Thursday, January 8, 2015

பெண்களைப் பற்றி மட்டுமான கதை (பகுதி 4)

இல்லை என் கணவர் ரொம்ப மென்மையானவர், கண்ணியமானவர். ஒழுக்கம் நியாயம் இதையெல்லாம் ஆழமாய் நம்பி செயல்படுகிற வகையறா அவர்
எனக்குத் தெரிந்த விவாகரத்து ஆகிறவர்கள் கணவனை பழிப்பார்கள். நீ ஏதோ சீரியலில் வரும் நல்ல மனைவி போல பேசுகிறாய்

அவள் க்ளுக்கென்று சிரித்து விட்டு தொடர்ந்தாள்நிஜமாகவே என் கணவர் ரொம்ப நல்லவர் தான்.”
சரி புரிகிறது. நீ என் வகை. உனக்கு கெட்டவர்கள், கெட்ட காரியங்கள் தான் முழுதிருப்தி தரும். ஸோ உன் கணவரின் அம்மாஞ்சித்தனம் நல்லபிள்ளைத்தனம் ஒரு கட்டத்தில் ரொம்ப போரடித்து விட்டது. பிரிந்து விட்டாய்
ஏன் சார் எங்கேயாவது மனைவிக்கு கணவன் நல்லவனாய் இருப்பது போரடிக்குமா?”
 “சரி புரியல, கிவ் அப்.” இருகைகளையும் சரணாகதியாய் தூக்கினேன்.
அனு சொன்னாள், “எனக்கு இதை யாரிடமாவது சொல்ல வேண்டும் போல அரிக்கிறது. ரொம்ப நாளாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரே பிரச்சனை கேட்கிற யாரும் என்னை நம்ப மாட்டார்கள், அறிவுரை கூறுவார்கள் என்பது. உங்களைப் பார்த்தால் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. விநோத் அந்த கதையை சொன்ன பிறகு எனக்கு அந்த எண்ணம் உறுதிப்பட்டது
அதான் எனக்கு பெண்களைப் புரிந்து கொள்ளவே தெரியாது என்று விட்டாயே. இதை மட்டும் தமிழ்நாட்டில் என் வாசகர்கள் கேட்டார்கள் என்றால் அங்கே பெரும் கலவரமே வெடிக்கும். கொதித்து போய் விடுவார்கள். என் வாசகர்களைப் பற்றி உனக்குத் தெரியும் இல்லையா?”
இப்படியெல்லாம் எதுக்கெடுத்தாலும் என் வாசகர் படை ரசிகர் கூட்டம்ன்னு கட்டபொம்மன் வசனம் பேசுவீங்க என்று கூட விநோத் சொன்னான். உங்க ரசிகர்களில பாதி பேர் உங்களை திட்டி எதனாச்சும் எழுதுவாங்கன்னும், மிச்ச பாதி பேர் அவங்க எழுதிறத படிச்சுட்டு திரும்ப திட்டுவாங்கன்னும் கேள்விப்பட்டிருக்கேன். அதனாலத்தான் அவங்களே பொதுவா உங்க புக்ஸ் எதுவும் படிக்கிறதில்லியா?”
எனக்கு எவ்வளவு தான் கோபம் வந்தாலும் அழகான பெண்களை மட்டும் கொல்லத் தோன்றாது. குறிப்பாக ரொம்ப பக்கத்தில் கழுத்தை நெரிக்கிற வாகில் இருந்தாலும்.
சரி கூல் டவுன். ஆனாலும் உங்களால என்னை புரிஞ்சுக்க முடியும்னு தோணிச்சு
ஏன்?”
அதை கடைசியில சொல்றேன். ஏன் என் கணவனை விவாகரத்து பண்றேன்னு தெரியணுமில்ல?”
அவர் உங்களை விவாகரத்து பண்ணலையா?”
இல்லை நான் தான் initiator. என்னால தான் அவர் கூட தொடர்ந்து வாழ முடியல
ஒகெ. ஏன்?”
ஒரு சின்ன வளைவில் ஒடித்து திருப்பியதில் ஒரு சின்ன பையன் பயந்து சைக்கிளை கீழே போட்டு மறுபக்கமாய் சாய்ந்து விழுந்தான். கியர் மாற்றி முன்னே பாய ஒரு சோன்பப்பிடி தள்ளு வண்டிக்காரன் எதிரே வந்து விழுந்தான். இந்த குழப்படி எல்லாம் மாறி சற்று தூரம் வந்ததும் அவள் சொன்னாள்.
எங்களுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப நாளாய் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருந்தது. அவர் என் காரியத்தில் ரொம்ப புரிதலோடு நடந்து கொள்வார். நிறைய சுதந்திரம் தருவார். எனக்கு குழந்தைப் பெற்றுக் கொள்ள பயம் இருந்தது. அதனாலே செக்ஸை தள்ளிப் போட்டுக் கொண்டு வருவேன். அவர் ரொம்ப இறங்கி வந்து கருத்தடை சாதனங்கள் பயன்படுத்த ஒத்துக் கொண்டார். ஆனால் எனக்கு அதிலும் குற்றவுணர்வு இருந்தது. விளைவாக நாங்கள் வருடத்துக்கு ஒன்றிரண்டு வாரங்கள் தவிர மீத நாட்கள் சகோதர சகோதரி போலத் தான் வாழ்ந்து வந்தோம். அந்த விதிவிலக்குகளினால் கூட நான் கருத்தரிக்க வில்லை
குழந்தை இல்லாதது உங்களுக்குள் கசப்பை ஏற்படுத்தியதா?”

ச்சே. அவர் குழந்தை இல்லாவிட்டால் கூட பரவாயில்லை என்றார். அந்தளவுக்கு நல்லவர். இது தான் எனக்கு சொல்லப்போனால் மனதுக்கு அதிக கஷ்டம் தந்தது. அப்புறம் நான் அவரை மெல்ல மெல்ல வெறுக்க ஆரம்பித்தேன். எங்களுக்குள் அதுவரை ஆவேசமான காதல் ஒன்றும் இல்லை தான். அவர் என்னை கல்யாணம் பண்ணும் போதே முப்பத்தைந்து தாண்டியிருந்தார். ஆனால் எங்களுக்குள் ஒரு அபாரமான ஒத்திசைவு, அணுக்கம், மென்மையான அன்பு கூட இருந்தது. நன்றாக ஓடும் எந்திரத்தின் இரு பாகங்கள் போல எனலாம். நான் ஒருவர் ஒருவருக்கு தேவையாக இருந்தோம். இச்சை கடந்த ஒரு பரிவும் ஈடுபாடும் ஒட்டுதலும் எங்களிடையே இருந்தது. குறிப்பாக அவருக்கு என் மீது அளவு கடந்த பாசம். ஆனாலும் ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் இந்த தோற்றத்தை தக்க வைக்க முடியவில்லை. வெறுத்து விட்டது. இனியும் அவருடன் இருந்தால் என்னையே நான் வெறுக்க நேரிடும் எனத் தோன்றியது.”

No comments: