Thursday, January 15, 2015

ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள்


ஈச்சர வாரியாரின் “ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள்” என்னை மிகவும் நெகிழச் செய்த புத்தகம். தமிழில் குளச்சல். மு யூசுப் மொழியாக்கியிருக்கிறார். காலச்சுவடு பிரசுரித்திருக்கிறது. ஒரு சிறப்பான முன்னுரையை சுகுமாரன் எழுதியிருக்கிறார். கேரளாவில் கடந்த முப்பது வருடங்களில் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய, கருணாகரனின் ஆட்சி கலைய செய்த ராஜன் கொலை வழக்கை பற்றிய புத்தகம் இது.
பி.கிருஷ்ணனின் “புலிநகக்கொன்றை” நாவல் படித்தவர்களுக்கு ராஜன் பரிச்சயமானவராக இருப்பார். ராஜன் எனும் பொறியியல் கல்லூரி மாணவர் 1976இல் நெருக்கடி நிலை பிரகடனமாகியிருந்த வேளையில் காவல் துறையால் நக்சலைட் என தவறாக கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அவர் கொல்லப்படுகிறார். பி.கிருஷ்ணனின் நாவலில் ஒரு பாத்திரம் இது போல் நல்சலைட் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு போலிசால் என்கவுண்டர் செய்யப்படும். அதனால் ஒரு குடும்பம் சிதைந்து போகும்
.
விசாரணை முகாமில் உருட்டு என ஒரு சித்திரவதை முறை உண்டு. இதைப் பற்றி “திருடன் மணியன்பிள்ளையில்” வரும். ஒருவரை பெஞ்சில் படுக்க வைத்து கை கால்களை கட்டி விடுவார்கள். பிறகு ஒரு வழுவழுப்பான உலக்கையால் தொடையில் இருந்து முழங்கால் வரை அழுத்தி உருட்டுவார்கள். இந்த வதையின் விளைவாக எலும்பையும் சதையையும் பிணைத்திருக்கும் மென் தசைகள் கிழிந்து விடும். கிட்டத்தட்ட எலும்பு சதையில் இருந்து விடுபட்டு விடும். இது மிக கொடூரமான தாஙக் முடியாத வலியை ஏற்படுத்தும். எலும்புக்கும் தசைக்கும் இடையே ஊசி போட்டுள்ளவர்கள் இவ்வலியின் ஒரு சிறு பகுதியை உணர முடியும். நான் சிகிச்சையின் போது அனுபவித்திருக்கிறேன். வலியின் உச்சத்தில் வலியே தெரியாது. வாய் மட்டும் ஓவென கத்திக் கொண்டிருக்கும். இதை தினம் தினம் பன்மடங்கு அனுபவத்தவரின் கதி என்னவாகும் யோசியுங்கள். இந்த வதைக்கு பின் ஒருவரால் அன்றாட வாழ்வில் இயல்பாக இயங்கவே முடியாது என்கிறார் மணியன் பிள்ளை.
ராஜன் பிடிக்கப்படுவதற்கு முன் ஒரு காவல்நிலையத்தை நக்ச்லைட்டுகள் தாக்கி ஒரு துப்பாக்கியை எடுத்து போயிருக்கிறார்கள். யாரையும் கொல்லவில்லை. துப்பாக்கி களவு போனது. அவ்வளவு தான். போலீசின் மரண வேட்டை தொடங்கியது. தாக்கியவர்களில் ராஜன் எனும் பெயரில் ஒருவன் உள்ளதாய் தகவல் கிடைக்க, போலிசார் அந்த பகுதியில் உள்ள அத்தனை ராஜன்களையும் கொண்டு வந்து துப்பாக்கி எங்கே எனக் கேட்டு சித்திரவதை செய்கின்றனர். வலி தாளாமல் ராஜன் தான் எடுத்ததாய் பொய் சொல்கிறான். அவனை துப்பாக்கியை காட்டும்படி கேட்க அவன் தனக்கு தெரியாது என்கிறான். அப்போது புலிக்கோடன் எனும் காவல்துறை ஆய்வாளர் அவன் வயிற்றில் மிதிக்க அவன் இறந்து போகிறான். பிறகு போலீசார் பிணத்தை ஒரு அத்துவானக்காட்டுக்கு எடுத்துப் போய் எரித்து உருத்தெரியாமல் அழிக்கிறார்கள்.
ராஜனின் அப்பா தான் ஈச்சரவாரியார். அவர் ஒரு கல்லூரி ஆசிரியர். இந்த புத்தகம் அவர் தன் மகனை கண்டடைய போராடிய அனுபவங்களையும், மகனை ஒப்படைக்க கோரி அவர் தொடுத்த நீதிமன்ற வழக்கையும் விவரிக்கிறது. அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த கருணாகரனும், முதலமைச்சராக இருந்த அச்சுதமேனனும் ராஜன் விசயத்தில் உதவ மறுக்கிறார்கள். அன்றைய நிலை எப்படி என்றால் ஒரு காவல்துறை அதிகாரியால் சாலையில் போகிற ஒருவரை சுட்டுக் கொல்ல முடியும். அதை அவர் நியாயப்படுத்த தேவையில்லை. ஒட்டுமொத்த அதிகாரமும் மத்தியிலும் காவல்துறையிடமும் இருந்தது. அச்சுதமேனன் காங்கிரஸ் பிடியில் இருந்தார். கருணாகரன் நக்சல்களை ஒழித்துக் கட்டும் வெறியில் ராஜன் போன்ற அப்பாவிகளில் உயிரிழப்பை பொருட்படுத்த வேண்டாம் எனும் நிலைப்பாட்டில் இருந்தார். நெருக்கடி நிலையின் போது வழக்கு தொடுக்க கூட முடியாது. அதனால் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்த பின் தான் வாரியார் தன் மகனுக்கான வழக்கு தொடுக்கிறார். அதாவது ராஜன் இறந்து ஒன்றரை வருடங்களுக்கு பிறகு. முதல் விசாரணையில் வழக்கு ஓரளவுக்கு சாதகமாக போக, நீதிமன்றம் அரசு தரப்பில் மூன்று பேருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்குகிறது. பின்னர் அப்பீலின் போது அவர்கள் விடுதலையாகிறார்கள். அரசு பயங்கரவாதத்தை பொறுத்தமட்டில் அதை சந்தேகம்ற நிரூபித்து தண்டனை வாக்கித் தருவது மிக மிக சிரமம். முக்கியமாய் சாட்சிகள், ஆதாரங்கள் வலுவாக இருக்காது. அச்சூழலில் நீதிபதிகள் குஜ்ஹாவைப் போல் சற்று மன உறுதியுடன் செயல்பட்டால் மட்டும் தான் அரசை கண்டிக்கவோ தண்டிக்கவோ முடியும். ஆனால் ராஜன் வழக்கு மட்டுமல்ல, ஒரு கேரள மத்திய அமைச்சர் சம்மந்தப்பட்ட சூரிய நெல்லி கற்பழிப்பு வழக்கிலும் கூட நீதிபதிகள் போதுமான மன உறுதி மற்றும் நீதியுணர்வுடன் செயல்படவில்லை. ராஜனின் உடல் கிடைக்கவில்லை. ராஜன் காணாமல் போய் விட்டதாய் போலீஸ் அறிவித்தது. இதைக் காட்டி சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பித்தனர். ஆனால் விசாரணை முகாமில் ராஜன் இருந்ததற்கும், வதைக்கப்பட்டதற்கும் சாட்சிகள் இருந்தன. ஆனால் தண்டனை வழங்க அது போதுமானதாக இருக்கவில்லை போலும்.
இந்த புத்தகம் படிக்கையில் இன்னொரு கேள்வி எழுகிறது. ஏன் இவ்வளவு மனிதத்தன்மையற்ற வன்முறையை மனித உடல் மீது காவல்துறை செலுத்துகிறது? ஒரு துப்பாக்கி என்பது என்ன விலைமதிப்பற்ற பொருளா? அல்ல. அதற்காக மனிதர்களை வதைத்து கொல்ல வேண்டுமா? காவல்துறைக்கு துப்பாக்கி அரச அதிகாரத்தின் குறியீடு. காவல்துறைக்கு தெரிந்த அதிகாரத்தின் மொழி வன்முறை தான். காவல்துறையின் வன்முறை பொதுவாக அமைதியை நிலைநாட்டுவதற்காக என நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் இது ஒரு பொய். எந்த பெரிய கலவரங்களையும் நம் காவல்துறை தடுத்ததில்லை. ஒரு ஆயிரம் பேர் சேர்ந்து கலவரம் பண்ணினால் காவல்துறை வேடிக்கை தான் பார்க்கும். மாவோயிஸ்டுகளை ஏன் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை? ஏனென்றால் காவல் அமைப்பு அதற்காக உருவாக்கப்படவில்லை.
அடுத்து காவல்துறையின் வன்முறை குற்றங்களை விசாரிக்க என நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் குற்றங்கள் நடக்கையிலே அப்பகுதி மக்களுக்கு குற்றவாளி யார் என தெரிந்து விடுகிறது. காவல்துறைக்கும் தான். காவல்துறையின் வேலை நிரூபணங்களை தயார் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பது. அதாவது பட்டவர்த்தமான குற்றத்தை பற்றி ஆவணங்களை ஏதோ தாமே கண்டுபிடித்தது போல் தயாரிப்பது. தண்டனைகளால் குற்றங்கள் குறைந்ததாயும் எந்த நிச்சயமும் இல்லை.
தம் வேலை குற்றங்களை தடுத்து, விசாரித்து, தண்டிப்பது அல்ல என காவல்துறையும் தெரிந்து தான் வைத்திருக்கிறது. அவர்கள் அதனால் தான் குற்றவாளிகளுடன் கைகோர்த்துக் கொள்கிறார்கள். அவர்களின் இருப்புக்கு குற்றங்கள் தேவையாக உள்ளன. ஒரு உதாரணம் சொல்கிறேன். இரவு வேளையில் மதுக்கடைக்கு அருகில் உள்ள சாலையில் போலீசார் காத்து நிற்பர். ஊதச் சொல்லி அபராதம் விதிப்பர். இதே போலீசார் பாருக்கு சென்று அங்கு வாகனத்துடன் செல்பவர்கள் அதை எடுக்காமல் தடுக்கலாமே? ஒரு பாரை ஒட்டிய சாலையில் நான்கு போலிசார் நின்று அபராத வேலையை செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் பாருக்கு சென்று தடுத்தால் இந்த குற்றமே நடக்காதே! ஏன் குற்றத்தை நடக்க விட்டு அதற்கு அபாராதம் வேறு விதிக்கிறார்கள்? ஆக காவல்துறைக்கு குற்றம் தேவையாக உள்ளது.
நம் அரசாங்கத்தில் ஒரு மென்மையான அதிகாரம் விதிமுறைகள், வரி மூலம் செயல்படுகிறது. அந்த அதிகாரத்தின் ஒரு வன்மையான வடிவமாக காவல்துறை இருக்கிறது. மக்களை மறைமுகமாக அச்சுறுத்தி வைக்க ஒரு அரசு அணிந்து கொள்ளும் பூச்சாண்டி முகமூடியாக அது இருக்கிறது. உண்மையில் ஒரு ஜனநாயக அமைப்பில் காவல்துறை இருக்க கூடாது. ஆனால் உலகு முழுக்க இருக்கிறது. அதற்கான காரணம் வன்முறையின் அதிகாரம் மக்கள் மத்தியிலும் இருக்கிறது என்பது. அரசின் அதிகாரமும் மக்களின் வன்முறையும் கொதி நிலையை எட்டாமல் அமைதியாக நீறுபூப்பதற்கு காவல்துறையின் இருப்பு அவசியமாகிறது. நக்சல்கள், மாவோயிஸ்டுகளின் தாக்குதல், பல்வேறு ஒழுக்கமீறல்கள் மக்கள் வன்முறையின் முகம். அப்போது அரச வன்முறையின் முகம் இன்னும் கோரமாக வெளிப்படும். அரச வன்முறை அப்பாவி உடல்கள் மீதான வதையாக தன்னை அரங்கேற்றும். காவல்துறைக்கு யாரையும் கொன்று எதையும் கண்டுபிடிப்பது நோக்கமல்ல. மக்களுக்கு கடுமையான வலியை தருவதன் வழியாக அது தன்னை மீண்டும் மீண்டும் நிரூபிக்க நினைக்கிறது. பிறகு மக்களின் வன்முறை முகமும் அரசின் முகமும் மறைகின்றன. மீண்டும் அமைதி. தீவிரவாத தடுப்பு, நக்சல்பாரி ஒடுக்குதல் எனும் பெயரில் நம் நாட்டில் ஏராளமான அப்பாவி மக்கள் வதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு அல்லது சிறையில் வாடுகிற அபத்தத்தை நாம் வேறு எப்படியும் விளக்க முடியாது.

நூலின் இறுதிப் பத்தியில் வாரியார் இப்படிச் சொல்கிறார். வெளியே கடும் மழையில் என் மகன் நின்று கொண்டிருக்கிறான். என் வீட்டுக்குள் நுழைய முடியாமல் அவன் நின்று கொண்டே இருக்கிறான். நம்மை மனம் உடைந்து அழ வைக்கும் எந்த கவிதைக்கும் நிகரான வரிகள் இவை.  

No comments: