Thursday, January 8, 2015

பெண்களைப் பற்றி மட்டுமான கதை (பகுதி 5)

ஒருமுறை அவருக்கு உடம்பு முடியாமல் போய் படுத்த படுக்கையானார். நான் அப்போது உள்ளூர அவர் இறந்து போவதை விரும்பினேன். அவருக்காக ஓடியாடி கவனித்து பார்த்துக் கொண்டிருந்தாலும் உள்ளூர இதயம் அவரது மரணத்தை எதிர்பார்ப்பதை உணர்ந்தேன். அதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. ரொம்ப கொடுமையான விசயம் இது. ஒருவரை ரொம்ப நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் அவர் செத்துப் போக வேண்டும் என உள்ளூர ஆசைப்படுகிறோம். இந்த எண்ணம் தோன்றிய பின் அவரை பழைய படி அணுக உறவு கொள்ள என்னால் சுத்தமாக இயலவில்லை. இயல்பாக ஒரு பார்வை பார்க்கும் போதே இதயத்தில் சுருக்கென்று வலி தோன்றும்.”

கொஞ்ச நாட்கள் போனதும் எனக்கு வேறொன்று தோன்றியது. எனக்கு என் வயதாகி வரும் உடல் மீதுள்ள ஆற்றாமையை அவர் மீது வெறுப்பாக காட்டுகிறேனோ என்று. எப்படியோ அவர் மீது முன்னெப்போதையும் விட அப்படி கசப்பை கொட்ட துவங்கினேன். அவர் மீது கோபப்பட எனக்கு ஆயிரம் சந்தர்பங்கள் காரணங்கள் கிடைத்தன. அவரும் போகப் போன என்னிடம் ஆத்திரம் கொள்ளவும் என்னை அடித்து துன்புறுத்தவும் தொடங்கினார். எங்களிடையேயான உறவு அப்படியே ஒட்டுமொத்தமாய் மாறிப் போனது. ஒருநாள் நான் அவர் அழைக்க அழைக்க கேட்காமல் வரவேற்பறையில் அமர்ந்து நகம் வெட்டிக் கொண்டிருந்தேன். தண்ணீரை கொதிக்க கொதிக்க என் காலில் கொண்டு வந்து கொட்டினார்.”
அப்போது தான் அவளது இடது முழங்கால் முழுக்க கரும் தடம் இருந்ததை கவனித்தேன். இத்தனை நாள் எப்படி பார்க்காமல் விட்டேன்? ஒருவேளை இன்றெனக்கு காட்டுவதற்காக முக்கால் பேண்ட் போட்டு வந்திருக்கிறாளோ?
அவர் அப்படியெல்லாம் செய்யக் கூடியவரல்ல. ஆனால் என்னுடைய கசப்பு தாங்காமல் அவரையும் மெல்ல மெல்ல அப்படி மாற்றியிருந்தேன். அல்லது அவருக்கும் என் மீதுள்ள வெறுப்பு ஒருநாள் பட்டென்று பொறி தட்டினாற் போல் புரிய வந்திருக்கும், எனக்கு நேர்ந்தது போல. எப்படியோ, அந்த சம்பவத்தோடு வீட்டை விட்டு போட்ட துணியோடு இங்கே தம்பி வீட்டு வந்து விட்டேன்.”
உங்களுக்குத் தெரியுமா, என் கணவருடன் சண்டைகள் உச்சத்தில் இருந்த போது அலுவலகத்தில் என சில கள்ள உறவுகள் கூட ஏற்பட்டன. அது கூட ஆசைக்காக அல்ல. என்னையே நான் சிதைத்துக் கொள்ள, அழுக்குப் படுத்திக் கொள்ளும் பொருட்டு. நமக்கு பயங்கரமாய் கோபம் வரும் போது இப்படி தேடித் தேடி நம்மையே காயப்படுத்துகிறோம் இல்லையே. அதை விடுங்கள், இந்த உறவுகளில் எதுவும் திருப்தி தரவில்லை. எதிலும் இச்சையோ அன்போ ஆதரவோ துளியும் தரத் தோன்றவில்லை, எதிர்பார்க்கவும் இல்லை. பிறகு அவற்றையும் ஒவ்வொன்றாய் துண்டித்தேன். இதையெல்லாம் ஏன் உங்களிடம் சொல்கிறேன் தெரியுமா?”
ம்ஹும்
நீங்கள் அந்த பெண்ணிடம் நடந்து கொண்டதில் ஒரு நேர்மை இருந்தது. அது தகாததாய் அறமற்றதாய் இருந்தாலும் கூட. இப்போது உங்கள் இடத்தில் நான் இருந்தால் அப்படித் தான் நடந்து கொண்டுருப்பேன் எனத் தோணுகிறது. ஏன் எனத் தெரியவில்லை. ஆனால் அப்படித் தான் தோணுகிறது
ஹா ஹா அதனால் தான் என் வாசகர்கள் என்னை…”
வேண்டாம் திரும்பவும் ஆரம்பிக்காதீர்கள். உங்களுக்கு வாகர்கள் இருக்கிறார்களா அல்லது அதெல்லாம் சுத்தமாக உங்கள் கற்பனை மட்டுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது
எனக்கு எவ்வளவு தான் கோபம் வந்தாலும் …. அடக்கிக் கொண்டேன்.
ஆனால் ஒன்று. என்னதான் பெரிய பிரச்சனைகள் மாற்றங்கள் வந்தாலும் பெண்கள் சுலபமாக வெளிவந்து விடுகிறீர்கள். உன் கணவன் இந்நேரம் மறுகி மறுகி செத்து சுண்ணாம்பாகிக் கொண்டிருப்பார். நீங்கள் ஜாலியாக ஊர் சுற்றுவது, சாப்பிடுவது, ஷாப்பிங் என கொண்டாடுகிறீர்கள்.”
எதற்கு உட்கார்ந்து அழ வேண்டும்? இப்போது இன்னும் நிம்மதியாக இருக்கிறேன். இத்தனைக் காலம் உள்ளுக்குள் புழுங்கியதற்கு காரணம் நான் அவரை வெறுக்கிறேன் என்று அறியாதது தான். இப்போது பாருங்கள், என் வாழ்க்கையின் இரண்டாம் டீனேஜ் பருவம் துவங்கி விட்டதாகவே உணர்கிறேன். முதன்முதலாக என் மொத்த வாழ்க்கைக்கும் நானே இனி பொறுப்பு. கார் ஓட்டுவதில் இருந்து பணத்தை இன்வெஸ்ட் செய்வது வரை நானே பார்த்து பார்த்து சொந்தமாக செய்கிறேன். நானே தப்பு செய்து அதன் பலனையும் அனுபவிக்கிறேன். ஆம் ஸோ ஹேப்பி எபௌட் இட். ஸோ ரிலீவ்ட் இன் பாக்ட். ஒரு குழந்தையை தத்தெடுக்க போகிறேன். கல்யாணத்தின் போதென்றால் அவர் ஒத்துக்கவே மாட்டார். இனி யார் தயவும் தேவையில்லை
சரி அதை விடு. நான் வேறு ஒரு கதை சொல்றேன். பெண்கள் எவ்வளவு சுயநலவாதிகள்னு உனக்கு அதைக் கேட்டாலே புரியும்
உம்
குணசேகர்னு ஒரு ரெண்டு பேர் இருந்தாங்க.”
வாட் ஒரே பேரில ரெண்டு பேரா?”
ஆமா ஒருத்தன் பேரு குணா. இன்னொருத்தன் சேகர். ஒரே வேலையை ரெண்டா பகிர்ந்து போட்டு பண்ணுவாங்க. இவன் தோசை வார்த்தா அவன் சட்னி அரைப்பான், இவன் துணி துவைச்சா அவன் காய போடுவான். இவன் படுக்கை விரிச்சா அவன் தூங்குவான். அவன் நகம் வளர்த்தா இவன் வெட்டி விடுவான். ரெண்டு பேரும் பேராசிரியர்கள்.வகுப்புக்கும் சேர்ந்து தான் போவாங்க. இவன் நோட்ஸை வச்சு அவன் வகுப்பில பேசுவான். திடீர்னு பேச்சை நிப்பாட்டினா விட்ட இடத்துல இருந்து அவன் பேசுவான்.. எங்கப் போனாலும் சேர்ந்தே சுத்துவாங்க, எதையும் சேர்ந்தே செய்வாங்க. கடைசியில ரெண்டு பேரும் ஒரே பெண்ணை காதலிச்சாங்க.”
அவள் பேரு சுகுணா. இவளோடு ரெட்டை பேராசிரியர்கள் சேர்ந்து வாழத் தொடங்கினாங்க.”
பிறகு ரெண்டு பேருக்குள்ளும் மனஸ்தாபம் வந்து அவளுக்காக சண்டை போட்டாங்களா?”
அதான் இல்லை. மூணு பேரும் சுமூகமா ரொம்ப வருடங்கள் சேர்ந்தே வாழ்ந்தாங்க. ஒரு குழந்தையும் பிறந்திச்சு, அது தன்னோட குழந்தைன்னு குணா சொல்லிக்கிட்டான். சேகரும் மறுக்கவில்லை. ஆனால் பிற்பாடு ஒரு ஒருநாள் சுகுணா சேகரோட சேர்ந்து தனியா வேறு ஊருக்கு வேலை வாங்கி போய் விட்டாள்
அப்போ குணா?”
அங்கே தான் ட்விஸ்டு. குணாவை அவங்க சேர்த்துக்கல. அவன் தொடர்ந்து சண்டை போட்ட போது அவங்க அவனுக்கு எதிரா வழக்கு தொடுத்தாங்க. அதாவது அவனுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அவனுக்கு மனநலம் இல்லை, பைத்தியம் அப்படீன்னு வழக்கில சொல்லி இருந்தாங்க, இப்போ குணாவுக்கு தான் சுகுணாவோட கணவன்னு நிரூபிக்கவோ தான் அவங்களோட தான் இத்தனை ஆண்டுகளா இருந்தேன்னு காட்டவோ எந்த ஆதாரமும் இல்லை. அவனுக்கு ஒருநாள் தன்னந்தனியா நடுக்காட்டில கொண்டு வந்து விட்ட மாதிரி ஆயிடுச்சு. என்ன பண்றதுன்னே தெரியல. அவன் அவங்க கூட தான் இருந்தான்கிறதுக்கு ஒரே ஒரு சின்ன ஆதாரம் கிடைச்சா போதும்னு தேடினான். அப்படித் தான் ஒருநாள் என்னைத் தேடி வந்தான்.”
நான் அப்போது ஒரு நிறுவனத்தில் சில மாதங்களா வேலை பார்த்து வந்தேன். நான் வாழ்க்கையில பார்த்த ஒரே வேலையும் அது தான். அந்த நிறுவனம் ஒரு பெரிய நவீன தமிழ் மாநாடு நடத்தியது. அதில குணா, சேகர், ரெண்டு பேரும் பங்கெடுக்க வந்திருந்தாங்க. சுகுணாவும் கூட வந்திருந்தா. எங்க பத்திரிகை நிர்வாகம் தான் அவங்களுக்கு தங்கிறதுக்கு ஓட்டல் அறை ஏற்பாடு செய்தது. அந்த ஓட்டல் அறைக்கு கட்டணம் செலுத்தின ரசீது கிடைக்குமா எனக் கேட்கத் தான் என்னைத் தேடி அன்னைக்கு குணா வந்திருந்தான். அந்த ரசீதை வச்சு நீதிமன்றத்தில குழந்தை தன்னோடதுன்னு நிரூபிக்க முடியும்னு அவன் நம்பினான். ஆனால் கேஸ் தோத்துப் போச்சு. அது வேற விசயம். அவன் நெலைமை பார்க்கவே ரொம்ப மோசமா இருந்துது. குளிச்சு வாரங்கள் இருக்கும். அழுக்குத் தாடி, அழுக்கு வேட்டி, குழி விழிந்த கண்கள், சாப்பாடே இல்லாமல் வெறும் சாராயத்தில் ஓடும் தேகம். அவனை உரசிக் கொளுத்தி விட்டால் பற்றிக் கொள்ளும், அப்படி உடமெல்லாம் ரத்தத்துக்கு பதில் வெறும் ஸ்பிரிட் தான். பேச்சு ஒரே குழறலாக இருந்தது. அவனை முன்பு முற்றிலும் வேறொருவனாக பார்த்திருக்கிறேன். அன்று சீரழிந்து குற்றுயிராக இருந்தான். அவன் உயிரோடு இருந்ததே அந்த ரசீதுக்காகத் தான் போலிருந்தது.

பிறகு நான் அவனைப் பார்க்கவே இல்லை. அவன் என்ன குற்றம் செய்தான் சொல்? குடும்பம், குழந்தை எல்லாவற்றையும் இழந்து நிராதரவாய் நிற்பதற்கு.”

No comments: