Thursday, January 1, 2015

ரசிகன் வெளியீடு


இன்று கவிக்கோ மன்றம் அரங்கில் நடந்த வெளியீட்டில் “ரசிகன்” நாவலை வெளியீட்டு பேசின அழகிய பெரியவன் அது இவ்வருடம் வெளியாகும் சிறந்த நாவல்களில் ஒன்று எனக் கூறினார். எனக்கு மகிழ்ச்சியாகவும் கூச்சமாகவும் இருந்தது. புத்தகத்தின் நிறைகுறைகளை சுட்டிக் காட்டி அழகாக அவர் பேசினது நிறைவாக இருந்தது.
 நிகழ்ச்சியில் புத்தகம் வெளியாகும் ஒவ்வொரு எழுத்தாளனிடம் இரண்டு கேள்விகளை கேட்டது ஒரு நல்ல சேர்க்கையாக இருந்தது. அது நிகழ்ச்சியை கலகலப்பாக்கி புதுப்பித்தது. என்னிடம் தொகுப்பாளினி “உங்கள் வாசகர்கள் யார்?” எனக் கேட்டார். “என் வாசகர்கள் யார் என எனக்கு உண்மையிலேயே தெரியாது” என்றேன். எனக்கு அப்படியான குழப்பம் எப்போதுமே உண்டு. வாசகர்கள் அவ்வாறு தொகுக்க முடியாத அடையாளம் கொண்டவர்கள் தாம். வாசகர் வட்டம் அமைத்து அவர்களை கார்ப்பரேட் சாமியார்களின் சீடர்கள் போல் பழக்கி ஒரு தனிகுணம் கொண்டவர்களாக மாற்றலாம். ஆனால் எப்படி ஒரு காலத்தில் உண்மையான வாசகன் விலகிப் போய் இன்னொரு அடையாளம் பெற்று விடுவான்.

 என் புத்தகத்தை அழகாக வடிவமைத்திருந்தார்கள். குறிப்பாக ஒவ்வொரு அத்தியாயம் துவங்கும் முன்பும் முகமூடி சித்திரம் ஒன்றை லோகோவாக மேலே அமைத்திருந்தது ஒரு தனி நளினத்தை புத்தகத்துக்கு கொடுக்கிறது. இந்த நூலைப் பற்றி உணர்ச்சிவசப்படக் கூடாது, அதை விலகி நின்று வேறொன்றாக பார்க்க வேண்டும் என எண்ணியபடியே இருந்தேன். அதனால் அரங்கில் இருந்து வெளியான பின் தான் முதன்முதலாய் திறந்தே பார்த்தேன். ஒரு புத்தகத்தை திருத்தும் போது பல முறை படிக்கிறோம். பிழைத்திருத்துநர் பிரதியாக, அட்டையிடாத நூலாக மீண்டும் படிக்கிறோம். ஆனால் அப்போதெல்லாம் ஏற்படாத ஒரு மன எழுச்சி, தவிப்பு, பறத்தல் உணர்வு நூலை முழுமையான அச்சு வடிவில் பார்க்கையில், தனியாக அதை புரட்டுகையில், அதை பையில் வைத்துக் கொண்டு முதன்முறையாய் பயணிக்கையில் ஏற்படுகிறது. நாவல் எழுதி முடிக்கிற போது கிடைக்காத ஒரு முழுமையான நிறைவு எப்படி அச்சான பிரதியை வைத்திருக்கையில் கிடைக்கிறது என்பது ஒரு விநோதம். புதிதாய் பிறந்த ஒரு சிசுவை கையில் ஏந்தியபடி பால்கனியில் நிலாவை பார்த்து நிற்பது போல் ஒரு பூரிப்பு தோன்றுகிறது.

நிகழ்ச்சியில் டி.டி ராமகிருஷ்ணன் எனும் மலையாள நாவலாசிரியரை சந்தித்தேன். அவரது பிரான்ஸிஸ் இட்டிக்குரா எனும் பின்நவீனத்துவ, எதிர்க்கலாச்சார வணிக இலக்கிய கலவை நாவலின் தமிழாக்கம் இன்று வெளியிடப்பட்டது. போன வருடத்தில் மலையாளத்தில் மிகப்பெரிய வணிக வெற்றி பெற்று லட்சக்கணக்கில் விற்ற நாவல் அது. தமிழில் ஆயிரம் பிரதிகள் விற்கிற எழுத்தாளர்களும், ஆயிரம் லைக் வாங்குகிற பதிவர்களும் காட்டும் பந்தா அம்மனிதரிடம் துளியும் இல்லை. “எனக்கு இலக்கியம் எல்லாம் தெரியாது, தமிழக எழுத்தாளர்கள் வழி தான் சமகால இலக்கிய போக்குகளை உணர்ந்தேன்” என பேசுகிறார். அவருக்குள் இலக்கியம் மீது ஒரு வியப்பும் மதிப்பும் உள்ளது. தன்னை மிகச்சரியாக மதிப்பிட்டு வைத்திருக்கிறார். அதனால் தளும்பாமல் இருக்கிறார். இன்னொரு அர்த்தத்தில் பொதுவாக வணிக எழுத்தாளர்கள் அடக்கமானவர்களாக, தன்னை உணர்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள். இலக்கிய எழுத்தாளனுக்கும் இது போல் ஒரு அமைதியும் பணிவும் கிடைத்தால் நன்றாக இருக்கும். 

No comments: