Thursday, January 22, 2015

மதசார்பின்மை: மேலும் ஒரு விவாதம்

அன்புள்ள அபிலாஷ்,
உங்களது மேல்கண்ட பதிவைப் படித்தேன்ஒரு வித்தியாசமான நோக்கு
இந்தியாவில் பெரும்பாண்மையான மதச்சாற்பற்ற விமரிசர்கள் /அறிவுஜீவிகள் பிறப்பால் அல்லது கலாசார ரீதியில் இந்துக்களாக இருப்பதால், உங்கள் வாதம் இந்தியச் சூழலுக்கு பெரும்பாலும் ஒத்ததாக இருக்கலாம்.
ஆனால், அடிப்படையில் உங்கள் வாதப்படி, ஒரு மதத்தைச் சார்ந்தவன் தான் அந்த மதத்தைப் பற்றி விமரிசிக்க முடியும் என்பது ஒரு குறுகலான பார்வை என்றே படுகிறது.  

மதங்களைப் பற்றிய வாதங்களில், பெரும்பாலும் அந்த மதத்தை ஏதோ ஒரு வகையில் (கலாசாரா ரீதியிலோ, பிறப்பு/வளர்ப்பாலோ, கற்றதாலோ)அறிந்தவர்களால் நல்லதொரு விமரிசனப்பார்வையை வைக்க முடியும் என்பது உண்மைஅதே சமயம், ஒரு மதத்தைச் சார்ந்தவன், இன்னொரு மதத்தைப் பற்றிப் பேசும் போது, அவனால் இரண்டு மதங்களையும் ஒப்பு நோக்கி, வெளியிலிருந்து பார்த்து, இன்னும் தர்க்கப்பூர்வமான/புறவயமான விமரிசனங்களை முன் வைக்க முடியும்நம் முதுகில் உள்ள அழுக்கை பிறரால் எப்படி எளிதாகப் பார்க்க முடியுமோ, அது போல.
இந்தப் பார்வையை கொஞ்சம் நீட்டித்துப் பார்த்தால், உண்மையான மதச்சார்பற்றவன் எல்லா மதங்களையும்  விருப்பு/வெறுப்பற்று உற்று நோக்கக் கற்றுக் கொள்கிறான்அவன் மதங்களை பற்றி எழுப்பும் கேள்விகள்/விமரிசனங்கள் மானுடத்திற்கு பொதுவான ஒரு தளத்தில் இருந்து எழுபவைதான் எழுப்பும் கேள்விகளுக்கு, மதம் (அது எந்த மதமாக இருந்தாலும்) என்ன பதில் சொல்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.  
உதாரணத்திற்கு, கிரிஸ்டோஃபர் ஹட்சின்ஸ் எழுதிய "God is not great" புத்தகத்தில் அவர் எல்லா மதங்களைப் - ஆப்ராகமிய மதங்களை  மட்டுமல்ல - பற்றியும் கேள்விகள் எழுப்புகிறார் - இந்து மதம், புத்த மதம், நவீன இயற்கை வழிபாட்டு (Pagan) மதங்களென எதையும் அவர் விட்டு வைப்பதில்லை.   அற்புதமான புத்தகம்.

(
நீங்கள் ஏன் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்கக் கூடாதுஒரே சமயத்தில் எல்லா மதவாதிகளின் அன்பை எதிர்கொள்ளும் சிரமத்தை அடைவீர்கள் என்பதையும் சொல்லி விடுகிறேன்).
அதே போல், இன்னொரு எழுத்தாளர், Karen Armstrong.  பிறப்பால், கத்தோலிக்கர்ஒரு கன்னிகாஸ்திரியாவதற்காக கத்தோலிக்கப் பள்ளியில் பயின்றவர்அவர், இசுலாமிய மதத்தைப் பற்றி, புறவயமான கருத்துக்களைத் தொடர்ந்து முன் வைப்பவர்நல்ல எழுத்தாளரும் கூடஅவர் எழுதிய, "History of God", and "The Battle for God", இரண்டுமே ஆப்ராகிமிய மதங்களைப் பற்றிய நல்ல புத்தகங்கள்தொடர்ந்து அவர் இசுலாமிய மதத்தைப் பற்றிய புத்தகங்களை/விமரிசனங்களை ஆதாரங்களுடன், நுட்பமான மொழியில் எழுதி வருகிறார்.
குதிரை மேல் ஏறி சவாரி செய்வதன் மூலம் ஒரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு போகலாம்அது பயனுள்ளது தான்குதிரையின் அருகிலேயே போகாமலே, ஒரு பார்வையிலேயே, அந்தப் பந்தயக் குதிரையின் தரத்தை நிர்ணயிக்கும் connoiseursஉம் இருக்கிறார்கள் தானே?
அன்புடன்,
ராஜா

அன்புள்ள ராஜா
நீங்கள் கேட்டது முக்கியமான கேள்வி. ஒரு மதத்தை சேர்ந்தவர் இன்னொரு மதத்தை ஆராயலாமா? விமரசனபூரவமாய் கருத்துக்களை சொல்லலாமா? அவர் மதசார்பற்றவராகவும் இருக்கக் கூடாதா? நிச்சயமாய். நீங்களே அதற்கான உதாரணங்களை தந்துள்ளீர்கள்.
ஆனால் நான் என் பதிவில் மதசார்பற்றவர் தன் மதத்தில் இருந்து விலக இயலாது எனும் போது அம்மதத்தின் தத்துவம், வரலாறு, செயல்பாடு இவற்றை மட்டும் சொல்லவில்லை. அம்மதத்தின் மக்களுடனான ஒரு உணர்ச்சிபூர்வமான உறவு, அதன் அரசியலின் விளைவுகளுக்கான பொறுப்புணர்வு ஒரு மதசார்பற்ற நபருக்கு தான் பிறந்த மதத்தை பொறுத்தே இருக்கும். உதாரணமாய் ஒரு இஸ்லாமிய மதசார்பற்றவர் சங் பரிவாரின் செயல்களுக்காய் குற்றவுணர்வு அடைய மாட்டார். பிரச்சனை எந்த மதத்தை சார்ந்திருக்கிறோம் என்பது மட்டுமல்ல, எந்த மத மக்களுடன் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள் என்பது.
 நீங்கள் சொல்லும் பொருளில் காந்தி கூட மதசார்பற்றவர் தான். ஆனால் அவர் தேசப் பிரிவினையின் போது இந்துக்களின் வன்முறைக்காக தான் அதிகம் வருந்தினார்.
இன்னொரு விசயம்: ஒருவர் ஒன்றை நேசிக்கவோ வெறுக்கவோ மட்டுமே சாத்தியம். இடைப்பட்ட நிலை அன்றாட, உணர்ச்சிபூர்வ நிலைப்பாட்டுக்கு சாத்தியமில்லை. இடைப்பட்ட நிலையில் அறிவுஜீவி ஆய்வுகள் பண்ணலாம். செயல்படல் சாத்தியமில்லை. நீங்கள் மதசார்பற்றவராக இருக்கும் பட்சத்திலும் ஒரு மதம் அல்லது மக்கள் தரப்புடன் ஒட்டலுடனே (attached) இருக்கிறீர்கள். ஒட்டாதிருக்கும் பட்சத்தில் (detached) உங்களுக்கு அந்த மதமோ அதன் மக்களோ பற்றி எந்த எண்ணங்களும் இல்லாதிருக்கும். அவர்கள் என்ன செய்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் நம் நாட்டு இந்து மதசார்பற்றவர்கள் ஏன் இந்துத்துவாவை கடுமையாக எதிர்க்கிறார்கள்? இஸ்லாமிய மத சார்பற்றவர்கள் வஹாபியத்தை எதிர்க்கிறார்கள்? ஏன் இது மாற்றி நிகழ்வதில்லை?
இதை வாழ்வின் எந்த நிலைக்கும் பொருத்தலாம். ஏன் சிலரை மட்டும் கடுமையாய் வெறுக்கிறோம்? வேறு சிலரை முழுக்க புறக்கணிக்கிறோம்? நேசிக்க தகுதி உள்ளவர்களை மட்டுமே நம்மால் வெறுக்க முடிகிறது. வாழ்வின் மீதான ஆசை அதிகமாகி, வாழ்வின் மோசமான நிலையை ஏற்க முடியாது போகும் போது தான் தற்கொலை செய்கிறோம். வாழ்வில் ஒட்டாதவர்களால் தற்கொலை பண்ண முடியாது. இப்படியான உறவு தான் மதசார்பற்றவருக்கு அவர்களது மதத்திற்கும் உள்ளது.
நான் இஸ்லாம் அல்லது கிறித்துவம் மீதும் இதே அக்கறை கொள்ளலாம். அப்போது அம்மதம் சம்மந்தப்பட்ட செயல்களும், நம்பிக்கைகளூம், மக்களும் எனக்கு சார்பானதாக தோன்றும். அதற்கு நான் பொறுப்பாவேன். அப்போது நான் கிறித்துவத்தையும் இஸ்லாத்தையும் குற்றம் கூறலாம். அப்படி கிறித்துவத்தை தன் மதமாக வரித்த, ஆனால் மதம் மாறாத, ஒரு நண்பரை எனக்குத் தெரியும். அவர் கிறித்துவத்தை விமர்சிப்பார். அதனால் எரிச்சலடைவார். ஏமாற்றமடைவார். ஆனால் இந்து மதத்தை விமர்சிக்க மாட்டார். இது விநோதம் தான். ஆனால் மனித மனம் அப்படித் தான் இயங்கும்.
மதத்திற்கு வெளியே இருந்து கொண்டு அனைத்து மதங்களையும் ஒரே போல் பார்க்க ஒரு வழி உண்டு. நீங்கள் மதத்தை அவசியமற்ற ஒரு அபத்தமாக பார்க்கிற பகுத்தறிவுவாதியாக இருக்க வேண்டும். பரீக்‌ஷா ஞாநி போல். அவருக்கு மதம் வாழ்வின் ஆழங்களைப் பற்றி காட்டுகிற சேதிகள் புரியாது. அவர் வாழ்க்கையை மிக தட்டையாக ஒன்று கூட்டல் ஒன்று ரெண்டு என பார்க்கிறவர். ஆனால் மதத்தின் மீதும், அதன் ஆன்மீக மன எழுச்சி, தத்துவக் கேள்விகள் பால் தீவிர அக்கறை கொண்டவர்களால் மதத்திற்கு வெளியே இருந்து கொண்டு அதைப் பார்க்க இயலாது. இதனால் தான் மதத்தின் சடங்குகள், வன்முறை, குறுகின மனப்பான்மை பிடிக்காமல் விலகுகிறவர்களும் அதில் இருந்து மற்றொன்றை எதிர்பார்த்து தான் விலகுகிறார்கள். சார்பற்றவர்கள் ஆகிறார்கள். அவர்கள் தம் மதத்தை மாற்றி வடிவமைக்க ஏங்குகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் அந்த மற்றொன்றை மதத்தில் இருந்து தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.
 அனைத்து மதங்களின் ஆன்மீக கேள்விகளும் ஒன்று தானே? அதனால் அனைத்து மதங்களையும் ஒரே போல் பாவித்து அணுகலாமே? மதம் வெறும் தத்துவமும், மதிப்பீடுகளும், விதிமுறைகளும் மட்டும் அல்ல. அது ஒரு கலாச்சாரம். ஒரு தொன்மம். அது மொழி வழி நம் உளவியலின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஏதோ ஒரு மதத்தின் பண்பாட்டு ஆன்மாவை அறிந்து கொண்ட பின் அதுவே உங்கள் தேடலுக்கு பொருத்தமானது. ஓஷோ ஒரு மதமற்ற மதத்தை தோற்றுவிக்க பார்த்தார். ஆனால் அவர் கர்த்தரைப் பற்றி பேசுகையிலும் அங்கே இந்து மத தத்துவ சாரத்தை தேடுவதை கவனிக்கலாம். நீட்சே கர்த்தரை கடுமையாக வெறுத்தார். ஆனால அவர் ஒரு புது மதத்தை கட்டமைக்க முயன்ற போது கர்த்தரின் சாயலில் தான் அதிமனிதனை தோற்றுவித்தார். கர்த்தரில் தான் விரும்பாததை களைந்து ஒரு புது கர்த்தரை தோற்றுவித்தார். நீட்சேயின் தத்துவத்தை நீங்கள் கிறித்துவ தத்துவ/இறையியல் மரபில் வைத்து தான் விளங்கிக் கொள்ள முடியும். இந்திய வைதிக மரபில் வைத்தால் அதற்கு பொருள் இராது. இத்தனைக்கும் நீட்சே கிறித்துவத்தை துறந்தவர். மதசார்பற்றவர். பௌத்தம், இஸ்லாம், இந்து மதத்தில் பற்று கொண்டவர். ஆனால் அவர் உருவாக்கிய தத்துவம் கிறுத்துவத்தின் நீட்சி தான். அப்படித் தான் சுயதேடல் கொண்ட ஒரு ஆழமான மனிதன் இருக்க இயலும். அவனது தேடலுக்கு பொருத்தமான பாதையாக அவன் தோன்றிய பண்பாட்டின் தொன்மமும், பண்பாடும் மதத்தின் வடிவாக அவனுக்கு இருக்கும். எப்படி சில விதைகள் சில குறிப்பிட்ட மண்களில் சீதோஷ்ண நிலைகளில் தான் தோன்றுமே அதே போல் நம் மனமும் அது முளைக்க வேண்டிய மண்ணில் தான் முளைக்கும்.
இது குறுகின சிந்தனையா எனக் கேட்டால் மனிதன் தன் மொழியாலும் பண்பாட்டாலும் குறுகினவன் தானே! ஆனால் குறுகின உடன் அவன் வாமனனைப் போல் தன் காலடியால் வானையும் மண்ணையும் அளக்கக் கூடியவனாகிறான்.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்

அன்புள்ள அபிலாஷ்:
உங்களது நீண்ட பதில், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்தியது.    இப்போதைக்கு என் மனதில் படுவதைச் சொல்கிறேன்.
மதச்சார்பற்றவர் என்று நீங்கள் சொன்னதை நான் secular என்ற ஆங்கில வார்த்தையின் இணையான வார்த்தையாகக் கருதுகிறேன்தம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் (காலையில் எழுந்து குளிப்பதிலிருந்து, இரவு தூங்கப்போகும் வரை) மதத்தின் வழிகாட்டுதலை ஒட்டியே நடத்தும் மதவாதிகள் கோட்டின் ஒரு எல்லை என்றால், மதச் சார்பற்றவர்கள் அந்தக் கோட்டின் இன்னொரு எல்லை, என்றே கருதி வந்திருக்கிறேன்பெரும்பாலான மக்கள், இந்த இரு எல்லைகளுக்கிடையே தான் இருக்கிறார்கள்

உலகில் முற்றிலும் புதிதாக எதுவும் உருவாவதில்லைஒன்றின் தொடராகத் தான் இன்னொன்று உருவாகின்றனமனிதனின் அடிப்படைத் தேவைகள் மாறாதவைஅந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட உருவகங்கள் ஒன்றையொன்று பல அம்சங்களில் ஒத்திருப்பதில் ஆச்சரியமும் இல்லைஎந்த விஷயங்களில் வேறுபடுகின்றன என்பதே பரிணாம வளர்ச்சிஇந்த ரீதியில் பண்பாடுகளும், தொன்மங்களும் நம்மை ஏதோ ஒரு வகையில் பாதிக்கத் தான் செய்கின்றன என்பது உண்மையேஅந்தத் தொன்மங்களும், பண்பாடுகளும் தொடர்ந்து மாறிக் கொண்டே தான் இருக்கின்றன - மெதுவாகவேயானாலும். அந்தப் பாதிப்புகளின் தாக்கத்தை உணர்ந்து (ஓரளவிற்காவது), "என் மதம் இப்படிச் சொல்கிறது; அதனால் இதைச் செய்கிறேன்", என்று நின்று விடாமல், தொடர்ந்து நகர முடியும், நகர்ந்து கொண்டே தான் இருக்கிறோம் என்று தான் நினைக்கிறேன்.

உதாரணமாக, நான் சின்ன வயதில், எங்கள் குல தெய்வ கோயிலுக்குச் சென்ற போது, என்னுள் எழுந்த ஒரு அமானுஷ்ய அனுபவம் எனக்கின்றும் நினைவில் இருக்கிறதுஅந்த இடம் ( வீரப்பூர் ) எனக்கு ஒரு மர்மம் நிறைந்த, அதி வீரர்கள் உயிரிழந்த கடவுள்கள் வாழும் நிலமாகத் தான் பட்டதுகிலியும், கிளர்ச்சியும் ஒருங்கே இருந்த அனுபவம்பின்னால், அதைப் பற்றி யோசிக்கும் போது, அதன் காரணம், "நான் சின்ன வயதில், வேப்ப மரத்தடியில் ஒவ்வொரு வருடமும், உடுக்கடித்து சொன்ன பொன்னர்/சங்கர் கதையை, அரை/குறை தூக்கத்தில் கேட்டுக் கொண்டிருந்ததால் தானோ என்று எண்ணத் தோன்றுகிறதுஅந்த நிலை கிரக்கத்தை உருவாக்கும், விரும்பக்கூடிய நிலைஆனால், வாழ்வில் அங்கேயே நின்று விடாமல் நகர்ந்ததும் முக்கியமே.

உங்கள் பார்வையில்,

"
அது ஒரு கலாச்சாரம். ஒரு தொன்மம். அது மொழி வழி நம் உளவியலின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஏதோ ஒரு மதத்தின் பண்பாட்டு ஆன்மாவை அறிந்து கொண்ட பின் அதுவே உங்கள் தேடலுக்கு பொருத்தமானது." என்று சொல்கிறீர்கள். இது பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.

முற்றிலும் மதச்சார்பற்ற நிலை என்பது நடைமுறையில் சாத்தியப்படாத இலட்சியவாத நிலையாஅப்படி இருப்பவர்களால் வாழ்க்கையைத் தட்டையாகத் தான் பார்க்க முடியுமா? என்ற உங்கள் கூற்றுகளைப் பற்றி நான் இன்னும் சிந்திக்க வேண்டும்.

இந்த உரையாடலைத் துவக்க என்னை உந்தியது, எது என்று பார்த்தால், மதச்சார்பற்றவர்களை இந்து மதச்சார்பற்றவர், இசுலாமிய மதச்சார்பற்றவர் போன்ற சொற்றடர்கள் மூலம் அடையாளப்படுத்துவது அளித்த நெருடலே. வேறொன்றுமில்லைஇதன் மூலம், உங்களுடன் உரையாடுவது மிகவும் சந்தோஷம்.


அன்புடன்,
ராஜாNo comments: