Friday, January 30, 2015

சுந்தர ராமசாமி கவிதைகள்: பிரக்ஞையின் ஒளிக்கற்றைகள்இந்த நிழல்
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?

பாதத்தின் விளிம்பிலிருந்து தானா?
அல்லது அதன் அடியிலிருந்தா?

பூமியில் காலூன்றி நிற்கும்போது
நிழல் மேல் தான் நிற்கிறோமா?

காலைத் தூக்கி பார்க்கலாம் தான்.

இந்த யோசனையை நான் ஏற்கவில்லை.
பூமியில் நிற்கும் போது
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்
என்பது தான் எனக்குத் தெரிய வேண்டும். (சுந்தர ராமசாமி கவிதைகள், பக். 78)


சு.ராவின் இந்த கவிதை ஒருவிதத்தில் அவரது அரசியல் அல்லது தத்துவார்த்த நிலைப்பாட்டை முன்வைக்கிறது. சு.ரா ஒரு நவீனத்துவவாதி. பொதுவாக தமிழின் நவீனத்துவ எழுத்தாளர்களை இரண்டாக பிரிக்கலாம்: 1) பொருள்முதல்வாதிகள் 2) கருத்துமுதல்வாதிகள். அல்லது இப்படியும் பிரிக்கலாம். 1) அரசியலுணர்வு கொண்டவர்கள் 2) அரசியலற்றவர்கள். 


