Thursday, January 8, 2015

பெண்களைப் பற்றி மட்டுமான கதை (பகுதி 2)

விநோத்தின் மனைவி சுமதியும் ஒரு இலக்கிய வாசகி தான். அவள் பொதுவாக என்னிடம் எனக்குப் பிடிக்காத சக எழுத்தாளர்களின் கதையைப் பற்றி சிலாகித்துப் பேசுவாள். என்னைப் பார்த்ததும் வேண்டுமென்றே அப்படி செய்கிறாளா அல்லது அவளுக்கு எதேச்சையாகவே அப்படி வருகிறதா என தெரியவில்லை. ஏதோ என் சகஎழுத்தாளனை என்னிடம் புகழ்ந்தால் நான் மனமகிழ்ந்து போவேன் என அவளுக்குள் ஒரு தவறான மனக்கணக்கு. இதற்கு பேசாமல் என்னை அசிங்கமாக திட்டி விட்டுப் போகலாம். இது அவளுக்கு புரியவில்லை. சுமதி எனக்கு இட்லி வைக்கும் போதும் நான் டி.வி பார்க்க அமரும் போதும் அறிவார்த்தமாக ஏதாவது பேசுவாள். “ ஆண்சமூகமே!” என்று தான் அவளது பேச்சுகளின் தொனி இருக்கும்.

 என்னவோ எழுத்தாளன் சாப்பிடும் போதும் டி.வி பார்க்கும் போதும் அவன் சாப்பிடவோ டி.வி பார்க்கவோ கூடாது என்பது போல நடந்து கொள்வாள். மனிதன் நன்றாக சாப்பிடுகிற, தூங்குகிற, வேலைக்கு கிளம்புகிற வேளைகளில் டி.வி நிகழ்ச்சிகளில் அறிவுஜீவி, போராளி ஆகியோரை சிறப்பு விருந்தினராக அழைத்து வைத்து உலகத்தையே புரட்டுகிறது போல கேள்வி கேட்பார்கள். அதே பாணியில், இங்கே உட்கார்ந்து நீ சாப்பிடுகிறாய் அல்லவா, டி.வி பார்க்கிறாய் அல்லவா, இதுக்கெல்லாம் பதில் சொல் என்பது போல் கேள்விகளாக கேட்டுத் தள்ளுவாள். அனுவைப் பற்றி முதலில் இன்னும் மோசமான சித்திரத்தைத் தந்ததும் சுமதி தான்.
அனுவுக்கு தன் தம்பியின் குடும்ப வாழ்வு நன்றாக போவது பொறாமையும் வயிற்றெரிச்சலும் உண்டு பண்ணுவதாகவும், உங்களால் தான் நான் நாசமாய் போனேன் என்கிற கணக்கில் அவள் தினமும் சுமதியுடன் சண்டை போடுவதாகவும் சொன்னாள். இரண்டு பெண்கள் சண்டை போடும் போது அதை கையாலாகவனாக பார்த்துக் கொண்டிருக்கும் இரு ஆண்களில் ஒருவனாக இருக்கும் அவலத்தை நினைத்தே முதலில் அவன் வீட்டுக்கு போகாமல் இருந்திடலாமா என யோசித்தேன். ஆனாலும் வழக்கமாக என்னை போஷிப்பவர்கள் ஊரில் இல்லாமலும், ஊரில் இருந்தும் என்னுடன் நல்லுறவில் இல்லாமலும், அல்லது ஊரில் இருந்து என்னுடன் நல்லுறவில் இருந்தும் என் மீதான தம் கடமை தீர்ந்து விட்டதாக நம்பினதாலும் நான் விநோத்துடன் அவன் வீட்டுக்கு வர வேண்டியதாகி விட்டது.
மாலையானதும் விநோத் தண்ணியடிக்க ஆரம்பித்தான். நான் இலக்கியம் பேசுகிறவர்களுடன் மது அருந்துவதில்லை என்பதால் அறையில் தனியாக கிடந்தேன். அப்போது அலுவலகத்தில் இருந்து வந்த அனுவின் கீச்சுக் குரல் கேட்டது. குரலைக் கேட்டதும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பெண் என ஊகித்தேன். வீட்டுக்குள் அவள் வந்ததும் ஒரு உயிர்ப்பு பரவியது. புடவையின் ஓரமாய் தீப்பற்றிக் கொண்டது போல். நான் எழுந்து அவளைப் பார்க்கப் போனேன்.
அவள் இன்று அலர்ந்த பூப் போல என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஒருமாதிரியாய் ஒருநாள் வேலையின் களைப்போ பயண அலுப்போ அற்று நீண்ட தூக்கத்தில் இருந்து எழுந்தது போல பளிச்சென்று தோன்றினாள். நடையில் ஒரு துள்ளல் இருந்தது. ஜீன்ஸ் டாப்பில் இருந்து காட்டன் பைஜாமாவுக்கு மாறி இருந்தாள். பக்கவாட்டில் இருந்து பார்த்தால் தொப்பையின் அடையாளம் தெரிந்தது. முன்னிருந்து பார்த்தால் கெட்டியான கழுத்தும், நிறைவான மார்புகளின் புடைப்பும். அமெரிக்கா ஈராக்கில் குண்டு போட்டது போல் என் கண்களுக்கு இடைவிடாத தாக்குதல். அலட்சியமாக கொண்டை போட்டு காதில் இயர்போன் சொருகி பால்கனி சுவரில் சாய்ந்து பெரிய மக்கில் காபி குடித்துக் கொண்டிருந்தாள்.
மெல்லிய உறுத்தாத பெர்பியூம் வாசனை. அது துவைத்து தேய்த்த புதுத்துணியின் வாசனையோடு அவள் உடலின் வீச்சத்தோடு கலந்து மயக்கம் தருவதாக இருந்தது. என்னைப் பார்த்ததும் புரிந்துணர்வோடு உதடுகள் மெல்ல திறந்து பற்கள் மிளிர புன்னகைத்தாள். அவளது மேலுதடு சற்றே மேலெழுந்து அமைந்திருந்ததால் அவளே பிரயத்தனித்தால் கூட டி.வி மாடல் போன்று புன்னகைக்க முடிந்திருக்காது. ஆனால் திறந்த வாய்க்கு ஏற்றபடி இறைவன் அவளுக்கு சின்னதான ஒழுங்கான பற்களைத் தந்திருந்ததால் பளிச்சென்று ஒரு அழகு சேர்த்தது. அவள் அதற்கு மேல் என்னை விசாரிக்கவோ பார்வையால் அளவிடவோ என் இருப்பால் பதற்றமாகவோ இல்லை. அது எனக்கு பிடித்திருந்தது.
வீட்டு வேலைகளை பெரும்பாலும் சுமதி தான் பார்த்துக் கொண்டாள். டி.வி பார்த்தபடி துணி மடிப்பது, எப்.எம் கேட்டபடி நகம் வெட்டுவது போன்றவற்றை தான் அனு செய்தாள். அல்லது சுமதி எல்லா வேலைகளையும் முடித்த பிறகு சாமான்களை எடுத்து ஒழுங்குபடுத்தும், சும்மா பிஸியாய் அங்குமிங்கும் நடந்து தம் திம் ஓசையெழுப்பும் நகாசு பணிகளை செய்தாள். அனு வேலை செய்யாமல் இருந்ததற்கும் இறுதி பணிகளை இப்படி தொட்டுறவாடி முடிப்பதற்கும் முன்னாலும் பின்னாலும் மட்டுமே சுமதி நிம்மதியாய் இருந்தாள் என சொல்ல வேண்டும். அதனாலே கோபத்துக்கும் அழுகைக்கும் இடையே ஒரு முகபாவத்தை சதா வைத்துக் கொண்டிருந்தாள்.
 சுமதியை விட அனுவுக்கு நன்றாக சமைக்க வந்தது. ஆனால் சமையல் பரிமாறல் பொறுப்பை சுமதி தானே பிடிவாதமாய் வைத்துக் கொண்டாள். வீட்டு வேலைகளில் அனுவை பங்கெடுக்க செய்வதில் சுமதிக்கும் விநோத்துக்கும் தயக்கமும் மனத்தடையும் இருந்தது. அவளையும் ஒரு விருந்தினர் போல அவ்வளவு அக்கறையாக பார்த்துக் கொண்டார்கள். ஆனால் வக்கீலைப் பார்ப்பது, காரை சர்வீஸுக்கு விடுவது, பாஸ்போர்ட் அலுவலகம் போவது உள்ளிட்ட வெளிவேலைகளில் அவளுக்கு எந்த உதவியும் செய்ய மறுத்தார்கள். தினமும் இந்த விசயங்களில் அக்காவுக்கும் தம்பிக்கும் சண்டை வரும். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக விநோத் அதிக குரூரத்துடனும் பழிவாங்கல் மனப்பான்மையுடனும் நடந்து கொண்டான். அனு மிகுந்த பொறுமையுடன் அமைதியுடன் அவனை எதிர்கொண்டாள். ஒரு விவாகரத்துக்குள்ளாகும் நெருக்கடி நிலையில் இருப்பது அனுவா அல்லது அவளது தம்பியா என எனக்கு குழப்பமாக இருந்தது. அவளை தொடர்ந்து அன்பாகவும் அதேவேளை அநாதரவாகவும் வைத்துக் கொள்ள அவர்கள் விரும்பினார்கள்.
செகந்திராபாதில் நாங்கள் இருந்த பகுதி ஆளரவம் அதிகம் இல்லாதது. கொஞ்சம் புறநகர். நிறைய சிறுசந்துகளும் சாக்கடைகளும் ஊடாடும் நிலப்பரப்பு ஒரு பக்கம், ராணுவ வீரர்களின் பயிற்சிக்கான கேம்ப் மற்றும் கண்டோண்ட்மண்ட் பகுதிகள் இன்னொரு பக்கம். அனு தன் நாற்பது வயதில் கார் ஓட்டப் பயின்று கொண்டிருந்தாள். அவள் மேலாளராக வேலை பார்த்த தனியார் நிறுவனத்தில் இருந்து காரில் போவது ரொம்ப சிரமம் மற்றும் தொலைவு என விநோத் நம்பினான். அவன் அவளை காரோட்டுவதில் இருந்து பின்வாங்க செய்ய தொடர்ந்து முயன்றான். ஆனால் அவளுக்கு அதில் விடாப்பிடியான ஆர்வம் இருந்தது.
விநோத் கூறின இன்னொரு விசயம் அவளுக்கு இயல்பாக கார் ஓட்ட வரவில்லை என்பது. அவள் காரோட்டிப் பழகும் போகும் பின்சீட்டில் இருக்கும் நமக்கு இன்னும் ஒருமுறை வயிற்றை நன்றாக வயிற்றை சுத்தம் பண்ணி விட்டு வந்திருக்கலாம் என்று தோன்றும். பொதுவாக ரோட்டுக்கும் ரோடல்லாத பகுதிகளுக்கும் வேறுபாடு இருப்பதாகவே அவளுக்கு அப்போது தோன்றாது. ரோடில் போகிறவர்கள் தன் மீது கூடுதல் கவனம் வைத்துக் கொள்வார்கள் என்று அபரித நம்பிக்கை இருந்தது. சிலநேரம் தொடர்ந்து வண்டி முன்னும் பின்னுமாக போய்க் கொண்டிருப்பதான உணர்வு நமக்கு ஏற்படும். கண்ணைத் திறந்து ஜன்னல் வழியாக பார்த்தால் வண்டி நிச்சய்ம் வெகு தொலைவு முன்னேற்றம் கண்டிருக்கும்.
அடிப்படையான பயிற்சிகளை ஒரு ஓட்டுநர் பள்ளியில் முடித்து லேர்னர் லைசன்ஸ் பெற்றிருந்தாள். ஆனாலும் வாரத்துக்கு ரெண்டு மூன்று நாள் விடிகாலையில் எழுந்து கார் ஓட்டும் பயிற்சிக்கு கிளம்பி விடுவாள். அப்போதெல்லாம் கூட பாதுகாப்புக்கு விநோத் செல்வான். உண்மையில் விநோத்துக்கே பாதுகாப்பில்லை. அவன் கண்ணை மூடி பிரார்த்தித்தபடியே பின்னிருக்கையில் அமர்ந்திருப்பான். ஆனாலும் கூடச் செல்வதால் அவள் மேலும் பாதுகாப்பாய் இருப்பதாய் அவனுக்கு ஒரு நினைப்பு.

ரொம்ப பயம் அதிகமாகும் போது விநோத் லேசாய் கிண்டலடிக்க ஆரம்பிப்பான். பின்னர் தன்னம்பிக்கை அதிகமாக இன்னும் காரமாய் அவளை கேலி செய்வான். அவள் அவனை விட ஒன்றரை அடி உயரம் குறைவு. அவளுக்கு பிரேக் போட காலுக்கு கட்டை வைக்க வேண்டும் என்பான். அப்போது அவளுக்கு கோபத்தில் ஆக்சிலேட்டரை மேலும் மிதிக்கத் தோன்றும். சில காலைகளில் விநோத் என்னையும் பேச்சுத் துணைக்கு அழைத்து செல்வான். (தொடரும்)

No comments: