Monday, January 19, 2015

“மாதொரு பாகன்” சர்ச்சை: புனைவும் நிஜமும்நேற்று நான் பங்கேற்ற சன் நியூஸ் விவாத மேடையில் பேசின டான் அசோக்கிடமும் இன்னும் சிலரிடமும் “மாதொரு பாகன்” அபுனைவு என்கிற மாதிரியான குழப்பத்தை பார்க்க முடிந்தது. அது திருச்செங்கோட்டின் பெயரை பயன்படுத்துகிறது. அப்பகுதியில் உள்ள ஒரு நம்பிக்கையை, சடங்கை பற்றினது என நாவலின் முன்னுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. சமூகவியல் ஆய்வை நாவலாக எழுதுவதற்காய் நிதி வாங்கி உருவாக்கப்பட்டது என்பது, ஆகையால் அது அபுனைவு, கட்டுரை நூலில் பெண்களை ஆதாரமின்றி இழிவுபடுத்திவிட்டார் இவர்களின் வாதங்கள்
.
 இறுதியான கருத்து பற்றி முதலில் ஒரு விசயம். நிதி வாங்கி எழுதினால் அது ஏதோ நம் ஊரை வேற்றாளுக்கு காசு வாங்கி காட்டிக் கொடுக்கிற காரியம் என்பதாக பார்க்கப்படுகிறது. இது சுத்த அபத்தம். எழுத்தில் காட்டிக் கொடுப்பது, துரோகம் என்றெல்லாம் இல்லை. அது உணர்வுகளை புண்படுத்துகிறதா, உங்களுக்கு தடவித் தருகிறதா என்பதும் முக்கியமில்லை. இரண்டே தகுதிகள் தான் ஒரு படைப்புக்கு இருக்க வேண்டும்.
1)   உண்மையை பேச வேண்டும். ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு உண்மை கோணம் இருக்கலாம். அதை நம்பும்படியாய் ஆழமாய் முன்வைக்க வேண்டும்.
2)   Story of O போன்ற நாவல்கள் செய்வது போல் மனிதனை கொச்சைப்படுத்த, இழிவுபடுத்தக் கூடாது. இழிவை அப்படியே காட்டலாம். ஆனால் இல்லாத இழிவை உருவாக்கக் கூடாது. மாற்று ஆணின் மூலமாய் குழந்தைபேறு இழிவு என நீங்கள் கருதினால் அது உங்கள் பிரச்சனை. அந்த வழக்கத்தை ஒரு புனைவு மீள்கட்டமைக்கலாம். அதன் மூலம் மனித செயல்பாடு பற்றி ஆய்வு செய்யலாம். ஒரு பெண் அவ்வாறு செய்வதில் எந்த குற்றமும் இல்லை. அவளுக்கு அதில் பரிபூரண உரிமை உள்ளது. சொல்லப் போனால் இது ஒரு குடும்ப அமைப்பு மீறல். அதனால் தான் இவ்விசயத்தில் ஆண்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது. இது குறித்து போகன் சங்கர் முகநூலில் எழுதியது போல, நாவல் பெண்களை இழிவு படுத்தவில்லை. ஆனால் குடும்ப அமைப்பை மீறும் வழமை நமது கடந்த காலத்திலும் இருந்துள்ளதை சொல்கிறது. அதைத் தான் நம்மால் தாங்க முடியவில்லை. குடும்பம் தமிழர்களின் புனிதப் பசு.

சரி பிரதான விசயத்துக்கு வருகிறேன். புனைவா அபுனைவா?
நாவல் என்றாலே புனைவு தான். நிதி பெற்றாலும் இல்லாவிட்டாலும். புனைவு ஒரு செய்தியின் மேல் ஏற்றி வைக்கப்பட்ட கற்பனை. அத்துடன் அச்செய்தி அதன் நம்பகத்தன்மையை நடைமுறையில் இழக்கும். பிறகு அதன் நம்பகத்தன்மை கற்பனையில் வாசகனுக்குள் மட்டுமே இருக்கும். வெளியே நடப்பில் அதற்கு மதிப்பில்லை.
உதாரணமாய், “பொன்னியின் செல்வன்” நாவல் வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக கொண்டு சோழர் வரலாற்றை பேசுகிறது. அதனால் அது வரலாற்று நூல் என கூற முடியாது. புனைவு தான். நாவலில் ஆதித்த கரிகாலனுக்கு அவனது சகோதரியான நந்தினி மேல் காம இச்சை இருந்ததாய் சித்தரிக்கப்படுகிறது. கரிகாலன் அவ்வாறு உறவை விரும்பினார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? பார்ப்பனரான கல்கி தமிழர்களை கேவலப்படுத்த அவ்வாறு எழுதினார் எனக் கூறி நாம் “பொன்னியின் செல்வனை” எரிக்கலாமா? கூடாது. ஏனென்றால் அது உண்மை என நம்பினால் கல்கியே அதை கட்டுரையாக எழுதி இருப்பார். அவர் நாவலாக எழுதும் போதே வாழ்க்கையில் நடந்ததை அல்ல நடக்க சாத்தியமுள்ளதை பேசத் தான் முயல்கிறார் என ஆகிறது.
அந்த இடத்தில் கரிகாலனை வைத்துப் பார்க்க வேண்டியதில்லை. அம்மா, மகன், சகோதர சகோதரிகளுக்கிடையே இச்சை ஏற்படுவது பிறழ்வு என்றாலும் அது உண்மை தான். நம் மனதின் அடியாழத்தில் இந்த இச்சைகள் தூங்குகின்றன. இது குறித்த விரிவான ஆய்வுகள் நடந்துள்ளன. இந்த இச்சை நம்மை அறியாது வெளிப்படுமானால் என்ன ஆகும் என பரிசோதிக்க கல்கி விரும்புகிறார். நாவலில் அது ஆழகாக சித்தரிக்கப்படவில்லை என்றாலும் தொட்டுக் காட்டி இருக்கிறார்.
கல்கி எழுதுவது நடப்பியல் உண்மையா என்றால் இல்லை. ஆனால் உண்மைக்கான சாத்தியமா என்றால் ஆமாம். உண்மையின் ஒரே நிரூபணமான தரப்பை அபுனைவு முன்வைக்கிறது. புனைவு நிரூபிக்க முடியாத உண்மையின் எண்ணற்ற தரப்புகளை காட்டுகிறது. புனைவை கண்டு உண்மை என குழப்பிக் கொண்டவர்கள் தான் எம்.ஜி.ஆரையும் ரஜினியையும் முதல்வராகவும் சூப்பர் ஸ்டாராகவும் ஆக்கினார்கள். அவர்களே தான் சுஜாதா முதல் ரசூல், மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன் வரை வேட்டையாடினார்கள்.
கயிறைப் பார்த்து பாம்பென்று பயந்து கூவினால் அது பாம்பின் தவறல்ல. நீங்கள் இருட்டில் இருப்பது தான் தவறு. வெளிச்சத்திற்கு வாருங்கள். அப்போது தரவு சார் உண்மையும், உண்மை போல் தோற்றமளிப்பதும் வேறுவேறு என புரியும். ஒன்று நடப்பியல் வாழ்வுக்கானது, இன்னொரு தத்துவ, உளவியல், கலாச்சார ஆய்வுக்கானது.
இறுதியாய் ஒரு கேள்வி. ஏன் நாம் புனைவைக் கண்டு இவ்வளவு கோபப்படுகிறோம். இந்த சாமி பிள்ளை விவகாரத்தை பற்றி ஆய்வுபூர்வமான கட்டுரை நூல்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக எழுதப்பட்டு வந்துள்ளனவே. அவற்றை ஏன் பொருட்படுத்தாமல் புனைவை மட்டும் பொருட்படுத்துகிறோம்? பிரபாகரன் பற்றின விமர்சன கட்டுரைகளை விட புலி ஆதரவாளர்களுக்கு ஏன் ஷோபா சக்தியின் கதைகள் இவ்வளவு எரிச்சலை கோபத்தை உண்டு பண்ணுகின்றன?

உண்மையை விட புனைவு ஏன் இவ்வளவு உண்மையானதாக தோன்றுகிறது? இதற்கான விடையை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

1 comment:

Senthilvelan Ekambaram said...

கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டது என்று கூப்பாடு போடும் அனைத்து எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இதற்கு பதில் சொல்லட்டும் :

கற்பனைக்கதை என்றால் நாவல் முழுக்க கற்பனையாக இருக்கவேண்டும். ஆனால், ஒரு ஊர், கோவில், அங்கு இன்றுவரை நடைபெற்று வரும் திருவிழா பற்றிய நிஜமான செய்திகளை எழுதிவிட்டு, கூடவே அங்கு நடைபெறாத (பெண்களை இழிவுபடுத்தும்) செயல்களை நேரில் கண்டதுபோல் எழுதியது மட்டும் கற்பனை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? இதைப் படிக்கும் மற்ற ஊர்க்காரர்களுக்கு திருச்செங்கோடு பற்றி மனதில் என்ன தோன்றும் ?

12.01.2015 தேதியிட்ட ‘தி இந்து’- ஆங்கில நாளிதழில் திரு. கோலப்பன் அவர்களது பேட்டியில் இது பற்றி விளக்கம் கேட்டபோது, பெருமாள் முருகன் இதற்கு சரித்திர சான்றுகள் இல்லை என்றும் செவி வழியாக கேள்விப்பட்டது என்று மழுப்பலாக பதிலளித்துள்ளர். முதலில் ‘கற்பனை’ பின்னர் ‘ஆதாரமில்லா செவிவழி செய்தி’ – இது சரியா ?

இவர், இதேபோல் வேறு ஊரைப் பற்றி – உதாரணத்திற்கு ஸ்ரீரங்கம், மதுரை, திருநெல்வேலி, திருவாரூர், வேளாங்கண்ணி, நாகூர் – இங்கு நடக்கும் கோவில் திருவிழாக்கள் பற்றி கொச்சைப்படுத்தி எழுதியிருந்தால் அந்த ஊர் மக்களோ அல்லது சமூகத்தினரோ வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பார்களா?

இந்தப் பிரச்சினை திருச்செங்கோடு, கோவில் திருவிழா மற்றும் அங்கு வாழும் அனைத்து சமுதாய மக்களின் உணர்வுகள் சம்மந்தப்பட்டது. இதில் எங்கே அரசியல், சாதி, சமயம் நுழைந்தது?

பெருமாள் முருகனை ஆதரிக்கும் அறிவு ஜீவிகள் முதலில் இதற்கு விடையளித்துவிட்டு பின்னர் திருச்செங்கோடு மக்களையோ அல்லது அரசையோ விமர்சனம் செய்யலாம்.