அரசியல் எனும் சொல் இங்கு தொண்ணூறுகளின் பிற்பகுதியுடன் அதிகார நகர்வு எனும் பொருள் கொண்டு விட்டது. இன்று அரசியல் செய்யாதே என்றால் அதற்கு நடைமுறை அரசியல் என்று பொருள் இல்லை. ஆனால் எழுபது, எண்பதுகளில் அரசியல் என்றால் மக்களை ஒருங்கிணைத்து ஒரு செயல்திட்டத்துடன் இயங்குவது தான். மக்களை ஒருங்கிணைக்கும் பணியை எழுத்தாளன் செய்யலாமா என்பதில் நவீனத்துவ பிதாமகர்களான க.நா.சு, சி.சு.செல்லப்பா துவங்கி விமர்சகர்களான வெங்கட் சாமிநாதன் வரை இடதுசாரிகளிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டார்கள். அரசியல் செயல்பாடு எழுத்தாளனுக்கானது அல்ல என நம்பினார்கள். அன்றைய திராவிட அரசியல் பண்பாட்டின் மீது அவர்கள் கொண்டிருந்த ஒரு கசப்பு இப்படி யோசிக்க அவர்களைத் தூண்டியது. இது மட்டுமல்ல. சி.மணி துவங்கி, ஆத்மாநாம், பிரமிள், இன்றுள்ள அம்மரபில் வரும் இசை போன்ற கவிஞர்கள் வரை நாம் ஒரு கருத்து முதல்வாதத்தை பார்க்கிறோம். கருத்து முதல்வாதம் என்றால் உண்மை ஒரு கருத்தில் இருந்து தோன்றுகிறது என்பது. கருத்து என்பதை பிரக்ஞை, மனம் என்றும் புரிந்து கொள்ளலாம். தமிழில் எழுதும் 90% கவிஞர்களிடம் இந்த நோக்கே உள்ளது. உலகம் என்னில் இருந்து துவங்குகிறது, நான் மயங்கி விழுந்தால் உலகமும் காணாமல் போகும் என்பது போன்ற ஒரு நிலைப்பாடு இது. ஆக இயல்பாகவே இவர்களுக்கு லௌகீகமான விசயங்களில் ஒரு சலிப்பும் அவநம்பிக்கையும் உண்டு. சிந்தனையின், கற்பனையின், மனக்கிளர்ச்சியின், அக எழுச்சியின் உலகே இவர்களுக்கு முக்கியம். லௌகீகமான, நடைமுறையிலான அரசியல் தட்டையானது, அதனால் அது போலியானது என நம்பினார்கள். அரசியல் வெற்றுக் கூச்சல் எனும் ஒரு எளிய புரிதலுக்கு வந்து சேர்ந்தார்கள். அதனாலே அரசியலில் இருந்து விலகி இருக்க எத்தனித்தார்கள். நவீனத்துவ எழுத்து என்றால் அரசியலற்றது எனும் அடையாளம் இப்படித் தான் உருவாகிறது. இதன் இன்னொரு துருவம் உலகம் முழுக்க புறவயமானது, பொருளாலானது என நம்புவது. இடதுசாரிகள் அப்பாதையில் சென்றார்கள். அவர்கள் அகம் பற்றி எழுத முனையவில்லை. இந்த முகாம்களில் சு.ரா எங்கு இருந்தார்?
சு.ரா இரு முகாம்களிலும் இருந்தார். தொ.மு.சியின் தாக்கம் காரணமாய் மார்க்ஸியம் அவரை ஆரம்பத்தில் ஈர்த்தது. “சாந்தியில்” வெளியான அவரது “தண்ணீர்” போன்ற கதைகள் பொருள் முதல்வாத கதைகள். பின்னர் மெல்ல மெல்ல சு.ரா இச்சிந்தனை தளத்தில் இருந்து விலகுகிறார். குறிப்பாக க.நா.சுவுடனான சந்திப்பும் உறவும் அவரை அலௌகீகம் நோக்கி செலுத்துகிறது. ஆனாலும் அவர் இறுதி வரை ஒரு மென்மையான இடதுசாரியாகவே இருந்தார். நடைமுறை அரசியல் மீதான ஒரு அங்கதத்தை “பல்லக்கு தூக்கிகளில்” வெளிப்படுத்தி இருப்பார். இந்த கவிதை மேலே சொன்ன இரு தரப்புகள் சார்ந்து ஒரு கேள்வியை எழுப்புகிறது:
நிழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது? பாதத்தில் இருந்தா அல்லது பாதத்துக்கு கீழ் பூமியின் அடியில் எங்கோ கண்காணா புரிந்து கொள்ளவியலா இடத்தில் இருந்தா? இங்கே நிழலை நாம் ”உண்மை” என்பதன் குறியீடாக பார்க்கலாம். “கால்” தான் நம்மை பூமியோடு பிணைக்கும் உறுப்பு. கால் என்பது இங்கு உடலின் குறியீடு. உண்மை இந்த உடலில் இருந்து துவங்குகிறதா அல்லது உடலைக் கடந்த வேறொரு இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறதா? எனது இருப்பு பௌதிகமானதா அல்லது என்னைக் கடந்த ஒரு பிரக்ஞையை சார்ந்ததா? நான் இந்த உலகை என்னுடைய லௌகீக அனுபவங்களால், அறிவால் புரிந்து கொள்ளலாமா? அல்லது என் லௌகீக வரம்பை மீறிய ஒரு பிரபஞ்ச இருப்பில் இருந்து என் புரிதலைப் பெற வேண்டுமா? வானில் பறக்கவா அல்லது பூமியில் காலூன்றி நிற்கவா?
இறுதி வரி சு.ராவின் வாழ்க்கை பார்வையின் சாரம்: “பூமியில் நிற்கும் போது/ எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்/ என்பது தான் எனக்குத் தெரிய வேண்டும். இந்த உண்மை பூமியைக் கடந்த, என் எளிய மனித அறிவைக் கடந்த ஒன்றாக இருக்கலாம். ஆனால் நான் இப்பூமியில் தானே வாழ்கிறேன். இங்கு இருக்கையில் எனக்கு இங்குள்ள அறிவு தான் முக்கியம். என்னைக் கடந்த ஒரு அறிதலை ஏற்கிறேன். ஆனால் எனக்கு அதை விட என் பௌதீக நடைமுறை வாழ்வுக்கு உட்பட்ட நிதர்சனமும் அறிவும் தான் முக்கியம்.
ஒளி ஏற்ற பின்

