Friday, January 23, 2015

"அலை பாயுதே”: காதல் திருமணமும் குற்றவுணர்வும்


“அலை பாயுதே நம் ஊரின் காதல் திருமணங்கள் ஏன் எளிதில் முறிகின்றன என்ற கேள்விக்கு ஒரு ஆழமான பதிலை அளிக்கிறது. அது தான் அப்படத்தின் முக்கியத்துவம்.


அப்படம் சொல்லும் காரணம் குற்றவுணர்வு. பெண்களின் குற்றவுணர்வு. அத்துடன் ஆச்சாரமான குடும்பம் எனும் அதிகார கட்டமைப்பினுள் வளரும் பெண்களால் ஒரு சம உரிமை உள்ள காதல் திருமணச் சூழலுள் பொருந்திப் போக முடியாத தத்தளிப்பும் ஒரு காரணம் தான். அப்பா தான் குடும்பத்தின் உச்ச அதிகார பீடமாக இருக்கிறார். அப்பாவை காதல் திருமணத்தின் போது பிரியும் போது அதிகார பீடம் உடைகிறது. அப்போது பெண்கள் நிலைகவிழ்ந்து போகிறார்கள். அதனால் தான் அப்பாவை பிரிந்து காதல் கணவனுடன் போவது அவர்களுக்கு மிகப்பெரிய குழப்பத்தை பிற்பாடு ஏற்படுத்துகிறது.

அதிகார படிநிலைக்குள் வளர்கிறவர்களுக்கு தொடர்ந்து அதிகாரம் தக்க வைக்கப்படுவது முக்கியம். அடிபணிந்தே பழகியவர்களுக்கு அடக்க ஆளில்லாவிட்டால் பெரும் பதற்றம் தோன்றும். அதனாலே அப்பாவைப் போன்று அதிகாரம் காட்டும் கணவன் அமையாத பட்சத்தில் பெண்கள் அடிக்கடி தகராறு பண்ணி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி குடும்பச் சூழலை குலைப்பார்கள். இப்படத்தில் அப்பாவுக்கு அடங்கி, ஆனால் அம்மாவை சுலபமாய் எதிர்த்து பழகுகிற சக்தி திருமணத்துக்கு பின் மென்மையான கணவனை கட்டுப்படுத்தவும் அவன் மீது அதிகாரம் காட்டவும் முயல்கிறாள். திருமணம் கசப்படைவதற்கான சூழலை பல முறை அவளே உருவாக்குகிறாள்.

திருமணத்துக்கு முன்பே அவளுக்கு அது தோல்வியடையும் எனும் பயம் இருக்கிறது. அதனால் தொடர்ந்து அதற்கான நிரூபணங்களை தேடுகிறாள். திருமணமாகி முதல் நாள் காலையிலேயே கணவனுக்கு தான் முக்கியமா தினசரி படிப்பது முக்கியமா என ஒரு அற்ப பிரச்சனையை ஆரம்பிக்கிறாள். தினசரியை பாதி எரித்து அவனுக்கு கொடுக்கிறாள். அவனை மாலையில் வீடு திரும்பும் போது வேண்டுமென்றே வெளியே காக்க வைத்து அவன் கோபப் படும் போது “காதலிக்கும் போது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். இப்போது திருமணமானால் ஏன் முடியாதா?” என கேட்கிறாள். ஓடிப் போய் கல்யாணம் பண்ணி அப்பாவுக்கு துரோகம் பண்ணி விட்டோம் எனும் அவளுடைய குற்றவுணர்வு அவளை தன்னையே தண்டிக்க செய்கிறது. அப்பாவின் மரணம் அவளை மேலும் தடுமாற செய்கிறது. குற்றவுணர்வை உறுதிப் படுத்துகிறது. மரண வீட்டில் அம்மாவிடம் சொல்கிறாள் “நான் ஓடிப் போக நெனச்சப்போ ஏம்மா என் கைகால உடைச்சு வீட்லே போடல? அப்டீன்னா அப்பா இறந்திருக்க மாட்டாரில்ல?”. குடும்ப அதிகாரம் அதை செலுத்துபவர் இல்லாத நிலைமையிலும் பாதிக்கப்படுபவரின் ரூபத்தில் செயல்படும் என்பதை இது காட்டுகிறது. அவளை குற்றம் சாட்ட அப்பா இல்லாத இடத்தில், அம்மா அமைதியாகும் போது அவளே அப்பணியை எடுத்துக் கொள்கிறாள். தன் திருமண உறவை கெடுத்து சீரழித்து அதன் மூலம் சுயதண்டனையை விதிக்கிறாள். மிக நுட்பமான உளவியல் சித்தரிப்பு இது.

சக்தியின் இந்த குழப்பமான மனநிலை படத்தில் ஆரம்பத்தில் அவள் கார்த்திக்கை நிராகரிக்க முயலும் இடங்களில் கூட வெளியாகிறது. காதலை பணக்கார விடலைகளின் விளையாட்டுத்தனமாக, அசட்டு நேர வீணடிப்பாக பார்க்கிறாள். ஒவ்வொரு முறையும் ஏன் காதல் தோற்கும் என்பதற்கான காரணங்களை அவள் கார்த்திக்கிடம் பேசும் போதும் அப்பாவின் குரலில் தான் பேசுகிறாள். அப்பாவாகவே மாறுகிறாள். இந்தியப் பெண்கள் அவ்வாறு தான் சிறுவயதில் இருந்தே காதலுக்கு எதிரான ஆயிரம் காரணங்கள் புகட்டப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள். பிறகு அவர்களே காதலித்தாலும் கூட அதற்கு எதிரான ஆயிரம் காரணங்களை நிரூபிக்க முயன்று கொண்டிருப்பார்கள். அப்படி சாத்தியப்படவில்லை என்றால் தாம் வேலை செய்யும் இடங்களில் உள்ள காதலை முடக்குவார்கள்; தம் பிள்ளைகளின் காதலை எதிர்ப்பார்கள். இந்திய சூழலில் வளர்ந்த பெண்கள் கூட மனதளவில் அப்பா அம்மாவுக்கு அடங்கின சிறுமிகளாகவே நரைகூடின பின்னும் இருக்கிறார்கள்.

ஒரு காட்சியில் சக்தி காத்திக்கிடம் கேட்கிறாள் “எனக்காக குடும்பத்தை விட்டு வந்திட்டே. நாளை இன்னொருத்திக்காக என்னை விட்டுட்டு போக மாட்டேன்னு என்ன நிச்சயம்?”. இவ்வசனம் ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோவலில் இருந்து எடுக்கப்பட்டது. கறுப்பனும் குரூர தோற்றமுள்ளவனுமான ஒத்தெல்லோ வெள்ளைக்காரியும் பேரழகியுமான டெஸ்டிமோனாவை காதலித்து அவள் அப்பாவை எதிர்த்து திருமணம் செய்கிறான். அப்போது அவளது அப்பா அவனிடம் கேட்கிறார் “இன்று எனக்கு துரோகம் பண்ணி உன்னிடம் ஓடி வரும் இவள், நாளை உன்னை விட்டு இன்னொருவனுடம் ஓடிப் போக மாட்டாள் என என்ன நிச்சயம்?”. இந்த கேள்வி ஒத்தெல்லோவின் மனதுக்குள் உழன்று கொண்டே இருக்கிறது. அவன் ஏற்கனவே தாழ்வுணர்வும், சுயபச்சாதாபமும் மிக்கவன். தாழ்வுணர்வு சந்தேகத்தை வளர்க்கிறது. அவள் தன்னை ஏமாற்றுவாள் என்பதற்கான நிரூபணங்களை தேடிக் கொண்டே இருக்கிறாள். ஒரு பொய்யான ஆதாரத்தை தம்பி அவளை கழுத்தை நெரித்து கொல்கிறான். பிறகு உண்மை தெரியவர தற்கொலை பண்ணிக் கொள்கிறான்.


மணிரத்னம் ஒத்தெல்லோவை பெண்ணாக மாற்றி இருக்கிறார். அது மிக பொருத்தம் தான். இந்தியச் சூழலில் பெண் ஒத்தெல்லோக்கள் ஏராளம். 

No comments: