Thursday, January 8, 2015

மலக்குழி சாத்தான் (பாதி சிறுகதை)


காலை மூன்று மணிக்கே எழுந்து விட வேண்டும். அப்போது தான் காலைக்கடன்கள் முடித்து பால் கறக்க வரும் சம்முகத்துடன் இருந்து பாலை வாங்கி கடைக்கும் வீடுகளுக்கும் கொடுத்து விட்டு திரும்ப வந்து தொழுவத்தில் சாணி அள்ளி சுத்தம் செய்து கஞ்சு குடித்து பள்ளிக் கூடம் போக நேரம் சரியாக இருக்கும்.
 விடிகாலையின் ஒளி என் கண்ணுக்கு வெகுபரிச்சயமானது. நீலமும் சிவப்பும் இருளில் ஊறி இறங்கும் ஒளி. எங்கள் புழக்கடை தோட்டம் பூரா பலவகை மரங்கள். பூக்களும் கனிகளும் அடர் இலை கொப்புகளும் படர்ந்த ஒரு முகப்பு. அதைக் கடந்து வானை சிறு சிறு நட்சத்திர ஜொலிப்புகளாக இடையிடையே மட்டுமே பார்க்க முடியும். மழைக்காலம் என்றால் சேற்றில் மிதித்து நடந்து தவளை கத்தல்களிடையே மௌனமாய் எடுப்பு கக்கூஸ் எனும் அந்த மதில் விளிம்பில் உள்ள குழியருகே குத்திட்டு அமர எனக்கு பிடிக்கும். சாப்பிடுவது, சொக்கி வரும் போது தூங்குவது, ரகசியமாய் கனவில் உள்ளாடை நனைப்பது போல இதுவும் ஒரு சுகமான காரியம் தான். நாற்றம் தான். அதற்கு ஒரு சிகரெட் பற்ற வைப்பேன். பிறகு எனக்கு நானே ஏதாவது ஒரு கதை சொல்ல ஆரம்பிப்பேன். கார்ட்டூன் சாகசங்களும், மாந்திரகமும், பிடித்தமான பெண்களும் வரும் கதைகள். சில கதைகளை முந்தின நாள் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்பேன்.
சம்முவம் வரும் முன் கோலப்பன் வாளியோடு வந்து விடுவார். தள்ளாடிக் கொண்டே நடப்பார். கண்கள் வெளிப்பிதுங்கி சிவப்பாக தவளை பார்ப்பது போல இருக்கும். கோலப்பன் அளவுக்கு களைத்து போன மனிதனை நான் பிறகு பார்த்ததில்லை. நடுங்கிக் கொண்டே இருப்பார். சரியான சாப்பாடு தூக்கமில்லை. அவர் மகன் சங்கரன் என்னோடு தான் படித்தான். சங்கர் என ஸ்டைலாக ரெஜிஸ்டரில் இருக்கும். வீட்டில் அவனுக்கு மட்டும் எப்படியாவது சாப்பாடு பண்ணி கொடுத்து விடுவார்கள். ஒரு நெளிந்த அலுமினிய தூக்குவாளியில் புளித்த நாற்றமெடுக்கும் சோற்றை அசுவாரஸ்யமாக ஆனால் ஆவேசமாக அள்ளி தின்பான். கோலப்பன் வேலையில் இறங்கினால் சுணங்காமல் செய்வார். எங்கிருந்தோ ஒரு வேகமும் தினவும் வந்து விடும். அவர் பல வேலைகள் செய்வார். ஆனால் பிரதானமாய் எடுப்பு கக்கூஸ் அள்ளுவது தான். ஒரு சிரட்டை அல்லது மரப்பிளாச்சி. சில நாள் மண்ணை அள்ளிப் போட்டு கையாலே அள்ளுவார். இந்த கையால் பிறகு எப்பிடி சாப்பிடுவார் என நான் யோசித்ததில்லை. அவர் வேலை செய்வது பார்த்தபின் ஏனோ யோசிக்க தோன்றியதில்லை. ஆளாளுக்கு மலத்தின் நாற்றம் வேறானது. அது மொத்தமாய் கலந்து எழும் நாற்றம் ஒரு விஷ வாயு போல் மூக்கை உள்ளுறுப்புகளை சுட்டெரிக்கும் தன்மை கொண்டதாக ஒரு கசப்பு சுவை கொண்டதாக தோன்றும். அவர் அள்ளி சுத்தம் செய்து கொஞ்சம் சாம்பல் அள்ளிப் போட்டு போட்டு வெளியே ஏறி வந்து மீண்டும் செருப்பை போடும் வரை கூட நின்று பார்ப்பேன். பிறகு அதில் சுத்தமாக அமர்ந்து மலம் போகிறவர்கள் பாக்கியவான்கள். எனக்கு அது வாய்த்ததில்லை.
எங்கள் வீட்டில் யாரும் பகலில் கக்கூஸ் போக வாய்ப்பில்லை. இரவில் பன்னிரெண்டில் இருந்து மூன்று மணிக்குள் யாருக்காவது அவஸ்தை ஏற்பட்டு போயிருந்தால் அந்த நாற்றம் குடலை புரட்டும் தான். ஆனால் எனக்குத் தான் எப்போது பார்த்தாலும் சளித்தொல்லையாய் மூக்கு அடைத்து போயிருக்குமே! கொஞ்சம் மூக்கு திறந்து கொண்டால் பின்பற்றுகிற உத்திகள் தான் சொன்னேனே. நான் போவதற்கும் கோலப்பன் வருவதற்கும் இடையில் நான் பால் கறப்பதை மேற்பார்வை பார்க்கும் வேளையில் தான் என் ஏழு சகோதரிகளும் ஒன்றின் பின் ஒன்றாக போவார்கள். அவர்கள் எப்படி நேரம் பார்த்து சரியாய் விழித்து போகிறார்கள் என்றெல்லாம் நான் வியப்பேன். கொஞ்சம் முன்பின்னாக அசந்தர்ப்பமாக ஒரு நாளும் நேர்ந்ததில்லை.
வகுப்பில் மல்லன் தான் எனக்கு நெருக்கம். மல்லனின் அப்பா ஒரு லாரி விபத்தில் இறந்து விட்டார். சிலர் அவர் ஓடிப் போய் விட்டதாக சொன்னார்கள். மல்லன் நான் செய்யாததை எல்லாம் செய்வான். தியேட்டருக்கு போவான். பிரமாதமாக புட்பால் விளையாடுவான். துணிப்பந்து தான். இரவில் திருட்டுத்தனமாய் தென்னந்தோப்பில் காய் போடுவான். வீட்டில் தூங்க மாட்டான். சாப்பிட மட்டும் வீட்டுக்கு போவான். எம்.ஜி.ஆர் போல் பள்ளித் திண்ணை தூண்களில் பற்றி சுழன்று வாள் சண்டை போட்டு காட்டுவான். குலேபகாவலி பார்த்து விட்டு வந்து மூச்சு விடாமல் கதை சொன்னான். பல இடங்களில் நடித்து காட்டுவான். அப்படியே முகத்தை ஒரு வெட்டு வெட்டி நாயகி போல் கோபப்படுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் சண்டை போடுகிறேன் என சர்மா வாத்தியாரின் கம்பை உடைத்து விட்டான். அவனை சரலை கற்கள் மேல் முட்டி போட வைத்தார்கள்.
மல்லனுக்கு யார் அப்படி பேர் வைத்தது தெரியவில்லை. சின்ன வயதில் பார்க்க ரொம்ப மொழுமொழுவென்று ஆட்டுரல் போல இருப்பதனால் தெருவினரே வைத்த பெயர் என்றான். உண்மைப் பெயர் அவன் அம்மா வைத்தது சந்திரதாஸ் என்றான். அவன் அந்த பெயரை சொன்னதுமே எனக்கு சிரிப்பாணி வந்து விடும். தனக்கும் அந்த சந்திரதாஸுக்கும் ராசியில்லை என அவனே கூறி விட்டான். கைரேகை போல பெயரும் நம் பிறப்புடனே வந்து விடுகிறது. அது நம் செய்கைக்கு ஏற்ப தனி குணம் பெறும். பிறகு அதை மாற்ற வேண்டி இருக்காது. நம் பெயராகி விடும். பெயர் தான் மல்லனே ஒழிய சண்டையெல்லாம் போட மாட்டான். மூன்றாம் வகுப்பு பையன் கூட கல்லால் அடித்தால் ஓடி பறந்து விடுவான். யாருக்கும் எதற்கும் விட்டுக் கொடுப்பான். ஆனால் பார்க்க தைரியமாக திமிராக தெரிவான்.
அப்போதெல்லாம் வகுப்புகளில் பெஞ்ச் மேஜை கிடையாது. தரை தான். அதிலும் குண்டுகுழிகள் தாம். குழியில்லாத நல்ல இடமாக பிடித்து வைத்திருப்போம். அதற்கும் தள்ளுமுள்ளு நடக்கும். நானும் மல்லனும் ஓரமாய் ஒதுங்கி இருந்து எங்களுக்குள் பேசி சிரிக்கும் போது மட்டும் சத்தமாய் சிரிப்போம். அதைப் பார்த்து என்னவென்றே தெரியாமல் சிலர் சிரிப்பார்கள். அவர்கள் அப்படி சிரிப்பது எங்களுக்கு குஷியாக இருக்கும். அதற்காக நாங்கள் வேண்டுமென்றே சிரிக்க அவர்களும் சிரிக்க இது தான் எங்களுக்கு ஒரே விளையாட்டு. வாத்தியாருக்கு மட்டும் ஒரே நாற்காலி.
எந்த வாத்தியார் புதிதாய் முதலில் வந்தாலும் ஒரு நோட்டம் விட்டு தனக்கு உதவியாளனாக மல்லனை தேர்வார்கள். வகுப்பு நடக்கும் போது அவருக்கு கால் பிடிப்பது, வகுப்பை பெருக்குவது, வீட்டுக்கு போய் அவருக்கு வேலை பண்ணுவது, சாப்பாடு வாங்குவது, பள்ளி மரங்களில் காய்த்த காய்கள் கனிகளை மூட்டை கட்டி வீட்டுக்கு கொண்டு போய் கொடுப்பது, சந்தைக்கு போவது எல்லாம் அவன் தான். ஆனாலும் அவனை எல்லா வருடமும் ஒருமுறையாவது தோற்கடித்து அமர்த்தி விடுவார்கள். அவனும் சாஸ்தாவிடம் நேர்ந்து கொண்டு தான் இருந்தான்.
நான் காலை எழுந்து பசுத்தொழுவம் போவது போல மல்லன் வாத்தியார் வீட்டுக்கு போய் கடமையாய் வேலைகளை அங்கு முடித்து விட்டு தான் வகுப்புக்கு வருவான். வகுப்புகளும் பொதுவாக ஒரு நாள் ரெண்டு மேல் இருக்காது. எங்கள் பள்ளிக் கூடத்தில் மைதானம் கிடையாது. சுமார் பதினொரு மணி போல சாப்பிட்டு விட்டு தெருவில் தான் கிட்டிப்புள், ஓடிப்பிடித்து விளையாடுவது, பல்லி, பூரான், ஓணான் பிடிப்பது, ஓடையின் குறுக்கே சாரத்தை கட்டி மீன் பிடிப்பது ஆகியவை செய்வோம். மல்லன் என்னை மலைக்கு பச்சிலை பறிக்க கூட்டிப் போவான்.
ஒரு நாள் மலை உச்சியில் இரு பாறைகளுக்கு இடையே சுரங்கம் காட்டித் தருவதாய் அழைத்து போனான். அங்கே ஓரிடத்தில் நல்ல ஊற்று தெரிந்தது. அதில் அள்ளிக் குடித்து விட்டு படுத்துக் கிடந்தோம். அப்போது மல்லன் என் பின்பக்கத்தை அழுத்திப் பற்றினான். பிசைந்தான். எனக்கு பயத்தில் நெஞ்சு அடைத்து உடல் குளிர்ந்து விடைத்தது. தொண்டையில் இருந்து குரல் வெளிவரவில்லை. அவன் என் உதடுகளில் முத்தினான். கடித்தான் என்று சொல்வதே சரியாக இருக்கும். அவன் என்னை அடிக்கடி கிள்ளிக் கொண்டிருப்பான். ஆனால் அன்று தான் முதன்முறை முத்துகிறான். உதடு வீங்கி விட்டது. வீட்டில் அப்பா பார்த்து எவனிடம் தெருவில் சண்டை போட்டார் என செவிளில் அறைந்தார். இடுப்பில் உதைத்ததில் ரெண்டு நாள் நான் ஒரு பக்கமாய் சாய்ந்து அமர்ந்து தான் வெளிக்கு போக முடிந்தது. புட்டத்தில் மண் ஒட்டிக் கொண்டது. ஏதோ பூச்சி வேறு கடித்து ஒரே நமைச்சல். அம்மா பார்த்து சிவந்து விட்டதாய் சொன்னாள். அவள் ஓராயிரத்து ஒன்றாவது தடவையாக அப்பாவிடம் ஐரோப்பிய மாடல் கக்கூஸ் ஒன்று கட்ட சொன்னார். ஆனால் அப்பா குழியில் போவது தான் மண்ணுக்கு உரம் என்று சொல்லி விட்டார். குறைந்தது மறைவாக முடைந்த ஓலைகளையாவது கட்டலாமே! ஆனால் அப்பா அதையும் மறுத்து விட்டார். அந்த வீட்டில் அவரது அப்பா, தாத்தா எல்லாருமே அப்படித் தான் போனார்கள். எத்தனையோ பெண்கள் வாழ்ந்து மறைந்தார்கள். அவர்களும் அப்படித் தான் வெளிக்கு போனார்கள். பகலில் வெளிக்கு போவது பெண்கள் செய்யக் கூடாத காரியம் என்றார். “சும்மா சும்மா தூறிக்கிட்டு இருக்க இதென்ன ஏதாவது போட்டியா?” என்று கேட்டார் அவர். “ஒரு தடவை போறது தான் கௌரவம். அது தான் ஆரோக்கியமும்” என்றார். சின்ன விசயங்களில் அப்பாவிடம் சர்ச்சை செய்து யாரும் ஜெயிக்க முடியாது. ஆனால் ஆத்திகமா நாத்திகமா காந்தியா பிரிட்டீஷ்காரனா இதிலெல்லாம் யார் வாதிட வந்தாலும் உடனே பணிந்து விடுவார்.
ஒரு நாள் மல்லன் எனக்கு ஒரு அழகான நாய்க்குட்டியை கொண்டு தந்தான். தூய வெள்ளையில் சில ஆரஞ்சு வட்டங்கள். ரொம்ப சாதுவான குழைந்து குழைந்து வாலாட்டுகிற பிராணி. அது செய்வது எல்லாம் என்னைப் போலவே இருந்தது. என் அக்கா மாலினி அதை வாலைப் பற்றி கூட தூக்குவாள். வீல் வீல் என கத்துமே அன்றி எதிர்க்காது. கடிக்கவும் வராது. வீட்டில் அதற்கு மிச்சம் மீதியை போடுவோம். அது வளர்ந்த பின் குணம் முற்றிலும் தலைகீழாக மாறியது. யார் சொன்னாலும் கேட்காது. விளையில் கட்டிப் போட்டிருந்தோம். ஒரு நாள் அதைக் கட்டியிருந்த புளியங்காய் மரத்தையே கடித்து முறித்து விட்டது. பிறகு தென்னையில் கட்டிப் போட்டோம். அதையும் பிய்த்து விட்டு அது பண்ணின காரியத்தால் தான் என் அப்பாவே தன் முடிவை மாற்றும் படியாக ஆனது.
நாய்க்கு நான் மல்லன் என பெயர் போட்டிருந்தேன். “மல்லனுக்கு நீ நாய், உனக்கு நாய் மல்லன்” என மாலினி அக்கா கிண்டல் பண்ணுவாள். இந்த மல்லனுக்கு ரொம்ப பிடித்த உணவு மலம். அது குட்டியாக இருக்கும் போது நான் எழுந்து மலக்குழிக்கு போகும் போது கூட வந்து காத்திருக்கும். நான் பீ போட்டதும் கடகடவென இறங்கி வாலாட்டியபடி சாப்பிடும். முதலில் திட்டி தடுத்து பார்த்தேன். ஒரு நாள் அதன் வாயைப் பிடிக்க அது என்னை கடித்து விட்டது. சரி சவத்துக்கு இப்படி ஒரு ருசி போகட்டும் என்று விட்டு விட்டேன். நான் போன பிறகு என் சகோதரிகள் பின்னாடி சுற்றும். அவர்கள் இதை என்ன பண்ணுவார்களோ தெரியாது. வயிற்றை லேசாய் பிடித்துக் கொண்டு அவசரமாக நடப்பதை வைத்துத் தான் கண்டுபிடிக்கிறதோ அல்லது இதற்கு ஏதாவது தனி வாசனை உண்டோ தெரியாது – ஆனால் யார் வெளிக்கு கிளம்பினாலும் அது கண்டுபிடித்து வாலாட்டிக் கொண்டே பின்னால் போகும். இப்படி ஒரு நாய் இதைப் போய் வளர்த்தேனே என அசிங்கமாக உணர்ந்தேன். மல்லனிடம் சொன்ன போது “சங்குன்னு பேர் வச்சிருக்கனும்” என்றான். சங்கரன் எனும் சங்கரை நாங்கள் சங்கு என்று தான் கூப்பிடுவோம். மல்லன் வீட்டுக்கு யார் வந்தாலும் வாலாட்டி உபசாரம் பண்ணும். திருடன் வந்தால் கூட இதனால் உபயோகமில்லை என்று அப்பா திட்டுவார். ஆனால் விடிகாலை வாளியுடன் கோலப்பனை பார்த்தால் அதற்கு வருமே ஒரு கோபம். உறுமிக் கொண்டு அவர் மீது பாயப் போய் விடும். ஒரு நாள் கோலப்பன் அதன் அடிவயிற்றில் ஒரு உதைவிட்டார். அதற்கு பின் உறுமுவதோடு நின்று கொள்ளும். ஆனாலும் கோலப்பன் வீட்டுக்கு வந்து போகும் போது அதன் கண்களில் ஒரு ஆழமான துக்கம் தெரியும்.
ஒரு நாள் நான் மேலே சொன்ன கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடின சம்பவம் நடந்தது. அப்பா அப்போது தான் தேவஸம் ஆபீசில் இருந்து வந்து கைகால் அலம்பி விட்டு சாப்பிட இலை முன் உட்கார்ந்திருந்தார். அம்மா அன்று முருங்கையிலை துவையல், கீரை சாம்பார், தடியங்காய் ஓலன் எல்லாம் பண்ணி இருந்தார். எல்லாம் எங்கள் புழக்கடையில் அம்மாவே நட்டு வளர்த்து விளைந்தவை. அப்பா சாப்பிட்டு முடித்து சாப்பிடுவதற்கு நாங்கள் வெளியே காத்துக் கொண்டிருந்தோம். அப்போது பார்த்து மல்லன் ஒரு பழுத்த கோவைக்காய் சைஸில் எதையோ கவ்விக் கொண்டு வீட்டுக்குள் போய் அப்பாவின் முன் போட்டான். எங்களுக்கு முதலில் புரியவில்லை. அப்பாவும் நாயை துரத்த சொல்லி விட்டு சாப்பாட்டை தொடர்ந்தார். நாங்கள் துரத்தி பிடிக்க பார்த்தோம். ஆனால அது தப்பி விட்டது. அம்மா துடப்பம் கொண்டு பெருக்கி அதை வெளியே போட்டார். எதுவோ நன்றாக காய்ந்து மஞ்சள் நிறத்தில் இருந்தது. அடுத்து கொஞ்ச நேரத்தில் நாய் திரும்பவும் வாயில் எதையோ கவ்விக் கொண்டு வந்தது. இது பாளையந்தோடன் பழம் சைஸுக்கு இருந்தது. அடர் மஞ்சளில் ஈரமாக தெரிந்தது. அதை அப்பாவின் இலை முன் போட்டு வாலாட்டியது. அப்பா அதை சற்று நேரம் கூர்ந்து பார்த்தார். துடைப்பம் கொண்டு வந்த அம்மாவை நிறுத்தி பக்கத்தில் குனிந்து மோப்பம் பிடித்தார். அடுத்த நொடி அவருக்கு வாந்தி வந்து விட்டது. தொடர்ந்து சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்தார். ஒரே களேபரம். நாயை பிடிக்க நாங்கள் எல்லாம் ஓடினோம். சிக்கவில்லை. மாலினி அக்காளும் வேறு சில சகோதரிகளும் எடுப்பு கக்கூஸுக்கு பக்கமாய் காவல் நின்றார்கள். நாய் மதிலை தாண்டி குதித்து ஓடி விட்டது.
நாய் கிடைக்காத கோபத்தில் அப்பா அம்மாவின் இடுப்பில் மிதித்தார். அம்மா ஓலமிட்டு அழுதாள். ஓடி தப்பிக்க முயன்று தடுக்கி விழுந்த என்னை அப்பா ரெண்டு கால்களை பற்றி தரையில் இருந்து பாதி தூக்கி புளியம் வாரால் பின்னந்தொடையிலும் புட்டத்திலும் அடித்தார். சகோதரிகளுக்கும் சில உதைகள் விழுந்தன.
அதற்கு பிறகு தான் அப்பா ஷெட் போல ஒன்று முடைந்த ஓலைகளால் மலக்குழியை சுற்றி கட்ட சொன்னார். மல்லனுக்கும் சோறு போடுவதை நிறுத்தி விட்டோம். அதற்கு பேய் பிடித்து விட்டதாய் சொன்னார்கள். ஊரில் அதை எங்கே பார்த்தாலும் ஆட்கள் கல்லால் அடித்தார்கள். நான் அதை எங்காவது வைத்து பார்த்தால் வாலை குழைத்து ஓடி வரும். உடம்பெல்லாம் புண்ணாக இருக்கும். மெலிந்து விலா எலும்புகள் துருத்தி நிற்கும். ஆனாலும் மகிழ்ச்சியாக தன்னை காண்பிக்கும். எனக்கு குற்றவுணர்வு தோன்றும். சரியாக வளர்க்கவில்லையோ என தோன்றும். தெருக்கடையில் உள்ள ஆப்பக்கடையில் முந்தா நாள் மீந்ததை வாங்கி போடுவேன். சாப்பிடாது. “இப்போதெல்லாம் எந்த வீட்டு கக்கூஸில் போய் புதுசாய் போட்டதும் சாப்பிடுகிறாயோ?” என கேட்பேன். கால்களை மாற்றி வைத்தபடி வாலாட்டும்.
ஆனால் பிரச்சனை இதோடு நிற்கவில்லை. ஒரு நாள் பார்த்தால் எங்கள் விளையில் அங்கங்காய் உலர்ந்த மலத் துண்டுகள். இரண்டு தோட்டிகளுக்கு காசு கொடுத்து அப்பா அவற்றை அள்ள சொன்னார். ஆனாலும் தினமும் இது போல் காணக் கிடைத்தது. எங்கள் விளைக்கு யாரோ வெளியில் இருந்து வந்து வெளிக்கு போகிறார்கள் என முதலில் நினைத்தோம். இரண்டு நாள் இரவு முழுக்க காவலிருந்து பார்த்தோம். கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஒருநாள் விடிகாலையில் நான் என் காரியத்தை முடித்துக் கொண்டு சம்முவத்தை கவனிக்க போகும் வேளையில் சில தெருநாய்கள் வேலியை பிய்த்துக் கொண்டு உள்ளே வருவதையும் மலக்கிழிக்குள் இறங்குவதையும் பார்த்தேன். ஒவ்வொரு நாயும் குண்டு குண்டாக பார்க்க பயங்கரமாக இருந்தன. கண்கள் மஞ்சளாய் மின்னின. நகங்கள் நீண்டு வளைந்திருந்தன. அவை ஓடும்போது மண்ணை பிறாண்டி பறக்க விட்டன. நான் அவற்றை விரட்டாமல் ஓடி வந்து விபரம் சொன்னேன். அப்பாவுக்கும் அவற்றை விரட்ட பயம். பேய் வந்த நாய்கள் என்றார். அன்று என் சகோதரிகள் பலரும் வெளிக்கு போகவில்லை. குழியை சுற்றி புரை கட்டியதில் இருந்து அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பகலில் ஒன்றுக்கு போக மரத்தின் பின்னால் காவலுக்கு ஒருத்தியை நிறுத்தி போக அவசியமில்லை. அம்மா வேலை சொன்னால் மாலினி அக்காள் ஏதாவது கதை பொஸ்தகத்தை தூக்கிக் கொண்டு கக்கூஸுக்கு ஓடும் புது பழக்கத்தை கண்டு பிடித்திருந்தாள். ஆனால் பேய் நாய்கள் வந்ததில் இருந்து அவர்கள் மனமுடைந்து போனார்கள்.
முதலில் வேலியை சீரமைத்தோம். ஆனாலும் நாய்கள் எளிதாக கீழே குழி பறித்தும் வேலியை சில இடங்களில் லாவகமாய் உடைத்தும் வந்தன. விடிகாலையில் எனக்கு எழுந்து போகவே பயமாய் இருந்தது. மல்லனை திரும்ப கொண்டு வரலாமா என்று கூட யோசித்தேன். ஆனால் அதை எங்கே தேடியும் காணவில்லை. சுடுகாடு பக்கமாய் சுற்றிக் கொண்டிருப்பதாய் சொன்னார்கள். பகலில் தினமும் தோட்டிகள் யாராவது வந்து போக ஆரம்பித்தார்கள். வீட்டுக்குள் எப்போது பார்த்தாலும் மல நாற்றம். அவை சாப்பிடும் போதும் தூக்கி எறியும் வேகத்தில் மரத்தின் அடிகளில் எல்லாம் சிதறின. அதனால் விளைக்கு போனால் எங்கும் மலவீச்சம் தான். நாய்கள் சில நாள் கிணற்றிலும் மலத்துண்டுகளை கொண்டு போடத் துவங்கின. நாங்கள் பக்கத்து வீட்டுக்கு குடத்தோடு தண்ணீர் பிடிக்க போகத் துவங்கினோம். பால் கறக்கையில் பசு ரொம்ப மிரள்வதாய் சம்முவம் சொன்னான். அதன் மடியில் ரத்தம் கசிந்தது. பால் வரத்தும் குறைந்தது. வெளியே கொடுத்தது போக அப்பாவுக்கு மட்டுமே பால் மிஞ்சியது. எங்கள் வீட்டுப் பக்கம் யார் போனாலும் நின்று குசுகுசுத்து விட்டு தான் போவார்கள். தெருவில் எங்கள் வீட்டுப் பக்கம் தான் அப்படி ஒரு குமட்டுகிற நெடி அடித்தது. அந்த விசயத்தில் ஒரு தனி பெயர் எங்களுக்கு உருவானது. பிறகு எங்கள் மாவும் ஒரு நாள் அதிசயமாய் காய்த்தது.
அந்த மாமரம் ரொம்ப வருடங்களாய் காய்க்காமல் இருந்தது. சில மாதங்கள் பூக்கும் அப்படியே அடிக்கிற மழையில் மொத்தமாய் உதிர்ந்து விடும். இம்முறை அப்பா அதை வெட்டி விட ஆள் கொண்டு வந்து பார்த்தார். அவர்கள் சொன்ன நாளில் வரவில்லை. அப்புறம் அப்பாவும் மறந்து விட்டார். பிறகு ஒரே நாளில் மா பூத்தது. இம்முறை உதிராமல் கிளைகள் எல்லாம் பச்சைத் துளிகளாய் மின்னும் பிஞ்சுக் காய்கள். கிட்டத்தட்ட எதுவுமே பிஞ்சில் பழுக்காமல் உதிராமல் முழுக்க விளைந்து காய்த்து பழுத்தன. நாங்கள் ஆசையாய் பறித்து தனியாய் பிரித்து உறை போட உத்தேசித்தோம். சின்ன சின்ன காய்கள். அம்மா காந்தாரி மிளகாய் உப்பு போட்டு ஊற போட திட்டமிட்டாள். பழங்கஞ்சிக்கு நல்ல கடியாக இருக்கும் என அக்கா வாயில் எச்சி இறக்கினாள். நான் கொஞ்சம் பழ்ங்களை வகுப்புக்கு கொண்டு போய் நண்பர்களுக்கு கொடுக்க ஆசைப்பட்டேன். ஆனால் பறித்து வாயில் வைத்ததும் மாலினி அக்கா தூவென துப்பி விட்டாள். நானும் எடுத்து மோர்ந்து பார்த்தேன். சின்ன குழந்தை வயிற்றுப் போக்கு ஆனால் தண்ணியாக வருமே அதன் வாசனை. ஒரு புளித்த ஊசின நாற்றம். இது போக சுவையே இன்றி சப்பென்று இருந்தது. ஒரு பழத்தை முழுசாய் சாப்பிடும் முன் எல்லாரும் வாந்தி எடுத்தார்கள். தோட்டை கொண்டு மாங்காய் பறிக்க வந்தவர்கள் கூட கூலி வேண்டாம் என சொல்லி விட்டார்கள். மொத்தத்தையும் அள்ளி குழியில் போட்டு மூடினோம். குழியில் இருந்து மாஞ்செடிகள் முளைத்துக் கொண்டே இருந்தன. நாங்கள் அவற்றை பிடுங்கிப் போட்டோம்.
மரம் மட்டும் தவறாமல் காய்த்துக் கொண்டிருந்தது. பறிக்காமல் விட்டால் கனிந்ததும் வீடு முழுக்க மலநாற்றம் பரவியது. இந்த அவஸ்தை போதாதென்று மலநாறி மாவீடு என்று எங்களுக்கு ஊரில் பிரசித்தம் வேறு ஏற்பட்டது. பள்ளிக்கூடம் விட்டால் சின்ன பயல்கள் எங்கள் வீட்டு மதில் பக்கமாய் கூடி விடுவார்கள். ஒரு பக்கமாய் சாய்ந்து கிடக்கும் மரத்தில் கிளைகளில் கல்லெறிந்து விழும் காய்களை கடித்து ஓவென கத்தியபடி துப்பிக் கொண்டு ஓடுவதில் அவர்களுக்குள் ஒரு போட்டி வேறு. இந்த பையன்களை விரட்டுவது வேறு எனக்கு தனி வேலையாக இருந்தது. ஒரு வழியாக மரத்தை ஆள் கொண்டு வந்து அப்பா வெட்டி விறகுக்கு விற்றார். அவர்கள் தான் மலக்குழி சாத்தான் பற்றி முதன்முறை சொன்னார்கள். யாராவது சாத்தானை ஏவி விட்டிருக்கலாம் என்றார்கள். ஆனால் மலக்குழி சாத்தானை விரட்ட அந்த ஊரில் ஆளில்லை. நெய்யூரில் ஒரு கிண்ணன் ஆள் இருப்பதாய் சொன்னார்கள். செவித்தியான் ஆசான். பேய் விரட்டுவதில், சூனியம் வைத்து எடுப்பதில் கில்லாடி. அவருடைய பரம்பரையே பெயர் கேட்ட மந்திரவாதிகளால் ஆனது. அவருடைய பாட்டனார் தான் அரண்மனைக்குள் கடும் காவல்களை உடைத்து நுழைந்து தம்புராட்டியின் மணிமாலையை திருடி வந்தது. சும்மா சவாலுக்காகத் தான். அவரை பிடித்து பொதுவில் சூத்தில் மூங்கிலில் சொருகி நிற்க வைத்து சித்திரவதை செய்து கொன்றார்கள். பிறகு அந்த பரம்பரை நசிக்க துவங்கியது. அவரே சாத்தானாக மாறி ஊர்க்காரர்களை தொந்தரவு செய்ய தெருமுனையில் கோயில் கட்டி கொடை கொடுத்து சாந்தி பண்ணி குடி வைத்தார்கள். இப்போதும் ராவில் கோயிலை கடந்து போனால் சல் சல் என மணிச்சத்தம் கேட்டும். அது சாஸ்தாவின் ஆசீர்வாதம் என்றார்கள். பெண்கள் கடந்தால் சீட்டி ஒலி கேட்கும். ஆசானின் இந்த தலைமுறை கிறித்துவத்துக்கு மாறினார்கள். குடும்பத்தில் ஆசான் மட்டும் தான் மந்திரவாதம் பயின்று வந்தார். அதுவும் பக்க தொழில் தான். பிரதான தொழில் வைத்தியமும் அடிமுறையும். திருட்டு கூட உண்டென்று சில பேர் சொன்னார்கள். ஆசான் களத்தில் இறங்குவதென்றால் யாரும் பக்கத்தில் போய் பிடிக்க தயங்குவார்கள். அவருக்கு தொடுவர்மம் தெரியும் என்றார்கள். ஆசானை அழைத்து போக அப்பா ஒரு நாள் நெய்யூருக்கு பயணம் போனார். பன்னிரெண்டு நாள் கழித்து ஒரு நாள் பார்த்து குறித்து கொடுத்தார்கள். அன்றிரவு களமெழுதி பூஜை. அதற்கான செலவுகள், ஏற்பாடுகள் பற்றி அம்மாவிடம் அப்பா ரகசியமாக சொல்லிக் கொண்டிருந்தார். அன்றைய இரவு மட்டும் என் ஏழு சகோதரிகளை வடசேரியில் பெரியப்பா வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்தார்கள்.
இதற்கிடையே எங்கள் பள்ளிக்கு புது கணக்கு சார் வந்தார். மொட்டைத் தலை முகமெல்லாம் அம்மைத் தழும்பு என பார்க்க நன்றாக் கொத்தின அம்மி கணக்காய் இருந்தார். வெங்கட சர்மா. வந்ததுமே முதல் நாளே நான்கைந்து மாணவர்களை செவிட்டில் அறைந்தார். அதில் ஒரு பையன் மயக்கம் போட்டு விழுந்து விட்டான். அவருக்கு மாணவர்களை அடிக்க பிடித்திருந்தது. சும்மாவே கூப்பிட்டு அடிப்பார். எங்கள் ஊர்க்காரர்களுக்கும் அடிக்கிற வாத்தியார் நல்ல வாத்தியார் என்று எண்ணம், அதனாலே தனி மரியாதை. அப்பாக்கள் பள்ளிக்கு வந்து கைகட்டியபடி “பையனுக்கு செவெளில நல்ல வையுங்க சார், அப்பந்தான் உருப்படுவான்” என சொல்லிப் போவார்கள். இப்படி அவருக்கு நல்ல மவுசு ஏற்பட்டது. மற்றபடி அவர் பாடமெடுத்து ஒரு நாளும் பார்த்ததில்லை. எங்களையெல்லாம் சத்தமாக வாசிக்க வைப்பார். பிறகு ஒவ்வொருவரிடமாய் வந்து கிள்ளுவார். இடுப்பு, மார், கன்னம் இவை தான் அவருக்கு கிள்ள பிடித்த இடங்கள். இதில் யாரையாவது பிடித்து கேள்வி கேட்டு அறை விடுவார், அவன் அன்றில் இருந்து அவருக்கு அடிமை. அடியோ அடி தான். ஆனால் கொஞ்ச நாளில் இந்த மாணவர்களிடம் பாசமாகி விடுவார். தின்பண்டம் வாங்கி கொடுப்பார். ஆப்பிள் என்ற ஒரு வஸ்துவை நாங்கள் எங்கள் வாழ்நாளில் அப்போதெல்லாம் பார்த்ததில்லை. ஏதோ காணக்கிடைக்காத பொருள் போலத் தான் அதைப் பற்றி பேசிக் கொள்வோம். சுப்பிரமணி கொஞ்ச நாள் அவருக்கு அடிமையாக இருந்தான். அவரை எங்கு பார்த்தாலும் பின்னாடியே போவான். அவனுக்கு ஒரு நாள் ஆப்பிள் வாங்கித் தந்தார். அதை அவன் தனியாக கடித்து தின்றான். அவனைப் பார்த்தாலே எங்களுக்கு அந்த காட்சி தோன்ற எச்சில் ஊறும். இப்படி இந்த பையன்களை எப்படி வசீகரித்து வைக்கிறார் என தெரியாது. மாலை ஆனால் இந்த பையன்கள் அவர் வீட்டுக்கு போவார்கள். சில பேர் அவருடன் வீட்டிலே தங்கி வேலைகள் செய்து கொடுத்தார்கள். இவர்கள் வீடுகளிலும் பத்து குழந்தைகளுக்கு மேல் இருந்ததாலும் சாப்பாட்டுக்கு வழி இல்லாததனாலும் பெற்றோர்கள் கண்டு கொள்ளவில்லை. இந்த பையன்களை மல்லன் “சூத்தாட்டி” என அழைத்தான். கொஞ்சம் இடுப்பை அசைத்தபடி நடப்பார்கள். என்னிடம் அதிகம் பேச வர மாட்டார்கள். மல்லன் தான் அவர்களிடம் போய் வம்பு பண்ணிக் கொண்டிருப்பான். சுப்பிரமணி இடுப்பை கொஞ்சம் அதிகமாகவே ஆட்டுவான். சர்மா சாருக்கு அவன் தான் எல்லாமே. அவனிடம் அப்படி கொஞ்சுவார். அவருடன் தான் தங்கி இருந்தான். அவன் தான் அவன் வீட்டில் பெண் குழந்தை இல்லாததனால் நான்கு வயது வரை அவனை பாவாடை போட்டு பொட்டு வைத்து தலை பின்னி வளர்த்தார்கள். அந்த சைகை பாவனை எல்லாம் அவனிடம் பின்னர் மாறவே இல்லை. சுப்பிரமணிக்கு அம்மா மட்டும் தான். அவரும் இறந்து விட சொந்தக்காரர் வீட்டில் கொஞ்ச நாள் தங்கி இருந்தான். பிறகு சர்மா சாரிடம் அடைக்கலம் ஆகி விட்டான்.
சுப்பிரமணி எனக்கு முன்னால் தான் அமர்வான். ஒரு நாள் அவனால் கீழே உட்கார முடியாமல் நெளிந்து கொண்டிருந்தான். அது சரஸ்வதி டீச்சரின் வகுப்பு. சரஸ்வதி டீச்சரும் புதிதாக வந்திருந்தார்கள். அவர்களை இவனை முதலில் எச்சரித்தார். அப்போது தான் நான் சுப்பிரமணியின் காக்கி நிக்கரின் பின்புறம் ரத்தம் கசிவதை கவனித்து டீச்சரிடம் கத்தி சொன்னேன். வகுப்பே கொல்லென சிரித்தது. டீச்சர் அவனை அழைத்து பார்த்து விட்டு வீட்டுக்கு போக சொன்னார்கள். அவன் வீட்டுக்கு போகாமல் வகுப்பு திண்னையில் அமர்ந்திருந்தான். சர்மா சார் வகுப்பு வந்ததும் அவர் சுப்பிரமணியை பார்த்து அவனை யாராவது அழைத்து போய் அலம்பி விட சொன்னார். மல்லன் தான் போனான். வந்து என்னிடம் உட்கார்ந்தவன் “அவனுக்கு சூத்து கிழிஞ்சு போச்சு” என்றான். எனக்கு அதைக் கேட்க பயத்தில் ஜுரமே வந்து விட்டது.
எங்கள் பள்ளியில் ஒரு கக்கூஸ் இருந்தது. அது ஒரு நாள் அடைப்பெடுத்து நிறைந்து பொங்கியது. கோலப்பனை அழைத்தால் அவர் ஜுரம் என முடியாமல் படுத்திருந்தார். அதனால் சங்கரை அடைப்பெடுக்க சொன்னார்கள். அவன் முதலில் மறுத்தான். ஆனால் பிற்பாடு அவனை தலைமை ஆசிரியர் கூப்பிட்டு அவன் சுத்தம் செய்யாவிட்டால் அந்த வருடம் தோற்க வைத்து விடுவதாய் மிரட்டினார். அதனால் அவன் சட்டை நிக்கரை எல்லாம் கழற்றி வெறும் கோமணத்தோடு குச்சியை வைத்து இறங்கி அடைப்பை நீக்கி மலத்தை அள்ளி போட்டான். சர்மா சார் அவன் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருந்தவர் பின்னர் அவன் உடை மாற்றும் போது அங்கே போனார். என்ன செய்தாரோ தெரியவில்லை சங்கர் வாளியில் இருப்பதை எடுத்து அவர் சட்டையில் தேய்த்து விட்டு ஓடி விட்டான். அதன் பிறகு அவன் பள்ளிக்கு வரவில்லை. ஆனால் சர்மா சாருக்கு சனி அன்றில் இருந்து ஆரம்பித்தது.

அடுத்த நாளும் கழிப்பறை அடைத்தது. யாரும் சுத்தம் செய்ய இல்லை. சர்மா சாருக்கு வெளிக்கு போக வேண்டும். சார் நகரத்தில் வளர்ந்தவர். அவரால் வெளியே எல்லாம் போக முடியாது என்றார். பையன்கள் என் வீட்டில் மறைவான கக்கூஸ் உள்ளதாய் சொல்ல அவர் என்னை அழைத்து போக சொன்னார். நான் தயங்கியபடி அவரை அழைத்து சென்றேன். நல்ல வேளை நான் போகும் போது காய்ந்த மலத்துண்டுகள் இன்றி விளை காலியாக சுத்தமாக இருந்தது.

No comments: