Thursday, January 8, 2015

பெண்களைப் பற்றி மட்டுமான கதை (பகுதி 6)

அவள் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சொன்னாள்அன்பு காட்டுவது கூட ஒரு குற்றம் தானே. ரொம்ப அன்பிருந்தால் அப்படியே அழிந்து போக வேண்டும். இல்லாவிட்டால் பாதியிலே தப்பிக்க வேண்டும். என்னைப் போல்”.

நாங்கள் காலை பதினோரு மணி வரை லும்பினி பூங்கா, பிர்லா மந்திர் என சுற்றி விட்டு ஹுசேன் சாகர் ஏரியில் படகில் போனோம். அவளுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த இடங்கள். எனக்கு சுற்றுலாத் தலங்களில் ஆர்வமில்லை. ஆனால் தன்னை ஒரு சுற்றுலாப் பயணியாக கற்பனை பண்ணிக் கொண்டு அங்கு திரிய அவளுக்கு விருப்பமாக இருந்தது. படகில் இருக்கையில் ஏரியின் நடுவில் உள்ள பிரம்மாண்டமான புத்தர் சிலையின் நிழல் நீரில் அலையாடுவது பார்த்ததும் எனக்கு ஏன் மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தது.
நாங்கள் வீடு வந்த போது விநோத் அலுவலகம் கிளம்பி இருந்தான். சுகுணா பெங்களூரில் தம் அம்மா வீட்டுக்கு முந்தின நாள் போயிருந்தாள். கொஞ்ச நேரத்தில் அனுவும் அலுவலகம் போன பின் நான் தூங்கிப் போனேன். திடீரென்று பள்ளிப்படிக்கும் காலத்தில் நடப்பது போல கனவு வந்தது. பரீட்சை எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி இருக்கும் மாணவர்க்ளை என்னை பார்த்து பார்த்து கேலியாய் சிரிக்கிறார்கள். ஏனென புரியவில்லை. பிறகு நான் விடைத்தாளை கொடுக்க எழுந்திருக்க பார்த்தால் முடியவில்லை. இடுப்புக் கீழே நான் எந்த உடையும் போடவில்லை. அசிங்கத்தில் அப்படியே குன்றிப் போகிறேன். சட்டென்று விழித்து அடச்சே என்று பிரிட்ஜில் இருந்து குளிர்நீர் குடித்துக் கொண்டிருந்த போது வாசல் மணி அடித்தது. அனு. பாதி விடுப்பெடுத்து வந்திருந்தாள்.
மதிய உணவு அவள் தான் சமைத்தாள். அட்டகாசமான சாப்பாடு. பிறகு கொஞ்சம் வெளிநாட்டு விஸ்கி. அப்படியே பேசிப் பேசிஇரவெல்லாம் அவள் என் அறையில் அமர்ந்து குடித்தும் சாப்பிட்டும் கொண்டிருந்தாள். இப்படியான சுதந்திரம் எல்லாம் ஒரு பெண்ணுக்கு திருமணத்தினால் எப்படி கிடைக்காமல் போகிறது என்று ஒரு குட்டி பிரசங்கம் நடத்தினேன்.
மறுநாள் காலையில் விழித்ததும் அவளைக் காணோம். எதிரே ஒரு நாற்காலியில் விநோத் அமர்ந்திருந்தான். நான் விழிக்க காத்திருந்தது போல் என் பொருட்களை எடுத்து பையில் திணித்து வாயில் கதவருகே கொண்டு வைத்தான். எனக்கு கொஞ்ச நேரம் ஒன்றுமே விளங்கவில்லை. பல்தேய்ந்து மூஞ்சி அலம்பி கடுப்பமாய் ஒரு காபி குடித்து விட்டதும் அவன் என்னை அழைத்து தன் அக்காவுக்கும் மாமாவுக்கும் சண்டையை கிட்டத்தட்ட சரி பண்ணி விட்டதாயும் அவர்கள் சீக்கிரமே சேர்ந்து விட வாய்ப்பிருப்பதாகவும் அதை நான் அங்கு இருந்தால் அதைக் கெடுத்து விடுவேன் என்றும் சொன்னான். சுருக்கமாக என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப் போகிறான்.
நான் கோபத்தில் நான் கட்டியிருந்த அவனது லுங்கியை அவிழ்த்து அங்கேயே அவனிடம் கொடுத்து விட்டு என் படுக்கை மீது கிடந்த ஜீன்ஸை போட்டு அவசரமாய் கிளம்பினேன். பையை தூக்கி வெளியே வந்து அவனை நோக்கி சில வசைச் சொற்களைக் கூவினேன். நடந்தே அங்கிருந்து பிரதான சாலைக்கு வந்தேன்.
பேருந்து நிலையத்தை அடைந்த போது தான் பேண்ட் இடுப்பில் லூசாக இருப்பதும் அதை நான் அடிக்கடி சரி செய்து கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். என்ன கண்றாவிடா இது என்று இடுப்பு பெல்டை இறுக்கப் பார்த்தால் ஏதோ வித்தியாசமாக இடுப்பே பெரிசாக இருந்தது. “அட இது என்னதில்லையே, அனுவுடையதாச்சே!”
தொலைவில் வினோத் என்னை நோக்கி கத்தியபடி அரை ஓட்டத்தில் வந்து கொண்டிருந்தான். அவன் தோளில் ஒரு ஜீன்ஸ் தொங்கியது. பயத்தில் முதலில் வந்த ஏதோ ஒரு ஊருக்கு போகிற பேருந்தில் தொத்திக் கொண்டேன்.
ரொம்ப நேரமாக படபடப்பாக இருந்தது. பேருந்தில் ஒரு தொப்பை தள்ளிய ஆசாமி என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அடிக்கடி குனிந்து யோசித்து மீண்டும் என்னை பார்த்து ஏதோ சரி பார்ப்பது போல் பார்த்தார். அவருக்கு பெரிய வழுக்கை. அதில் நீண்ட நாமம். ஜெமினி கணேசன் மீசை. அடர் சிவப்பு சட்டையை இறுக்கமாய் மாட்டி இருந்தார். என்னை நோக்கி கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். நான் தலையாட்டினேன். ஒரு தேசலான தலையாட்டல். என் பெயரை சொல்லி நீங்க எழுத்தாளர் தானே என்றார். மீண்டும் தயக்கமாய் தலையாட்டி உம் என்றேன். உடனே கையை பிடித்துக் கொண்டார். மகிழ்ச்சியாய் குலுக்கினார். என்னுடைய தீவிர விசிறி என்றார். பல டிவி நிகழ்ச்சிகளில் என்னை பார்த்துள்ளதாய் சொன்னார். நான் என் வாசகர்களை அழைத்துக் கொண்டு சிக்கன், தயிர்சாதம் மற்றும் பலவித மதுவகைகளையும் எடுத்துக் கொண்டு ஏதேனும் ஏரியில் பயணம் போவேன். ஆளாளுக்கு சாப்பிட்ட இடத்தை எச்சில் பண்ணி அலம்பல் பண்ணி விட்டு கடைசியில் என்னை ஏதேனும் உன்னதமாய் இலக்கியம் பற்றி பேசச் சொல்லி டார்ச்சர் பண்ணுவார்கள். நான் பேச ஆரம்பித்ததும் ஆளாளுக்கு அசந்து தூங்குவார்கள். ஆனால் அதற்கு முன் நான் பேசுவதை அவர்கள் ஆர்வமாய் உட்கார்ந்து கேட்பது போல் புகைப்படம் எடுத்துக் கொள்ள தவற மாட்டார்கள். இப்படியான என் சந்திப்புகளில் கலந்து கொள்ள அவர் ஆசைப்பட்டதாகவும் ஆனால் ஒரு போதும் நிறைவேறவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். ஆனால் கடவுளே இப்போது என்னை அவர் அருகில் பேருந்தில் சேர்ந்து பயணிக்க வாய்ப்பு கொடுத்துள்ளதாய் கண்நிரம்பினார். சரி போகட்டும் என விட்டு விட்டேன்.
அவரைப் பற்றி விசாரித்தேன். சொந்தமாய் ஐந்து எஸ்டேட்டுகள் ஊட்டியிலும் கர்நாடகாவிலும் உள்ளதாயும் ஹைதராபாதில் ரியல் எஸ்டேட் பண்ணுவதாயும் கூறினார். சரி, நல்லது, என் வாசகராய் இருக்க தகுதி கொண்டவர் தான். ஆனால் பயங்கர எளிமையாம். பஸ்ஸில் தான் போவாராம். நான் அதற்கு நேர்மாறானவன். முப்பது வருடங்களுக்கு பின் இப்போது தான் மீண்டும் பஸ்ஸில் போகிறேன் என்றேன். அவர் வாயில் கை வைத்து வியந்தார். பஸ்ஸில் போவது ஒரு மத்திய வர்க்க சராசரி மனநிலை, அதை ஒழிக்க வேண்டும் என்றேன். அவர் தலையாட்டினார். நான் பேட்டா ஷூவின் மத்தியவர்க்க சராசரித்தனம் பற்றி எழுதியுள்ளதை படித்துள்ளதாய் பரவசத்துடன் கூறி மீண்டும் பூம்பூம் மாடு போல் தலையாட்டினார்.
நிறுத்தாமல் பேசிக் கொண்டே வந்தார். அவர் மனைவி பயங்கர் டார்ச்சர் கேஸ். அவருக்கு கள்ள உறவுகள் உள்ளதாய் சந்தேகித்து உளைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பாளாம். அவளை உளவியல் மருத்துவரிடம் காட்டினாராம். ஆனாலும் சரியாகவில்லை. விவாகரத்து பண்ணிக் கொண்டார்கள். இப்போது தனியாக ஜாலியாக இருக்கிறார். அவருடன் ரெகுலராய் உறவு கொள்ள சில திருமணமான பெண்கள் அவர்களாகவே விரும்பி வருகிறார்கள். தேவையானதுஎல்லாம்கிடைக்கிறது என கண்களை ஒருமாதிரி பண்ணி சொன்னார். எனக்கே பொறாமையாக இருந்தது. தாராள செக்ஸ் பற்றி இவ்வளவு எழுதுகிறேன். எனக்கு எல்லாம் எழுத்தில் மட்டும் தான் நடக்கிறது.

 அவருக்கு தனது தற்போதைய வாழ்க்கை பற்றி நிறைய குற்றவுணர்வு இருந்தது. இப்போது தொடர்பில் உள்ள பெண்கள் தன் மீது ஆசையில் இல்லாமல் வேறு காரணங்களுக்காக தன்னிடம் வருவதாய் குற்றச்சாட்டினார். அவர் வீட்டில் சென்று அவருடன் நான் தங்க வேண்டும் என கேட்டார். அவர் சொன்னதை வைத்துக் கேட்க கிளுகிளுப்பான அழைப்பாக இருந்தது. உம் உம் என்றேன். “சரி பெண்கள் எப்படிப்பட்டவங்க என்கிறதை பத்தி நான் இப்ப ஒரு கதை சொல்றேன், கேளுங்கஎன்று ஆரம்பித்தேன்.

No comments: