களில் முக்கியமான நாவலாககால்கள்நாவலைப் பார்க்கிறேன். யதார்த்தவாதத்தின் கொடிகள் எப்போதுமே தாழப் பறப்பதில்லை என்ற உண்மையை இந்த நாவலும் நிரூபிக்கிறது. எந்த வித மாயாஜால வேடிக்கைகளும் இன்றி ஆங்காங்கு தெறிக்கும் மெல்லிய அங்கதத்துடனும் கவித்துவ மொழியுடனும் நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் இந்த நாவல் சென்ற ஆண்டுக்கான சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளது. மிகவும் தகுதியான நாவலுக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நாவலாசிரியர் அபிலாஷ் சந்திரனுக்கு என் வாழ்த்துகளும் அன்பும்.


No comments: