Sunday, January 18, 2015

பெருமாள் முருகன் சர்ச்சை: யார் துரோகி?


இன்று நான் பங்கேற்ற சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சியில் சினிமா தணிக்கை, சர்ச்சை, பெருமாள் முருகன் பிரச்சனை ஆகியவை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பெருமாள் முருகன் ஏன் தனக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்தும் தொடர்ந்து போராடாமல் பின்வாங்கினார் எனக் கேட்டார். இது குறித்து ஒரு விவாதம் இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. தஸ்லிமா நஸ்ரின் வேறு பெருமாள் முருகன் தேவையில்லாமல் பயந்து பின்வாங்கியதை கண்டித்து டிவிட்டரில் எழுதியதாக ஒரு சேதி பரவி உள்ளது. இது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. எழுதப் போவதில்லை எனும் அவரது அறிக்கை தோல்வியை ஒப்புக் கொள்ளும் செயல்பாடா? அது தன் ஆதரவு அமைப்புகளுக்கு அவர் செய்த துரோகமா? மேலோட்டமாய் இந்த பின்வாங்கல் ஒரு துரோகம் போல் தோன்றினாலும் அடிப்படையில் பிழையான வாதம் இது.

இரண்டு விதமான போராட்டங்கள் உள்ளன. தனிப்பட்ட போராட்டம், பொதுமக்கள் நலனுக்கான போராட்டம். தனிப்பட்ட போராட்டங்களின் போது வெளிஆதரவு இருந்தாலும் கூட அதிலிருந்து பின்வாங்கும், அதை பாதியில் கைவிடும் உரிமை தனிநபருக்கு உண்டு. அது துரோகம் அல்ல. ஆனால் பொது பிரச்சனைக்கான போராட்டத்தில் அப்படி அல்ல. முள்ளிவாய்க்காலின் போதான கலைஞரின் மௌனம் ஒரு துரோகம். ஏனென்றால் அதில் ஒரு பொது பிரச்சனையும் பொது கொள்கை நிலைப்பாடும் சம்மந்தப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட போராட்டங்கள் அப்படி அல்ல. ஒரு பெண் தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்காக போராடுகிறாள் எனக் கொள்வோம். எப்போது வேண்டுமானாலும் தன் போராட்டத்தை அவள் கைவிடலாம். தனிப்பட்ட நெருக்கடி, இயலாமை காரணமாய் வழக்கை வாபஸ் வாங்கலாம். சமரசமாக போகலாம். அப்போது அதுவரை அவரை ஆதரித்து வந்த பெண்ணிய அமைப்புகள் அவரை துரோகி என அழைக்க முடியாது. ஏனென்றால் அவருடையது ஒரு தனிப்பட்ட போராட்டம். என்னதான் பொது ஆதரவு இருந்தாலும் அது பொதுப் போராட்டம் அல்ல. ஐரோம் ஷர்மிள ஒருமுறை தான் காதலித்து மணம் புரிந்து குடும்பமாக வாழ விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவர் தன் உண்ணாவிரதத்தை முடிக்க விடாதபடி அவரது ஆதரவாளர்கள் சிலர் தடுப்பதாக கூறுகிறார்கள். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எப்படி ஒரு தனிநபர் போராட்டம் பொது அமைப்புகளால் ஹைஜேக் செய்யப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். பெருமாள் முருகனின் நாவல் சர்ச்சையில் அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்க முயலும் போது நாமும் அவரது தனிப்பட்ட பிரச்சனையை ஒரு பொது இலக்குக்காக ஹைஜேக் பண்ணவே முயல்கிறோம். அது நியாயம் அல்ல.

துரோகத்தை நாம் இப்படி வரையறுத்துக் கொள்ளலாம். ஒருவரது பின்வாங்கல் பிறரை பாதிக்குமானால் அது துரோகம். ஆனால் பெருமாள் முருகன் விசயத்தில் அவரே பாதிக்கப்படுபவராக இருக்கிறார். பிறர் அல்ல. அவரது முடிவு அவரைத் தான் பாதிக்கிறது. பிறரை அல்ல. பாதிக்கப்படுபவர் யார் என்பது தான் துரோகத்தை தீர்மானிக்கிறது. பெருமாள் முருகன் தனக்குத் தானே துரோகம் செய்ய இயலாது. அதனால் அவர் துரோகி அல்ல.

3 comments:

Pandian Gee said...

சொந்த ஊர் பெண்களை இழிவுபடுத்தி எழுதியதை தாங்கிப்பிடிக்க வேண்டுமென்கிறீர்களா. ஏன் இப்படி குழப்புகிறீர்கள்
வில்லவன்கோதை

Anbu said...

“பிள்ளையில்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாயிருந்தால் அப்போது அந்த ஸ்திரீ தன் கணவர், மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி ஆகியவர்களுடன் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டு பண்ண வேண்டியது”(மனு9:59)
“கணவன் புத்திரனில்லாமல் இறந்து போனால் மனையாள் கணவனின் தோத்திரமுள்ள ஒரு புருஷனிடத்தில் விதிப்படி புத்திரனைப் பெற்றுக் கொண்டு, அப்புத்திரனுக்குக் கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்துவிட வேண்டும்”(மனு:9:190)
மேற்கண்ட வசனங்கள் மநுதர்மத்தில் சொல்லப்பட்டவை. பெருமாள்முருகனின் மாதொருபாகனை எதிர்ப்பவர்கள் - இதை என்ன செய்யப்போகிறார்கள்.... மநுதர்மத்தையும் தீயிட்டுக் கொளுத்த முன்வருவார்களா - நண்பர்களே?

Pandian Gee said...

இன்றைய சூழலில் தனிமனிதன் ஏற்கத்தகாதது எதையுமே தீயிட்டு கொளுத்தவேண்டாம். தவிர்த்துவிடலாம். வில்லவன் கோதை