மனதில் முடித்துவிட்ட கவிதையை
எழுதவியலாது வாட்டுகிறது இந்தக் குளிர்
கையகலம் வெயில் வந்தாலும் என் காரியம் கூடி விடும்
சுற்றியிருக்கும் இந்த ஒளியிடம்
மீண்டும் மீண்டும் என் கவிதையைச் சொல்லி
பரவசத்தில் சிறிது உஷ்ணம் பெற்று
குளிர் காய்ந்து கிடக்கிறேன்.

ஒளி என் கவிதையை ஏற்றால்
வெயிலை அது அழைத்து வராதா?
என்ன இது? ஒளி வேறு வெயில் வேறா?
ஒளியின் குதூகலம்தானே வெயில்
விரைவில் ஒளி வெயிலாக மாறும்.

அது சரி. ஒளி ஏற்ற பின்
என் கவிதையைக் காகிதத்தில்
கொட்டி வைக்க அவசியம் உண்டா?
(பக். 160)
சு.ராவின் கவிதைகளில் ஒளி என்பது ஒரு உயர் பிரக்ஞையின், படைப்பூக்கத்தின், அறிதலின் அல்லது பிரபஞ்ச தரிசனத்தின் உருவகமாக உள்ளது. அது புரிந்தால் இக்கவிதை எளிதாகி விடும். ஒரு எழுத்தாளன் தன் படைப்பில் அந்த தரிசனம் வந்து ஒளியேற்ற காத்திருக்கிறான். அந்த ஒரு துளி அறிதல் அவனுக்கு போதும். குழப்பத்தின் குளிர் அவனை விட்டு அகன்று விடும். “கையகலம் வெயில் போதும்”. சரி இங்கிருந்து சு.ராவுக்குள் இருக்கும் சமூக ஆர்வல படைப்பாளிக்கு, மானிட நேய லட்சியவாதிக்கு ஒரு கேள்வி உதிக்கிறது. என் கவிதைக்குள் குடியேறும் இச்சிறு ஞானத்தில் சமூகத்துக்கு பயனுண்டா? அவருக்கு தோன்றுகிறது “உண்டு. இச்சிறு ஞானம் சமூக விடுதலைக்கான ஒட்டுமொத்த அறிதலாக மாறும் காலம் வரும்”:
ஒளி வேறு வெயில் வேறா?
ஒளியின் குதூகலம்தானே வெயில்
விரைவில் ஒளி வெயிலாக மாறும்.
சி.மணி, பிரமிள், ஆத்மாநாம், ஆனந்த், அப்பாஸ், அபி, யுவன் ஆகியோரில் இருந்து சு.ரா இப்படித் தான் வேறுபடுகிறார். அவரால் தன் எழுத்தை சமூக விடுதலையில் இருந்து துண்டிக்கப்பட்ட ஒன்றாக காண இயலாது. அவர் ஒரு இடைப்பட்ட கலைஞன்.
இறுதியாக ஒரு கேள்வி: “மனதுக்குள் தரிசன ஒளி பெற்று என் கவிதை துலங்கிய பின் அதன் நோக்கம் நிறைவேறிற்றே. பிறகு அதை எழுதத் தான் வேண்டுமா?”. ஆனால் எழுதாவிட்டால் சமூக விடுதலை சாத்தியமாகாதே? இது முரணில்லையா என உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இவ்வரியின் நோக்கம் கவிதை எங்குள்ளது எனக் கேட்பது: கவிதை மனதில், நம் பிரக்ஞையில் உள்ளதா? காகிதத்தில் வந்து உட்கார்கையில் அது வேறொன்றாக மாறி விடுகிறது இல்லையா?
இதே இறுதி வரியை இன்னொரு முழுக் கவிதையாக பிரமிள் அபாரமாக எழுதி இருக்கிறார்:
பல்லி

கவிதை -
இறக்கத் துடிக்கும் வாலா?
உயிரை மீண்ட உடலா?
(எழுத்து. செப். 1963)
ஒரு கவிதை நம் பிரக்ஞையில் இருக்கிறதா அல்லது பிரக்ஞையை கடந்த இன்னொரு உயர் அறிதல் நிலையில் இருக்கிறதா? இது ஒரு தத்துவார்த்த கேள்வியும் தான்: நீங்கள் படிக்கிற இக்கட்டுரை உங்கள் மனதில் இருக்கிறதா? வெளியே ஒரு காகிதத்தில், கணினித் திரையில் இருக்கிறதா? எழுதிய என்னில் இருக்கிறதா? என்னைக் கடந்த இன்னொரு உயர் பிரக்ஞை புலத்தில் இருக்கிறதா?
ஆனால் பிரமிள் குறியீட்டை பயன்படுத்தும் போது சு.ரா உவமைகளை பயன்படுத்துகிறார். அதனாலே மேற்சொன்ன விளக்கத்தை படித்த பின் சு.ராவின் அக்கவிதை ஒப்பனை கலைந்த ஒரு நடிகையை போலாகி விடுகிறது. பொதுவாக சு.ராவின் கவிதைகளுக்கு உள்ள ஒரு பலவீனம் இது.
ஒரு படைத்தலைவர் மேலதிகாரிக்கு
மனதில் எழுதும் சொற்கள்
தாண்டிச் சென்றதும்
பாலத்தை தகர்க்க
தங்கள் ஆணையை என்
ரத்தத்தில்
எழுதிக்
கொண்டிருக்கிறேன்
மேன்மை தாங்கியவரே
குதிரைகளின்
புட்டங்களில்
குதிரைகளின் முகங்கள்
உரச
தாண்டிக்
கொண்டிருக்கிறோம்
கடைசிக் குதிரை தாண்டியதும்
பாலம் பறந்து நதியில் மூழ்கும்
தாண்டாமல் காத்திருக்கிறான் ஒரு வீரன்
தங்களிடம் சேதி சொல்ல
எப்படி மீண்டும் சேர்ந்து கொள்வேன்
என்று அவன் கேட்கவில்லை
தான் செல்ல பாலங்கள் இருக்குமா
என்று அவன் கேட்கவில்ல
செய்தி சொன்ன பின் நான் இருப்பேனா
என்று அவன் கேட்கவில்லை
தன் குதிரை இருக்குமா
என்று அவன் கேட்கவில்லை
தாங்கள் இருப்பீர்களா
என்று அவன் கேட்கவில்லை.
மேன்மை தாங்கியவரே
தகர்ப்பது பெரிது இல்லை
கேட்கப்படாத இந்தக் கேள்விகள்
அவற்றின் தகர்ப்பு
(பக். 158)

தமிழ் நவீனத்துவ கவிதை பொதுவாக ஒரு மனநிலை அல்லது உணர்ச்சியை நோக்கி குவிந்து ஒரு நுண்பெருக்கி தரும் பாக்டீரியாவின் சித்திரம் போல் அதை உறைய வைக்கும் தன்மை கொண்டது. இன்று அவ்வகை கவிதையின் சிறந்த உதாரணமாக தேவதச்சன் உள்ளார். ரெண்டாயிரத்துக்கு பிறகும் ஒரு வட்டத்தில் இருந்து சின்ன புள்ளியை இலக்காக்கிய உள்நோக்கி கவியும் கவிதைகளை தான் புதியவர்களும் எழுத தலைப்படுகிறார்கள். தமிழின் வெகு பிரபலமான நவீனத்துவ கவிதையான பிரமிளின் “காவியம்” இதற்கு சிறந்த உதாரணம். இக்கவிதை காற்றில் மிதக்கும் ஒரு உதிர்ந்த இறகின் அலைகழிப்பில் மனித வாழ்க்கையை சுருக்கி உறைய வைக்க பார்க்கிறது.
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
சு.ராவின் மேலே உள்ள கவிதை நேர்மாறாக ஒரு சின்ன புள்ளியில் இருந்து வெளியே பெரும் வட்டத்திற்கு விரிகிறது. பிரமிளின் கவிதை நுண்பெருக்கி என்றால் சு.ராவின் கவிதை பலூன். இக்கவிதையில் வரும் சித்திரம் இருபதாம் நூற்றாண்டு மேற்கத்திய போர் நாவல்களில் இருந்து எடுக்கப்பட்டது. குறிப்பாய் ஹெமிங்வே இது போன்று பாலங்களுக்கு குண்டு வைக்கிற சம்பவங்களை, அதன் அபத்ததை பற்றி எழுதியிருக்கிறார். படைத்தளபதி ஒரு ஆணை இடுகிறார். தம் படை பாலத்தில் ஏறி அதை கடந்ததும் உடனே அதை தகர்த்து விட வேண்டும். எதிரிப் படையின் முன்னேற்றத்தை முடக்குவது இதன் நோக்கம். அது சரி, ஆனால் உடைத்து விட்டோம் என தகவல் சொல்ல ஒருவன் பின்னே தங்க வேண்டும். அவன் திரும்ப செல்லும் வழியில் எதிரியினரிடம் மாட்டி இறந்து போகலாம். அவனோ அவன் குதிரையோ கூட மிஞ்சாமல் போகலாம். இதுவரை இக்கவிதை ஒரு சமூக அமைப்புக்குள் தனிமனிதன் எப்படி பயன்படுத்தப்பட்டு சக்கையாக வீசப்படுகிறான் எனப் பேசுகிறது. தனிமனிதன் vs சமூக அமைப்பு என்பது சு.ராவின் படைப்புகளில் உள்ள முக்கியமான கரு. நம்மில் எத்தனையோ பேருக்கு இவ்வனுபவம் உண்டு. இருபது, முப்பது வருடங்கள் எத்தனையோ மணிப்பொழுதுகள் ஒரு நிறுவனத்துக்காக உழைத்திருப்போம். ஆனால் இறுதியாக எதையும் சாதித்திருக்க மாட்டோம். நம் உழைப்பினால் சமூகம் பயன்பெற்றதாகவும் தெரியாது. நாம் ஓய்வு பெற்றதும் நம் இடத்தில் மிக எளிதாக இன்னொருவர் பொருந்திக் கொள்வார். அப்படியென்றால் நம் முக்கியத்துவம் அவ்வளவு தானா? நாம் ஒரு எந்திரத்தின் திருகாணி மட்டும் தானா? பல சமயங்களில் நிறுவன முதலாளிகளுக்கு நம்மைப் போன்ற ஒருவர் அங்கிருந்ததே தெரியாது. வாடிக்கையாளர்களுக்கும் நம்மைப் பற்றி தெரியாதிருக்கும். இப்படி எத்தனையோ பேர் சமூகத்துக்காக அர்த்தமின்றி உழைக்கிறார்கள். அரசாங்கங்களில் பகடையாட்டத்தின் விளைவான கார்கில் போர்களில் எத்தனை பேர் உயிரிழக்கிறார்கள்? தீவிரவாத தாக்குதலில் சாகும் எண்ணற்ற மக்களுக்கு தாம் ஏன் சாகிறோம் என்று தெரியாது. கொல்லுகிறவர்களுக்கு தன் இலக்கு யார் என, அவர்களின் வாழ்க்கை பற்றி அறிய அக்கறை இல்லை. இது நேரடியாக என்றால், மறைமுகமாகவும் நாம் பல்வேறு அமைப்புகளுக்குள் மாட்டி அழிகிறோம். குடும்பத்துக்குள், மதத்துக்குள், ஊடகங்களுக்குள் நமக்கே தெரியாமல் நம்மை பயன்படுத்துகிறார்கள். நாம் பேசும் ஒவ்வொரு சொல்லையும் இன்னொருவர் நம்மை அறியாமல் பணமாக மாற்றுகிற காலகட்டத்தில் வாழ்கிறோம். நாம் இந்த அமைப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது. ஏனென்றால் நாம் இதன் பகுதியாக இருக்கிறோம். நாமே நமக்கான சிறைச்சாலைகளை கட்டி அதனுள் கம்பிகளை பிடித்தபடி தவிக்கிறோம். அதனால் தான் “தாங்கள் இருப்பீர்களா/ என்று அவன் கேட்கவில்லை.” என்கிறார். உண்மையில் அந்த படைத்தளபதி நினைத்தால் கூட இந்த அபத்தத்தை நிறுத்த முடியாது. இக்கவிதையின் சிறப்பே வாழ்க்கையின் சமூக, அரசியல், பண்பாட்டு தளங்களுக்கு நகர்த்தி இதை வாசிக்க முடியும் என்பது. தமிழின் கணிசமான நவீன கவிதைகளுக்கு இக்கவிதையில் உள்ள பெரும் விரிவு இல்லை. ஒரு சின்ன பனித்துளி சூரியனை பிரதிபலிப்பது போன்ற கவிதை இது.
இதே போல் மற்றொரு கவிதை “பூர்த்தி செய்யாத இடம்”. ஒரு கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்ப படிவத்துடன் அதிகாரி முன் நிற்கு கவிதைசொல்லி தன் மனதின் ஒரு படிவத்தில் பூர்த்தி செய்யப்படாத ஓரிடத்தில் அதிகாரியின் பெயரை எழுதிக் கொள்ளலாமா எனக் கேட்கிறார். மனிதத் தன்மையற்றுப் போன்ற கச்சிதமான சமூகத்தில் மனிதன் அந்நியப்படுவதை பேசும் இக்கவிதை டபிள்யு.எச்.ஆடனின் The Unknown Citizen கவிதையை நினைவுபடுத்துகிறது. அக்கவிதையில் ஒரு உன்னதமான குடிமகன் பற்றின அறிக்கை வரும். அவர் நன்றாக படித்து நன்றாக வேலை செய்து, ஒழுங்காக வரி கட்டி, ஒழுங்காக தவணை முறையில் சாமான்கள் வாங்கி, போர் சமயத்தில் போருக்கு ஆதரவாகவும், போர் இல்லாத போது போருக்கு எதிராகவும் சிந்தித்தவர். அவரைப் பற்றி அரசும், பிற நிறுவனங்களும் திருப்தியாக உள்ளன. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருந்தாரா, உண்மையில் எப்படியானராய் இருந்தார் என்பது பற்றி யாருக்கும் தெரியாது என அக்கவிதை முடியும்.
எந்திரங்கள் உணரும் அந்நியத்தன்மை பற்றியும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்: “இந்த மின்விசிறிகளின் சுழற்சியும் சரி ஓய்வும் சரி/ இவற்றின் கையில் இல்லை என்பதை உணரும் போது/ என் மனதில் சங்கடம் படர்கிறது/ தாம் வியர்வௌ ஆற்றுபவர்கள்/ யார் என்பதைக் கூட அறியாத மின்விசிறிகள் இவை”. (மின்விறிகள் சம்மந்தமாய் ஒரு வருத்தம், பக். 97)
ஒரு படைத்தலைவர்...” கவிதையில் கவனிக்கத்தக்க இன்னொரு இடம் “குதிரைகளின் புட்டங்களில்/ குதிரைகளின் முகங்கள்/ உரச” எனும் வரி. குதிரையின் புட்டம், ஆண்களின் திடமான தொடைகள், முறுக்கேறிய புஜம், விரிந்து உரம் பாய்ந்த மார்பு ஆகியவை மீது சு.ராவுக்கு ஒரு ஈர்ப்பு உள்ளது அவரது கதைகளை படிப்பவர்களுக்கு தெரியும். உடல்ரீதியான வலிமையை, ஆண்மை செருக்கை காட்டும் பல வரிகளை அவர் கவிதைகளில் காண்கிறோம். கட்டுறுதியான மனித உடலை ஒரு பெண்ணைப் போல் மோகிக்கிற, அதில் அபாரமான மனக்கிளர்ச்சி அடையக் கூடியவராக சு.ரா இருக்கிறார். “பல்லக்கு தூக்கிகள்” கதை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
இன்னொரு பக்கம் மனித உடலை சற்று அதிர்ச்சிகாமாக, விரசமாக, குரூரமாக காட்டுவதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். “மந்த்ரம்” கவிதை இப்படி முடிகிறது:
வைரங்குளம் மிட்டாதார்
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அப்பா உபயம்…
நீ
நான்
அவள்
அவன்
பூனை
பூண்
ஒட்டுமொத்த மனித அகங்காரத்தின் நாமகரணமும் புண்ணில் வந்து கவிதை முடிவதை கவனியுங்கள்.
வேறு சில இடங்கள்:
நகத்தை வெட்டி எறி…
தூக்கிச் சுமக்கும்
அருமைக் குழந்தையின்
பிஞ்சுத் தொடைகளில்
ரத்தம் கசியும் (“உன் கை நகம்”, பக். 23)

இம்மண்ணாந்தைகள்…
எனது ஸ்கலிதத்தில் வெளிப்பட்டு
துடைகளைக் கடிப்பதால் (ஆந்தைகள் பக். 51)

ஓட்டை வாளி
உலர்ந்த கிணற்றடியில்
ஈரம் பண்ணி அதன் மேல்
தொப்பென்று சரிந்திருக்கும்
ரோகக் கிழவி போல்… (பின் திண்ணைக் காட்சி, பக். 53)

கறுப்பு விதை காட்டி
பிட்டி சிறுத்துக் குலுங்க,
வெட்கம் கெட்டுத்திரியும்
இந்த நடுநிசி நாய்களுக்கு…
இந்த நடுநிசி நாய்கள்
பின்னங்காலிடை நுழையும் வாலை
வாய்கொண்டு பற்றி இழுத்து
பயங்கொண்டு வால் தின்று சாகின்றன (நடுநிசி நாய்கள், பக். 56-57)
“கறுப்பு விதை காட்டி/ பிட்டி சிறுத்துக் குலுங்க” என்பதில் ஒரு உள்ளார்ந்த ரசனை தெரிகிறது என நினைக்கிறேன். உடலை ஒரு புறம் பழிக்கையிலும் இன்னொரு புறம் ஒரு ஏக்கத்துடன் ரசிக்கிறார்.
சு.ரா திரும்ப திரும்ப எழுதுவது என்றால் இரண்டு வகை கவிதைகள். ஒன்று பகடிக் கவிதைகள். வணிக கலாச்சாரத்தை கேலி செய்யும், அறிவுஜீவிகளின் அகங்காரத்தை கேள்வி கேட்கும் கவிதைகள் ஒரு பக்கம். தன் எழுத்து இலக்கை அல்லது லட்சியத்தை பிரகடனம் செய்யும் “என் நினைவுச் சின்னம்” போன்ற கவிதைகள்.
நான் விடைபெற்றுக் கொண்டு விட்ட செய்தி
உன்னை வந்து எட்டியதும்
நண்ப
பதறாதே
ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் இல்லை…
என்று ஆரம்பிக்கும் அக்கவிதை இப்படி முடிகிறது:
என்னை அறியாத உன் நண்பனிடம்
ஓடோடிச் சென்று
கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்
மறைந்து விட்டான் என்று மட்டும் சொல்
தன்னைக் கடந்து தன் எழுத்து நிலைக்கும், தொடரும் என அவர் நம்பினார். அதனாலே அவர் கவிதைகளில் தொடர்ந்து “பாலம்” வருகிறது:
“என் நேற்றைய கனவில்/ அந்தப் பாலம் தகர்ந்தது” (பக். 128)
“மீண்டும் அப்பாலம் பற்றியெரிவதைக் கண்டேன்/ யார் கட்டிய பாலம்?/ யார் யார் பயன்படுத்தியது?” (பக்.191)
இந்த பாலம் சு.ராவின் நம்பிக்கைகள், லட்சியம், எழுத்து, ஆளுமை அத்தனையும் தான். தன் மீதேறி சமூகம் நடந்து அடுத்த நிலைக்கு மேலேறி போக வேண்டும் என அவர் விரும்பினார்.
வணிக பண்பாட்டு பகடிக் கவிதைகளில் நான் மிகவும் ரசிப்பது தமிழக மேடைப்பேச்சு கலாச்சாரத்தை கிண்டல் செய்யும் இக்கவிதை:

வித்தியாசமான மியாவ்
எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கிய போது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள் அழுதன
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக் கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்”
‘இந்த பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்…
(பக். 159)
அவரது அபாரமான நகைச்சுவை உணர்வு வெளிப்படும் மற்றொரு கவிதை:
சமத்துவம்
என் நண்பர்களின் குஸ்தியை பார்க்கப் போனேன்
சம ஜோடி என்பதால் பதற்றத்துடன்
ஆனந்தமாய் இருந்தது விளையாட்டு
அப்போது எங்கள் நண்பன் சற்றும் எதிர்பாராமல்
அவன் வெல்ல வேண்டிய நண்பனை மருமத்தில் மிதித்தான்
அலறியடித்து எழுந்த என் நண்பன்
தன் எதிரியின் மருமத்தில் பதிலுக்கு மிதித்தான்
தொடர்ந்து என் நண்பர்கள் இருவரும்
மாறி மாறி கடித்துக் குதறிக் கொண்டனர்
நான் என் பழைய வழக்கம் தொடர்
வன்முறை வேண்டாம் என்றதும்
ஏக காலத்தில் இருவரும் போடா நாயே என்றனர்
எங்களுக்குள் இப்போது முகதரிசனம் இல்லை.
(பக். 142)
மேலே உள்ள இரு கவிதைகளுக்கும் ஒரு ஒற்றுமையை பார்க்கலாம். “வித்தியாசமான மியாவில்” நண்பரின் மனைவி அழுவது பார்த்ததும் இவரது மனைவியும் அழுகிறாள். அது இயல்பாக நேர்மையாக இருக்கிறது. பாசாங்கு கவிதைசொல்லி பேசத் தொடங்கும் போது தான் ஆரம்பிக்கிறது. அது போல் “சமத்துவத்தில்” இருவரும் மோதிக் கொள்ளும் போது ஒரு சமத்துவம் உள்ளது. உண்மை உள்ளது. ஆனால் அஹிம்சையை வலியுறுத்தி ஒருவர் குறுக்கே நுழையும் போது அவன் தன்னை இருவருக்கும் மேலானவராக நிலை நிறுத்த பார்க்கிறார். அதிகாரத்தை செலுத்துகிறார். அங்கு சமத்துவம் இல்லை. இயல்பெழுச்சி உள்ள வன்முறை, கோபதாபம், வெறுப்பு எங்கிலும் உண்மையில் ஒரு சமத்துவம் உள்ளது. ஆனால் அன்பை போதிக்கும் போது, அறிவைக் கொண்டு சமர் புரியும் போது சமத்துவம் காணாமல் போய் விடுகிறது. அதனால் தான் இலக்கிய பூசல்கள் நேரடியான மோதல்களை விட விரசமாக, அற்பமாக உள்ளன.
முதன்மை நூல் பட்டியல்

சுந்தர ராமசாமி, சுந்தர ராமசாமி கவிதைகள், தொகுப்பாசிரியர். ராஜமார்த்தாண்டன், நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம், 2005.

நன்றி: உயிர்மை, ஜனவரி 2015

No comments: