Monday, January 5, 2015

ஒரு ஆடையின் நாள்ஒரு பிரத்யேகமான ஆடையை
அணிந்தேன் இன்று.
ஒரு அரசியல் தலைவரை
நினைவுபடுத்துவதாய் சொன்னாள்
மனைவி.

ஆர்வமாகி
பல்வேறு
கோணங்களில்
பாவனைகளில்
செல்போனில் படம் பிடித்துக் கொண்டேன்.


அவள் சொன்னாள்
நான் இப்போது இன்னும்
நெருங்கி வந்திருப்பதாக.

கிளம்பி வருகிற வழியில்
கார் ஜன்னல் ஊடே
அவரது
பல்வேறுபட்ட போஸ்டர்களை
கடந்து சென்றேன்.
கூட
வேறு சமூக பிரச்சனைகள் பற்றின
சேதிகளும்
நினைவுக்கு வந்தன.

நான் அவராக
இருந்தால்?

என்னுடைய கட்சி
2018இல் ஆட்சி அமைக்கும்
என அறிவிப்பேனா?
அதே கூட்டணியில்
பேசாமல்
தொடரலாமே?

என் கட்சி
எல்லா தரப்பட்ட மக்களுக்குமானது
என சமீபத்தில்
அறிவித்தது
சரிதான் என்றால்
மீனவர் பிரச்சனைகளை ஒட்டிய
போராட்டங்களில்
கலந்து கொள்ளலாமே?

ஆம்
ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்
இருப்பேன்.

அதனாலான அரசியல் பலன்?

அரசியலை
ஒரு உள்ளுணர்ச்சியுடன்
செய்து கொண்டே
இருக்க வேண்டும்.
அதிகமாய்
திட்டமிடுகையில் தான்
ஒருவரின் வீழ்ச்சி ஆரம்பிக்கிறது.

என்னுடன்
சதா பத்து தடியன்கள்
திரிகிறார்களே
படுக்கையறையில் கூட
தனியாய்
தூங்க விடுவதில்லை.
அப்படி
ஒரு பற்று
ஒரு நம்பிக்கை
என் மீது.
இருக்கட்டும்.
இவர்கள் தான்
என் மனம் சாயும் தூண்.
இவர்கள் சகிதமாய்
ஓரிடத்தில் நான் நுழையும் போது
ஒரு டைனோசர்
சிறுபிராணிகள் மத்தியில்
தன் நீண்ட கழுத்தையும் வாலையும் தூக்கியபடி
சட்டென தோன்றும் போது
ஏற்படுவது போல்
மக்கள் சிதறுகிறார்கள்
மனதளவில்.
இவர்களுடன்
நான்
பத்து உடல்களாக
இருக்கிறேன்
பத்து உடல்களும்
என்னை
தனதுடலாய் நினைக்கின்றன.

ஆனால் இவர்களை
கூட வைத்துக் கொண்டு
என் காதலியை
எப்படி
ரகசியமாய் சந்திப்பேன்?
எங்கு போனாலும்
எங்கள் நான்கு பாதங்களைச் சுற்றி
பத்து நிழல்கள் சுழல்கின்றன.
அந்தரங்கள் அற்ற
ஒரு போஸ்டராக இருக்கிறேன்.
என்னைத் தாங்கி நிற்கும்
நீண்ட சுற்றுச் சுவர் இவர்கள்.

எப்படி அவளை தனியாய் பார்ப்பது?
என்ன மாதிரியான தொனியில்
சொற்கள் கொண்டு
பேசுவது?
ஒருவேளை அவளும்
என்னை தன் மீது
ஒரு போஸ்டராக கொண்டு விட்டால்?

பயமாகியது.
அவள் யாராக இருப்பாள்?
எனக்கு
அவளைத்
தெரியவே தெரியாதே?

அலுவலகத்தில்
மேலதிகாரி
நான் வணங்கும் முன்
கால் நொடிக்கு முன்
என்னை வணங்கியதாய்
ஒரு உணர்வு.

நான் வந்த போது
நிறைய பேர்
திரும்பிப் பார்த்தார்கள்.
என்னிடம் நேரில் வந்து
பேசும் போது
அவர்கள்
கண்களில் ஒரு
குழப்பம்,
பதற்றம்,
இருள்.

சிலர் அவஸ்தையாய்
புன்னகைக்கிறார்கள்.
சிலருக்கு சொற்கள்
குழறுகின்றன.

கசப்பும் குழப்பமும்
திகைப்பும் களைப்பும்
மாறி மாறி
சூழ்கின்றன.

என் அறைக் கதவைத்
திறந்து
யார் யாரோ
வருகிறார்கள்.
போகிறார்கள்.
அவர்களைப் பார்த்து
பயமாகிறது.

என் மேஜைக்
கண்ணாடிக் கோப்பையை
நாட்காட்டியை
யாராவது லேசாய்
இடம் மாற்றி வைத்தால்
கவனமாய் நடுங்கும் விரல்களுடன்
மீண்டும் பழைய இடத்தில்
வைக்கிறேன்.

அலுவலகத்தில்
டிவியில் செய்திகள் பார்க்க
என் ரத்தம் கொதிக்கிறது.
எனக்குள் பேசிக் கொள்கிறேன்.
மனைவி அழைக்கிறாள்.
அவள் குரல்
பரிச்சயமானதாகவும்
அந்நியமாகவும்
ஒரே சமயம் தோன்றுகிறது.
கவனமாய்
தேர்ந்தெடுத்த சொற்களுடன்
அவளிடம் பேசுகிறேன்.

வீட்டுக்குத்
திரும்பினால்
யாரும் இல்லை.
உடை மாற்றினேன்.
சட்டென ஒரு நிர்வாணம்.

ஒரு மாந்திரகனின் பெட்டியின் கதவுகள் போல்
வீடு
தன் நான்கு சுவர்களையும்
திறந்து கொள்கிறது.
நான்
பாய்ந்து போய்
ஜன்னல் கதவுகளை

மூடுகிறேன்.

நன்றி: உயிர்மை, டிசம்பர் 2014

No comments: