Thursday, January 8, 2015

பெண்களைப் பற்றி மட்டுமான கதை (பகுதி 3)

விநோத் இருந்தால் வீட்டைச் சுற்றி நாலு தெருக்கள், கண்டோண்ட்மெண்ட் சாலை அங்கிருந்து டிரங்க் ரோடு இப்படி வந்து திரும்பி விடுவார்கள். ஆனால் அதற்கே சாலை ஏதோ மந்திரக் கம்பளம் போல பறக்கும். ஒருநாள் விநோத் அனுவின் சின்ன வயது பற்றி சொன்னான். அவளுக்கு சின்ன வயதில் ஆண்களின் முரட்டுத்தனமான விளையாட்டுகள் தான் பிடிக்கும். கௌபாய் வேடமணிந்து குதிரை மீது போக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஒருநாள் விநோத்துடன் தகராறு செய்த மேல்வகுப்பு பையனை ஸ்கூல் வேனில் இருந்து கீழே தள்ளி விட்டு அப்பையனுக்கு மண்டை உடைந்து போனது. இதையெல்லாம் அவனுக்கு எதோ கிண்டல் என்று தான் பேசி வந்தாலும் அவளது விவாகாரத்து மீதான புகாராகத் தான் எனக்குப் பட்டது. விநோத் தான் தன் அக்காவைப் போன்றும் அக்கா தன்னைப் போன்றும் இருந்திருக்கலாம் எனவும் ஆசைப்பட்டிருக்கக் கூடும். அந்த விசனமாகவும் இருக்கலாம்.

விநோத் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது நாங்கள் சற்று அதிக தூரம் வழக்கத்துக்கு மாறாக வந்து விட்டிருந்தோம். விநோத்தும் பேச்சு ஆர்வத்தில் அவளை வீட்டுக்கு திரும்ப அதிகம் வற்புறுத்தவில்லை. நாங்கள் மல்லேப்பள்ளி பக்கசாலை வழி கூகன் பேகரி கடந்து ஆசிப் நகர்-கர்வான் சாலையை பிடித்து என்.எம்.டி.சி வழியாக மசாப் டேங்க் ரோட்டுக்கு வந்திருந்தோம். அங்கிருந்து சரோஜினி தேவி கண் ஆஸ்பத்திரி கடந்த போது அவள் வண்டியை வேகம் குறைத்து ஓரிடம் சுட்டினாள். “இங்கே ஒருவன் துப்பாக்கி விற்கிறான்என்றாள். விநோத் ஒருநொடி பேச்சை நிறுத்தி தொடர்ந்தான். அவன் மனதில் அது பதியவில்லை. ஆனால் எனக்கு அவளுடன் தனியாக ஒருநாள் காரில் வரும் விருப்பம் தோன்றியது.
ஒருநாள் காலை நான்கரைக்கே வண்டியெடுத்தோம். விநோத் வேலையில் இருந்து நடுராத்திரி திரும்பினவன் நன்றாக உறங்கிப் போயிருந்தான். எனக்கு இரவில் அடித்த சரக்கு வயிற்றுக்கு ஒத்து வராமல் அவஸ்தை கொடுக்க தூக்கமில்லாமல் விடிகாலையில் மெல்ல அசந்து போகத் துவங்கி இருந்தேன். சூடான லெமன் டீயுடன் எழுப்பி விட்டு கூட அழைத்துப் போனாள்.
நெக்லஸ் ரோட்டில் சுற்றிக் கொண்டிருந்தோம். அரைவெளிச்சத்தில் நிறைய பேர் சுறுசுறுப்பாய் நடைபழகுவது, வேடிக்கைப் பார்ப்பது, பேசுவது, வியப்பது, சோம்பல் முறிப்பது என அலுவலகத்தில் போல பிஸியாக இருந்தார்கள். அனு கையில்லாத இளநீல கதர் குர்தாவும் பருத்தியிலான வெள்ளை முக்கால் பேண்டும் அணிந்திருந்தாள். அந்த வெடவெடக்கும் குளிரில் அவளது மெல்லிய காற்றில் நடுங்கும் ஆடையை பார்க்க எனக்கு இன்னும் அதிகமாக குளிர்ந்தது. நான் அனுவிடம் பொதுவாக அவளது அலுவலகம், அந்த ஊர் உணவகங்கள், புதிதாய் வந்த நடிகைகள், ஹார்டு ராக், மெட்டாலிக்கா, என் இலக்கிய லட்சியங்கள், புகார்கள் என ஏதேதோ திசைமாறி பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு கல்யாணங்களில் வந்து எங்களது பரஸ்பர வெறுமைப் பார்வைகளில் தொட்டு நின்றது. “நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கவில்லை?” என்று கேட்டாள். இது பெண்களால் கேட்கப்படும் ஆக ஆபத்தான கேள்வி. நான் கவனமாய் சாவகாசமாய் மோவாயை சொறிந்து கருவிழியை மேலே தூக்கி சொருகின பார்வையுடன் அலட்சியமாய் பெண்களால் என்றுமே என்னை புரிந்து கொள்ள முடியாது என்று விளக்கினேன். அனு அத்தனையையும் கவனிப்பது போல் கவனிக்காதிருந்து விட்டு என்னைப் பற்றி என்னிடமே ஒரு சம்பவம் சொன்னாள். என்னை வெறுக்கும் பல சகஎழுத்தாளர்களில் ஒருவன் குடிபோதையில் யாரிடமோ உளறி அது விநோத் மூலமாக அவளுக்கு போயிருக்கிறது. அல்லது அது எல்லாரும் பரவலாய் அறிந்த, ஒருவேளை நானாகவே பலமுறை பல இடங்களில் எழுதி மறந்து போன ஒரு கதையாக இருக்கலாம். அனு சொல்கிறாள்:
உங்களைப் பற்றி ஒரு சம்பவம் கேள்விப்பட்டதும் வேறொன்றை உங்களிடம் பேச வேண்டும் என எனக்கு தோன்றியது
முதலில் என்ன கேள்விப்பட்டாய் என சொல்
ஒரு பெண் உங்கள் வாசகி உங்களைக் காண விரும்புகிறாள். அவள் மேல்தட்டை சேர்ந்தவள். இளம் மனைவி. நீ அவளை ஒரு ஐந்து நட்சத்திர பாருக்கு வரச் சொல்கிறாய். அவள் கணவன் முற்போக்கானவன். அவனாகவே அவளை அழைத்து வந்து பாரில் விட்டு போகிறான். உங்களை அவள் வந்து சந்தித்த கொஞ்ச நேரத்தில் நீங்க அவளை தகாத இடங்களில் தொட்டு அசிங்கப்படுத்துகிறீர்கள். அவள் உங்களை கோபத்தில் அறையும் தைரியமில்லாமல் அதிர்ச்சியில் அங்கிருந்து வெளியேறி விடுகிறாள். பின்னர் அப்பெண்ணை உங்களிடம் அறிமுகப்படுத்தின இலக்கிய நண்பனிடம் போய்ச் சொல்லி அழுகிறாள்.”
சரி என்னை மானங்கெட்டவன், ஒரு தாய்க்கு பிறக்காதவன் என வைது கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடேன்
ச்சே அதற்கில்லை. நீங்கள் அப்பெண்ணிடம் எப்படியும் நடந்து கொள்ளுங்கள். அது அவளது பிரச்சனை. நான் சொல்ல வந்தது ஒரு பெண்ணை எந்தவிதத்திலும் புரிந்து கொள்ளவே முடியாத பல நூறு ஆண்களில் நீங்களும் ஒருவர் என சொல்லவே
இலக்கிய மொழியில் காறித் துப்பினால் அது வேறாகி விடாது அனு
உங்களுக்கு உலகமே உங்களை தூற்றுவதாய் கோருவதில் ஒரு த்ரில்

இருக்கட்டும். சரி ஒட்டுமொத்தமாய் ஆண்கள் பெண் மனதை அறியும் நுண்ணுணர்வு இல்லாதவர்கள். உன் கணவனைப் போல்

No comments: